இவர்கள் கதைத்தது கேட்டிருக்குமோ! என்னதான் என்றாலும் சேந்தன் வெளியாள். கவினிக்கு ஒரு மாதிரி இருந்தது.
“சரியாப் பசிக்குது அம்மா. அங்க இருக்க போர் அடிக்குதாம் எண்டு ரெண்டு பேரும் வந்திட்டினம். ஆதவனோட சூர்யாவ விட்டிருக்கு.யோகன் அங்கிளும் அங்கதான் நிக்கிறார்” என்றபடி வந்த இனிதன், “அடேய்! என்ன கண்ணெல்லாம் சிவந்திருக்கு?” கவினியின் அருகில் வந்து நின்று ஆராய்ச்சியாகக் கேட்டான். தாம் கதைத்தவை அவர்கள் செவிகளை எட்டவில்லை என்றதே இவளுக்குப் பெரிய நிம்மதியாக இருந்தது.
“முழுகிப்போட்டு வந்திருக்கிறாள், பார் தலையும் வடிவாத் துடைக்கேல்ல. முதல் தலையத் துவட்டம்மா!”அவள் கதைக்க முதல் முந்திவிட்டார், பரமேஸ்வரி.
அத்தகையோடு, “வாங்கோ பிள்ளைகள். ஆதவன் சூரியனும் வந்திருக்கலாமே. சாப்பிட்டுப்போட்டுப் போயிருக்கலாம்!” சேந்தன், இயலையும் வரவேற்றார்.
அடுத்த அரைமணித்தியாலத்தில் எல்லோரும் உணவுண்ண அமர்ந்தார்கள். புட்டு, இடியப்பம் கறிகளோடு இருக்க, “ பிள்ளைகளுக்கு விருப்பமா இருக்கும்” என்றபடி, சுட சுட பால் அப்பம் கொண்டு வந்து வைத்தார், பரமேஸ்வரி.
“அத்தை இன்னும் சுடோணுமா?” என்றபடி வந்தாள் கவினி .
“அதெல்லாம் நான் பாத்துக்கொள்ளுறன், நீ இருந்து சாப்பிடு. சோறு வேணும் எண்டாலும் இருக்கம்மா.” என்றார், அவர்.
“இல்ல, நான் புட்டுச் சாப்பிடுறன்.”என்று வந்தவள், “வடிவாப்போட்டுச் சாப்பிடுங்க இயல். என்ர அத்தையிட சாப்பாடு வேற லெவலில் இருக்கும்” அவளுக்கருகில் அமர்ந்துகொண்டாள்.
“இந்த வீட்டில அத்தையும் மருமகளும் ஒருத்தர ஒருத்தர் விட்டுக் கொடாயினம். இவேட சமையல் எப்பிடி எண்டு சாப்பிடுற நாங்க சொல்லோணும். அதுக்கு முதல் தாங்களே ஆகோ ஓகோ எண்டு புகழ்ந்து தள்ளுறது.” இனிதனின் தந்தை நக்கலாகச் சொன்னார்.
“மாமா சொல்லுறது கேட்குது எல்லா அத்தை ?” முறைத்தபடி சொன்னாள், கவினி.
“வாய்க்கொழுப்புக் கூடின சனங்கள் சொல்லுறதுகள் எங்கட காதில விழவே விழாது.” என்றபடி வந்து மேலும் சில அப்பங்களை வைத்துச் சென்றார், பரமேஸ்வரி.
காலையில் தாம் சந்தித்த கவினியா இது என்றிருந்தது, சேந்தனுக்கு. அந்தளவுக்கு, மிக இயல்பாகச் சிரித்துக் கதைத்தபடி இருந்தாள். அதுவே, கதையோடு கதையாக ஆர் ஜெ ஐயாவைச் சந்தித்தது பற்றிச் சொன்னான்.
“ஓ! அது நீங்களா?”என்ற கவினிக்கு, அதன் பின் சேந்தனோடு கதைக்கத் தடையிருக்கவில்லை.
“ஐயா எனக்கும் சொன்னவர்,உங்கட பெயர் விபரமெல்லாம் சொல்லேல்ல.”என்று கதைத்து, எத்தகைய உதவிகள் செய்ய விருப்பம் என்றெல்லாம் கேட்டுக்கொண்டாள்.
“உங்களுக்கு எப்ப வசதிப்படும் எண்டு சொல்லுங்கோ போகலாம். அச்சுவேலில ஒரு குடும்பம், மற்றது கிளிநொச்சில. நீங்க சொல்லுறத வச்சுப் பார்த்தா ஐயா தந்த குடும்பங்களில இது ரெண்டும் இருக்கு. இன்னுமொண்டு மட்டக்களப்பில. அங்க நான் இனித்தான் போகோணும். இங்க உள்ள ரெண்டுக்கும் முதல் போகலாம்.”என்று கதைத்து, இன்னும் இரு தினங்களில் சென்றுவிட்டு வரலாம் என்று முடிவு செய்தார்கள்.
“கலியாண அலுவல்களுக்க நேரமிருக்குமா?” என்று பரமேஸ்வரியின் கணவர் கேட்க, “கலியாணம் முடிஞ்ச பிறகு நாள் பறந்திரும் அங்கிள், ஏலுமெண்டா இப்பவே போயிட்டு வந்திருறது நல்லது.” என்றான் சேந்தன்.
“மத்தியானத்துக்குப் பிறகு வெளிக்கிட்டாலும் ரெண்டு இடத்துக்கும் போயிட்டு வந்திறலாம். நானும் வாறன்” என்றான், இனிதன்.
சேந்தனுக்கு இனிதனை மிகவுமே பிடித்திருக்க, ஊர் உலக நடப்புகள், பொருளாதாரம் தொடங்கி உக்ரேன் ரஷ்யாவுக்குள் உலவி, அப்படியே இஸ்ரேல் காஸாவுக்குள் புகுந்து வந்தார்கள். இடையிடை இனிதன் தந்தையும் சேர்ந்து கொண்டார்.
கவினியும் இயலும் இலண்டனைச் சுற்றி வந்தார்கள். ‘வெளிச்சம்’ நிகழ்ச்சி பற்றிய சுவாரசியமான விசயங்களைக் கதைத்தார்கள். கவினியின் யூ டியூப் சேனல், அவள் குரல் பற்றியெல்லாம் அளவளாவினார்கள்.
கவினியின் விழிகளும் முகபாவனைகளும் சேர்ந்து கதை பேசின. அவளையும் அறியாதே சேந்தன் கவனத்தை ஈர்த்தபடியே இருந்தாள். அதில், “உங்கட ‘வா வாத்தி’ ஷோர்ட் எத்தினை தடவைகள் கேட்டனான் எண்டு கணக்கெடுக்கவே ஏலாது.” என்றுவிட்டு, அந்தப் பாட்டைப் பாடும்படி கேட்டாள், இயல்.
அவனும் அந்த ஷோர்ட்டை எண்ணுக்கணக்கின்றிப் பார்த்திருக்கிறான். மீண்டும் மீண்டும் தட்டிப் பார்க்க வைத்தது அவளின் தேன் குரல் மட்டுமா? வரிக்கு வரி அவள் முகம் காட்டிய பாவனைகள் எத்தகையது தெரியுமா? அதை இப்போது நேரில் பார்க்க முடியுமே என்று இவன் தயாராக, “இப்பவா, பிறகு ஒரு நாளைக்கு ” என்று விட்டாள், அவள். இயல்தான் விடமாட்டேன் என்று மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள்.
இலண்டனில் அன்று, இவளைப் பற்றி வீட்டில் கேட்டிருந்தானே, அதன் பின்னர் அடிக்கடி இவளைப் பற்றிய கதைகள் அவர்கள் வீட்டில் கதைபட்டது. முக்கிய காரணம் இயல்தான். இவளின் நிகழ்ச்சிகள் ஒன்றுவிடாது பார்த்தாள். அவைபற்றி வீட்டில் சொல்லிக்கொண்டு இருந்தாள். கூடவே இசைவாணனை அவளுக்கு மிகவுமே பிடிக்குமே . இவர்கள் நண்பன் நண்பி என்று சேர்ந்து கலாட்டா செய்கிற ஷோர்ட்ஸ், ரீல்ஸ் எல்லாம் அவர்கள் வீட்டில் ஓடியது. அதுவும் காலையில் தேனீர் குடிக்கையிலும் இரவு உணவு உண்கையிலும் கூட அவைதான்.
மகள் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் பதிலாக, நிவேதா அவள் பற்றிச் சொல்வது வேறாக இருந்தது. அவை, அவளை ஒரு முதிர்ச்சியற்ற முட்டாள் முரடு போலவே உருவகப்படுத்தியது. அந்தவகையில், கவினி பற்றிய எதிர்மறை உருவகம்தான் இவன் மனத்திலும் இருந்தது. அது, இக்கணம் வேக வேகமாக உருகிக் கரைந்து கொண்டிருந்தது.
சிலரைக் கண்டதும் பழக வேண்டும் போன்றதொரு உணர்வு வருமே! அப்படித்தான் அவனுக்கும் அவளோடு கதைத்துப் பேசிப் பழக வேண்டும் போலிருந்தது. காலையில் அந்த இசைவாணன் போல…இந்த இனிதன் போல… ‘ம்ம்ம் அதுக்கும் மேல’ அவனையும் அறியாதே மனம் முணுமுணுத்தது.
அவனுக்கு இருபத்தியைந்து வயசு. இதுவரை இப்படி எவரைப் பார்த்தும் உணர்ந்ததில்லை. சிறு வயதிலிருந்து, மகனையும் மகளையும் பகிடி பகிடியாக எச்சரிப்பார், நிவேதா. ஆமாம், அது எச்சரிக்கைதான்! அதுவே திருமணம், காதல் எதுவாக இருந்தாலும் தமிழர்களாகவே இருக்க வேண்டும் என்றதொரு எண்ணம் அவனுள். இயலுக்குமே அந்த எண்ணம் தான். பதின்ம வயதில் நல்ல முதிர்வான அறிவை பெற்றிருந்தான், சேந்தன்.
இயலும் செல்லம் கொஞ்சினாலும் கதை பேச்சு நடத்தையில் அவள் முதிர்வு தெரியும். அதுவே தமக்கான இணையை, பெற்றோர் பார்த்துத் தருவார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியிருந்தது. நிவேதா உருவாக்கியிருந்தார்.
வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாது தன் கருத்தை, விருப்பைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யும் விதம் அவருக்குக் கைவந்த கலை.
இது உன் வாழ்வுக்கு நன்றாக இருக்கும் என்ற வகையில் சொல்வார். முடிவு உன் கையில் என்ற சுதந்திரத்தில் கை வைத்ததும் இல்லை. பெற்றோரின் அந்த அணுமுறை சேந்தன், இயலுக்கு அவர்களில் மரியாதையைக் கொண்டு வந்திருந்தது.
அப்போதும் திருமண விசயத்தில் ஆகக் குறைந்தது ஆறு மாதங்கள் ஒரு வருடம் சரி பழகிப் பார்த்த பின்னரே கல்யாணம் என்றும் சொல்லுவார்கள்.
“உங்கட விருப்பம் பிள்ளைகள்” என்று சொல்லும் நிவேதா, “ஏற்கனவே ஆராவது பழகிப் பார்த்துத் தமக்குச் சரிவராது எண்டு விட்ட பிள்ளைகள், பெடியன்களும் உங்களுக்கு ஓகேவா?” என்று, வாழைப்பழத்தில் ஊசியேற்றும் விதத்தில் கூறி அவர்களை யோசிக்க வைத்துவிடுவார்.
இருவரும் தாயை முறைப்பார்கள். என்னதான் என்றாலும் தம் இணையைப் பற்றி, விருப்பு வெறுப்புகள், பழக்க வழக்கங்கள் குணநலன்கள் பற்றி எல்லாம் முன்னரே தெரிந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார்கள்.
இப்போ, இக்கணம் இதையெல்லாம் ஏன் இவன் நினைக்கிறான்? அதையும் கவினியைப் பார்த்தபடியே! அதற்குமேல் யோசிக்க வேண்டாமே என்றது, அவன் உள்ளம். ஒரு மாதம் இங்கு தானே நிற்கப் போகிறான். ‘ பார்ப்போம்’ என்றுதான் நினைத்துக்கொண்டான்.
சாப்பாடு முடிய, மறுநாள் சமையலுக்கு ஆயத்தம் செய்ய வெளிக்கிட , மறுத்தும் கேட்காது சேந்தனும் இயலும் உதவினார்கள்.
அன்று, சாமம் பன்னிரென்று மணிபோல் விடைபெற்றவர்கள் விடியப்புறம் வருவதாகக் கூறினார்கள்.
“இப்பவே நேரம் என்ன, இங்க நாங்க பாத்துக் கொள்ளுவம். நீங்க ஒரேயடியா வெளிக்கிட்டுக்கொண்டே வாங்கோ!”
அவர்கள் சொன்னதைக் காதில் வாங்காது, அழைத்துச் சென்று விடுவதற்காக இனிதன் ஆயத்தமாக மறுத்துவிட்டு, இனிதனின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு சென்றார்கள், இருவரும்.


