கிருபனின் கமலி 4

 

வார இறுதி என்றாலே கொடுமை என்று நினைப்பான் கிருபன். பெரும்பாலும் அவர்களின் நிறுவனத்தில் சனிக்கிழமைகளில் மத்தியானம் வரைக்கும் தான் அலுவலகம் இருக்கும். அதுவும் எல்லாச் சனியும் அப்படி அமையாது. இந்த முறை சனி, ஞாயிறு இரண்டு நாட்களுமே விடுமுறை என்றதும் மாமா வீட்டுக்கு போக முடிவு செய்தான்.

தனியாக வந்துவிட்ட இந்த நான்கு மாதங்களில் முதல் இரண்டு வார இறுதிகளில் மாத்திரம் தான் அங்கு போய்வந்திருக்கிறான். பிறகு, போகவேண்டும் என்று நினைப்பானே தவிர போக முடிந்ததில்லை. நம் வரவை அவர்கள் விரும்பவில்லை என்று அறிந்தபிறகும் அந்த வீட்டு வாசலை மிதிப்பது இலகுவல்லவே. 

‘வீடு எடுத்துட்டன் மாமா.’, ‘வேலையில சேர்ந்துட்டன் மாமா’ என்கிற தகவல்களை எல்லாம் ஊர் மாறிவந்த புதிதில் எடுத்துச் சொன்னபோது, ‘நல்லது. வேற என்ன? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு!’ என்று அழைப்பைக் கத்தரித்துவிடுவார் சோமசுந்தரம். 

‘ஏன் மாமா இப்பிடி இருக்கிறீங்க?’ என்று நுனிநாக்கு வரை வந்தாலும் அடக்கிக்கொள்வான். அவர்கள் செய்ததை மறக்கக் கூடாது என்று ஆரம்பத்தில் வாரத்துக்கு ஒருமுறை அழைத்துப் பேசிக்கொண்டு இருந்தான். அந்தப் பக்கத்தில் இருந்து எந்தவிதமான ஆர்வமும் இல்லை என்றபோது அதுவும் குறைந்து குறைந்து இன்று அலுவல் என்றால் மாத்திரமே பேசுவது என்றாகிப்போனது. 

ஒரு கூடை நிறையப் பழங்களும், மாமாவின் பெண்களுக்குப் பிடித்த மிக்ஸர், பிஸ்கெட் பாக்கெட்டுகள், கேக் என்று தாராளமாகவே வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

இவனைக் கண்ட பெரியவர்கள் இருவரினதும் முகத்தில் பெரிய மலர்ச்சி இல்லை. மாமா பார்வையாலேயே அவனை அளவிடுவது தெரிந்தது. நறுக்கிவிடப்பட்ட மீசை, பளபளத்த கன்னம், கச்சிதமான முடிவெட்டு என்று, இன்றைய ஐடி நிறுவன ஊழியனுக்கான சர்வ லட்சணங்களும் அவனுக்குப் பொருந்தியிருந்தது.

அவனளவில் அவன் என்னவோ சாதாரணமாக, எப்போதும்போல்தான் புறப்பட்டு வந்தான். இப்போதெல்லாம் ஆடை அணிகலன்களில் கவனம் செலுத்துவதில் அவை அவனுடைய தரத்தை உயர்த்திக்காட்டின. அதை சோமசுந்தரம் கவனிக்கிறார் என்று தெரிந்தபோது சற்றே தடுமாறினான். இருந்தும் சமாளித்துப் புன்னகைத்தான். 

“வா தம்பி!” என்று மாமி ஜெயந்திமலர் அழைத்தார். 

“சுகமா இருக்கிறீங்களா மாமி?” என்று அவரிடம் கேட்டவனுக்கு மாமாவிடம் வாயைத் திறக்கவே முடியவில்லை. அவரைப் பார்த்தான். சற்றே தயங்கினாலும், “கடை எப்பிடிப் போகுது மாமா?” என்று விசாரித்தான்.

“ம்ம்..” அவ்வளவுதான் அவரின் பதில். 

ஏன் இப்படி? இவ்வளவு நாட்களும் தான் சுமையாக இருந்தான். இப்போது தனியாகப் போய்விட்டானே. இனியாவது முகம் கொடுத்துப் பேசலாமே. அன்னையின் சாயல் சற்றே தெரியும் அவரின் இந்த ஒதுக்கம் அவனை மிகவுமே வருத்தியது. வந்திருக்கக் கூடாதோ என்று நொடி தயங்கியவன் அந்த நொடியே அந்தத் தயக்கத்தை உதறினான். வீட்டுக்குள் உரிமையோடு சென்று உள்ளே சமையலறையில் தான் கொண்டுவந்த பொருட்களை வைத்துவிட்டு வந்து அமர்ந்தான். பெண்கள் இருவரும் இவனைக் குறுகுறு என்று பார்த்தனர். அவர்களைப் பார்த்து முறுவலித்தான்.

“எப்பிடி இருக்கிறீங்க?”

“ம்ம்.. சுகமா இருக்கிறோம்.” இருவருக்கும் சேர்த்து மூத்தவள் துளசி பதில் சொன்னாள்.

“பிறகு, படிப்பெல்லாம் எப்பிடி போகுது?” என்று சின்னவளிடம் கேட்டுவிட்டு, “நீ வேலைக்குப் போறியா?” என்றான் மீண்டும் துளசியிடம். 

அதற்குப் பதில் போல், “அவளுக்குக் கலியாணத்துக்குப் பாத்துக்கொண்டு இருக்கிறார் மாமா.” என்ற ஜெயந்திமலர், “இரு, குடிக்கக் கொண்டுவாறன்.” என்றபடி எழுந்து உள்ளே சென்றார். 

சோமசுந்தரமும் எழுந்து தன் பிள்ளைகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே நடந்தார்.

இனி? கிருபனின் முகம் சுருங்கிற்று. பெண்கள் இருவருமே ஒருவர் பின்னால் மற்றவர் என்று நழுவினர். அந்த ஹாலில் தனித்து இருந்தான் கிருபன். எதற்காக இந்த விலகல்? பிஞ்சு வயதில் இருந்து விடை தெரியாத அந்த வினா இன்றும் அவனைத் தாக்கிற்று.

ஜெயந்தி கொண்டுவந்து தேநீர் கொடுத்தார். மௌனமாகவே வாங்கிப் பருகினான். மனதுக்குள் நிறையக் கேள்விகள் எழுந்து நின்றன. அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, “இப்பவே ஏன் மாமி அவளுக்குக் கலியாணம். ஒரு ரெண்டு வருசம் போகப் பாக்கலாமே. இப்பதானே கம்பஸ் முடிச்சவள். கொஞ்சகாலம் வேலைக்கு விடுங்கோவன்.” என்றான் அக்கறையோடு.

“மற்றவே சொல்லுறத உன்ர மாமா கேக்கிற ஆளே?” கேள்வியையே பதிலாக்கினார் அவர். 

“ஏதாவது சரி வந்திட்டுதா?”

“இன்னும் இல்ல. ஒண்டு சரி வரும் போலக்கிடக்கு. பெடியன் லண்டன்ல இருக்கிறானாம். அவேக்கு விருப்பம். குறிப்பும் பொருந்தி இருக்கு. நாங்கதான் அவ்வளவு தூரத்துக்கு அனுப்புறதோ எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்கிறம்.” என்றார் அவர் தன்னுடைய தேநீரைப் பருகியபடி.

“நல்ல இடம் எண்டா லண்டன் எண்டு ஏன் யோசிக்க. உங்களை அவளும் ஸ்பொன்சர் செய்யலாம். அவளும் இங்க வந்து போகலாம் தானே. அவளுக்குப் பிடிச்சிருந்தா அங்கேயே மேல படிச்சு நல்ல நிலைக்கும் போகலாம். பிறகு பிரியாவும் அங்கேயே போகலாம் தானே.” என்று தன் கருத்தை மனதிலிருந்து சொன்னான் அவன்.

“ம்ம். அப்பிடித்தான் நானும் யோசிச்சன். இனி உன்ர மாமா என்ன முடிவு எடுக்கிறாரோ தெரியாது.” 

அத்துடன் அவர்களின் பேச்சு நின்றுபோயிற்று. இனி என்ன கதைப்பது என்று அவனுக்குப் பிடிபடவே இல்லை. அவனைப் பற்றி எப்படி இருக்கிறாய், என்ன செய்கிறாய், இனி என்ன செய்யப் போகிறாய் என்று ஏதும் கேட்பாரா என்று சற்றுநேரம் மௌனமாக இருந்து பார்த்தான். 

துளசிக்கே திருமணத்துக்குப் பார்க்கிறார்கள் எனும்போது அவனுடைய திருமணத்தைப் பற்றி ஏதும் பேசுவாரா என்றும் எதிர்பார்த்தான். கேட்டால் பாருங்கள் என்று சொல்லலாமே. அவனாகச் சொல்ல ஒருமாதிரியாக இருந்தது. 

தேநீரில் கவனமாக இருந்தாரே தவிர ஜெயந்தி எதையும் பேசவே இல்லை. கிருபனுக்கு வலித்தது. உறவு என்று அவனுக்கு இருப்பது அவர்கள் மாத்திரம்தான். அவர்களே இப்படி அமைதியாக இருந்தால் வேறு யார்தான் எடுத்துச் செய்வார்கள்? 

மற்ற உறவினர்களைக்கூட இந்த வீட்டுக்கு அவர்கள் வந்து போகிறபோதுதான் பார்த்திருக்கிறான். அவர்களாக ஏதாவது விசாரித்தால் கூட, தன் வாயால் எதையும் பிடுங்கி பிரச்சனைகளை உருவாக்கிவிடுவார்களோ, மாமாவின் கோபத்துக்கு ஆளாகி விடுவோமோ என்று அவனே ஒதுங்கிப் போய்விடுவான். அப்படி இருக்கையில், வளர்த்த இவர்களிடமே முடியாதபோது, ‘எனக்கு பெண் பாருங்கள்’ என்று அவர்களிடம் எப்படிப் போய்க் கேட்பான்? 

எப்போதும்போல் இன்றும் அனைத்தையும் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, “கலியாணம் சரிவந்தா மறக்காம எனக்கும் சொல்லுங்கோ.” என்றான் சற்றே அடைத்த குரலில்.

“ம்ம்.. சொல்லுவம் தானே.” அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தார், ஜெயந்தி.

அருந்தி முடிந்த கோப்பையை மேசையில் வைத்தான். தன் விரல்களைத் தானே ஆராய்ந்தான். போனில் நேரம் பார்த்தான். அந்த விறாந்தையை(ஹாலை) ஒரு முறை சுற்றி பார்த்தான். அதற்குமேல் முடியவில்லை. அவனுக்குள் இருக்கிற ஏதோ ஒன்று வெடித்துவிடும் போலானது. “சரி மாமி. நான் வெளிக்கிடப் போறன். உங்களை எல்லாம் பாத்து நிறைய நாளாயிட்டுது எண்டு சும்மாதான் வந்தனான்.” என்றபடி எழுந்துகொண்டான். “போயிட்டு வாறனாம் எண்டு மாமாட்டையும் சொல்லிவிடுங்கோ.” என்றுவிட்டு வாசலை நோக்கி நடந்தவன் நின்று திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தான்.

கேட்கலாமா வேண்டாமா என்று ஒருகணம் யோசித்தாலும், தன் தயக்கத்தை உதறி, “என்னில ஏதாவது கோபமா மாமி? நான் ஏதும் பிழை செய்திட்டேனா?” என்று கேட்டான்.

மெல்லிய அதிர்வோடு அவனைப் பார்த்தார் ஜெயந்தி. இப்படி நேராகவே கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வது என்று அவர் தடுமாறுகையிலேயே, “இல்ல.. அப்பா காரணமா?” என்றான் அவன்.

அவர் திகைத்துப் போனார். “என்ன விசர் கதை கதைக்கிறாய்? அப்பிடி ஒண்டும் இல்லை.” என்றார் அவசரமாக.

அவன் வெறுமையாகச் சிரித்தான். “அதைத் தவிர வேற எந்தக் காரணமும் இருக்கிற மாதிரித் தெரியேல்ல. நிறையநாள் யோசிச்சு பாத்திட்டன். துளசியும் பிரியாவும் முறைப்படி மச்சாள்மார் எண்டாலும் அவளவே எனக்குக் கூடப்பிறக்காத தங்கச்சிமார்தான். அப்பவும் அவளவையோட நான் கதைக்கிறது உங்களுக்கும் மாமாவுக்கும் விருப்பம் இல்லை எண்டு தெரிஞ்ச பிறகு கதைக்கிறதையும் விட்டுட்டன். வேற ஏதாவது தெரியாம செய்திருந்தா மன்னிச்சுக்கொள்ளுங்கோ மாமி. மாமாட்டையும் மன்னிப்புக் கேட்டேனாம் எண்டு சொல்லிவிடுங்கோ. வாறன் போயிற்று.” என்றவன் விறுவிறு என்று வெளியேறி பைக்கையும் கிளப்பிக்கொண்டு புறப்பட்டிருந்தான்.

ஜெயந்தி அவன் போன பாதையையே பார்த்தபடி அமர்ந்துவிட்டார். அவருக்கும் அவன் கேட்டது நெஞ்சைப் பிசைந்தது. இருக்கிற இடமே தெரியாமல் இருப்பான். வாயில்லாப்பூச்சி. நிறையச் சாப்பிட மாட்டான். என்ன குடுத்தாலும் வேண்டாம், விருப்பமில்லை என்று சொன்னதே இல்லை. உடுப்பு கூடத் தானே துவைத்துப் போடுவான். அவனால் அவருக்கு எந்த விதத்திலும் சோலியே இருந்ததில்லை. சமைப்பதில் ஒரு கைப்பிடி அவனுக்காகக் கூடுதலாகப் போடுவார். அவ்வளவுதான். 

காலையில் எழுந்து முற்றம் கூட்டி, குப்பை எல்லாம் அள்ளி எறிந்துவிட்டுப் பள்ளிக்கூடம் போவான். வீட்டில் நிற்கிறபோது அவர் என்ன வேலை சொன்னாலும் செய்வான். வளர்ந்து நிற்கும் மரத்தின் கொப்புகளைத் தறிப்பது, வேலிகளைப் பராமரிப்பது, மரங்களுக்குத் தண்ணீர் விடுவது, பாத்திரங்கள் கழுவி வைப்பது, மாதம் இருமுறை வீடு முழுக்கத் தூசு தட்டுவது என்று அவரின் பெண் பிள்ளைகள் கூடச் செய்யாத அத்தனை வேலைகளையும் செய்வான். உண்மையைச் சொல்லப்போனால் அவன் எவ்வளவு உதவியாக இருந்தான் என்பதை அவனில்லாத இந்த நான்கு மாதங்களில் தான் முழுமையாக உணர்ந்தார்.

அவனுடைய அன்னை காதல் திருமணம். அவனின் தந்தை சாதி குறைந்தவர். அவரை மணக்கக்கூடாது என்று சோமசுந்தரம் எவ்வளவோ தடுத்தும் அவரை மீறிப்போய் மணந்திருந்தார் அவனுடைய அன்னை பாக்யவதி. அது  பெரும் வெறுப்பாக சோமசுந்தரத்தின் மனதில் மண்டிப்போயிருந்தது. 

கூடப்பிறந்தவளின் மகனை தெருவில் விட்டால் சுற்றமும் சொந்தமும் மதிக்காது என்பதாலும் ஊருக்குப் பயந்தும் அவனை வைத்து வளர்த்தாரே தவிர பற்றும் பாசமும் மருந்துக்கும் இல்லை. கூடவே, பெண் பிள்ளைகள் இரண்டு வீட்டில் இருந்ததும், அவர்களில் யாரையேனும் விரும்பி விடுவானோ என்கிற பயமும் அவனை இன்னுமே வெறுக்க வைத்திருந்தது. 

ஆரம்பத்தில் ஜெயந்திக்கு இதெல்லாம் பெரிதாகத் தோன்றியதில்லை. ஆனால், மூத்தவள் எப்போது வயதுக்கு வந்தாளோ அப்போதிலிருந்து அந்தப் பயம் அவருக்கும் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனாலேயே அவரும் அவனைச் சற்றுத் தள்ளித்தான் வைத்திருந்தார். அவன் மீது பரிவும் பரிதாபமும் உண்டு. இருந்தபோதிலும், தன் பிள்ளைகளா அவனா என்று வருகையில் பிள்ளைகளைப் பற்றித்தான் அவராலும் யோசிக்க முடிந்தது. 

அது மனதில் குத்தாமல் இல்லை. இருந்தாலும் பெரிதாகக்  கவலைப்பட்டது இல்லை. பல வீடுகளில் சொந்தப் பிள்ளைகளையே வறுமை காரணமாக உயர்தரத்துடன் நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பிவிடுவார்கள். இவர்கள், இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்றிருந்தாலும் கல்லூரிப் படிப்பை முடித்துப் பல்கலைக்கு அனுப்பி அவனுக்கு நல்லதொரு வேலை கிடைக்கிறவரைக்கும் வளர்த்துத்தான் விட்டிருக்கிறார்கள். அதன் பிறகும் வெளியே போ என்று அவர்களாகச் சொன்னது இல்லை. இந்தக் காலத்தில் அதையே எத்தனை பேர் செய்வார்களாம் என்று தன்னையே தேற்றிக்கொண்டு எழுந்து வேலைகளைப் பார்க்கப் போனார் ஜெயந்தி.

கருத்திட 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock