“நீ பேசாம நில்லு! கொஞ்சமா சிரி. ம்ம்ம்… என்னைப் பார். கொஞ்சம் தலையை நிமித்து… இப்ப சிரி.” அருகில் யாருமே இல்லை என்பதுபோல் அவளுக்கு மட்டும் சொல்லியபடி நான்கைந்து புகைப்படங்களைத் தட்டினான்.
எடுத்தவை எல்லாம் சரியாக வந்திருக்கிறதா என்று தானும் ஒருமுறை பார்த்துவிட்டுக் கைப்பேசியை அவளிடம் நீட்டி, “உனக்குப் பிடிச்சமாதிரி வந்திருக்கா பார். இல்லாட்டி இன்னொருக்கா எடுக்கிறன்.” என்றான்.
மனதில் இருந்த பதட்டத்தில் அவற்றைப் பார்ப்பதுபோல் பாசாங்கு செய்துவிட்டு, “நல்லாருக்கு அண்ணா.” என்றாள் யாழினி செயற்கைக் சிரிப்புடன்.
தங்கையின் அந்தத் தவித்த நிலை மோகனனை இன்னுமே கொதிக்க வைத்தது. வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல், “ஒரு நிமிசம்…” என்றபடி ரஜீவனை மேடையில் சற்றுத் தள்ளிக் கொண்டுவந்தான்.
இரண்டு பெண்களும் பயத்துடன் இவர்களைப் பார்த்தனர். “தலைப்பாகை கொஞ்சம் சரிஞ்சுக்கிடக்கு…” என்று சத்தமாகச் சொன்னபடி அதைச் சரி செய்துகொண்டே, “போயும் போயும் ஏனடா இவனுக்கு எங்கட தங்கச்சியக் கட்டிக்குடுத்தம் எண்டு நினைக்க வச்சிடாதீங்க ரஜீவன். அப்பிடி ஒரு நினைப்பு எனக்கு வந்தது… அவளைச் சும்மா வீடியோ எடுக்கிறன் எண்டு விளையாட்டுக் காட்டினதுக்கே தலகீழாத் தொங்க விட்டவன் நான். கண்ணீர் வரவச்சீங்க…” என்றவன் மேலே பேசாமல் ஒரு பார்வை பார்த்தான்.
ரஜீவனுக்குத் திடமாகக் காட்ட முயன்றும் முடியாமல் அடிவயிறு நடுங்கியது. அவன் மாலையையும் சரி செய்துவிட்டு, “இப்ப எல்லாம் ஓகேயா இருக்கு.” என்று அவனை அனுப்பிவிட்டான் மோகனன். அப்படியே யாழினி தந்த கைப்பேசியை வாங்கிப் பொக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு அங்கிருந்து இறங்கிப்போனான்.
பெண்கள் இருவரும் தன்னைப் பயத்தோடும் ரஜீவனைக் கலக்கத்தோடும் நோக்கியத்தைக் கவனித்தாலும் பொருட்படுத்திக்கொள்ளவில்லை அவன்.
தாலி கட்டி ஒரு மணித்தியாலம் கூட ஆகவில்லை. அதற்குள் அவளைக் கலங்க வைத்துவிட்டானே. கூடப்பிறந்தவன் பார்த்துக்கொண்டு இருப்பான் என்று நினைத்தானா? அதற்கு அவன் வேறு வீட்டில் பெண் எடுத்திருக்க வேண்டும்!
அடக்கமுடியாத ஆத்திரமும் அவமானமும் ரஜீவனைப் பொசுக்கியது. எவ்வளவு தைரியமாக மேடையில் வைத்தே மிரட்டிவிட்டுப் போகிறான்.
அவர்கள் வீட்டு மருமகன் அவன். கொஞ்சம் கூட அந்த மரியாதை இல்லையா? இன்னுமே இவன் ஆணவம் அடங்கவில்லையே. அந்த இடத்தில் வைத்து எதையும் வெளிக்காட்ட முடியாமல் இறுகிப்போய் நின்றான்.
யாழினியும் நிற்கும்போது தமையனிடம் எதையும் கேட்க முடியாமல் அங்கிருந்து இறங்கிப்போனாள் ராதா.
ஏனடா அண்ணாவை அழைத்தோம் என்று தன்னையே நொந்துகொண்டாள் யாழினி. கூடவே, ஒரு புகைப்படத்திற்கு இந்தப் பாடா என்று மனம் வாடியது.
எவ்வளவு சந்தோசமான நாள். அதைப் போய்… தாங்க முடியாமல், “உங்களுக்கும் அண்ணாக்கும் புதுசா என்ன பிரச்சினை ரஜீவன்? ஏன் இப்பிடி ரெண்டு பேரும் கீரியும் பாம்புமா நிக்கிறீங்க.” என்று கலக்கத்துடன் விசாரித்தாள்.
அவளைத் திரும்பிப் பார்த்தான் ராஜீவின். விட்டால் அழுதுவிடுவேன் என்கிற நிலையில் இருந்தாள் அவள். அப்போதுதான் தன் முட்டாள் தனமும் புரிந்தது.
எங்கு நின்று என்ன செய்துகொண்டிருக்கிறான்? தன்னையே குட்டிக்கொண்டவன் மிக வேகமாகத் தன் முகத்தைச் சீராக்கி, மலர்வாக மாற்றிக்கொண்டான்.
“உனக்குத் தெரியாம என்ன பிரச்சினை. முந்தி(முன்னர்) நடந்ததுகள்தான். அதுல எனக்குக் கொஞ்சம் கோபம் வருது. அவ்வளவுதான். நீ ஒண்டையும் யோசிக்காத. இது எங்களுக்கே எங்களுக்கான நாள். பிளீஸ்டி செல்லம். சிரி பாப்பம் எனக்காக?” என்று கெஞ்சினான்.
அப்போதும் நம்பாமல் அவள் சந்தேகக் கண்ணோடு அவனையே பார்க்க, உண்மையிலேயே அவனுக்குச் சிரிப்பு வந்தது.
“கட்டினவன சந்தேகப்படாத யாழி! உண்மையா ஒரு பிரச்சினையும் இல்ல. இந்த ஒரு மாதமா எங்கட வீட்டுப் பக்கம் இருந்து கலியாண வேலை எல்லாம் நான் ஒருத்தனாவே பாத்ததும், ஒழுங்கான நித்திரை இல்லாததும் சேர்ந்து டக்கு டக்கு எண்டு கோவம் வருது போல. அதுதான் காரணமே இல்லாம சீறிச் சினக்கிறன் போல. இனி நீ இருக்கிறாய்தானே. என்னைப் பாக்க மாட்டியா?” என்று அவர்களுக்கே உரிய நெருக்கம் மிகுந்த குரலில் அவன் கேட்க, அவளின் முகம் அவன் மீதான நேசத்தில் கனிந்து போயிற்று.
அது போதாமல், “இதையெல்லாம் மனதில வச்சு இரவுக்குப் பழி வாங்கிடாத, பிளீஸ்! கிட்டத்தட்ட பத்து வருசம் காத்திருந்து கிடைச்ச நாள் இது.” என்று, அவளின் முகத்தைச் சிவக்க வைத்துவிட்டே விட்டான்.
ராதாவோ விறுவிறு என்று வந்து செல்வராணியின் முன் நின்றாள். அவரைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், “மாமி, உங்கட சின்ன மகனுக்கும் என்ர அண்ணாக்கும் இடையில என்ன நடக்குது எண்டு எனக்குத் தெரியேல்ல. ஆனா, என்னவோ சரியில்ல எண்டு மட்டும் விளங்குது. திரும்பவும் ஒரு பிரச்சினை வந்தா, காயப்பட்டுக் கவலைப்படப்போறது ரெண்டு குடும்பமும்தான். அதால அப்பிடி நடக்காம பாத்துக்கொள்ளுங்கோ, பிளீஸ்.” என்றாள் நேரடியாக.
என்ன ஏது என்று விளங்காமல் பதறிப்போனார் செல்வராணி. அவள் மூலம் நடந்ததை அறிந்துகொண்டவருக்குத் திரும்பவும் ஆரம்பித்துவிட்டானா என்று மனம் நடுங்கிற்று.
புகைப்படம் எடுக்கவிடாமல் ரஜீவன் தடுக்க முயன்றதுக்கான காரணமும் புரிந்தது. அன்னையாக அவர் மனது அடிவாங்கினாலும், ரஜீவன் பயந்ததற்கு அர்த்தம் இல்லாமல் இல்லையே.
“கௌசிகன் அண்ணாட்டச் சொல்லுவமா எண்டுதான் யோசிச்சனான். பிரச்சினையைப் பெருசாக்க வேண்டாம் எண்டுதான் உங்களிட்டச் சொல்லுறன். இது தொடருமா இருந்தா கட்டாயம் கௌசிகன் அண்ணாவோடயும் கதைப்பன் மாமி. பிறகு நீங்க என்னைக் குறையா நினைக்கக் கூடாது. ”
அவள் சொன்னதைக் கேட்டு இன்னுமே பதறிப்போனார் செல்வராணி.
“இல்லையம்மா. இப்ப ஒண்டும் கதைக்காத. நான் அவனோட கதைக்கிறன். இனி இப்பிடிப் பிரச்சினை வராம பாக்கிறன்.” என்றுவிட்டு மோகனனைத் தேடிக்கொண்டு ஓடினார்.
மண்டபத்துக்கு வெளியே வந்து நின்றிருந்தான் மோகனன். அவனுக்கும் ரஜீவன் ஏன் தடுக்க முயன்றான் என்று விளங்காமல் இல்லை.
ஆனால், இது இன்னும் எத்தனை காலத்துக்கு அவனைத் துரத்தப்போகிறது என்கிற கேள்வி அவனைப் போட்டு அழுத்தியது. வாழ்வில் எந்த ஒரு காலத்திலும் தவறிவிடவே கூடாது. அப்படித் தவறிவிட்டால் திருந்தினாலும் வாழ்க்கை நரகம்தான் என்பது எவ்வளவு பெரிய உண்மை?
மனம் கசந்து வழிந்தது. இதற்குத்தானே வராமலேயே இருந்தான். வா வா என்றுவிட்டு ஏன் அவனைப் போட்டு இந்தப்பாடு படுத்துகிறார்கள்? இந்த நிமிடமே இங்கிருந்து புறப்பட்டுவிட்டால் என்ன? அதுதான் திருமணமே முடிந்துவிட்டதே என்று ஓடிய சிந்தனையைச் செல்வராணியின் குரல் தடுத்தது.
“தம்பி! இஞ்ச நிண்டு என்ன செய்றாய்? உன்ன எங்கயெல்லாம் தேடுறது?”
“என்னம்மா?” மெல்லத் தன்னைச் சமாளித்துக்கொண்டு திரும்பி அவரைப் பார்த்துக் கேட்டான்.
“உனக்கும் ரஜீவனுக்கும் என்னப்பு பிரச்சினை? முந்தியாவது அவர் ஆரோ, நாங்க ஆரோ. இனி அவர் எங்கட வீட்டுப் பிள்ளையின்ர மனுசன். அந்த மரியாதையக் குடுக்க எல்லோ வேணும். அப்பதான் அவரும் உன்ர தங்கச்சியச் சந்தோசமா வச்சிருப்பார். அதச் செய்யாம நீ ஏன் அவரோட சண்டைக்குப் போறாய்?”
அவன் புருவங்கள் சுருங்கிற்று. பார்வையில் கூர்மை ஏற, “அதுக்கிடையில உங்களிட்ட வந்து சொன்னது ஆரு? அவனா அவன்ர தங்கச்சியா?” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.
“ஆர் சொன்னாத்தான் என்ன? நீ ஏன் சண்டைக்குப் போறாய்? அவர் பயந்ததில நியாயம் இருக்குத்தானே. அந்தப் போட்டோவை வச்சு நீ…” என்றவர் அப்போதுதான் தான் என்ன சொல்ல வந்தோம் என்பதை உணர்ந்து வேகமாக நிறுத்தினார்.
அதற்குள் அவர் சொன்னது அவனுக்கு முழுமையாகவே வந்து சேர்ந்திருந்தது. நொடியில் சிவந்து, கடினமாகி, ரௌத்திரம் கொண்டிருந்தது அவன் முகம்.
“இல்ல தம்பி… அது நான் வாய் தவறி…” என்று அவர் சொல்லி முடிக்க முதலே, அடக்க முடியாத சினத்துடன் பொக்கெட்டில் இருந்த கைப்பேசியை எடுத்து, அங்கிருந்த கல் பெஞ்சில் ஓங்கிக் குத்தியிருந்தான் மோகனன்.
சில்லுச் சில்லாகச் சிதறிப்போனது அது.
“ஐயோ தம்பி! என்ன செய்றாய்?” என்று பயந்து பதறினார் செல்வராணி.
இத்தனை நாட்களாகச் சாதுவாக நடமாடிக்கொண்டிருந்த மகனிடமிருந்து இப்படி ஒரு ஆக்ரோசத்தை எதிர்பாராதவரின் மேனி நடுங்கிற்று.
“இனி உங்கட மருமகன்ர தங்கச்சிக்கு எந்த ஆபத்தும் வராது. போதுமா? இப்ப நிம்மதியா? போங்க!” என்றவன் அந்த மண்டபத்தை விட்டே வெளியேறினான்.


