அடுத்த ஒரு மணித்தியாலம் கடந்து கலகலப்பாகக் கதைத்தபடி ஐஸ், ரோல்ஸ் என்று உண்டுவிட்டு வெளியே வந்து விடைபெறும் போது தான், அந்தச் சினேகிதி குடும்பம் ஏன் வந்தார்கள் என்பது கவினிக்குத் தெரிந்தது.
“என்ர வருங்கால அண்ணி எப்பிடி இருக்கிறா? பெயர் ஆதினி. நேர்சிங் இப்பத்தான் முடிச்சிருக்கிறாவாம்.” அவர்களின் மூத்த மகளைக் காட்டி, கவினியின் காதருகில் கிசுகிசுத்தாள், இயல்.
“ஓ! உண்மையாவோ! சேந்தனுக்கோ?”அதே இரகசியக் குரலில் கேட்டிருந்தாள், கவினி.
“ம்ம்ம்…லிங்கம் கூல் பாரில வச்சு மாப்பிள்ள பொம்பளையையும் பொம்பள மாப்பிள்ளையையும் பாத்திட்டினம். ஆனா என்ன, அண்ணாட முகத்தில வெளிச்சமே இல்ல. ம்ம்?” தோழமையோடு கிசுகிசுப்பைத் தொடர்ந்தாள், இயல்.
“அந்தப் பிள்ள நல்ல வடிவு. டப்பெண்டு பாத்தா சாய்பல்லவி போல இருக்கிறா என்ன? உம்மட அண்ணாக்கு நல்ல பொருத்தம்.”என்று சொன்னவள் பார்வை, சேந்தனில் படிந்தது. அவனோ, அவளையே தான் பார்த்து நின்றான். சும்மாவும் இல்லை, முறைப்பாக.
“கலியாணத்தில சந்திப்பமே இயல். ” விடைபெற்றுக்கொண்டாள், கவினி.
இப்ப இந்தாளுக்கு என்னதான் பிரச்சினை? தேவையே இல்லாமல் என்னுடைய பிரத்தியேக விசயங்களில் தலையிடுவது, கதைப்பது, முறைப்பது. முதல் யார் இவர்? ஒரே ஒரு நாள், அதுவும் சில மணி நேரம் நட்போடு கதைத்ததும் இந்தளவுக்கு உரிமை எடுக்கத் தேவையில்லை. இப்படி, விசனம் எழுந்த வேகத்தில் சோர்ந்து தொய்ந்து போயிற்று.
சேந்தன், அவ்வளவாகப் பழக்கமற்றவனாக இருந்தாலும் மனத்தில் இதமுணர வைத்தான். மறுக்கவே முடியாத உண்மையிது! திரும்பிப் பார்த்தாள். அவளையே தான் பார்த்துக்கொண்டு நின்றான், அவன்.
விறுவிறுவென்று அவனிடம் சென்றவள், “மூண்டு மணிக்கு வெளிக்கிடோணும் சேந்தன். முதல் அச்சுவேலிக்குப் போயிற்று, பிறகு கிளிநொச்சிக்குப் போகோணும் . நினைவிருக்குத்தானே?” நட்புக் கரம் நீட்டினாள். அவனோ, பதில் சொல்லாது பார்த்து நின்றான்.
அந்தப் பார்வை அந்தரப் பட வைத்தது. ‘என்னடா இது கரைச்சலாக் கிடக்கு!’ அலுத்துக்கொள்ளவும் செய்தது.
“அத்த வீட்டடிக்கு வருவீங்க எல்லா? இல்ல வேணாம், நீங்க தங்கி இருக்கிற இடத்துக்கு வருவினம். வெளிக்கிட்டு நில்லுங்கோ என்ன?” மனத்துள் எழுந்த எந்த உணர்வுகளையும் வெளியில் காட்டாது கதைத்தாள், கவினி.
“வருவினம் எண்டா… ஆர்? நீர் வரேல்லையோ?” இறுக்கமாகவே கேட்டிருந்தவன் நெற்றிச் சுருக்கமும் கேள்வியைத் தொக்கி நின்ற விழிகளையும் பார்க்க முடியவில்லை.
“எனக்குக் கொஞ்ச வேலைகள் இருக்கு. அதால வாணன் வாறார். இனிதன் மச்சானும். குறை நினைக்காதீங்க.” பதிலுக்குக் காத்திராது திரும்பி நடந்தாள், கவினி.
விறுவிறுவென்று செல்பவளைப் பார்த்து நின்றவன் தோளில் மெல்லத் தட்டினார், நிவேதா.
திரும்பியவன் பார்வையில் தாய் முகத்தில் இருந்த ஆர்வம் பதியாதில்லை. ஆதினி விடயத்தில் தன் பதிலுக்காகக் காத்திருக்கிறார் என்பது தெரிந்தும், “என்னம்மா?” என்றான்.
“பிடிச்சு இருக்காய்யா?”அவர் கேட்டதும் தாமதிக்காது , ‘பிடிச்சிருக்கே!’என்று முணுமுணுத்த மனமோ, சனத்திரளில் மறைந்துகொண்டிருப்பவளைப் பார்க்கும் படி பார்வையைத் தூண்டியது!
அவன் விழிகளும் உதடுகளும் இணைந்து சின்னதாக மலர்ந்தன. அதைப் பார்த்த நிவேதாவுள் அவ்வளவு மகிழ்வு!
“ நல்ல வடிவான பிள்ளை என்ன தம்பி? படிச்சும் இருக்கிறா, நேர்ஸ் எண்டா லண்டனில நல்ல வேலையும் எடுக்கலாம். குடும்பம் சொல்லவே வேணாம். தெரியாத மனுசர் இல்லையே! எங்களுக்கு முதலே நல்ல விருப்பம். இப்ப நேர்ல பார்த்து இன்னுமே சந்தோசம். உங்களுக்கும் பிடிச்சிருக்கு எண்டபடியா மினக்கடாமல் அலுவல்களப் பாக்கலாம் தம்பி. ரெஜிஸ்டர் செய்திட்டுப் போனம் எண்டா பிள்ளையக் கூப்பிடுற அலுவல்களைத் தொடங்கலாம். பிறகு வந்து கலியாணம் முடிஞ்ச கையோட கூட்டிக்கொண்டு போயிரலாம்.”
அவர்களுள் முடிவே செய்தாயிற்று என்பதைத் தெளிவாக்கினார், நிவேதா. அவன்தான் அதிர்ந்தே போனான். தான் என்ன சொல்ல, தாய் என்ன சொல்கிறார்.
மகன் முகம் பார்த்துக் கதைத்தவருக்குச் சட்டென்று மாறிவிட்ட அவன் முகமும் நெற்றிச் சுருக்கமும் திருப்தி தரவில்லை. இலண்டனில் வைத்தே இந்தக் கதை ஆரம்பித்ததுதான். நேரில் பார்த்துக் கதைத்த பின்னர் முடிவு சொல்கிறேன் என்றிருந்தான்.
“என்னப்பு?” என்றார்.
“நான் பிடிச்சிருக்கு எண்டு சொன்னது லிங்கம் ஐஸ் ரோல்ஸ!” என்றவனை நன்றாகவே முறைத்தார், நிவேதா.
“என்னய்யா இது விளையாட்டு? ஆதினியப் பிடிச்சிருக்கா எண்டு கேட்டன் எண்டு விளங்கேல்லையா என்ன?” வாய்திறக்க முனைந்தவனுக்கு இடம் கொடுக்கவில்லை, தாய். எதிர்மைறையாகச் சொல்லிவிட்டால் என்ற எண்ணம் நிறைவாக இருந்த மனத்துள் வந்து தவிக்க வைத்துவிட்டதே!
“சரி சரி, ஒண்ணும் அவசரம் இல்லை. வடிவா யோசிச்சிட்டுச் சொல்லய்யா. சாரல் கலியாணத்துக்கும் வருவினம் . கதைச்சுப் பாருங்கவன்.”என்றவர், “ நல்ல முடிவாச் சொல்லுங்க ராசன்.” என்றபடி நகர்ந்துவிட்டார்.
“என்னண்ணா , பிடிக்கேல்லையா? எனக்கு எண்டா பேயாப் பிடிச்சிருக்கு. கவினியும் நல்ல பொருத்தம் எண்டிட்டுத்தான் போறா! சாய்பல்லவி போல இருக்கிறவாம் .” என்ற இயல், தமையன் மனத்தை அறிய முயன்றாள்.
“சாய்பல்லவியா? அப்ப அவவ கூட்டிக்கொண்டுபோய் வச்சு ரசிக்கச் சொல்லு!” வெடுக்கென்று சொல்லிவிட்டான். இதை எதிர்பாராத இயல், நெற்றி சுருங்கக் கேள்வியாகப் பார்த்தாள். அதையுணர்ந்தவன்,”இல்ல இயல்,இங்க ஒண்ணும் முடிவு ஆக முதல் அவவிட்ட எல்லாம் சொன்னியா என்ன?”சமாளிக்க நினைத்தாலும் முடியாது அலுத்துக்கொண்டான்.நெற்றியை ஏற்றி இறக்கினாள், தங்கை.
“நாங்க முடிவு செய்திட்டமே, அதுதான் சொன்னன். அதோட நீங்க வேணாம் எண்டுறதுக்கு ஒரு காரணமும் இல்லை எண்டுறது கூடுதல் பலம் அண்ணா.” என்ற தங்கைக்கு, நல்ல முறைப்புதான் பதிலாக கிடைத்திருந்தது.
இயலோ, விடாது பிடித்திருக்குதா என்று கேட்க, “இங்க இருந்து போக முதல் சொல்லுவன், அதாவது உன்ர அண்ணி ஆர் எண்டு.” கண்ணடித்தான்.
“அவசரப்படாதேயும் சேந்தன். என்ர கலியாணத்துக்கு வாறவேயில வேணும் எண்டாலும் பாக்கலாம்.”என்றபடி வந்தான், ஆதவன்.
“அதுதானே அம்மா, நல்லா யோசிச்சு நாலு பேரைப் பாத்திட்டுத்தான் நாங்க முடிவு சொல்லுவம். தயவு செய்து நீங்களா ஒரு முடிவுக்கு வந்து ஆருக்கும் நம்பிக்கை குடுத்திராதீங்க!” என்றவன், “ உண்மையாவே ஆதினியைப் பார்க்கேக்க எனக்கு அப்பிடி ஒரு எண்ணம் அவவில வரேல்லம்மா! இனி இந்தக் கதை வேணாம். ” என்றுவிட்டான்.
நிவேதா மட்டுமில்லை எல்லோருக்குமே ஒருமாதிரியாகிற்று.
“கலியாணமெல்லாம் வற்புறுத்திச் செய்யவா ஏலும்? அல்லது வீட்டில எல்லாருக்கும் பிடிச்சது எண்ட ஒண்டுக்காகவும் செய்யேலாதுதான். வாழப்போறவேக்கு முழுமனமாய்ப் பிடிச்சு இருக்கோணும். ஆனா ஒண்டு சேந்தன், எங்கட பிள்ளைகளுக்கு நல்லதுகளைத்தான் நாங்க காட்டுவம் எண்டுறது உங்களுக்கும் தெரியும். ஆதினி போல ஒரு பொம்பளயத் தேடிப்பிடிக்கிறது ஈசியில்ல. அதனால, இங்க நிக்கும் மட்டும் கதைச்சுப் பேசிப் பார்த்திட்டு முடிவு எடுங்கவன்.” என்றிருந்தார், விமலா.
“அதான். பிடிக்காட்டி ஏனெண்டும் சொல்லோணும் .” நிவேதா தொடங்க, சேந்தன் முகம் மாறிவிட்டிருந்தது.
“சரி சரி, இப்பயே இப்பிடி ரோட்டில நிண்டே கதைக்கத் தேவேல்ல.வாங்க போவம்.” சேந்தன் முகம் மாறிய விதம் பார்த்த ஆதவன் தான் கதையை மாற்றி அங்கிருந்து நகர்த்திச் சென்றிருந்தான்.