“பேனை? சிவப்பு வேணுமா நீலம் வேணுமா மேடம்?” கேட்டவன், அவள் தலைமீதிருந்த இரண்டையும் பட்டென்று இழுத்தெடுத்திருந்தான்.
“டேய்…சேட்டை கூட்டிட்டு உனக்கு!”
இசைவாணன் முதுகில் படீர் படீரென்று அடிகள் போட்டாள், கவினி. விடுதலை பெற்ற தலைமயிர், சுருள் கலைந்து மெல்ல மெல்ல விரிந்து தொங்கியது.
அவனையும் அறியாதே சேந்தன் பார்வை அவர்களில், அதுவும் அவளில்.
ஏதேதோ கேட்டபடி படபடவென்று கையெழுத்திட்டுக் கொடுத்தவள், “வா, சாப்பிட்டுட்டுப் போ!” அவனை உள்ளே அழைத்துச் செல்ல முயன்றாள்.
“ஏன் ஆதவன், உங்கட மச்சாளுக்கு நாங்கள் எல்லாம் கண்ணிலும் தெரிய மாட்டமா? அவேட வீட்டுக்குப் போன எங்களோட ஒரு வார்த்தை கதைக்கேல்ல தெரியுமா?” வெளிப்படையாகவே குற்றச்சாட்டாகச் சொல்லியிருந்தான், சேந்தன்.
“ஆர் கவினியோ?” சூரியன் கேட்க, “அவா அப்படியான பிள்ளை இல்லையே. இங்க வேலையா நிண்டிருப்பா.” என்ற ஆதவன், “கவினி” மைத்துனியை அழைத்தான்.
உள்ளே செல்லத் திரும்பியவள், “அத்தார், நீங்களும் நிக்கிறீங்களோ? கவனிக்கேல்ல. உள்ள வாங்கவன் , தேத்தண்ணி குடிச்சிட்டுப் போகலாம்.” அழைத்தபடி அவர்களை நோக்கி நடந்தாள்.
“இது நம்பக்கூடியதாகவா இருக்கு! நீங்க இதில நிண்டதக் கவனிக்கேல்லையாம். போங்க அத்தார், தேத்தண்ணி குடிச்சிட்டு வாங்க, நாங்க இதிலேயே நிக்கிறம்.” ‘அத்தார்’ என்ற சொல்லில் வலு அழுத்தம் கொடுத்தபடி சிடுசிடுப்போடு முணுமுணுத்த சேந்தனை, ஒரு சாதியாகப் பார்த்தான், ஆதவன்.
அதற்குள் கவினி அவர்கள் அருகில் வந்திருந்தாள்.
“என்ன மச்சாள் இது, உம்மில பெரிய குற்றசாட்டு வந்திருக்கு?” விழிகள் நகைப்பில் சுருங்கியிருக்க, ஆதவன் பகிடியாகத்தான் கேட்டான்.
“என்னிலையா, நான் என்ன அத்தார் செய்தன்? உங்களுக்கு என்ன என்ன மரக்கறிகள் விருப்பம் எண்டு கேட்டுச் சமைக்க ஆரம்பிச்சிருக்கிறன். இப்பிடியெல்லாம் சொல்லலாமா?” கலகலப்பாகக் கதைத்தவள் , “உள்ள வந்திட்டுப் போங்கவன்.” மீண்டும் அழைத்தாள்.
“வீட்ட வந்த நேரம் தங்களை வரவேற்று ஒரு வார்த்த கதைக்கேல்லையாம் எண்டு சொல்லுறார் இவர்.” அருகில் நின்ற சேந்தனைக் காட்டிச் சொன்னான், ஆதவனின் தம்பி சூரியன்.
கவினியின் முகம் கன்றிய வேகத்தில் இயல்பானது. முதல் முதல் சந்திப்பவர்கள் முன்னால் தாயிடம் வாங்கிய ஏச்சு நினைவிலாடியது. ஒதுக்கித் தள்ளிவிட்டு, “இதென்ன கதை? நான் தான் கதவு திறந்து உள்ள வாங்க எண்டு கூப்பிட்டதே! நீங்க சொலுங்கவன்.” இயலிடம் கேட்டவள், சேந்தனை ஒரு வெட்டும் பார்வை பார்த்தாள்.
‘என்ன தனகலோ’ கேட்காமல் கேட்ட பார்வையில் அவன் முகத்தில் முறுவல் வந்திட்டு.
“அப்ப நாங்க என்ன பொய்யா சொல்லுறம்? கதவு திறந்து மாமாவையும் அம்மம்மாவையும் உள்ள வாங்க எண்டிட்டு, எங்கள ஒரு சாதியாப் பார்க்கேல்லையா நீங்க… கவினி பூங்குன்றன்?”
ஒற்றைப்புருவ உயர்த்தலோடு வலு நிதானமாகக் கேட்டவன், சீண்கிறான் என்பது அங்கு நின்றவர்களுக்கு விளங்கியது.
“நான் வேலையா நிக்கிறன், கரைச்சல் தர வந்திட்டாங்கள், எண்ட பார்வையோட கேர்ட்டின்களையும் அள்ளி எடுத்துக்கொண்டு விறுவிறுவெண்டு உள்ள போகேல்லையா சொல்லுங்க?” நேரடியாகவே தர்க்கம் செய்யும் வகையில் கதைத்த தமையனை ஒரு சாதியாகப் பார்த்தாள், இயல்.
“கடவுளே! இதென்ன அத்தான்? உண்மையாவே நான் அப்பிடியெல்லாம் செய்யேல்ல.” என்ற கவினியின் கரங்களைப் பற்றிக்கொண்டாள், இயல்.
“அண்ணா பகிடிக்குக் கதைக்கிறார் கவினி. நான் உங்கட அம்மாண்ட ஃப்ரெண்ட் நிவேதாட ஒரே மகள் இயல். அவர் இந்த இயலின்ட ஒரே ஒரு அண்ணா சேந்தன்.” கவினியைக் கட்டிப்பிடித்து அறிமுகமும் செய்துகொண்டாள்.
“அய்யய்யோ எனக்குத் தெரியும் இயல். உண்மையாவே வேணும் எண்டு எல்லாம் நான் …” என்றுகொண்டு வந்தவள், “சேந்தன் பகிடிக்குச் சொன்னதை எல்லாம் உண்மையெண்டு நம்பிறதா மச்சாள்?” என்று ஆதவன் இடையிட, “நீங்க பகிடி எண்டாலும் முறையா வரவேற்க இல்லை எண்டு சொன்ன பிறகு சும்மா விடேலாது அத்தார். எல்லாரும் உள்ள வாங்க!” இயல் கரத்தைப் பற்றிக்கொண்டு உள்ளே நடந்தாள்.
“உங்கட வீட்டுக்கு வந்த மனிசரை உள்ள வா எண்டு சொல்லேல்ல எண்டு சொன்னனான்.” அசையாமல் நின்று சொன்னான்,சேந்தன்.
“இதுவும் என்ர வீடுதான். உள்ள வாங்க அத்தார். ப்ளீஸ் வாங்க, பஷன் ஃப்ரூட் ட்ரிங்க் இப்பதான் செய்தனான், குடிச்சிட்டுப் போங்க. அக்கா கூட்டிக்கொண்டு வாங்கவன்.” என்றுவிட்டு நகர்ந்தாள், அவள்.
“எங்கட வீட்ட விடவும் அவளுக்கு இதுதான் தன்ர வீடு. உள்ள வாங்க.” என்றவாறே சாரல் நகர, “வீடும் வீட்டில உள்ளவேயும் அவளிட உடமை! உள்ள வாங்க!” சேந்தன் கரம்பற்றி அழைத்துச் சென்றான், இனிதன்.
‘இந்தாள் அவவிட மச்சான் எல்லா? அப்படியெண்டால் என்ன அர்த்தம்?’ மனத்தில் எண்ணமோட நடந்தான், சேந்தன்.
அடுத்த அரை மணி நேரம் பரமேஸ்வரி வீட்டுக் கூடம் கலகலத்தது. இசைவாணன் காலையுணவு உண்ண மற்றவர்கள் குளிர்பானம் அருந்தினார்கள்.
“நீங்களும் வரலாமே கவினி, பம்பலா இருக்கும்.” என்று அழைத்த இயலுக்கு, கவினியை மிகவும் பிடித்துப் போயிற்று. கவினியின் நண்பனின் பரம ரசிகை வேறு!
“இன்னொருநாள் கட்டாயம் வாறன். இப்ப இங்க நிறைய வேலைகள் கிடக்கு.” நாசுக்காக மறுத்துவிட்டாள், அவள்.
விடைபெற்று எழுந்த இசைவாணன், மீண்டும் அவள் தலையிலேறியிருந்த பேனாக்களை எடுத்துவிட்டு, “எண்ணைச் சட்டிக்க தலையை வச்சு எடுத்திட்டு நிக்கிறாள். அவளாவது வெளியில வாறதாவது. நான் போயிட்டு வாறன்” ஓடிவிட்டான்.
“நீங்க போயிட்டு வாங்க. குறை நினைக்காதீங்க !” மீண்டும் சொன்னாள், கவினி. பிறகு என்ன செய்வது?
இனிதன் வாகனத்தை வெளியில் எடுக்கவும் எல்லோரும் பரமேஸ்வரி, கவினியிடம் விடைபெற்று வெளியேறினார்கள்.