கட்டுரைகள் /பகிர்வுகள்

என் முதல் ஹீரோ..

Posted on Updated on

என்னடா இப்படி ஒரு தலைப்பு என்று யாரும் யோசிக்க வேண்டாம். எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே அவர்களின் முதல் ஹீரோ அவர்களின் அப்பாதான். நான் சொல்வது சரிதானே?

என்னுடைய அப்பா என்றதுமே எனக்கு நினைவில் வருவது, அண்ணாந்து பார்க்கும் உயரத்தில், மெல்லிய தேகம், வெள்ளை உள் பனியன் மற்றும் சரம்(கைலி) கட்டியிருப்பார். இதுதான் அவருடைய உடை!

நெற்றியில் என்றும் மறையாமல் இருக்கும் திருநீறும், சந்தனமும்!

வெளியே எங்கும் போவதாக இருந்தால், வெள்ளைச் சரம் & வெள்ளைச் சட்டை. பார்க்க அவ்வளவு கம்பீரமாக இருக்கும்.

ஜெர்மனி வர தயாரானவரை, இங்கே குளிர் ஜீன்ஸ் போட்டுக் காட்டுங்கப்பா என்று நான் ஸ்கைப்ள கேட்டப்போ அவர் பட்ட வெட்கம்.. ஹாஹா.. அவ்வளவு அழகு! என் செல்ல அப்பா!

கன்ன உச்சி (சைட் உச்சி) பிரித்து அழகா தலை வாரி இருப்பார். அவரோட அந்த தலை இழுப்புக்கு இன்றுவரை நான் ரசிகை.

ஆமாம் தோழிகளே, கன்ன உச்சி பிரித்து அதை மேவி இழுத்து, சீப்பின் மறுபக்கம் இருக்கில்லையா, அதனால அங்கங்க அழுத்தி விடுவார். அந்த முடியும் அவரோட சொல்பேச்சுக் கேட்டு நெளிநெளியா நெளிந்து நிற்கும்.

எனக்கு சிவாஜியை மிகவும் பிடிக்கும், அதுக்கு ஒரு காரணம் அவரோட நடிப்பு என்றாலும், எங்கப்பா மாதிரி அவரும் தலை இழுப்பார் என்பதுதான் இன்னொரு காரணம்.

அந்தச் சின்ன வயசில் சிவாஜியின் ரசிகரான என் அப்பா, அவரை மாதிரி தலை இழுக்கிறார் என்பது எனக்குத் தெரியாது இல்லையா? அதனால, என் அப்பா மாதிரி தலை இழுக்கும் சிவாஜியை எனக்கு அப்போவே ரொம்பப் பிடிக்கும்!

அதேபோல எனக்கு ஊஞ்சல் என்றால் மிகவும் பிடிக்கும். நான் விரும்பி ஆடும் ஊஞ்சல் எது தெரியுமா? என்னோட அப்பாவின் சாரம்தான்.

அவர் எப்பவும் கதிரையில்(நாற்காலியில்) அமர்ந்ததும், அவரோட சரத்தை எல்லாம் ஒன்றா சேர்த்து தன்னோட ரெண்டு காலுக்கும் நடுவில் விட்டுக்கொள்வார். நான் என்ன செய்வேன், ஓடிப்போய் அந்த சரத்துக்குள்ள இருந்துகொண்டு, அவரின் கால்கள் இரண்டிலும் கையை வச்சுப்பேன். அப்படி அமர்கையில் ஒரு ராணி போல அப்பவும் உணருவேன், இப்போ நினைத்துப் பார்க்கையிலும் அந்த உணர்வு எனக்கு இருக்கு!

நான் இருந்ததும் எங்கப்பா தன்னோட காலை அப்படியும் இப்படியும் ஆட்டுவார்.. சொர்க்கம் அது! என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காது அந்தச் சந்தோசம்..

அடுத்ததா, எங்க வீட்டில் நாங்க மூன்று பெண் பிள்ளைகள் மட்டுமே. நான் கடைக்குட்டி.

இப்போ நான் சொல்வது ஒரு 18 அல்லது 20 வருடங்களுக்கு முன்னர் நடந்தவை..

அப்போலாம் அங்க ஜீன்ஸ் பெண்கள் நினைத்தே பார்க்க முடியாத ஒரு உடை.. ஆனா, நான் பள்ளிக் கூடத்தைத் தவிர வேறு எங்கும் அணியும் ஒரு உடை என்றால் அது ஜீன்ஸ் தான். அப்போவே என் அப்பா எவ்வளவு மாடர்ன் என்று யோசிங்க.. அதுவும் மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்றும்.

டியுஷன் அல்லது பிரெண்ட்ஸ் மத்தில எல்லாம் அப்போ நான் ஒரு ஹீரோயின்(நம்போணும்). அப்படி என்னை ஹீரோயினா காட்டுறது நான் போடும் ஜீன்ஸ்.. பின்னே, அவங்களால கனவிலும் நினைக்க முடியாத ஒரு உடையை நான் போட்டா, நான் ஹீரோயின் தானே.

அப்பாவோட பிரெண்ட்ஸ் யாராவது கண்டா சொல்லுவாங்க.. “அடேய் சுந்தரம், பெட்டைக்(பெண்) குட்டிகளைப் பெத்துட்டு இதென்னடா வளர்ப்பு..” என்று.

என் அப்பா சொல்வார், ” அது பெட்டைக் குட்டி இல்லடா என் சிங்கக் குட்டி..” என்று.. எனக்கு இப்போவும் அது காதுல கேக்கற மாதிரியே இருக்கு…

வாழ்க்கையின் மிக அருமையான பக்கங்கள் இல்லையா.. இதெல்லாம்?

இப்போ என்னோட அப்பாவுக்கு பார்வை கொஞ்சம் குறைவு.. காரணம் நரம்புத் தளர்ச்சி. இங்கே வந்தப்போ கூட டாக்டரிடம் காட்டிக் கேட்டோம். பார்வை மீண்டும் வராதாம். நான் அவர் முன்னால் நின்றால், யாரோ ஒருத்தர் நிற்பது அவருக்குத் தெரியும், ஆனா நான் கதைத்தால் மட்டுமே அது யார் என்பதை கண்டு பிடிப்பார், குரலை வைத்து.

நான் சொன்னேன் இல்லையா, அவர் சிவாஜியோட பெரும் ரசிகர் என்று. அவர் இங்க வந்தால், சிவாஜியோட படங்கள் dvd வாங்கிப் போட்டுவிட்டா, tv க்கு பக்கத்திலேயே இருந்து பார்ப்பார். தூரத்துல இருந்தா அவருக்குத் தெரியாது. எனக்கு அது கண்ணுக்குள்ளேயே இருக்கு. அவரை அப்படிப் பார்க்கையல் மனதில் மிகுந்த கஷ்டமா இருக்கும்.. ஆனா என்ன செய்ய?

இப்போவும் சிவாஜியோட ஏதாவது சீன பார்த்துட்டு அவர் சிரிக்கிறப்போ அவ்வளவு கம்பீரமா இருக்கும். அந்தக் கம்பீரத்துக்கு நான் ரசிகை. அவரோட உயரத்துக்கு நான் ரசிகை. அதேபோல இன்று வரைக்கும் உழைத்துச் சாப்பிடும் அவரோட அந்தத் தன்மானத்துக்கு நான் பெரும் ரசிகை. எதற்கும் பயப்படாமல் துணிந்து நில் என்று சொல்லும் அவரோட அந்தத் துணிச்சலுக்கு நான் ரசிகை.

இதை எல்லாம் தாண்டி, பெரும்பாலும் rc கதைகளில் வருமே.. ‘கண்ணோரம் சிரிப்பில் சுருங்கியது..’ என்று.. அந்தக் கண்ணோரச் சிரிப்புக்கு என்னோட அப்பா சொந்தக் காரர். அந்தச் சிரிப்புக்கு நான் மிக மிகப் பெரிய ரசிகை!

விவரமறியா அந்த வயதில் மட்டுமல்ல இன்றும் என்றும் என் அப்பாதான் என் முதல் ஹீரோ!!