• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 19

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாய் மக்களே,

ஒரு வழியாக மிதுனை ஜானகியின் மகனாக்கி, விட்ட பிழையை நேராக்கி இருக்கிறேன். அத்தியாயம் 7 தான் பெரும் எடிட்டுக்கு ஆளானது. முடிந்தால் 7- 10 சும்மா தட்டைப் பாருங்க. இல்லாவிட்டாலும் ஒன்றுமில்லை.

நான் குழம்பிய இடம், மிதுனை ஜானகியின் மகனாக்கினால் நிலன் எப்படி மிதுன் சுவாதி விடயம் தெரிய வந்த பிறகு வஞ்சியைத் திருமணத்திற்கு கேட்பான் என்றுதான்.

ஆனால் , முதலில் அவளைச் சுவாதியின் தமக்கையாக எண்ணித்தான் கேட்கிறான். பிறகு கேட்கையில் அவள் குணாளனின் சொந்த மகள் இல்லை என்று தெரிய வந்த பிறகுதான் கம்பஸில் என் பின்னால் சுற்றினாள் என்று சொல்லிக் கேட்கிறான்.

அங்கங்கே சின்ன சின்ன மாற்றங்கள் செய்தாலும் கதையின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை . மிதுன் சுவாதி திருமணத்தை பேச நிலன் தன் பெற்றோரை அழைத்துப் போவான் . காரணம் , ஏற்கனவே இங்கே சுவாதி தாய்மை உற்றிருப்பதால் பெரும் பிரச்சனை நடக்கும் என்று தெரியும் . அப்படியிருக்க அங்கே ஜானகியை கூட்டிக்கொண்டு போனால் அவர் என்ன எல்லாம் கதைப்பார் என்று தெரியாது என்று சொல்லி இருக்கிறேன் .

அதே போல அங்கே வீட்டில் இது தெரிய . வந்தபிறகு ஜானகி கோபப்பட்டு சண்டை பிடிப்பது போல் மாற்றியிருக்கிறேன் .

அத்தியாயம் 7,8 இதை மட்டும் கொஞ்சம் பாருங்கள் போதும் .

சொறி இதற்கெல்லாம்.

இனி கதைக்கு வாருங்கள்:)

.................


அத்தியாயம் 19

கோபத்தின் உச்சியிலும் கொதிப்பிலும் இருக்கிறவளை ஆற்றுப்படுத்தும் நோக்குடன்தான் அப்படிச் சொன்னான் நிலன். தன் வீட்டினரை அவளிடமிருந்து காக்கும் எண்ணத்துடனோ, அவர்களுக்காக நிற்கும் நோக்குடனோ சொல்லவில்லை. இன்னுமே சொல்லப்போனால் அவள் கணவனாய்ச் சொன்னான்.

கோபத்தில் எதையாவது செய்துவிட்டு, எதிர்காலத்தில் அதற்கும் சேர்த்து அவள் வருந்தக் கூடாது என்கிற அக்கறையில் அனைத்தையும் கடந்து வா என்றான்.

ஆனால், அவன் அந்த வீட்டின் வாரிசு என்பதாலேயே அவன் அவர்களுக்காகப் பேசுகிறான் என்று அவள் பொருள்கொண்டுவிட்டாள். இளவஞ்சி குணாளனாமே! அவள் இளவஞ்சி நிலனாகிக் கொஞ்ச நாள்களாகிவிட்டது என்று அவளிடம் யார் சொல்வது?

மிதுன் மூலம் அவள் காரினைத் தருவித்துத் தையல்நாயகியில் நிறுத்திவிட்டு, அவனுடையதில் மிதுனோடு புறப்பட்டான். அவன் கொண்டுபோய் அவள் காரின் திறப்பினை நீட்டியபோது, ‘அங்கே வைத்துவிட்டுப் போ’ என்பதுபோல் மேசையைக் காட்டியிருந்தாள்
அந்தத் திமிர் பிடித்தவள்.

இப்படி நிமிர்ந்து நின்றே தன்னை நோக்கி அவனை இழுத்துக்கொண்டிருக்கிறாள் அவள். சொன்னால் நம்ப மாட்டாள்.

மிதுன் முகமே சரியில்லை. இருண்டு, கறுத்துச் சிறுத்திருந்தது. எப்போதும் நிலனிடம் வழவழக்கிறவன் இன்று அமைதியாகவே வந்தான். தனக்குள் உழன்றுகொண்டிருந்த நிலனும் முதலில் அவனைக் கவனிக்கவில்லை.

கவனித்த பிறகு, “என்னடா?” என்றான்.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையாட்டினான் அவன்.

சிறிய அமைதிக்குப் பிறகு, “சுவாதி சொன்னவளா?” என்றான்.

ஆம் என்பதுபோல் இப்போதும் தலையை மட்டுமே அசைத்தான் மிதுன்.

நிலன் அழைத்து இளவஞ்சியைப் பற்றிக் கேட்டதும், சக்திவேலரைத் தையல்நாயகியிலிருந்து உடனடியாக அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்படு என்று சொன்னதும் என்னவோ சரியில்லை என்று உணர்த்த, சுவாதிக்கு அழைத்திருந்தான்.

அவளோ கோபத்துடன் அவன் குடும்பத்தையே இழுத்துவைத்துத் திட்டினாள். தன் அத்தைக்கு நடந்தது போலவே அவனும் தன்னை ஏமாத்திவிட்டானாம் என்று சொல்லவும் அதிர்ந்துபோனான். முதலில் அவனுக்கு ஒன்றும் முழுதாக விளங்கவும் மாட்டேன் என்றது. விளங்கியதும் என்ன சொல்வது என்று தெரியாது நின்றுவிட்டான்.

கூடவே தன் தகப்பனைப் போலவே தானும் நடந்திருக்கிறோம், அதுவும் அந்த வீட்டுப் பெண்ணுக்கே என்கிற விடயங்கள் அவனை முழுமையாகப் பாதித்திருந்தன.

இத்தனை காலமும் அப்பா அருமையான மனிதர், அமைதியான சுபாவம் கொண்டவர் என்கிற பிம்பம் முற்றிலுமாக நொருங்கிப் போயிற்று. அம்மா பொல்லாதவர், அப்பாவை இருத்தி எழுப்புவார் என்று இருந்தது மாறி, அம்மாவுக்கும் சேர்த்து அந்த மனிதர் துரோகமிழைத்திருக்கிறார் என்கிற விடயம் அவன் இரத்தத்தைக் கொதிக்க வைத்தது.

தந்தையை வெறுத்தான், இது எல்லாவற்றுக்கும் முழுமுதற் காரணமாக இருந்த தாத்தாவை முற்றிலுமாக வெறுத்தான், தன் வீட்டை வெறுத்தான். சுவாதி வீட்டினரை எப்படி நிமிர்ந்து பார்ப்பது என்று அவனுக்குத் தெரியவேயில்லை.

“அவா எனக்கு அக்காவா அண்ணா?” எழும்பவே எழும்பாத குரலில் வினவினான்.

“மறந்தும் அவளுக்கு முன்னால அப்பிடிக் கூப்பிட்டுடாத. முதல் நீ அப்பிடிச் சொல்லியிருந்தாக் கூட விட்டிருப்பாள். இப்ப கூப்பிட்டியோ அடிச்சாலும் அடிச்சிடுவாள். என்னை அண்ணா எண்டுதானே கூப்பிடுறாய். அப்பிடியே அவளையும் அண்ணி எண்டே சொல்லு.” அவள் இருக்கும் மனநிலைக்குக் கட்டாயம் செய்வாள் என்பதில் அவசரமாகச் சொன்னான் நிலன்.

சரி என்று தலையாட்டிக் கேட்டுக்கொண்டான் மிதுன்.

அவனுக்கு அவளைப் பிடிக்கும். ஆனால் பிடிக்காது. தூரத்தில் நின்று ரசிக்கையில் என்ன மாதிரியான பெண் இவர் என்று பிரமிப்பாக இருக்கும். அதுவே தன் குடும்பத்திற்கு தலையிடியாக இருக்கிறார் என்பதில் பிடிக்காது. ஆனால் இன்று அவள் அவனுக்குத் தமக்கையாம். விசித்திரமாக இருந்தது.

“இனி என்ன நடக்கும் எண்டு என்னால சொல்லவே ஏலாம இருக்கு மிதுன். வஞ்சி இதையெல்லாம் சும்மா விடுற ஆள் இல்ல. ஆனா என்ன நடந்தாலும் சுவாதியோட நிண்டுடு. அதே மாதிரி வஞ்சிக்கு எதிரா எதுவும் கதைக்கக் கூடாது நீ. அவள் பாதிக்கப்பட்டவள். பெத்த தாய் தகப்பன் ரெண்டு பேருமே அவளை விட்டுட்டினம். அவளின்ர தாயாவது செத்துப் போயிற்றா. ஆனா அப்பா எண்டு இருந்த மனுசன் இப்ப வரைக்கும் அவளைத் தேடேல்ல. அவளுக்கு ஏன் இப்பிடி ஒரு நிலை சொல்லு? அந்தளவுக்கு என்னடா பிழை செய்தவள்? இவ்வளவு பிரச்சனைகளை, மன உளைச்சலை எல்லாம் அவள் ஏன் சந்திக்கோணும்?” என்றவனுக்குத் தன்னைக் குறித்துத்தான் பெரும் பயமாய் இருந்தது.

அவள் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்பதற்காகத் தன் குடும்பத்தினருக்கு அவள் கொடுக்கப்போகும் குடைச்சல்களை எவ்வளவு தூரத்திற்கு அவனால் பொறுத்துப் போக முடியும் என்று அவனுக்குத் தெரியவில்லை.

அவர்களை அவள் துன்புறுத்தினால் அதை எப்படி அவன் பார்த்தும் பாராமல் கடப்பான்? முடியுமா என்ன? வளந்த பிள்ளை என்று நீ இருந்தும் எங்களுக்கு இந்த நிலையா என்று பெரியவர்கள் கேட்க மாட்டார்களா?

அவனுக்கும் அவளுக்குமான உறவு பெரும் சிக்கலுக்குள் சிக்கப்போவது மட்டும் நன்றாகப் புரிந்தது அவனுக்கு.

ஒரு நெடிய மூச்சுடன் அவனைத் தங்கள் வீட்டு வாசலில் இறக்கிவிட்டான். உள்ளுக்குள் போகவில்லை. இருக்கும் மனநிலைக்குச் சக்திவேலரை எதிர்கொள்ள அவன் தயாராக இல்லை. அதைவிட பாலகுமாரனோடு தனியாகக் கதைக்க வேண்டும். அதில் ஜானகி அறியாமல் பாலகுமாரனை சக்திவேலுக்கு அழைத்துவரும் பொறுப்பை மிதுனிடம் ஒப்படைத்துவிட்டு, அவனும் சக்திவேலுக்கு காரை திருப்பினான்.

வெளிப்பார்வைக்கு ஒரே வீடுபோல் இருந்தாலும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது அவர்கள் வீடு. மேலும் கீழுமாக ஒரு பக்கம் அவர்களுக்கு என்றால், மறுபக்கம் இவர்களுக்கு.

அப்படி இருந்தாலுமே வீட்டில் வைத்துப் பாலகுமாரனோடு தனியாகக் கதைப்பதற்கு வழி கிடைக்கவே கிடைக்காது. முக்கியமாகப் பேசிக்கொள்கிறார்கள், பிறகு என்னவென்று கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்று நினைக்கு ஒதுங்கி நிற்கும் குணமெல்லாம் ஜானகிக்கு இல்லை. எல்லாவற்றுக்கும் நடுவில் வந்துவிடுவார்.

இன்றும் அப்படி ஏதாவது செய்வார் என்றால் நிச்சயம் அவனால் பொறுமையாக இருக்க முடியாது. பிறகு பேசலாம் என்று தள்ளிப்போடும் நிலையிலும் இல்லை.

அவன் அங்கே சென்றபோது பிரபாகரன்தான் இவனை எதிர்கொண்டார்.

“தம்பி!” என்றார் தயக்கத்துடன். மிதுனும் சுவாதியும் பிடித்த சண்டையில் சக்திவேலருக்கு முதலிலும் பிறகு அவர் மூலம் பாலகுமாரன், பிரபாகரன் இருவருக்குமே செய்தி வந்து சேர்ந்திருந்தது. அதில் மகன் எதற்கு இவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று அறிந்து, அவனை நிலைப்படுத்த முயன்றார் அவர்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“நீங்க கூட எல்லாத்தையும் மறச்சிட்டீங்க என்னப்பா.” என்றான் கசப்புடன்.

“கோபப்படாத அப்பு. நிதானமா இரு. அதெல்லாம் எப்பவோ நடந்தது.”

“எப்பிடி அப்பா கோவப்படாம இருக்கிறது? எப்பிடி அப்பா எப்பவோ நடந்தது எண்டு சொல்லுறீங்க? அதால முழுசா பாதிக்கப்பட்ட ஒருத்தி உங்கட கண்ணுக்கு முன்னால முழுசா நிக்கிறாளே. தெரியேல்லையா உங்களுக்கு?”

“தம்பி, கடவுள் சத்தியமா இளவஞ்சியைப் பற்றி எனக்குத் தெரியாது. அவே முதல் ஒரு கிராமத்தில இருந்தவே. பிறகுதான் நல்லூருக்கு வந்தவே. குணாளனின்ர மகள் இளவஞ்சி எண்டுதான் எல்லாருக்கும் தெரியும். நடுவுக்க என்ன நடந்தது எண்டு ஆருக்குமே தெரியாது.” என்றார் அவர் அவசரமாக.

தையல்நாயகி அம்மா புத்திசாலித்தனமாக யோசித்து, உடனடியாக வாசவியைத் திருகோணமலை அனுப்பியதில் அவருக்குக் குழந்தை பிறந்தது இங்கே யாருக்கும் தெரிந்திராது. அவரின் இறப்பின் பின் அவள் குணாளனின் மகளாக மாறுகிற காலத்தில் ஊரை விட்டே வந்திருக்கிறார்கள்.

இவன் வீட்டினர் செய்த மொத்த துரோகத்திலிருந்தும் தன் குடும்பத்தையும் இளவஞ்சியையும் காப்பாற்ற அந்தப் பெண்மணி என்ன பாடெல்லாம் பட்டிருக்கிறார்? யோசிக்க யோசிக்க அவனாலேயே தாங்கிக்கொள்ள இயலவில்லை.

அவனின் பெருத்த அமைதி அவரைப் பாதிக்க, “தம்பி, என்னய்யா?” என்றார் அவன் தோளைத் தொட்டு.

“இது எவ்வளவு பெரிய துரோகம் எண்டு உங்களுக்கு விளங்கேல்லையா அப்பா? ஒரு அம்மா சாகிறதுக்கு எங்கட குடும்பம் காரணமா இருந்திருக்கு. ஆனா, அதையெல்லாம் மறைச்சுப்போட்டு அந்தக் குடும்பம் பொல்லாதது, சரியில்லாதது, அவள் பொல்லாதவள் எண்டு எவ்வளவு பழியத் தூக்கிப் போட்டீங்க. நானும் அதையெல்லாம் நம்பி… ச்செய்!” என்றான் தன்னைத் தானே வெறுத்தபடி.

“தம்பி இஞ்ச பார். அந்த நேரம் எனக்கு ஒண்டுமே தெரியாது. அப்ப நான் கொழும்பில இருந்தனான். இன்னும் சரியா சொல்லப்போனா குமாருக்கும் ஜானகிக்கும் கலியாணம் முடிஞ்ச பிறகும் குமார் ஜானகியோட ஒட்டாம இருந்திருக்கிறான் போல. அது அப்பான்ர காதுக்குப் போயிருக்கு. ‘கண்டவளையும் நினைச்சுக்கொண்டு என்ர மகளோட வாழாம இருக்கிறியா’ எண்டு ஏதோ அப்பா அவனைத் திட்டினதைக் கேட்டுத்தான் விசாரிச்சனான். அப்பதான் ‘வாசவிய விரும்பி இருக்கிறான், அவள் சரியில்ல எண்டு பிரிச்சு உன்ர தங்கச்சிக்கு கட்டி வச்சா வாழமாட்டன் எண்டு நிக்கிறான்’ எண்டு சொன்னவர். எனக்கும் அது பிழையா இருக்கேல்ல.” என்றவரை என்ன மனிதர் நீங்க என்று பார்த்தான் நிலன்.

“தம்பி, அந்த நேரம் உனக்குத் தெரியாது. தையல்நாயகிக்கும் எங்களுக்கும் அப்பிடி ஒரு போட்டி. அந்த அம்மா நாங்க எங்க எல்லாம் போனோமோ அங்க எல்லாம் பின்னால வந்து அடிச்சுக்கொண்டு இருந்தவா. அதால அந்தக் கலியாணம் நடந்தா சக்திவேலுக்கே ஆபத்து எண்டுதான் நானும் நினைச்சனான். அதைவிட ஜானுக்கு குமார்ல நல்ல விருப்பம். கலியாணமும் முடிஞ்சுது. அதால நானும் அவனுக்குப் புத்தி சொன்னதோட விட்டுட்டன். அதே மாதிரி நாங்க இளம் ஆக்களா இருந்த காலத்தில நடந்துகள உங்களிட்டச் சொல்லி என்ன செய்யச் சொல்லுறாய்? முதல் இதெல்லாம் சொல்லுற விசயமா சொல்லு?”

இதற்குள் பாலகுமாரனை அழைத்துக்கொண்டு வந்திருந்தான் மிதுன். பயணம் முழுவதிலும் அவன் அவர் முகம் பார்க்கவே இல்லை. அவர் பேச முயன்றபோதும் வேண்டுமென்றே அவரை ஒதுக்கினான்.

அது போதாது என்று அவரின் அலுவலக அறையில் அவரைத் தனியாகச் சந்திக்க வந்த நிலன் அவரைத் துச்சமாக நோக்கினான். அவனை நிமிர்ந்து பார்க்க முடியாத அளவில் பதற்றம், பயம், பரிதவிப்பு என்று இன்னதென்று பிரிக்க முடியா உணர்வுகளின் ஆதிக்கத்தில் தடுமாறினார்.

“உங்களால ஒரு உயிர் போயிருக்கு என்ன மாமா?” என்றான் அவன் நிதானமாக.

துடித்துப்போனார். வாசவி இனியும் தன்னைத் தேடிக்கொண்டு வரக் கூடாது என்றுதான் கடுமையாக நடந்தார். ஆனால், அவர் தன் உயிரையே மாய்த்துக்கொள்வார் என்று நினைக்கவேயில்லை.

“உங்கட மகள் அநாதையா அநாதை இல்லத்தில இருந்திருக்கிறாள். தெரியுமா?”

“தம்பி”

“பெத்த தகப்பன் கண்ணுக்கு முன்னால இருந்தும் இன்னொரு தாய் தகப்பனுக்கு மகளா வளந்திருக்கிறாள்.”

“த…ம்பி” கண்ணீர் தளும்பி வழிந்தது அவருக்கு.

“எப்பிடி மாமா இப்பிடி ஒரு சுயநலக்காரனா, கோழையா, பச்சோந்தியா இருக்க முடிஞ்சது உங்களால? அதுவும் கடைசி வரையிலும்?”

என்ன காரணம் சொல்லுவார்?

“அந்த நிலம் உங்கட கைக்கு எப்பிடி வந்தது? இப்பயாவது உண்மையச் சொல்லுங்க.”

அவருக்கு நடந்ததைச் சொல்லத் துணிச்சல் இல்லை.

அவன் விடுவதாக இல்லை. “சொல்லுங்க மாமா!” என்றான் அதட்டலாக.

“அந்த நிலம் உங்கட பெயர்ல இருக்கிறது வஞ்சிக்கு தெரிய வந்திட்டுது. நான் சொல்லிட்டன். எப்பிடி வந்தது எண்டு அவளுக்கு நான் சொல்ல வேணாமா?” என்றதும் முகத்தை மூடிக்கொண்டு அழுதார் மனிதர்.

அவன் இளகவே இல்லை. அவர்பால் அவனுக்குள் இரக்கம் சுரக்கவும் இல்லை. இத்தனையையும் தாங்கிக்கொண்டு நான் உடையமாட்டேன் என்று பிடிவாதமாக நிமிர்ந்து நிற்கிறவள்தான் கண்களுக்குள் வந்து போனாள்.

“சொல்லுங்க.” என்றான் திரும்பவும்.

“நான்தான் வாசவிய வெருட்டி வாங்கினனான்.”

“விளங்கேல்ல.”

எப்படிச் சொல்லுவார்? வாசவி வயிற்றில் குழந்தை என்றதும் அவரைப் பெரும் பயம் பிடித்துக்கொண்டது. எப்படியும் சக்திவேல் இதற்கு விடமாட்டார் என்று தெரியும். அவருக்குத்தான் ஜானகி என்று ஏற்கனவே சொல்லி வைத்திருந்தாரே.

ஆனால், வாசவி விடயம் தெரிய வருகையில் தையல்நாயகி சும்மா விடமாட்டார் என்று தெரியும். ஒருமுறை டைப்பிங் வகுப்பில் இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில்தான் வாசவியின் உறவினர் ஒருவர் சொத்து ஒன்றை அவள் பெயரில் வாங்க வேண்டுமாம் என்று அழைத்துப்போனது இவர் நினைவில் இருந்தது.

உன்னை நான் திருமணம் செய்ய வேண்டுமானால் அந்தச் சொத்தை என் பெயருக்கு மாற்று என்று சொல்லி, மாற்றி எழுதி வாங்கிக்கொண்டிருந்தார். அதை வைத்துத்தான் பிள்ளையோடு வந்தவளிடம் ‘இதோடு நீ என்னை விட்டு முற்றிலும் விலகவில்லையானால் உன் அம்மாவின் தொழிலையும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவேன்’ என்று மிரட்டியிருந்தார்.

மண்ணுக்குள் புதைந்துவிட மாட்டோமா என்று கூசியபடி அனைத்தையும் அவனைப் பாராமல் சொல்லி முடித்தார் மனிதர்.

“சீ! எவ்வளவு கேவலமான மனுசன் நீங்க!” அவர் சொல்லி முடித்த கணமே காறி உமிழாத குறையாக, அவர் முகத்துக்கு நேராகவே சீறியிருந்தான் நிலன்.

அதற்குமேல் அவர் முகம் கூடப் பார்க்கப் பிடிக்காமல் போய்விட, சட்டென்று எழுந்து வெளியே வந்திருந்தான் நிலன்.

 
Last edited:
Top Bottom