விமர்சனங்கள்

உயிரோடு உறைந்தாயோ..!!-கவிதா

Posted on Updated on

 

 

திருச்சியின் சிறப்போடு ஆரம்பிக்கும் கதை நாயகன் சித்தார்த்தின் அறிமுகத்தோடு தொடங்குகிறது. அவன் மனதில் இடம் பிடித்தவள் காமாட்சி. அவள் ஏனோ அவனை பிரிந்து வாழ்கிறாள்.

அப்படியே நம் நாயகி சிற்பிகாவின் அறிமுகமும், அவள் மனதை கவர்ந்த இமயனும் என்று கதை பயணிக்கிறது. இரண்டு நாயகன் இரண்டு நாயகி என்று எந்த சந்தேகமும் இல்லாமல் கதை பயணிக்கையில், பாத்திரங்களின் பெயரை வைத்தே விளையாடியிருப்பார் என் அன்பிற்கினிய கவி! இந்தக் கதையின் நாயகர்கள் நாயகிகள் எத்தனை என்பதை படிக்காதவர்கள் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கதையை பற்றி சொல்வதை விட, அந்தக் கதையில் ஆங்காங்கே வந்த கவிதைகள் எல்லாமே வெகு அழகு. அந்த சூழ்நிலையை அவரவர் மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. அதோடு, கதை வாழ்ந்த நகரம், ஒவ்வொரு நிகழ்வுகளையும் அதற்கான உண்மையான விளக்கங்களோடு விவரித்தது எல்லாமே என்னை மிகவும் கவர்ந்தது கவி.

ஆரம்பத்திலிருந்து கதையின் முக்கால் பகுதி வரைக்கும் ஒருவித சஸ்பென்ஸ் கூட வந்துகொண்டே இருந்தது. அழகான பெயர் தெரிவுகள்.. ஒரு தாயால் இப்படி நடக்க முடியுமா? மகன் வளர்ப்பு மகன் என்றாலும் இப்படியும் பெற்றவர் இருக்க முடியுமா? இப்படி பல கேள்விகள் நமக்குள் தன் பாட்டுக்கு எழுகிறது. என்ன ஒரு வேதனை என்றால், அப்படி இல்லவே இல்லை என்று சொல்லமுடியா நிலையில் நாம் இருப்பதுதான்!

இமயனை அவன் அப்பாதான் கொன்றார் என்று எல்லா ஆதாராங்களுடனும் முடிவாக, புதிதாக ஒருவர் வருகிறார். அவருக்கும் இமயனுக்கும் என்ன தொடர்பு. அப்போ இமயனை கொன்றது யார்?

இமயன் இறந்துவிட்டான் என்றால் சிற்பிகா?

சித்தார்த்தின் காமாட்சி யார்?

சிற்பியின் காதல் ஓரழகு என்றால் சித்தார்த்தின் நேசம் பேரழகு!

இருவரும் தங்கள் இணைகளுடன் இணைந்தார்களா என்று கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

அழகான காதலோடு த்ரிள்ளரையும் சேர்த்து நேர்த்தியாக வந்திருக்கிறது கதை!

முதல் கதைக்கும் இந்தக் கதைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் கவி! நல்ல முன்னேற்றம் அழகான வார்த்தை பிரயோகங்கள். ஒவ்வொருவரின் மனதையும் தொடும் விதமான வசனங்கள் என்று எனக்கு இந்தக் கதை மிக மிக பிடித்திருக்கு!!

மென்மேலும் அழகான கதைகளை படைத்து, எழுத்துலகில் சிறப்புற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!

மலராதோ உந்தன் இதயம்..!- ரோசி

Posted on Updated on

 

கார்த்திகேயனும் நித்யாவும் பெற்றவர்களை சமீபத்தில் இழந்த அன்பான சகோதரர்கள். சிற்றன்னையின் ஏவளின் பெயரில், ஒரு பெண்ணை பார்க்கச் செல்கிறார்கள். அவள் மதுரா!

இந்தக் கதையின் நாயகி. எனக்கு என்னவோ கதையின் நாயகியாக மட்டுமே அவளை பார்க்க இயலவில்லை. பெற்றவர்களால் நிச்சயிக்கப்பட்டு, முன்பின் அறிமுகம் அற்று, ஒருநாள் இலங்கை வரும் அந்த ஆண்மகனை முழுமையாக நம்பி கழுத்தை நீட்டும் பல பெண்களின் பிரதிநிதியாகவே அவள் தெரிந்தாள்.

கடவுளின் அருளால் பலரின் வாழ்க்கை வளமாக அமைந்தாலும், இந்த மதுராவை போன்றே வெளிநாடுகளில் பாதிக்கப்படும் பெண்களும் சற்றே அதிகளவில் இருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை!

மதுரா, துணிந்து கட்டியவனை சட்ட ரீதியாக விலத்தினாள். அப்படி எத்தனை பெண்கள் துணிகிறார்கள் என்றால், அது கேள்விக்குறி தான். அதன் பிறகான வாழ்க்கை ஒன்று இருக்கு, அதற்கிடையில் அவன் மூலம் உருவாகிவிட்ட வாரிசுகளின் நிலை, ஏன்.. ஊரில் மகளை வெளிநாட்டில் கட்டிக் கொடுத்திருக்கிறோம், அவள் நன்றாக வாழ்கிறாள் என்று மலைபோல் நம்பிக் கொண்டிருக்கும் உறவுகளின் நிலை என்று பலது மனதை தாக்குகையில் ‘என் தலைவிதி இதுதான்..’ என்று கசப்பை விழுங்கிக்கொண்டு வாழ்க்கையை தள்ளும் பரிதாபத்துக்கு உரியது அந்தப் பெண்களின் நிலை.

ஆனால், இந்தக் கதையின் நாயகி மதுராவோ துணிந்து செயல்படுகிறாள். ஆனாலும், மனதளவில் அவள் அடைந்த காயமோ மிகமிக ஆழமானது. ஒரு பெண், கணவன் என்று வருகிறவனிடம், தன்னை, தன் எதிர்காலத்தை, தன் சந்தோசத்தை, கனவுகளை, எதிர்பார்ப்புக்களை என்று அத்தனையையுமே அவனிடம் ஒப்படைக்கிறாளே.. அதன் காரணம் என்ன? நம்பிக்கை! அவன் என்னையும் என் விருப்பு வெறுப்புக்களை மதித்து, என்னை போற்றி பாதுகாப்பான் என்கிற மலையளவு நம்பிக்கை.

வெளிநாட்டவர்களால் விளங்கிய கொள்ள முடியாத பெரும் புதிர் அல்லவா, நம்மவர்களின் அந்த நம்பிக்கையும் அதன் மேலான நம் திருமண வாழ்வும். வெளிநாட்டவர் யாரிடமாவது சொல்லிப்பாருங்கள், இவரை நான் முன்ன பின்ன பார்த்தது இல்லை, பெற்றவர்கள் நிச்சயித்தார்கள் நான் கட்டிக்கொண்டேன் என்று. அது எப்படி சாத்தியம் என்று தலையை பிய்த்துக்கொள்வார்கள். அப்படி அற்புதமான இல்லற வாழ்வு மதுராவில் வாழ்வில் நொடித்துப் போகிறது. அவளும், நொடிந்து, உயிர்ப்பற்று, தான் சுமக்கும் குழந்தைகளின் மீது பற்றுமற்று என்று உயிர்க்கூட்டை உடலில் சுமப்பவளை மனதில் சுமக்கிறான் கார்த்திகேயன்.

எப்போதுமே ரோஸி அக்காவின் நாயகிகளை விட நாயகர்களை எனக்கு மிகவுமே பிடிக்கும். அப்படித்தான் இந்த கார்த்தியும். அவனிடம் இருக்கும் பொறுமை, அவனது பண்பான நடத்தை, பாசமான செயல்கள் என்று அத்தனையும் அழகிலும் அழகு.

இந்தக் கதையில் பல இடங்கள் நான் ரசித்து ருசித்தவை. மதுராவுக்கு செக்கப்புக்கு கூட்டிப்போன இடத்தில் இன்னொரு தம்பதியினரோடு உரையாடுகையில், தன் மனதை தானே உணர்ந்துகொள்ளும் கார்த்திகேயன்.. நான் அவளின் கணவன் அல்ல என்று சொல்லாமல் உரையாடும் அவனின் கெட்டித்தனம், மதுராவின் கருவை பற்றி விசாரிக்கையில் அவனுக்குள் உண்டாகும் பரபரப்பு.. அதைக் காட்டிக்கொள்ளாமல் அவன் அமர்ந்திருந்த விதம்…ஹாஹா.. அத்தனை அழகு! அருகில் அவள் பார்வையால் பொசுக்குகிறாள், இவனோ எதிரில் இருப்பவர்களோடு குதூகலமாக உரையாடுகிறான். உள்ளே கிலி.. ஹாஹா.. அவனின் தவிப்பை ரசித்துச் சிரித்தேன்.

ஸ்கான் செய்கையில் குழந்தைகளை கண்டுவிட அவன் கொண்ட ஆர்வம் மிக மிக அழகு!

வயிற்று வலி வந்த அந்த நிமிடம் அவள் பட்ட வேதனை.. உடல் வலியை தாண்டி மன வலி இருக்கிறதே.. அப்பப்பா.. அருமை! ஒரு அந்நியனிடம் தன் நிலையை சொல்லமுடியாமல் மதுரா பட்ட பாடு.. கண்கள் கலங்கிவிட்டது எனக்கு.. அவ்வளவு தத்ரூபம்!

பிள்ளை பெற்றுக்கொள்ள செல்லும் அந்த நேரத்தில் மதுரவின் பயமும் துடிப்பும் அருமை என்றால், மணமாகாமல் கண்ணால் காணாத குழந்தைகள் மீதும், அவர்களை சுமப்பவள் மீதும் கார்த்திகேயன் கொண்ட நேசமும், அந்தக் கணத்தில் அவன் தவித்த தவிப்பும்.. வார்த்தைகள் இல்லை வடிக்க.

என்னதான் இன்னொரு வாழ்க்கை பற்றிய எண்ணம் மதுராவில் மனதில் இல்லாதபோதும், அவள் மனதிலும் அவன் இருக்கிறான் என்பதை அவள் அறியாத போதும் அவன் அறிந்துகொண்ட தருணம் அது.

அதன் பிறகு வந்த ஒவ்வொரு விடயமும் அழகோ அழகு.. குழந்தைகளின் பிறப்பு, அதற்கு கார்த்திகேயனின் பிரதிபலிப்பு, அதை பார்த்து நொறுங்கிப்போகும் மதுரா என்று.. ஒவ்வொருவரின் உணர்வையும் அப்படியே அள்ளித் தெளித்திருக்கிறார் ரோஸி அக்கா.

முன்னாள் கணவன் இறந்ததும் மதுராவின் நிலை.. அவன் வேண்டுமானால் பொய்த்துப் போயிருக்கலாம். ஆனால், கணவன் என்று நெஞ்சில் வரித்து அவனோடு உண்மையாக வாழ்ந்த ஒரு பெண்ணை அது நிச்சயம் பாதிக்கும் இல்லையா. அந்த இடத்தில் மதுராவில் பிரதிபலிப்பு.. நிஜம்!

இப்படி பல இடங்கள் நான் ரசித்தவையும் ருசித்தவையும்.

எப்படியும் மதுரா கார்த்திகேயனின் அன்பை புரிந்துகொள்வாள் என்று அவனைப்போலவே நானும் நம்பிக்கையோடு காத்திருக்க, அவள் அவனுக்கு கொடுத்த அதிர்ச்சி நானுமே எதிர்பாராதது.

கடைசியில் இருவரும் எப்படி இணைந்து கொள்கிறார்கள் என்பதை கதை படித்து தெரிந்துகொள்ளுங்கள். ரோஸி அக்காவின் கதையில் பல இடங்களில் பல வார்த்தைகள் மனதை நச் என்று தொட்டுச் செல்கிறது. அப்படி எனக்கு மிக மிக பிடித்த ஒன்று; “தன்னந் தனிமை நம்மில் மோதி அதிரவைக்கையில், அதன் சவால்களை எதிர்கொள்ள கண்ணீரே தடை என்பதை புரிந்துகொள்ளும் நம் மனம், அதை தூர ஒதுக்கி விடுவதையும், அதுவே, தாங்கிக்கொள்ள துணையுண்டு என்று கண்டால் எதற்கெடுத்தாலும் கண்ணீரின் துணையை நாடுவதையும் சிந்திக்க மறந்துவிடுகிறோம்”

எவ்வளவு உண்மை!

கதையும் மிக மிக அருமை!!

அழகான நீரோட்டம் ஒன்றை கண்ணாரக் கண்டு மனதார ரசித்த உணர்வு!!

நன்றி அக்கா, அருமையான கதை ஒன்றை எங்களுக்கு தந்ததற்கு!!

அலைபாயும் நெஞ்சங்கள்..! – சுதாரவி

Posted on Updated on

 

திருமணம் என்பது ஆண்களுக்கு எப்படியோ.. பெண்களுக்கோ அது மிகப்பெரிய எதிர்பார்ப்பு! அவர்களின் எதிர்காலம்.. அவர்களின் சந்தோசம்.. அவர்களின் வாழ்க்கை.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அப்படித்தான் இங்கே ஸ்ருதியும்! கனவுகளோடு கைப்பிடித்தவனை எல்லாமுமாக அவள் நம்ப அவனோ திரும்பியும் பார்க்காமல் புறக்கணிக்கிறான். புறக்கணிப்பின் வலி மிக பெரியது. ஆனாலும், அதை தாங்கிக்கொண்டு அவனோடு சுமூகமாகிவிட போராடும் பெண்ணாக மனதில் நிற்கிறாள் சுருதி!

அந்தப் போராட்டம் ஒன்றும் இலகுவானதல்ல! அங்கே சுயமரியாதை கேள்விக்குறியாகும். அவனும் நானும் ஒன்று. அவனில்லாமல் நானில்லை என்கிற பட்சத்தில் மட்டுமே சுயமரியாதையை அடக்கிவிட்டு அதை செய்ய இயலும்!

ஆறுமாத காலம்… திரும்பியும் பாராமல் வதைக்கிறான் நிகில். அவன் அப்படி நடப்பதற்கு என்ன காரணம் என்று அறியாத போதே, எதுவாக இருந்தாலும் மனைவியாக வந்தவளை புறக்கணிக்கும் அவன் மீது கோபம் தான் வருகிறது. அப்படி கோபத்தை வர வைப்பது எழுத்தாளரின் வெற்றியல்லவா!

ஆண் என்கிறவன் ஒரு பெண்ணை அவள் யாராக இருந்தாலும் வதைக்க உடனேயே கையிலெடுக்கும் ஆயுதம் அவளின் ஒழுக்கம். இங்கேயும் அப்படித்தான்.

நான் நினைப்பதுண்டு.. இனி வரும் காலங்களில் ஆணின் அந்த புத்திசாலித்தனமான ஆயுதத்துக்கு நாம் நம்மை பலியாக்கக் கூடாது என்று! எனக்கு என் மனச்சாட்சி தான் நீதிபதி! அது சொன்னால் போதும் நீ எப்படியானவள் என்று!

நிகிலுக்கு நடந்ததை அறிந்த பிறகும் அவன்மேலிருந்த கோபம் என்னை விட்டு போகவில்லை. அவன் வாழ்வில் நடந்தது நம்பவே முடியாத அதிர்ச்சி! அவனது காயம் இலகுவாக ஆறிவிடக் கூடியதுமல்ல! ஆனாலும், அவனது இறந்தகாலத்துக்கும் ஸ்ருதிக்கும் என்ன சம்மந்தம்? சம்மந்தமே இல்லாத அவள் எதற்காக வதைக்கப்பட வேண்டும்? தாயின் கட்டாயத்தில் மணம் முடித்தது அவன் செய்த தப்பு! அதற்கு அவளுக்கு தண்டனையா..

நிகிலின் அன்னை.. ஹாஹா என்ன சொல்லட்டும்.. இப்படியான மாமியார்கள் கிடைப்பது என்பது சாத்தியமல்ல.. கிடைத்துவிட்டால் ஒவ்வொரு பெண்ணுக்குமே அது வரம் தான். மகனாக இருந்தாலும் அவன் செய்தது தவறு என்று சுட்டிக்காட்டும் மனம் இலகுவில் வந்துவிடாதே! மனதில் நிற்கிறார் அவர்!

மயக்கம்போடும் அவர் ஐந்து நட்சத்திர அறையில் ரூம் கேட்பது.. ஹாஹா.. எழுத்தாளரின் நகைச்சுவை உணர்வு நம்மையும் ரசிக்க வைக்கிறது!

இந்தக் கதையிலே நச் என்று எனக்கு மிகவுமே பிடித்த பாத்திரம் சரண்யா… மதிக்கு விளையாட்டு காட்டிக்கொண்டே இருப்பவள், கணவனிடம் பிடிபட்டதும் கேட்பாள் ஒரு கேள்வி..

இப்படி எத்தனை நாட்கள் அந்த நண்பனை பார்க்க போனேன்.. இந்த நண்பனை பார்க்க போனேன் என்று என்னை காக்க வச்சு இருப்பீங்க என்று.. உண்மை தானே.. மனைவி தானே.. என்று அவர்கள் அறியாமலே கணவர்கள் செய்யும் அலட்சியத்தை மிக இலகுவாக சுட்டிக்காட்டியிருப்பார் சுதாக்கா.

பல இடங்கள் மனதை தைத்துச் செல்கிறது.

ஆக, மொத்தத்தில் மிக அழுத்தமான கருவை மிக இலகுவாக தன் பாணியில் நகைச்சுவையை கலந்து நமக்கு தந்திருக்கிறார் எழுத்தாளர் சுதாரவி அவர்கள்!

மென்மேலும் எழுத்துலகில் மிக அழகான படைப்புக்களை தந்து புகழ்பெற என் உள்ளம் நிறைந்த அன்பான வாழ்த்துக்கள் அக்கா!!