“நீ குடுத்திருக்கக் கூடாது.”
“முத்துமாணிக்கம் அங்கிளிட்ட வாங்கின கார்மெண்ட்ஸ் என்ர பெயர்லதான் இருக்கு. அத நான் உனக்கு மாத்துறன். அத ஆர் உன்னட்ட இருந்து வாங்கினம் எண்டு நானும் பாக்கிறனே.” என்றான் சினத்துடன்.
இன்னதென்று இனம் பிரிக்க முடியா சிறு சிரிப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள் இளவஞ்சி.
“என்ன, சும்மா சொல்லுறன் எண்டு நினைக்கிறியா?” அவள் தன்னை நம்பவில்லையோ என்றெண்ணி வினவினான்.
மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டு, “எனக்கு என்ன புதுசாத் தொழில் ஆரம்பிச்சு முன்னுக்கு வரத் தெரியா எண்டு நினைக்கிறீங்களா? இல்ல அதுக்குத் தேவையான பொருளாதாரம் என்னட்ட இல்லை எண்டு நினைக்கிறீங்களா? பாத்துக்கொண்டிருக்க முன்னால வந்து காட்ட என்னால ஏலும். நீங்களாவது வளந்து படிச்சு முடிச்ச பிறகு தொழிலுக்க வந்தவர். ஆனா நான் வளந்ததே அங்கதான். இங்க தொழில் விசயமே இல்லை.” என்றவளுக்கு அவனிடம் தன் மனத்தில் இருப்பதைச் சொல்லப் பிடிக்கவில்லை.
இங்கே பிரச்சனை சக்திவேலரோ, அவர் பேச்சோ அல்ல. அவளுக்கு எதிராக நிற்பது அவள் உள்ளம்தான். உனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை நீ உரிமை கோருவாயா என்கிற கேள்விதான். அதுதான் சக்திவேலர் கேட்டதும் கொடுத்துவிட்டாள். இல்லாமல் அவளிடமிருந்து அவள் உயிரைக் கூடப் பறித்துவிடலாம். தையல்நாயகியைப் பறிக்கவே முடியாது.
“இப்ப உங்களுக்குச் சந்தோசமா இருக்குமே நிலன்.” என்றாள் அவனிடம்.
இப்படிச் சொல்லாதே என்பதுபோல் அவளைப் பார்த்தான் நிலன்.
“இதுக்குத்தானே இந்தக் கலியாணம்.” என்றாள் கசப்போடு.
அதற்கு மட்டும் வேகமாக மறுத்துத் தலையசைத்தான்.
“அப்ப என்னத்துக்கு?”
அவனால் பதில் சொல்ல இயலா அதே கேள்வி.
சில கணங்களுக்கு இமைக்காது அவனையே பார்த்தவள் வந்து அவன் முன்னே நின்றாள்.
என்னவோ சொல்லப்போகிறாள். அவன் இதயம் அழுத்தம் கூட்டிப்போய் துடிக்க ஆரம்பித்தது.
“காரணம் என்னவா வேணுமெண்டாலும் இருக்கட்டும். ஆனா, கலியாணத்துக்கு முதல் அத நீங்க என்னட்டச் சொல்லாம இருந்ததில கூட ஒரு அர்த்தமிருக்கு. ஆனா, கலியாணத்துக்குப் பிறகும் அத மறச்சு என்னை விட உங்களுக்கு அந்த விசயம், இல்லை அந்த விசயத்தோட சம்மந்தப்பட்ட ஆள்தான் முக்கியம் எண்டு சொல்லாமச் சொல்லுறீங்க நிலன்.” என்று அவன் கண்களையே பார்த்துச் சொல்லிவிட்டுப் போனாள் அவள்.
ஒருகணம் இதயம் தன் துடிப்பை நிறுத்திவிட உறைந்து நின்றுவிட்டான் நிலன்.
அடுத்த வினாடியே அவள் கரம் பற்றி இழுத்துத் தன் முன்னால் நிறுத்தினான். “காரணம் என்னவா வேணுமெண்டாலும் இருக்கட்டும். ஆனா அதுக்காக நீ எனக்கு முக்கியம் இல்லை எண்டு சொல்லுறத நான் ஏற்கவே மாட்டன். காரணத்தைச் சொல்லுற இடத்தில நான் இல்ல வஞ்சி. அதுக்கு எனக்கு அனுமதி இல்ல. அதைவிட முழுமையான காரணம் எனக்கும் தெரியாது.”
“ஓ! அப்ப பிடிவாதமா நிண்டு என்னக் கட்டுற அனுமதிய உங்களுக்கு ஆர் தந்தது?” என்று கேட்டுவிட்டுப் போனாள் அவள்.
அதே பால்கனியில் தன்னை சமாளித்துக்கொள்ள முடியாமல் நின்றான் நிலன். வெளியே எடுக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட முள்ளின் நிலைதான் அவன் நிலை.
முடிந்துவிட்ட திருமணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றாமல் அவனும் விலகி விலகி ஓடிக்கொண்டிருப்பதற்கு பின்னால் இருப்பதும் தானும் அவளுக்கு நியாயமாக இல்லை என்கிற உறுத்தல்தான். அதையே அவள் அவன் முகத்திற்கு நேரே சொல்லிவிட்டுப் போகிறாள்.
கீர்த்தனா வந்து இருவரையும் உணவுக்கு அழைத்தாள். மொத்த வீடும் சாப்பாட்டு மேசையின் முன்னே அமர்ந்திருந்தது. இளவஞ்சி மாத்திரமல்ல நிலனும் யார் முகமும் பார்க்காமல் சென்று அமர்ந்தான்.
எல்லோர் மீதும் ஒரு கோபம். அவர்களின் தவறுகளால் அவன் இளவஞ்சியின் முன்னே குற்றவாளியாக நிற்கிறான்.
சந்திரமதி எல்லோருக்கும் பரிமாறினார். விசேசமாக அவர் இளவஞ்சியைக் கவனித்துக்கொள்ள, “மருமகள் எண்டு ஒருத்தி இந்த வீட்டுக்கு வந்த பிறகும் எல்லா வேலையையும் நீங்களே செய்துகொண்டு இருப்பீங்களா அண்ணி? பொறுப்ப அவளிட்டக் குடுத்துப்போட்டு நீங்க ஓய்வா இருக்கப் பாருங்க!” என்றார் ஜானகி அதட்டலாக.
சட்டென்று மகனையும் மருமகளையும் பார்த்தார் சந்திரமதி. அவர்கள் இருவரும் எதுவும் சொல்ல முதல், “ஓய்வு எடுக்கிற அளவுக்கு எனக்கு என்ன வயசா போயிற்றுது? நீங்க சாப்பிடுங்க மச்சாள். உங்களுக்குப் பிடிக்கும் எண்டுதான் கத்தரிக்கா பொரிச்சு குழம்பு வச்சனான்.” என்று அவரையும் கவனித்து, சமாதானம் செய்ய நினைத்தார்.
ஜானகி அதைக் கேட்க வேண்டுமே. அசையாமல் இருந்தே நான் இப்பிடித்தான் என்று சொல்லாமல் சொல்லும் இளவஞ்சி அவரை மிகவுமே சீண்டினாள்.
“என்னப்பா இது? இப்பிடிச் சும்மா அறைக்கயே அடஞ்சு கிடக்கிறதுக்கா உங்கட பேரனுக்குக் கட்டிவச்சனீங்க. வீட்டு வேலைகளைப் பாத்து, குடும்பப் பொறுப்பை எடுத்து, பிள்ளை குட்டி எண்டு போகோணும்தானே?” என்றார் தகப்பனிடம்.
எல்லோரையும் பொதுவாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஜானு சொல்லுறதும் சரிதான். வீட்டுப் பொறுப்பக் கொஞ்சம் கொஞ்சமா கவனிக்கட்டும். அம்மா சந்திரா, என்ன எண்டு பாத்து உங்கட மருமகளுக்குச் சொல்லிக் குடுங்கோம்மா.” என்றார் சக்திவேல் ஐயா.
“ஓம் மாமா. அப்பிடிப் பழக்காம விடுவானா? வஞ்சியும் கெட்டிக்காரி. பழகிடுவா. இப்பவே என்னத்துக்கு எண்டுதான் சொல்லுறன். மெல்ல மெல்லச் சொல்லிக்குடுக்குறன்.” ஜானகி மீது சந்திரமதிக்கு கோபம் உண்டானாலும் மாமனாரிடம் சமாளித்தார்.
ஆனால், அப்போதும் விடாமல், “அதத்தான் அண்ணி இப்பவே ஆரம்பிங்கோ எண்டு அப்பா சொல்லுறார். வீட்டில சும்மாதானே இருக்கப்போறா உங்கட மருமகள்.” என்றதும், அவ்வளவு நேரமாக எவ்வளவு தூரத்திற்குப் போகிறார்கள் பார்க்கலாம் என்று பல்லைக் கடித்துக்கொண்டிருந்த நிலன் விழுக்கென்று நிமிர்ந்தான்.
“நீங்களும் வீட்டில சும்மாதானே இருக்கிறீங்க அத்த. நீங்க அம்மாக்கு உதவியா இருங்கோ. அவள் எனக்கு உதவிக்கு வேணும்.” என்றான்.
“இதென்ன புதுசா? இவ்வளவு காலமும் ஆர் உனக்கு உதவினது?”
“இவ்வளவு காலமும் வீட்டை ஆர் பாத்தது?”
“அது வேற. மருமகள் வந்ததுக்குப் பிறகும் நாங்கதான் பாக்கோணுமா?”
“ஏன் பாத்தா என்ன?”
“தம்பி, என்ன இது? பேசாமச் சாப்பிடு!” என்று சந்திரமதியும் பிரபாகரனும் தடுத்தும் கேளாமல் ஜானகிக்குப் பதில் கொடுத்துக்கொண்டிருந்தான் நிலன்.
கடைசியில், “பேரா! பேசாமச் சாப்பிடு!” என்று சக்திவேலர் அதட்டிய பிறகுதான் எல்லோரும் அமைதியாகச் சாப்பிட்டனர். ஆனால், எல்லோர் மனத்திலும் இளவஞ்சி குறித்தான சிந்தனைதான். அவள் அறியாமல் அவளைத்தான் கவனித்தனர்.
அனைத்தையும் கவனித்தபடி சாப்பிட்டுவிட்டு நிமிர்ந்த இளவஞ்சி, “மிஸ்டர் சக்திவேலர், நீங்களும் உங்கட குடும்பமும் என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க? இவள் ஆள் அட்ரஸ் இல்லாதவள், இருந்த தொழிலயும் பறிச்சாச்சு, இப்ப பல்லுப் பிடுங்கின பாம்பு, நாங்க என்ன எண்டாலும் கதைக்கலாம் எண்டா?” என்றாள்.
“ஏய்! ஆரப் பாத்து பெயர் சொல்லிக் கதைக்கிறாய்?” என்று சீறிக்கொண்டு வந்த ஜானகியை அவள் கணக்கில் எடுக்கவே இல்லை.
“உங்கட ஆட்சி அதிகாரத்தை இந்த வீட்டோட வச்சிருங்க. என்னட்ட கொண்டு வராதீங்க சரியா? என்னத்தான் கட்டியே ஆகோணும் எண்டு நிண்டு கட்டினது உங்கட பேரன். இப்பவும் வேணாம் எண்டு சொல்லச் சொல்லுங்க. இந்த நிமிசம் இந்த வீட்டை விட்டு வெளில போறன் நான்.” என்றுவிட்டு எழுந்தவள், “உங்கட அப்பப்பா என்ன முடிவில இருக்கிறார் எண்டு கேட்டுக்கொண்டு வந்து சொல்லுங்க.” என்று நிலனிடமும் சொல்லிவிட்டுக் கையைக் கழுவிக்கொண்டு மேலேறினாள்.
தொடரும்…
சொறி மக்களே, உண்மையா சஸ்பென்ஸ் வச்சு எழுத நினைக்கேல்ல. ஆனா அதச் சொல்லுற இடம் வரேல்ல. யோசிச்சு பாருங்களன். அது அவளுக்குத் தெரிஞ்சிடக் கூடாது எண்டுதான் எல்லாரும் நினைக்கினம். அப்பிடி இருக்க அவளுக்குத் தெரிய வாற இடம், அதுக்குச் சரியான காரணத்தோடதான் வரும் இல்லையா? எனக்குத் தெரிஞ்சு 14 அல்லது 15வது அத்தியாயத்தில வந்திடும். ஓகேயா?
வேற என்ன? ஹாப்பி வீக்கெண்ட். திங்கள் சந்திக்கலாம். கத எப்பிடிப் போகுது எண்டு சொல்லுங்க .