மறுநாள் அதிகாலையிலேயே பரமேஸ்வரி வீட்டின் சமையலறைப் பக்கம் விழித்து விட்டது.
கவினி எழுந்த கையோடு இனிதனும் எழுந்து வந்துவிட்டான்.
“சுட சுட கோப்பி போட்டுத் தாடி மச்சாள். அப்பதான் தேங்கா திருவித் தருவன்.” சோம்பலோடு சொன்னவன், சமையலறை வாயிலோடு சாய்ந்தமர்ந்துகொண்டான்.
“போய் இன்னும் ஒரு மணித்தியாலம் தூங்கிட்டு வாங்கவன். எட்டரை ஒன்பதுக்குள்ள சமைச்சு முடிச்சாலே, பத்துக்கு ஆசாரி வரேக்க வெளிக்கிட்டரலாம். இப்ப நாலு மணிதான்.” என்றபடி, எலெக்ட்ரிக் குக்கரில் தண்ணீரை அளவாக நிறைத்துச் சுட வைத்துவிட்டு, பால் சட்டியை அடுப்பில் வைத்தாள்,கவினி.
“பச்! இனிப் போய்ப் படுத்தா நித்திரை வராது.” என்றபடி சோம்பலோடு கைப்பேசியில் மேய்ந்தான், இனிதன்.
அடுத்த சில நிமிடங்களில், இருவருக்குமான கோப்பிக் கோப்பைகளோடு அவனருகில் அமர்ந்தாள், கவினி.
“மயூரன் மச்சான் ஆக்களும் கொஞ்சம் முதலே வந்திருக்க பம்பலா இருந்திருக்கும்.” இனிதனின் சகோதரன், மனைவி இரு குழந்தைகளோடு கனடாவில் வசிக்கிறான். அவன் பற்றிக் கதைத்தார்கள்.
“ம்ம் …அண்ணிக்கு லீவு சரிவரேல்ல. கலியாணத்துக்கு முதல் நாள் வந்தாலும் பிறகு ஒரு மாதம் நிப்பினம் தானே.”என்ற இனிதன், “உன்ர கலியாணத்துக்கு ஒரு மாதம் முதலே வந்திருவாராம் எண்டவர்.” கண்ணடித்து வம்பிழுத்தான்.
“குளிப்பாட்டி விட்டிருவன்.” கோப்பிக் கோப்பையை அவன் தலைக்கு மேலாகக் கொண்டு சென்றாள்.
“கலியாணம் எல்லாம் இப்போதைக்கு இல்ல. மயூரன் மச்சானுக்கு லீவு எடுக்க வேண்டிய தேவை வராது.” கீழுதட்டைப் பிதுக்கினாள்.
“அதையும் பாப்பம். நீ கட்டினால்தான் எனக்குக் கலியாணம் எண்டு அம்மா சொல்லிப்போட்டா. அத நினைவில வச்சிரு ராசாத்தி! உன்னை விட மூண்டு வயசு மூத்தவன் நான்.” மூக்கால் அழுதான், இனிதன்.
“அதெல்லாம் சும்மா சொல்லுறது. கனக்க யோசிக்காதீங்க! அக்காட கலியாணம் முடிஞ்ச கையோட உங்களுக்குப் பாக்கலாம். அதுசரி, வெளிநாடு வேணுமோ உள்நாடா? இல்லை, ஏற்கனவே பார்த்திட்டு எங்களிட்ட சொல்லேலையா? ” என்று அவள் கேட்ட விதத்தில் விழிகள் சுருங்க முறுவலித்தவன், “நீ கதைய மாத்த வேணாம். உனக்கு முடிச்சிட்டுத்தான் நான் கட்டுவன்.” உறுதியாகச் சொன்னான்.
“அதுவரைக்கும் உங்கட அண்ணிட தங்கச்சி பாத்துக்கொண்டு இருப்பாவோ!”கண்ணடித்தபடி கேட்டாள்,கவினி.
“அடிதான் வாங்குவ கவினி. விசர்க்கதை கதையாத சரியோ!” இப்படிக் கதைத்தாலும் உதட்டுக்குள் முறுவலை நெரித்து அடக்கினான்.
அதைக் கவனித்தவள், “சரி சரி…. மலியட்டுமன்.” ராகமாக இழுத்தாள்.
இப்படி, ஒருவர் ஒருவரைக் கடித்துக்கொண்டே கோப்பியைக் குடித்து முடிக்கவும் வாசலில் மோட்டார் சைக்கிள் ஒலி வந்து அடங்கவும் சரியாக இருந்தது.
“இதார்(இது யார்) இயல் ஆக்களோ? ஐயோ இதென்ன சொன்ன மாதிரி வந்திட்டினம். எனக்கு உண்மையா நிறையப் பேர் நிண்டாச் சமைக்கச் சிரமம்.”என்றபடி எழுந்தாள், கவினி.
“அதுக்கெண்டு ஆசையா வாறவேய வேணாம் எண்டுறதே?” என்றபடி சென்ற இனிதன், அவர்களை உள்ளே அழைத்து வந்தான்.
ஆழ்மூச்செடுத்து விட்டபடி, “கோப்பி கமகமக்குதே! எங்களுக்கும்” என்றபடி வந்த சேந்தன், “காலை வணக்கம் கவினி பூங்குன்றன்!” சுவாரசியப் பார்வையோடு சொன்னபடி கை குவித்தான்.
அந்தச் சுவாரசியம் கவினியின் கருத்தில் பதியவில்லை. ஆனாலும் முழுப்பெயரையும் அவன் உச்சரிக்கும் விதம் முறுவலைத் தோற்றுவித்திருந்தது. வணக்கம் சொன்னாள். “கோப்பி போடுறன்.” என்று நகர்ந்தவளோடு சேர்ந்துகொண்டாள், இயல்.
“ஏன் இயல் இந்தளவு வெள்ளனவே வந்தனீங்க? வடிவாத் தூங்கி எழும்பி ஒரேயடியா வெளிக்கிட்டுக்கொண்டு வாறத விட்டுட்டு…” உண்மையில் சங்கடமாக உணர்ந்தாள், கவினி.
“முறைக்குப் பொன்னுருக்கல் மாப்பிள்ள பகுதிட தானே? நாங்கதான் எல்லாம் செய்யோணும். இங்க, எல்லாம் பொம்பள பகுதிதான் செய்யினம். சின்ன உதவிகள் சரி செய்யாட்டி எப்பிடி?” என்றாள் இயல்.
“அதோட, உண்மையாவே எங்களுக்குச் சிரமம் எண்டு ஒண்டும் இல்ல. நல்ல பம்பலா இருக்கு. இரவு இங்கயே தங்கி இருந்திருக்கலாம் எண்டு அண்ணாவும் நானும் கதைச்சனாங்க.” என்றபின், என்ன கதைப்பது.
“தாராளமாத் தங்கலாம். இண்டைக்கு இரவுக்கு என்னோட நில்லுங்கோ. கலியாணத்துக்கு முதல் நாள் வந்தாலும் மயூரன் மச்சான் ஆக்கள் சுகி அக்கா வீட்டில தான் நிப்பினம். அதால நீங்க இங்கயே நிக்கலாம்.” என்றவள் கோப்பியைப் கொடுக்க, “எனக்கும் எனக்கும்” என்றபடி உள்ளிட்டான், இசைவாணன்.
அதன்பின், கதை பேச்சுகள் இருந்தாலும் ஐவரும் சுறுசுறுப்பாக வேலைகளைப் பார்த்தார்கள்.
பக்கத்தில் பெண் வீடும் விழித்துவிட்டது. எட்டிப் பார்த்துச் சொன்னாள், இயல்.
“அவையள் மோதகம் கொண்டு வரோணும் எல்லா? பிறகு கன்னிக்கால் நடுறது, நாள்ப் பலகாரம் செய்யிறது எண்டு அங்கயும் வேலைகள் இருக்கு.”என்றாள் கவினி.
“அங்க ஒண்டுக்கு மூண்டு பொம்பளைகள் நிக்கினமே, செய்யட்டுமன்.” இயல்தான்.
சேந்தனும் இனிதனும் தேங்காய்களை உடைத்துத் துருவ ஆரம்பித்தார்கள். வாணனும் இயலும் வெங்காயம் உரித்து, வெட்டும் வேலையைத் தமதாக்கி இருந்தார்கள்.
“முதல் கத்தரிக்காய் மோஜோ செய்திட்டு …” என்றபடி, பெரிய தாச்சியில் எண்ணையைச் சுட வைத்தாள், கவினி.
“சின்ன வெங்காயத்த உரிச்சுத் தாங்கோ!” என்றவள்,கடகடவென்று நீட்டுவாக்கில் கத்திரிக்காயை வெட்டும் அழகைக் கடைக்கண்ணால் நோட்டமிட்டான், சேந்தன். சுட சுட கோப்பி குடித்த பின்னரும் எஞ்சி நின்ற நித்திரைச் சோம்பலை அவளின் ஒவ்வொரு அசைவும் விரட்டியது. தனக்குள் சிரித்துக்கொண்டான்.


