இதேநேரம் சமையலறையில் உணவுகளைச் சூடாக்கி, கரட் சம்பல் போட்டு எடுத்து வைப்பதில் நின்றார்கள், கவினியும் இனிதன், வாணனும்.
சற்றுமுன் தாயோடு அவ்வளவு உக்கிரமாக வாய்த்தர்க்கம் செய்த வலியைச் சிறிதும் வெளியில் காட்டாது நின்றவளை, ஒரு பார்வை பார்த்துக்கொண்டே வந்து நின்றான், சேந்தன்.
உதவி செய்யவென்று இயலும் வந்தாள். கவினியோ அவர்களைப் பார்க்கவே இல்லை. மிகக் கவனமாகத் தவிர்த்தாள். அதை அங்கு நின்றவர்கள் உணரவில்லை. சேந்தன் அவளைத்தானே கவனித்துக்கொண்டு நின்றான்.
தாய் சொன்னதைச் செய்யிறாவோ! மனதுள் எரிச்சலும் கோபமும் கொண்டான், அவன்.
விருந்தினருக்கு உணவு பரிமாறப்பட்டது. சாரலுக்கான உணவைக் கொடுத்துவிட்டார்கள். உணவுண்ணும் பொழுதே பாராட்டுக்கள் வந்து விழுந்தன.
“பொன்னுருக்கலுக்கே இவ்வளவு ருசியான சாப்பாடு எண்டா கலியாணத்துக்கு?” விமலாவின் சித்தி முறையான பெண்மணி வியந்து கேட்டார்.
“ஆர் சமையல், எங்க எடுத்தீங்க? உண்மையாவே நல்ல ருசி!” வினவினார், இன்னொரு பெண்மணி.
“எங்கட வீட்டுச் சமையல்தான், பிள்ளைகள்தான் செய்தவையள்.” பாயாசம் பரிமாறிக்கொண்டு நின்ற கவினியைக் காட்டினார், விமலா.
“அதுதானே பார்த்தன். அப்பிடியே குஞ்சியாச்சிட கைப்பக்குவம்! உருவம் மட்டுமில்ல, கைப்பக்குவமும் பேத்திக்கு அப்பிடியே அச்சொட்டா வந்திருக்கு!” என்றார், பூங்குன்றனின் தங்கை முறையானவர்.
“ஓம் தான், சின்னதில இருந்து அம்மாவோடயே சுத்தி, அவரைப் போலவே சமைப்பாள். உண்மையா நான் கூட இந்தளவுக்குச் சமைக்க மாட்டன்.” பரமேஸ்வரி வேறு மகிழ்வு மிகுதியில் பாராட்டினார்.
“அம்மாட கையாள சாப்பிட்ட திருப்தி எங்களுக்கு!” மகள் தலையைப் பாசமாக வருடிச் சொன்னார், பூங்குன்றன்.
மதிவதனிக்கு இவ்வளவும் போதாதா. ஏற்கனவே கொதிப்பின் உச்சத்தில் இருந்தவராச்சே! கணவரையும் கவினியையும் பார்வையால் எரித்தார்.
கவினியின் பார்வை தாயைத்தொட்டு மீண்டது. ‘இண்டைக்கு அப்பா சரி’ தாய்க்கும் தனக்குமான இந்த இழுபறியில் களைப்பாக உணர்ந்தாள். இடையில் நெரிபடும் தந்தையில் பரிதாபமாக இருந்தது. இவர்களை விட்டு விலகிச் சென்றிட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டது.
“ நான் மட்டும் இல்ல இவையல் எல்லாருமா…” என்று, எல்லோர் பெயரையும் சொன்னவள், “கொழுக்கட்டை சாப்பிடக் குடுக்கேல்லையே” என்றபடி, சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.
மதிவதனிக்கும் நின்று நிதானிக்க முடியாது அடுத்தடுத்த வேலைகள் இருந்தன.
நாளுக்கு இனிப்புப் பலகாரங்கள் செய்ய வேண்டும் என்பதால் கன்னிக்கால் ஊன்றியபின் சுடுவதற்காக, சீனி அரியதரத்துக்குக் குழைத்து வைத்தார், விமலா.
பூங்குன்றனும் பரமேஸ்வரியின் கணவருமாக, கலியாண முள்முருங்கை மரத்தில் இரு தடிகளை வெட்டியெடுத்துக் கொண்டு வந்தார்கள்.
அதன் மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிற்றால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் செப்புக்காசு முடிந்து தயார் செய்து இரு வீட்டுக்குமாக எடுத்து வைத்தார்கள்.
முதலில் பரமேஸ்வரி வீட்டுவளவில் ஈசான (வடகிழக்கு) மூலைப் பக்கமாக முற்றத்தில் கன்னிக்கால்(முகூர்த்தக்கால்) ஊன்ற ஆயத்தமானார்கள்.
அடுத்து, அங்கு பந்தல்கால் ஊன்றும் வேலை ஆரம்பிக்க, மணமகள் வீட்டில் கன்னிக்கால் ஊன்றினார்கள்.
இரு வீட்டிலும் பலகாரச் சூடும் தொடங்கியிருந்தார்கள்.
பெண் வீட்டில் ஒரு புறம் பலகாரச் சூடு நடக்க, மறுபுறமோ, மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்ற நோக்கில், ‘முளைப்பாலிகை’ இடலுக்கு ஆயத்தம் செய்தார்கள்.
நவதானியங்கள் தூவப்பட்ட ஐந்து மண்சட்டிகளையும், “சாமி அறைக்குள்ள யன்னலோரமா வையுங்க.முளைவிட்டு வர , கலியாணத்தண்டு மணவறைக்குக் கொண்டு போகோணும்.” மதிவதனியின் சித்தி சொல்ல, எடுத்துக்கொண்டு போய் வைத்தார்கள்.
இந்த வேலைகளில் தம்மை இணைத்துக்கொண்டாலும் தாயும் மகளும் எதிர் எதிர்த்துருவங்களாக நின்றார்கள் என்றால், சேந்தனோ, அவர்கள் இடையில் மனத்தால் நுழைந்திருந்தான்.
அவன் கவனம் மொத்தமாக கவினியில். திட்டமிடவில்லை, ஆனாலும் ‘எனக்கானவள்’ என்ற எண்ணத்தை மனத்துள் விதைத்து வளர்த்துக்கொண்டிருந்தான்.
அவனைக் கவர்ந்ததே அவளின் நிமிர்வுதான் .கண்ணீர் விட்டுக் கலங்கி நின்று நாடகம் போடாது எதிர்மறைகளை இலாவகமாக ஒதுக்கிவிட்டு, செய்ய வேண்டியவற்றில் கவனம் பதித்து ஓடியாடித் திரிந்தவள் பின்னால் குடுகுடு ஓட்டம் போட்டது, அவன் மனம்.