“இனி இதெல்லாம் சுத்தம் செய்யிறதுதான், கவினி. நீ இந்த சாப்பாடுகள வீட்டில கொண்டுபோய் வச்சிட்டுத் தோஞ்சிட்டு வாவன். காலமேல இருந்து இதே கோலத்தில நிக்கிறயம்மா.” என்றார், பரமேஸ்வரி.
“வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சிட்டுத் தோயலாம் எண்டு பார்த்தன் அத்தை. நீங்களும் வாங்கவன், அங்கயே சாப்பிடலாம்.” கையில், ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிய மூன்று பாத்திரங்களோடு வெளியில் இறங்கினாள், அவள்.
“ஓமோம், எல்லாம் ஒதுக்கீட்டு வாறன்.” என்ற பரமேஸ்வரி, கவினி உடனுக்குடன் கழுவிக் கவிழ்த்திருந்த பாத்திரங்களை உரிய இடத்தில் எடுத்து வைக்கத்தொடங்கியிருந்தார்.
சமையலறையின் பின் வாசலால் தங்கள் வீட்டுக்குள் உள்ளிட்டாள், கவினி. மதிவதனியும் நிவேதா, விமலாவும் அங்கிருந்தார்கள். அவர்கள் பள்ளிக்காலத்து நட்புகள் பற்றி அரட்டை அடித்தபடி பப்படம், மிளாகாய் பொரித்துக்கொண்டு நின்றார்கள்.
“ஹாய் அன்ரி” விமலாவைப் பார்த்துச் சொன்னபடியே சிறு முறுவலோடு நகர்ந்தாள், இவள்.
“நானும் இருக்கிறன். எனக்கு ஒரு ஹாய் இல்லையோ?” என்ற நிவேதா, தான் சேந்தனின் அன்னை என்று நிரூபித்தார்.
“உங்கள அப்போதயே கண்டிட்டன்…” என்றுவிட்டு, “எப்பிடி இருக்கிறீங்க அன்ரி?” கேட்டுக்கொண்டே உணவுப் பாத்திரங்களைச் சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு, அதே முறுவலோடு வெளியேறுபவளை அமைதியாகப் பார்த்திருந்தார், நிவேதா.
மதிவதனியின் சிடுசிடுத்த முகமே கவினியை விரைந்து வெளியேற வைத்திருந்தது. அது தெரியாது நிவேதாவும் விமலாவும் தமக்குள் பார்த்துக்கொண்டே மதிவதனியிடம் திரும்பினார்கள்.
“பார் போற வடிவ! நான் ஏதாவது சொன்னா என்னை ஏசுவீங்க. இப்பப் பாத்தியா? இதுதான் அவள். உடம்பு முழுசும் திமிர்க்குணம். பூங்குன்றனிட தாயும் இப்பிடித்தான். கெப்பர் பிடிச்ச பொல்லாத மனிசி!” மதிவதனி சொல்லிக்கொண்டிருக்கையில் மீண்டும் கறிகளோடு உள்ளிட்டாள், கவினி. தாய் சொன்னது துல்லியமாக அவள் செவிகளில் விழுந்தது. முகம் கன்றிப் போயிற்று. அவர்களைப் பார்க்கவில்லை. கறிகளைச் சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு வேகமாக முன்னறைக்கு வந்தவள், விட்ட இடத்திலிருந்து யன்னல் திரைகளைக் கொழுவத்தொடங்கினாள்.
மனம் கடுமையாக எரிந்தது. நெஞ்சிலிருந்து கோபமாக வந்த வார்த்தைகளுக்கு, நாவை வளைய விடாது மறிப்பதற்குள் படாத பாடுபட்டுவிட்டாள்.
அது என்னவோ, அன்னை என்றால் அரவணைப்பவள், மாசற்ற பாசம் காட்டுபவள் என்றது அவளுக்கு விதிக்கப்படவில்லை. மெழுகுதிரியாகத் தன்னை உருக்கி, பெற்ற குழந்தைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பது கூடத் தேவையில்லை. பெற்ற பிள்ளைகளை மனமறிந்து மனிதராக நடத்தினால் போதும். அதைச் செய்யத் தவறும் அன்னை, தந்தையும் இருக்கிறார்கள்தான்.
நினைவு தெரிந்த நாட்களில் இருந்து வலிக்க வலிக்கக் கொட்டும் தேளாகவே இருந்திருக்கிறார், மதிவதனி. ஆரம்பத்தில்,காரண காரியங்களை பிரித்துச் சரி பிழையென்று அறியமுடியாத சிறுவயதில், வயதுக்கும் மீறியே அன்னையோடு மல்லுக்கு நின்றிருக்கிறாள்,இவள். வாய் காட்டியுள்ளாள். அதுவெல்லாம் இன்னமும் பசுமரத்தாணி போன்று நினைவில் உண்டு. அப்படித் தாயோடு மல்லுக்கட்டுவதற்குப் பின்னால், தன் விருப்புக்குரிய அப்பம்மாவின் தூண்டுதல் உண்டு என்பதை எப்போது உணர்ந்தாளோ, தன்னால் தாய் தந்தைக்குள் சண்டை உருவாகிறது என்பது எப்போது உறைத்ததோ, அன்றிலிருந்து, தாயோடு வார்த்தையாடி மல்லுக்கு நிற்பதைக் குறைத்துவிட்டாள்.
அப்புரிதல், இதுதான் தாய் என்றளவுக்கு ஏற்க வைத்திருக்கிறது. ஒதுங்கிச் செல்லவும்தான். மழை வரும் அறிகுறி தென்பட்டால் நனையாதிருக்க ஆயத்தங்கள் செய்வோமே! அப்படித்தான் அவளும், தாயின் உடல்மொழி, பார்வையில் இருந்தே ஒதுங்கி அத்தை வீட்டுக்கு ஓடி விடுவாள்.
நாளே எட்டில், பாசத்தை மட்டுமே அள்ளிக் கொடுக்கும் அத்தை வீடு இருக்கவே, மனத்தளவில் பெரும் பாதிப்பில்லாதுதான் வளர்ந்தாள். பதின்ம வயதுகளைக் கடந்தாள். இந்நிலை முழுமையாக உடைந்து, அவள் உள்ளத்தைச் சுக்கு நூறாக்கி அவள் அன்னைக்கு அவளை எதிரியாக்கியது பூங்குன்றனின் அன்னையின் மறைவு.
தாய் இறந்து ஒரு மாதத்தின் பின்னரே, உயில் பற்றி அவர் சொல்லியிருந்தது நினைவில் வந்தது.
தன் ஒரே மகளுக்குச் சீரும் சிறப்புமாகச் சீதனம் கொடுத்துத் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அதனால், ஒரே ஒரு செட் நகையை ஒதுங்கியிருந்தார். மூத்த பேத்தி சாரலுக்கு என்று தன் தாய் அணிந்த பழமை வாய்ந்த ஒரு தங்க மாலையும் அதன் சோடி வளையலும் கொடுத்தவர், கிட்டத்தட்ட நூற்றைம்பது பவுன்கள் கொண்ட தன் தாய் வழி வந்த பாரம்பரிய நகைகள், தன் நகைகள், தன் தாய் சீதனமாகத் தந்த பரம்பரை வீடு, வங்கியில் இருந்த பணம் எல்லாமே பேத்தி கவினிக்கு என்று எழுதி வைத்திருந்தார்.
“உங்கட அம்மா ஓரவஞ்சனை பிடிச்சவா எண்டு சொன்னால் என்னோட சண்டைக்கு வருவீங்களே, இப்ப என்ன சொல்லப் போறீங்க?” என்று ஆரம்பித்த மதிவதனி, தனக்கும் மேலாக கணவர் குரல் உயர்திக் கத்த அப்போதைக்கு அமைதியாகி இருந்தார்.
இப்படியிருக்கையில்தான் சாரலுக்குத் திருமணம் நிச்சயம் ஆகியது. விமலா குடும்பம் சீதனம் என்று எதையும் எதிர்பார்க்கவில்லை. அதற்கென்று செய்யாது இருக்கலாமா? பூங்குன்றன் தம்பதி, குறைவில்லாது எல்லாம் செய்ய நினைத்தார்கள். அவர்கள் வசதி வாய்ப்புகளுக்குக் குறைந்தவர்கள் அல்ல. இருந்தாலும் பூங்குன்றனின் அன்னையின் நகைகளில் அரைவாசியைக் கொடுக்கும் படி கேட்டார், மதிவதனி.
அந்த நகைகளை வாங்கி இப்போதைய டிசைனுக்கு, தம் விருப்புக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்று, முதல்நாள் இரவு சாரலும் மதிவதனியும் கதைத்திருந்ததைக் கேட்டிருந்த கவினி சற்றும் யோசியாது மறுத்துவிட்டாள்.
“அது எனக்கு எண்டு அப்பம்மா தந்தது. எப்பவுமே அது அப்பிடியே இருக்கோணும். வச்சிருப்பன். அக்காக்கு அவாக்கு விருப்பமான மாதிரி நீங்க செய்து குடுங்கவன். ” என்றுவிட்டு, “நான் அவசரமாப் போகோணும், வாறன்.” சென்றுவிட்டாள்.
“என்னட்ட நகையா இல்லை? விடுங்கம்மா” என்று சொன்னாலும் தங்கை மறுப்பாள் என்று சிறிதும் எதிர்பார்த்திராத சாரல் முகம் கன்றிட்டு. மதிவதனியோ கொதித்துப் போனார்.
அன்று, வேலையால் பூங்குன்றன் வீட்டினுள் நுழையும் போதே அனல்காற்றாடிக்க ஆரம்பித்திருந்தது. தம் காதல் தெரிந்து மறுத்ததில் தொடங்கி, உயில் எழுதியவரை ஒன்று ஒன்றாகச் சொல்லி சொல்லிச் சண்டையைத் தொடங்கியிருந்தார், மதிவதனி.