மணப்பெண் வீட்டிலிருந்து வந்தவர்களை வரவேற்று உபசரித்தார், பரமேஸ்வரி. வீட்டில்தான் சமையல் என்பது மதிவதனிக்குத் தெரியும். சற்று நேரத்துக்கே வந்திருக்கலாம். இல்லையோ, ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுச் சென்றிருக்கலாம். எதிர்பார்த்தார். பூங்குன்றன் வந்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்தான். இருந்தாலும் பரமேஸ்வரி மனத்துள் தாங்கலாக இருந்தது. இத்தனை வருடங்களில் மதிவதனியுடனான எந்த மனத்தாங்கலையும் அவர் வெளியில் காட்டிக்கொண்டதில்லை. ஏற்கனவே தாய்க்கும் அவருக்கும் சரிவராது. இதில் தானும் முறுக்கிக் கொண்டால், முகம் திருப்பினால், தர்க்கம் புரிந்தால் சகோதரன் நிலை என்னாகும் என்று அமைதியாகப் போவது அவர் வழக்கம்.
“எல்லாம் செய்தாச்சா அக்கா? உங்களுக்கு நல்ல வேலை தந்திட்டம். பலகாரச்சூடு நான் செய்யிறன், கவினி சொன்னவா தானே?” என்றபடி, வரவேற்பறையில் செய்திருந்த ஆயத்தங்களைப் பார்வையிட்டார், விமலா.
“என்ர மருமகள்ட கலியாணம், என்னால ஏண்டதச் செய்யிறன். அதோட சமையல் முழுசும் பிள்ளைகள் தானே பாத்தவே. இங்க எனக்குத் தெரிஞ்ச வரை எல்லாமே செய்திருக்கு. எதுக்கும் நீங்களும் ஒரு தடவை சரிபாத்துக் கொள்ளுங்கோவன். அதோட தாலிக்கான தங்கத்த படத்தறையில(சுவாமியறையில்) வச்சிட்டா, அங்க இருந்து எடுத்து ஆசாரிட்டக் குடுக்கலாம்.” என்றவர் வதனியிடம் திரும்பினார்.
“ஆசாரிக்குக் குடுக்க வேண்டிய மரக்கறிகள் குசினி மேசைக்குக் கீழ ஒரு பையிக்க இருக்கு. பக்கத்திலயே பெரிய தாம்பாளமும் இருக்கு. அதில வச்சு அங்க எடுத்து வச்சிரும், வதனி.” என்றவர், “நீங்க எல்லாரும் காலமச் சாப்பிட்டிங்களா? எல்லாச் சாப்பாடும் தாராளமாவே இருக்கு. வதனி கூட்டிக்கொண்டு போமன்.” என்றுவிட்டு, கனடாவிலிருந்து மகன் அழைக்கவும் தள்ளி நின்று கதைத்துக்கொண்டு நின்றார்.
வீடியோ எடுப்பவர்கள் முற்றத்திலிருந்த நிறைகுடத்தில் இருந்து தம் வேலையைத் தொடங்கியிருந்தார்கள்.
அந்நேரம் யோகன், ஆதவன், சூரியன் இன்னும் சில நெருங்கிய உறவினர்கள் வர அவர்களையும் அடக்கிக்கொண்டார்கள்.
புத்தம் புது அரிசிமா வாசத்தோடு இருந்த குழல் பிட்டில் ஒரு சில்லை எடுத்துவைத்து, பொரித்த சிவப்பு மிளகாயில் இடித்த தேங்காய்ச் சம்பலோடு சாப்பிட்டுக்கொண்டிருந்த நிவேதா வீட்டினுள் இருந்து வாணனோடு வந்த சேந்தனை ஆச்சர்யமாகப் பார்த்தார். சற்று முன்னரும் அழைத்தாரே. “வெளிக்கிட்டுக்கொண்டு நிக்கிறம் அம்மா, இந்தா வாறம்.” என்றவர்கள் இங்கே எப்பிடி? மகனிடமே கேட்டார்.
அப்போதுதான் அவர்கள் சமையலுக்கு உதவவென்று விடியவே வந்தது தெரிந்தது.
“உண்மையாவா?” அவர் வியப்பில் நிற்க, “அதானே பாத்தன், ஐஞ்சு பேர், அதோட பரமேஸ்வரி அக்கா. பிறகு சமைக்கிறதுக்கு என்ன? இப்ப வந்து தானே தனியச் செய்த மாதிரி படம் போடுவாள் பாருங்க!” நக்கலாகச் சொன்னார்,மதிவதனி.
அது சேந்தன், வாணன் காதுகளிலும் விழுந்தது. வாணன், முகம் கறுக்க விசுக்கென்று வெளியில் சென்றுவிட்டான். சேந்தனுக்கு, மதிவதனியைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. வாணனைத் தொடர எத்தனித்தவன், சகோதரி குரலில் நின்றான்.
“உண்மையில கவினிதான் எல்லாம் செய்தவா அன்ரி. அவ்வளவு கறிகள், சோறு, வடை பாயசம் பொரியல்கள் எண்டு எல்லாமே.” என்றபடி வந்தாள், இயல்.
அதோடு நிறுத்தவில்லை. ”நான் ஒண்டு கேப்பன் குறை நினைக்கக் கூடாது அன்ரி. கவினி உண்மையாவே உங்கட மகளா? என்ன கேக்கிறன் எண்டா பயோலாஜிகல்…அதான் நீங்க பெத்த பிள்ளையா? ” தணிந்த குரலில் கேட்டு மதிவதனியின் முகத்தைச் சுண்டிப் போகச் செய்துவிட்டாள்.
“இயல்! என்ன கதை இது?” அதட்டினார், நிவேதா.
“பின்ன என்னம்மா? இரவு ஒரு மணிக்குப் பிறகுதான் தூங்கியிருப்பா. விடிய நாங்க நாலரைக்கு வரேக்க முழிப்பு. கிட்டத்தட்ட ஐஞ்சு மணித்தியாலத்துக்கும் மேல, ஒரு நிமிசம் சும்மா இருக்கேல்ல . நிண்ட நிலையில அவ்வளவும் சமைச்சது அவா. வெட்டிக் குடுத்ததுதான் நாங்க. அதுக்குப் பிறகும் இப்பிடிச் சொன்னா! நீங்க என்னைப் பற்றி ஆரிட்டையாவது இப்பிடி எல்லாம் கூடாமல் கதைப்பீங்களா சொல்லுங்க? அப்பாவும் நீங்களும் கூட கதைச்சுக் கொள்ள மாட்டீங்க எல்லா? பிறகு நான் கேட்டதில என்ன பிழை?” வெடுக்கென்று கேட்ட வேகத்தில் விசுக்கென்று உள்ளே சென்றுவிட்டாள்.
பளீரென்று அறை வாங்கிய உணர்வில் கன்றிப் போன முகத்தோடு நின்றார், மதிவதனி. அங்குமிங்குமாகப் பார்த்தார். இவர்களைப் பார்த்திருந்த பரமேஸ்வரி இயல்பாக நகரும் பாவனையில் முன்னால் சென்றார். சேந்தனின் பார்வையை எதிர்கொண்டவர் மனத்தில் வெளியில் காட்ட முடியாத ஆத்திரம். இவர்களில் காட்டி?
“அச்சோ! குறை நினையாத வதனி. அதோட நீயும் பிள்ளைகளுக்கு முன்னால, வெளியிடங்களில இப்பிடிக் கதைக்கிறத விடன்! முதலும் கனதரம் சொல்லிட்டன். என்ர பிள்ளைகளுக்கு சின்ன வயசில இருந்தே ஆரைப்பற்றியும் இப்பிடிக் கதைச்சாப் பிடிக்காது. அதையும் விட, கண்ணுக்கு முன்னால அந்தப் பிள்ளை எவ்வளவு செய்யிறா. மனச்சாட்சி இல்லாமல் கதைக்கக் கூடாதல்லா? ” மதிவதனி கதைத்த விதத்தைக் கண்டித்தார், நிவேதா.
மதிவதனிக்கோ, இளைய மகள் மீதான கோபம் உச்சிக்கு ஏறிற்று. அதுவும் முதல் நாள் இரவு கேள்விப்பட்ட விசயம் உருவாக்கிவிட்ட ஆத்திரம் வேறு! மகள் கலியாணம் முடியட்டும் அவளுக்கு இருக்கு என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு வந்தவராச்சே!
“சரி சரி நீ சாப்பிடு! விமலா நீ சாப்பிடேல்லையா?” என்று அங்கிருந்து நகர்ந்தாலும் மனம் கொதித்துக்கொண்டே இருந்தது.


