ரஜீவன் யாழினியின் கனவு மேடை. கணவன் மனைவியாக அவனும் அவளும். யாழினிக்கு அவன் மீதான ஊடல் காணாமல் போயிருந்தது. மாலை சூடி, மங்கல நாணைப் பூட்டி அவளைத் தன்னவளாக்கிக் கொண்டவனின் அண்மை தித்தித்தது.
எதிர்கால வாழ்வின் மீதான கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்தபடி, ரஜீவனின் புத்தம் புது மனைவியாய், முகமெல்லாம் விகசிக்க நின்றிருந்தாள் யாழினி.
ரஜீவனும் அவளின் கரத்தைப் பற்றி அழுத்திக்கொடுத்து, தன் சந்தோசத்தையும் நிறைவையும் அவளோடு பகிர்ந்துகொண்டான். விழிகள் மலர அவனைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள் யாழினி.
“நம்பேலாமா இருக்கு ரஜீவன். ஒரு காலம் நீங்க என்னைத் திரும்பிப் பாக்க மாட்டீங்களா எண்டு நினைச்சு ஏங்கி இருக்கிறன். பிறகு, அண்ணாக்கள் சம்மதிக்க மாட்டீனமோ எண்டு நடுங்கியிருக்கிறன். ஆனா இண்டைக்கு… நான் மிஸஸ் ரஜீவன்.”
அவனுக்கும் அதே கலக்கங்கள் இருந்ததுதானே. உண்மையைச் சொல்லப்போனால் அவளைக் காட்டிலும் அதிகமாகப் பயந்திருக்கிறான்.
ஏன், மூன்று நாட்களுக்கு முதல் மோகனனோடு வார்த்தைப்போர் நடத்திவிட்டு வந்ததிலிருந்து கூட, காரணமற்ற கலக்கம் அவனை ஆட்டிப் படைத்துக்கொண்டுதான் இருந்தது. தாலியைக் கட்டி முடித்த பிறகுதானே மனம் அமைதியடைந்து.
“இனி என்னட்ட இருந்து உன்ன ஆரும் பிரிக்கேலாது!” கண்ணைச் சிமிட்டியபடி சொன்னான் அவன்.
“இதுக்கு முதலும் ஆரும் பிரிக்க நினைக்கேல்ல!” சட்டென்று முறுக்கிக்கொண்டாள் அவள்.
அவன் பொய்யாக முறைத்தான். “உன்ர அண்ணாக்களப் பற்றி ஒரு வார்த்த சொல்லக் கூடாதே! உடன சண்டைக்கு வந்திடுவியே.”
“நீங்க சொல்லுற அளவுக்கு அவே என்ன செய்தவே? ஒண்டுமில்லதானே. பிறகும் ஏன் சொல்லுறீங்க?”
“அம்மா தாயே, போதும் நிப்பாட்டு! இது எங்கட கலியாண நாள். எங்களைப் பற்றி மட்டும் கதை.” என்றான் அவன் கோபம் போல்.
“ஆரம்பிச்சது நீங்க. நான் இல்ல.” அப்போதும் விடாமல் பதில் கொடுத்தாள் அவள்.
“உன்ன…” என்று அவன் முறைக்க, யாழினிக்குச் சிரிப்பை அடக்குவது சிரமமாக இருந்தது. காதலனைக் கைப்பிடித்துவிட்ட மகிழ்ச்சியும், அது கொடுத்த உற்சாகமும் பொங்கி வழிந்தது அவளுக்கு.
இதைத் தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்த மோகனனின் மனம் நிறைந்திருந்தது. ரஜீவனுக்குத் தன்னைப் பிடிக்காவிட்டாலும் யாழினி என்றால் உயிர் என்று தெரிந்தது. அவளுக்காகவாவது அவனோடு இணக்கமாகப் போவதற்கு முயல வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, தன் வேலைகளைப் பார்த்தான்.
அவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டிருந்த செல்வராணி, ராதாவை அழைத்து, “ரெண்டு பேரையும் பேசாம அமைதியா நிக்கட்டாம் எண்டு சொல்லிவிடம்மா. ஊரே பாத்துக்கொண்டு இருக்குது. கண் பட்டுடும்.” என்று சொல்லி, அவளை அவர்களிடம் அனுப்பிவைத்தார்.
அவளும் வந்து, “இனிக் காலம் முழுக்க ரெண்டு பேரும்தானே கதைக்கப்போறீங்க. அதால இப்ப அமைதியா, நல்ல பிள்ளைகளா நிக்கட்டாம். ஊரே பாக்குதாம்.” என்று, அவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள்.
“நாங்க சந்தோசமா இருந்தா உனக்குப் பிடிக்காதே! புதுசா கல்யாணமான ஜோடி அப்பிடி இப்பிடித்தான் இருப்பம்.” என்று அவளையும் வம்புக்கிழுத்தாள் யாழினி.
“ஆகா இப்ப என்ன? அண்ணாவோட கதைச்சு முடிஞ்சு என்னோட ஆரம்பிக்கிறீங்களா? ஆளை விடுங்க. மாமி சொன்னதைச் சொல்லீட்டன், நான் வாறன்!” என்று அவள் இறங்கப்போக, அவளின் கைபற்றித் தடுத்து நிறுத்தினாள் யாழினி.
“ஒரு நிமிசம் நில்லு. நாங்க மூண்டு பேரும் மட்டும் நிண்டு ஒரு ஃபோட்டோ எடுப்பம்.” என்றுவிட்டு விழிகளைச் சுழற்றினாள்.
அந்தநேரம் பார்த்துச் சரியாக மோகனன் அவளின் கண்ணில் பட, “அண்ணா!” என்று சற்றே சத்தமாக அழைத்தாள்.
திரும்பிப் பார்த்தான் மோகனன். அப்போதுதான் யாழினியின் கைப்பிடியில் நின்றவளைக் கவனித்தான். ‘இவள் அந்தச் சிட்டி எல்லோ…’ என்று உள்ளே ஓட, ஒரு முறுவலைச் சிந்தினான்.
அவளோ, மிகுந்த வெறுப்பை முகத்தில் தேக்கி வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள்.
மோகனனுக்கு மிகுந்த வியப்பு. அவளுக்கு அவனோடு என்ன கோபம்? அன்று முழுக்க மேடைக்கு அருகிலேயே நின்று அனைத்தையும் அவள் ஓடி ஓடிக் கவனித்ததைக் கண்டு அவள் மீது அவனுக்கு மிகுந்த நல்லெண்ணம் உண்டாகியிருந்தது. அவளானால் முகத்தைச் சுளிக்கிறாள்.
எதையும் காட்டிக்கொள்ளாமல் மேடைக்கு வந்து, “என்னம்மா? ஏதும் வேணுமா?” என்று தங்கையிடம் வினவினான்.
“எங்களை ஒரு ஃபோட்டோ எடுத்துத் தாங்கோ, அண்ணா.”
“எடுத்தா போச்சு!” வேட்டியின் பொக்கெட்டுக்குள் இருந்து தன் ஃபோனை எடுத்தபடி சொன்னான் அவன்.
“இல்ல வேண்டாம். ஃபோட்டோகிராபர சொல்லு. அவர் எடுப்பார். பிறகு அத நான் உனக்கு வாங்கித் தாறன்.” என்று அவசரமாகச் சொன்னான் ரஜீவன்.
ராதா நிற்கிறபோது இவள் எதற்கு இவனை அழைத்தாள் என்று ஏற்கனவே எரிச்சலில் நின்றவனுக்கு, இப்போது அவன் ஃபோனில் தங்கையையும் சேர்த்துப் புகைப்படம் எடுக்கப்போகிறான் என்றதும் பதற்றமானது.
“ஃபோட்டோகிராபர் எடுத்தா தாறதுக்குக் குறைஞ்சது ரெண்டு நாளாவது ஆகும். அதுவரைக்கும் காத்துக்கொண்டு இருக்கிறதா?” என்று அவனிடம் கேட்டுவிட்டு, “நீங்க எடுங்க அண்ணா. நான், என்ர மனுசன், என்ர மச்சாள் மூண்டு பேரும் வடிவா இருக்கோணும். சரியோ?” என்றபடி, அவர்கள் இருவரையும் தன் இரு கைகளாலும் அணைத்தபடி சிரித்துக்கொண்டு ஃபோஸ் கொடுத்தாள் யாழினி.
மோகனனுக்கு நொடியில் எல்லாமே புரிந்துபோயிற்று. அந்தப் பெண் ராதா. ரஜீவனின் தங்கை. சிறு சிரிப்புடன் நொடிக்கும் அதிகமாய் ராதாவைப் பார்த்துவிட்டு ரஜீவனைப் பார்த்தான். அவன் கண்கள் சிரித்தன.
ரஜீவனுக்குக் கோபத்தில் முகம் சிவந்தது. ‘பொறுக்கி! பாக்கிறான் பார் பார்வை! இவன…’ என்று முறைத்துப் பார்த்தான்.
அடக்கிய சிரிப்பில் உதடுகள் துடிக்க, கைப்பேசிக்குள் அவர்கள் மூவரையும் அடக்க முயன்றான் மோகனன்.
அவன் கைப்பேசி வழியாகத் தங்கையைப் பார்க்கிறான் என்கிற எண்ணமே உடல் எங்கும் மிளகாயை அரைத்துப் பூசியதுபோல் எரிந்தது ரஜீவனுக்கு. அது கொடுத்த ஆத்திரத்தில், “உனக்கு எப்பவும் நீ நினைச்சதுதான் நடக்கோணும் என்ன?” என்று யாழினியின் காதுக்குள் சீறினான்.
திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள் யாழினி. கூடவே, அருகில் நின்ற ராதாவும், “ஃபோட்டோ பிறகு எடுக்கலாம் அண்ணி. அங்க அம்மா கூப்பிடுறா போல இருக்கு. நான் போகோணும்.” என்றபடி விலகவும் அவளுக்கு ஒன்றுமே விளங்கமாட்டேன் என்றது.
கூடவே, கணவனின் கடுமை நிறைந்த முகத்தைக் கண்டு, முகம் சிவந்து, விழிகள் கலங்கிப்போயிற்று. தன்னைச் சமாளிக்க முடியாமல் தடுமாறினாள்.
இதையெல்லாம் கமரா கண்வழியே கவனித்த மோகனனின் தாடை இறுகியது. “ஹல்லோ! எக்ஸ்கியூஸ் மீ!” என்று மேடையை விட்டு இறங்கப்போன ராதாவை அழைத்தான்.
அவள் புருவங்களைச் சுளித்துக்கொண்டு திரும்பிப் பார்க்க, “நீங்க ராதாதானே. வந்து நில்லுங்க. ஒரு ஃபோட்டோ எடுக்க ஒரு நிமிசம் கூட ஆகாது!” என்றான் அதிகாரமாக.
எரிச்சலும் சினமும் பொங்கின ராதாவுக்கு. அந்த இடத்தில் வைத்து எதையாவது கதைத்து, மற்றவர்களுக்குக் காட்சிப் பொருளாக விரும்பாமல் இறுக்கத்தோடு வந்து நின்றாள்.
காரணம் புரியாதபோதும் வீண் பிரச்சனைகள் வேண்டாம் என்று எண்ணிய யாழினியும், “இல்ல. வேண்டாம் அண்ணா. பிறகு எடுப்பம்.” என்று தடுமாறினாள்.


