உண்மையில் பூங்குன்றனுக்குமே தாயில் மனவருத்தம். பிள்ளைகள் இருவருக்கும் இடையில் ஒரு இடைவெளி விழ, கவினி, தாய் சகோதரியில் இருந்து விலகி இருக்க நிச்சயம் தன் தாய் ஒரு காரணம். அதென்ன ஒரு காரணம், முழுக்காரணமும் அவர் தான் என்று அவருக்கும் தெரியுமே!
“விடுங்க வதனி, சாரலுக்குத் தேவையானதுகளை நாமளே செய்திரலாம்.” களைப்போடு சொன்னார் .
“அத நீங்க சொல்லத் தேவேல்ல. இப்பவும் உங்கட அம்மா பற்றி ஒரு வார்த்தை சொல்ல வருதில்ல என்ன? கவினிய கூப்பிட்டுக் கதைக்கவும் உங்களால ஏலாது. பிறகு நான் ஓரவஞ்சனை பிடிச்சனான் எண்டு கதைச்சுக்கொண்டு வர வேணாம். என்னைப் பொறுத்தமட்டில எனக்கு ஒரு மகள்தான்.” சீறிவிட்டார், மதிவதனி.
“என்னட்ட இருக்கிறது முழுதும் உனக்குத்தான், வேற ஒருத்திக்கு ஒரு மூக்குக்குத்தியும் இல்ல.” என்ற மதிவதனி, மூத்த மகளுக்குப் பார்த்து பார்த்துச் செய்தார். சும்மாவும் இல்லை, “அந்தக் கிழவிட நகைகளை வச்சிருந்தா உன்ர வாழ்க்கை உருப்படாது. 36 வயசில புருசன மேல அனுப்பிப்போட்டு அதிகாரம் செய்து கொண்டு இருந்த மனிசி அது! ஆருக்கு வேணும் அவாட நகைகள்.” என்று சொல்லி, கனகாம்பிகை கொடுத்திருந்த மாலையும் காப்பும் நகைக்கடைக்குப் போயிருந்தது.
அதன் பின்னர், சொந்த வீட்டில் மிகவுமே அந்நியமாக இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் சகோதரி திருமணத்தில் தன்னால் முடிந்தளவு வேலைகளைச் செய்தாள், கவினி. ஆனால், தொடர்ந்து வெளியாட்கள் முன்னால் அவளைப் பற்றி எதிர்மறையாகவே கதைத்து கதைத்து அவள் பொறுமையை எல்லைக்குத் தள்ளிக்கொண்டே போகிறார், மதிவதனி.
எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் மீறி கண்ணீர் உருண்டு விழ பட்டென்று துடைத்தாள்.
அப்போது வந்த மதிவதனி, “நீ இப்பிடியேதான் நிக்கப் போறியா? ஆரும் பாத்தா வேலைக்காரி எண்டு நினைப்பினம். இல்ல, அப்பிடி நினைக்க வேணும் எண்டுதான் நிக்கிறியா? பெத்த தாயே சின்ன மகளை போட்டுப் படுத்திர பாட்டைப் பார் எண்டு கதைக்கோணுமா உனக்கு? நாடகம் போடுறியோ? போய்த் தோஞ்சிட்டு வாவன்.” எரிச்சலோடு படபடவென்று சிடுசிடுத்தார்.
“என்னடி நீ ? அந்தப் பிள்ளைதானே சமையல் எல்லாம் செய்தவா! சும்மா நொய் நொய் எண்டு கொண்டு.” கவினிக்குப் பரிந்துகொண்டு வந்தார், நிவேதா, அவர் தன்னைப் பரிகசிக்கிறாரோ என்றிருந்தது, கவினிக்கு. காரணம், தாயின் நண்பிகள் என்றால் தாய் நிச்சயம் தன்னைப் பற்றி நல்லதாகச் சொல்லியே இரார். அவளுக்கு முன்பு வைத்தே கதைக்கிறாரே .
“தாயும் மகளும் டொம் அண்ட் ஜெரி . நீ அதுக்க போகாத நிவி.” பகிடிபோல் சொல்லிவிட்டு, “வெளில போன ஆட்களைக் காணேல்ல, ஃபோன் பண்ணிப் பார்க்கிறன்.” முற்றத்தில் இறங்கினார், விமலா. உண்மையில் மதிவதனியிடம் இதுபற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லிவிட்டார், விமலா. அவர் கேட்டால்தானே.
நிவேதாக்கு, கவியின் விழிகள் கலங்கியிருப்பது தெரிந்தது. பாவமாக இருந்தது.
அவரைப் பார்த்துச் சின்னதாக சிரித்துவிட்டு அடுத்த யன்னலுக்கு மாறினாள், அவள்.
“கெட்டிக்காரி கவினி நீங்க, ஒரு தேத்தண்ணி போடச் சொன்னாலே இயல் பெரிய பாடு படுவாள். நீங்க நல்ல ருசியா சமையல் செய்திருக்கிறீங்க. அதுவும் ரெண்டு மணித்தியாலத்தில இத்திணை கறிகள்! ” உண்மையிலேயே மதிவதனி கதைத்த விதம் பார்த்த நிவேதாவுக்கு ஒருமாதிரி இருக்கவே தானாக வந்து அவளோடு கதைத்தார்.
“நீ வேற, நிவி, இவள் எங்க செய்தாள்? இவரிட அக்கா தான் செய்திருப்பா. வெங்காயம் உரிக்கிறது, தேங்காயைப் பிழிஞ்சு குடுக்கிறது எண்டு எடுபிடி வேலைகள் செய்துபோட்டு வெட்டி முறித்த கணக்கில வந்து நிக்கிறது. நடிக்கிறது …” என்று மதிவதனி நீளமாக அடுக்க, விசுக்கென்று உள்ளே சென்றுவிட்டாள், கவினி .
சிறுபொழுதில் வெளியே சென்றவர்கள் வந்திருக்க, வீட்டில் ஒரே கலகலப்பு.
உணவுண்ண ஆரம்பித்த போது பரமேஸ்வரியும் வந்துவிட்டார். கவினி எங்க என்று இனிதன் தான் கேட்டான். அது என்னவோ, திருமணமாகிக் கனடாவில் வசிக்கும் பரமேஸ்வரியின் மூத்த மகனிலும் இளையவன் இனிதனிலும் மதிவதனிக்கு அப்படியொரு அன்பு. அவர்கள் வீட்டுக்கு வந்தால் விழுந்து விழுந்து உபசரிப்பார். அதுவே, அவர் கவினியை நடத்தும் முறையில் உள்ள கோபத்தையும் இவர்களால் அவரில் காட்ட முடிவதில்லை.
இனிதன் அவரிடம் தான் கேட்டான் போலும். “ தோயிரத்துக்கு எண்டு எப்பப் போனவள். வெளியவே வரேல்ல.” மதிவதனி சொல்வது அறைக்குள் இருந்த கவினிக்குக் கேட்கவே செய்தது.
அடுத்த நிமிடம் அறையைத் தட்டித் திறந்து எட்டிப் பார்த்தான், இனிதன்.
“நீ இன்னுமா…” அவன் ஆரம்பிக்கவே, “அவசர வேலை…முடிச்சிட்டுத் தோஞ்சிட்டுச் சாப்பிடுறன். நீங்க சாப்பிடுங்க.” அவனைத் திரும்பிப் பார்க்காது கணனியில் பார்வை இருக்கச் சொல்லியிருந்தாள், அவள்.
“என்னவோ தாயும் மகளும் முட்டிட்டினம் போல ! மாமியத் திருத்தவே ஏலாது!” என்ன என்று கேட்டபடி வந்த தாயிடம் முணுமுணுத்தான், இனிதன்.
“விடுங்க தம்பி, ஆக்கள் வந்திருக்கிற நேரம் வீண் பிரச்சினை வேணாம்” என்றுவிட்டார், பரமேஸ்வரி.
மாலை மூன்றுவரை எல்லோரும் அங்குதான் இருந்தார்கள். அதுவரை கவினியின் தலை வெளியே தெரியவில்லை. அவளைப்பற்றி அங்கு ஒருவருமே கவலைப்படவில்லை . ஒருவரும் அறியாது சேந்தன் கவனம் மொத்தமும் அவள் மீதே!