மறுநாள், பொன்னுருக்கல் நிகழ்வு நடக்கவிருந்தது. தாலிக்கான தங்கம் உருக்கும் இந்நிகழ்வு மாப்பிள்ளை வீட்டில், அல்லது ஆசாரி வீட்டில் நடப்பதே இங்கு வழக்கம்.
கொழும்பை வதிவிடமாகக் கொண்ட விமலா குடும்பம், திருமணத்திற்கென யாழ்ப்பாணம் வந்து அவர்கள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தாலும் பொன்னுருக்கல் நிகழ்வை பூங்குன்றனின் சகோதரியான பரமேஸ்வரி வீட்டில் தான் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
தான் இரு வீட்டுக்கும் பொது என்றுவிட்டார், நிவேதா. அதுமட்டுமில்லாமல் முதல் நாள் பெண் வீட்டிலேயே தங்கிவிட்டார்.
விடியவே எழுந்து தயாராகி பரமேஸ்வரி வீடு செல்லலாம் என்ற நோக்கில், மாப்பிள்ளையின் அன்னையான விமலாவும் சினேகிதிகளோடு சேர்ந்து கொண்டார்.
“ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்தாச்சு! இவையள நம்பி வேலைகள விட்டுப்போட்டுத் தடுமாற வேணாம்.” என்று, இளையவர்கள் கடிக்கும் அளவிற்குச் சினேகிதிகள் மூவரும் தம் பாடசாலைக்காலத்துக்குச் சென்றிருந்தார்கள்.
பொன்னுருக்கல் நிகழ்வில் மிக நெருங்கிய உறவுகள் கலந்து கொள்வார்கள். இரு பகுதியையும் சேர்த்துக் கிட்டதட்ட நாற்பது பேர்கள் தாண்டும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. மதிய உணவை வெளியிலிருந்து எடுப்போம் என்று கதைக்கையில், தானே சமைப்பதாகச் சொல்லியிருந்தாள்,கவினி .
“பொன்னுருக்கல் ஆயத்தங்கள் மட்டுமா பிள்ள? நாளுக்குப் பலகாரச் சூடும் இருக்கு. என்னால சமையலில உதவச் சிரமமாக இருக்கும்.” தயங்கினார் பரமேஸ்வரி.
“நான் சமைப்பன் அத்தை. வாணனும் வருவான். இனிதன் மச்சானும் இருக்கிறார். மூண்டு பேருமா எட்டுமணிக்குள்ள சமையல முடிச்சிருவம், யோசிக்காதீங்க .” என்றுவிட்டாள்,அவள்.
சிறுகுறையுமின்றி விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதில், தாயின் சீறலுக்கு கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தால் சரியா? முதல், கவினிக்குத் தாயுடனான பிணக்குகள் எதுவுமே புதிதானவை அல்ல. வெளியாட்களின் முன்னால் வைத்து அவர் கதைக்கும் விதமே கூனிக் குறுக வைத்தது. சபையில் வராது ஒதுங்கவும் செய்தது. இருந்தபோதும் தன் தனிப்பட்ட விடயங்களை யோசிக்கவோ வருந்தவோ இது நேரமில்லையே! அதுவே, மனத்தின் சுணக்கங்களை ஒதுக்கிவிட வைத்திருந்தது.
பரமேஸ்வரியோடு கலந்து கதைத்து, விருந்துச் சமையலுக்கு தேவையான அனைத்தையும் எழுதிக்கொடுத்திருந்தாள். அவள் மாமாவும் பூங்குன்றனும் வாங்கி வந்து விட்டார்கள்.
விடியவே சமைக்க எழும்ப வேண்டுமே. அன்றிரவு, அத்தை வீட்டில் தங்குவதாக முடிவெடுத்தவள், வீட்டில் செய்ய வேண்டும் என்று எண்ணியவற்றை எல்லாம் செய்து முடித்துவிட்டே தோய்ந்தாள். அதற்குள் இருளவன் ஆட்சிக்கு வந்திருந்தான்.
ஒரு இஞ்சித் தேனீர் போட்டு அருந்தினாள். தாயின் சகோதரிகள் வந்திருந்தார்கள். வரவேற்பறையில் கலகலப்பும் சிரிப்பும் நிறைந்திருந்தது.
“சித்தி, பெரியம்மா ஆட்கள் உன்னக் கேட்டவே கவினி, அறைக்க இருந்து என்ன செய்யிற? பிறகு உன்னப் போட்டு வதைக்கிறது எண்டு அம்மாவ அவே ஏச, இதெல்லாம் தேவையா சொல்லு? சீன் போடாமல் வா, வந்து கதையன்.” வெடுசுடுவென்று சொல்லிவிட்டுச் சென்றாள், சாரல்.
அவர்கள் மட்டுமில்லையே, தாயின் சினேகிதிகளும் இருக்கிறார்களே. நிச்சயம் மதிவதனி சும்மா இரார். தேள் போல் கொட்டுவார். தெளிவாகத் தெரிந்தாலும் வரவேற்பறை நோக்கிச் சென்றாள்,கவினி.
அரை மணித்தியாலத்திற்கும் குறைவாகத்தான் இருந்திருப்பாள். தாய்க்குத்தான் இவள் பிடிக்காதவள். மதிவதனி வீட்டினர் அப்படியெல்லாம் பாகுபாடு காட்டுவதில்லை. இப்போ அதிசயம் என்னவென்றால் மதிவதனி குத்திக் குதறவில்லை. கல்யாணக் கதைகள் தான் போய்க்கொண்டிருந்தது.
“அக்கா நான் இரவுக்கு அத்தை வீட்டில சாப்பிடுறன்.” சாரலிடம் சொல்லிவிட்டு எழுந்தாள், இவள்.
“கவினி, நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுக்கான பலகாரச் சூடு என்ர பொறுப்பு எண்டு பரமேஸ்வரி அக்காட்ட சொல்லி விடுங்கம்மா.” என்றார் விமலா.
“சரி அன்ரி.” என்றுவிட்டுச் சென்றவள், மறுநாளைய சமையலுக்கு ஆயத்தங்களைச் செய்து வைக்கத் தொடங்கினாள்.
“பிள்ள, அதில கை வைக்க முதல் வந்து சாப்பிடு! அது சரி, மத்தியானம் சாப்பிட்டனியாம்மா?” என்றபடி வந்தார், பரமேஸ்வரி.
அவளால் பொய் சொல்ல இயலவில்லை. “இல்ல அத்த, பசிக்கவே இல்ல. அதோட அப்படியே நித்திரை கொண்டிட்டன். நல்லா நேரம் செல்லத்தான் எழும்பினனான். மிச்சச் சோடன வேலைகள முடிச்சிட்டு, தோஞ்சிட்டு அப்படியே இங்க வந்திட்டன்.”அவரைப் பார்க்காது சொல்லிவிட்டு, வாங்கி வந்த பைகளுள் உள்ள பொருட்களைப் பார்வையிட்டாள். முறைத்தபடி நின்றார் பரமேஸ்வரி.
“என்ன எண்டாலும் சாப்பாட்டில காட்டுறதில்ல எண்டு உனக்குச் சொல்லி இருக்கு. அதோட, ஆர் ஆர் எப்பிடி எண்டு உனக்கு நல்லாவே தெரியும் எல்லா? அதுக்கேத்த மாதிரி நடக்கோணும் பிள்ள. உன்ர அம்மா கதைக்கிறதுகளப் பெரிசா எடுத்துச் சாப்பிடாம இருந்தனியோ? உன்ன என்ன செய்யலாம் சொல்லு!” கரிசனையும் அலுப்புமாகக் கேட்டபடி அருகில் வந்து அவள் முகத்தை நிமிர்த்தினார், அவர்.
“டேய் பிள்ள! அழுதனியாம்மா?” அதட்டினார்.
எப்போதும் அவளை இளகிக் கரைய வைக்கும் குரல் இது. இந்த அன்புதான் அவளுக்கான புத்துணர்வு! அவளுடைய அப்பம்மாவின் மறைவுக்குப் பின்னர் அவருக்கும் சேர்த்து அன்பும் அரவணைப்பும் பரிவும் காட்டுபவர் இவர்.
மூக்குக் கரிக்க கண்கள் கலங்கின. தன்னால் முடிந்தளவுக்கு முயன்று சமாளித்தாள், கவினி.
“அழுகிறதா?அது என்னத்துக்கு அத்த? முழுகினனான் எல்லா, அதான் கண் ரெண்டும் சிவந்திருக்கு. அதோட பசிக்கேல்ல எண்டுதான் சாப்பிடேல்ல.” என்று சொல்லிக்கொண்டு திரும்ப இனிதனும் சேந்தனும் உள்ளிட்டுக்கொண்டிருந்தார்கள்.


