• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 21

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 21

வேலை முடிந்து வந்த மகளைக் கண்டு முகம் மலர்ந்தாலும் கணவன் வீட்டுக்குப் போகாமல் இங்கு வந்திருக்கிறாளே என்று உள்ளூரகக் கவலையானார் குணாளன்.

அதைக் கேட்கவும் தயங்கினார். நிரந்தரமாக இங்கேயே இருக்கப்போகிறேன் என்று சொல்லிவிடுவாளோ என்று பயம். அவர்களைக் குறித்த அவள் நிலைப்பாடு என்ன என்றும் தெரியவில்லை.

இந்தக் கவலைகள் மனத்தில் அரித்தபோதும் அவளிடத்தில் தெரிந்த சோர்வைக் கவனித்து, “வேலை நிறையவாம்மா? நல்லா களைச்சு தெரியிறீங்க.” என்றார்.

“விட்டதை எல்லாம் பிடிக்கோணும் எல்லாப்பா.” என்றுவிட்டு அவர் நலத்தை, வீட்டு நிலவரத்தை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டாள். ஜெயந்தி போட்டுக்கொண்டு வந்து கொடுத்த தேநீரையும் பருகிவிட்டு அவள் எழுந்துகொள்ள, “அம்மாச்சி…” என்றார் மனத்தில் இருப்பதை எப்படிக் கேட்பது என்று தெரியாமல்.

“கவலைப்படாதீங்க அப்பா. அங்க போவன். கட்டாயம் போவன். போகோணும்!” என்றாள் அவர் மகள்.

அதற்கே அவருக்கு அடிவயிறு கலங்கிப்போயிற்று.

“சண்டை சச்சரவுகள் வேண்டாம் பிள்ளை.” என்றார் கெஞ்சலாக.

“நான் ஏனப்பா சண்டைக்குப் போக? அத விடுங்க. எங்க சுதாகர்? சுவாதி என்ன செய்றாள்?” என்று கேட்டுப் பேச்சை மாற்ற முயன்றவளின் கையைப் பற்றித் தடுத்தார் குணாளன்.

“உங்கட அப்பம்மா ஏன் இதையெல்லாம் உங்களிட்டச் சொல்ல விரும்பேல்ல எண்டு உங்களுக்கு விளங்கினது தானேம்மா? எல்லாத்துக்கும் நியாயம் கிடைக்காது. சிலதுக்கு எந்த நியாயம் கிடைச்சாலும் நாங்க இழந்ததுக்கு அது ஈடாகாது. உங்கட அப்பம்மாவையே யோசிங்கோ. இதுக்கு நியாயம் கிடைச்சே ஆகோணும் எண்டு போயிருந்தா இண்டைக்கு தையல்நாயகி இருந்திருக்குமா தெரியாது. எல்லாத்தையும் விட எனக்கு என்ர ரெண்டு பிள்ளைகளும் சந்தோசமா வாழோணும்.” எப்படியாவது அவள் கோபத்தைத் தணித்துவிட மாட்டோமா என்கிற ஏக்கத்துடன் எடுத்துச் சொன்னார் மனிதர்.

“அப்பா, இப்ப நான் என்ன செய்தனான்? ஒண்டுமே செய்யேல்ல. பிறகும் என்னத்துக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க? நீங்க கவலைப்பட்டது, மனதுக்க வச்சு மருகினது எல்லாம் போதும். இனியாவது நிம்மதியா இருங்க.” என்றாள் கனிந்த குரலில்.

முன்னர் எல்லாம் அவள் சம்மந்தப்பட்ட விடயத்தில் ஒரு வார்த்தை சொல்ல முதல் அவளுக்குக் கோபம் வந்துவிடும். இப்போதெல்லாம் கனிவைத் தாண்டி வேறு மொழி அவரிடம் அவளுக்கு வரவே மாட்டேன் என்றது. அந்தளவில் அவர்களின் அன்பு அவளை மலைக்க வைத்தது.

அவர்களின் திருமணத் திகதி அவளுக்குத் தெரியும். அது அவள் பிறப்பதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முந்தயது. அந்தளவில் அவர்களின் திருமணத் திகதியை வைத்து அவளோ இல்லை வேறு யாருமோ சந்தேகப்பட்டுவிடக் கூடாது என்று, அதைக்கூடக் கவனித்து மாற்றி, பொய்யான சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.

இன்று அலுவலகத்திலிருந்து யோசிக்கையில்தான் இது பிடிபட்டிருந்தது. பிடிபட்ட கணம் மிகவுமே நெகிழ்ந்துபோனாள்.

அதே நெகிழ்வுடன் மேலே வந்து குளித்து, இலகு உடைக்கு மாறினாள். பார்க்க வேண்டியிருந்த சில வேலைகளை முடித்துக்கொண்டு நேரத்தைப் பார்க்க அது இரவு ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.

நிலன் நினைவில் வந்தான். உடனேயே கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். வீட்டுக்கு வரும்போதே அவனுக்கான தடையை நீக்கியிருந்தாள். அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. புலனத்தின் புரோஃபைலில் அழகான சாம்பல் நிற கோர்ட் ஷூட்டில், உதடு பிரியாத சிறு சிரிப்புடன் முகத்தைக் காட்டிக்கொண்டிருந்தான்.

பெரிதாகப் கோபப்பட்டு ஏறி விழுகிற குணம் இல்லையே தவிர அழுத்தமானவன். அவன் புகைப்படத்தை இன்னும் கொஞ்சம் பெரு விரலாலும் ஆட்காட்டி விரலாலும் விரித்துப் பார்த்தாள்.

வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டுக்குப் போயிருப்பானா? அப்படிப் போயிருந்தால் அவள் இல்லை என்று தெரிய வந்திருக்குமே. சரி, அவளுக்கு மன அமைதி கிட்டும் இடத்தில் இருக்கட்டும் என்று விட்டுவிட்டானோ?

கைப்பேசியை வைத்துவிட்டுக் கீழே உணவுண்ணப் போனாள். அங்கே சுவாதியோடு அமர்ந்திருந்தான் மிதுன். இவளைக் கண்டதும் எப்படி எதிர்கொள்வது என்று தெரியாது தடுமாறினான்.

அவள் தன் தமக்கை என்று தெரிந்ததிலிருந்து பார்க்கக் கிடைக்கவில்லை. இப்போதுதான் பார்க்கிறான். புதிதாகத் தெரிந்தாள். என் அக்கா என்கிற அந்த நினைப்பே அவனுக்குள் என்னென்னவோ உணர்வுகளை எல்லாம் தோற்றுவித்தன.

இதற்குள் அவளைக் கண்டுவிட்டு, “அக்கா!” என்று ஓடி வந்தான் சுதாகர். இளவஞ்சியின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அன்று நடந்தவற்றை எல்லாம் அவளிடம் பகிர்ந்தபடி உணவை முடித்தான். நடுவில் சுவாதியின் உடல் நலத்தை அவளிடமே கேட்டுத் தெரிந்துகொண்டாள் இளவஞ்சி.

சுதாகர் எழுந்துகொள்ளப் போக, “ஒழுங்கா படிக்கிறாய்தானே. கொஞ்ச நாளா அக்கா இஞ்ச இல்ல, உன்னைக் கவனிக்கவும் இல்லை எண்டதும் படிப்பை விட்டுடேல்லையே?” என்று வினவினாள்.

அதற்கு வாயால் பதில் சொல்லாமல் ஓடிப்போய் இந்த இடைப்பட்ட நாள்களில் அவன் எழுதிய பரீட்சைப் பேப்பர்களை கொண்டு வந்து காட்டி, தான் அப்படிப் படிப்பை விடவில்லை என்று நிரூபித்தான் சுதாகர்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மிதுன் எப்படி உணர்கிறான் என்று அவனால் வரையறுக்க முடியவில்லை. இன்றுதான் அவள் தன் தமக்கை என்று தெரிய வந்திருந்தது. அது தெரிய வந்ததில் இருந்தே அந்தத் தமக்கையைக் குறித்த தேடல் அவனுக்குள் இருந்துகொண்டே இருந்தது.

அந்தத் தமக்கைக்கும் அவன் அவள் தம்பி என்று தெரிந்திருக்குமே. ஆனாலும் திரும்பியும் பார்க்கவில்லை அவள். அவன் வீட்டினர் மீதான கோபத்தை அவனிடமும் காட்டுகிறாளோ?
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
சுதாகர் போய்விட மிதுனும் உணவை முடித்துக்கொண்டு எழுந்தான்.

“இனி என்ன செய்றதா பிளான்?”

எழுந்து போகப்போனவன் நின்று தன்னிடமா கேட்டாள் என்பதுபோல் பார்த்தான்.

“என்ன பார்வை? என்ன செய்றதா பிளான்?” இந்தமுறை அதட்டல் தொனி தானாக வந்து நின்றது.

“என்…னத்துக்கு என்ன பிளான்?” தனக்குப் பேசுவதற்கு கூடத் தடுமாறும் என்று அன்றுதான் அறிந்தான் மிதுன். அதைவிட அவள் தன்னிடம் பேசிவிட்டதில் அவன் சிந்திக்கும் திறன் உறைநிலைக்குப் போயிருந்தது.

அவளோ அவனை முறைத்தாள்.

“இல்ல. உண்மையா விளங்கேல்ல.”

“பிள்ளையே வரப்போகுது. இன்னும் சோர்ட் பிலிம் எடுக்கிறன், அது இது எண்டு சுத்துறேல்ல. அதுவும் இனியும் சும்மா சும்மா பெட்டையலோட ஊர் சுத்துறதப் பாத்தனோ தெரியும்.” என்றுவிட்டு அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்.

நீ யார் என்னை இப்படி எல்லாம் சொல்ல என்று கேட்க அவனுக்கு வரவேயில்லை. ஆனால், அவன் அப்படியானவன். அவனுக்கு அடக்குமுறைகள் பிடிக்காது. ஆனால், தமக்கையின் முன் அடங்கி நிற்கத்தான் வந்தது.

“ஆனா எனக்கு அதுதான் தெரியும். அது வேண்டாம் எண்டா வேற என்ன செய்றது?” என்றான் உண்மையில் வேறு என்ன செய்வது என்று தெரியாமல்.

அவனையே பார்த்தாள் இளவஞ்சி. உண்மையாகத்தான் சொல்கிறான் என்று அவன் முகபாவம் சொல்லிற்று. நிலனோடு இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று தனக்குள் குறித்துக்கொண்டு, “ரெண்டு நாள் போகட்டும், சொல்லுறன்.” என்றாள்.

சரி என்று தலையை அசைத்துவிட்டுப் போனான் மிதுன்.

குணாளனும் ஜெயந்தியும் கூட அங்கேதான் இருந்தனர். குணாளன் நேரத்திற்கே உணவை முடித்துக்கொண்டிருந்தாலும் பிள்ளைகள் ஒன்றாக இருக்கும் நேரத்தைத் தவறவிட மனமில்லாமல் தானும் வந்து அமர்ந்திருந்தார். ஆனால், யாரும் இதற்குள் தலையிடவில்லை.

ஜெயந்தி மனத்தில் பெரும் ஆறுதல். இனி மூத்த மகள் இளைய மகள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்வாள் என்கிற நம்பிக்கை பிறந்தது.

மேலே வந்து தையல்நாயகி அம்மாவின் அந்தக் கொப்பியை எடுத்துக்கொண்டு போய்த் தன் கூடை நாற்காலிக்குள் அமர்ந்துகொண்டாள்.

உடனேயே பிரிக்க மனம் வரவில்லை. தன் மடிக்குள் வைத்தபடி அதை வருடிக்கொடுத்தாள். அவர் எப்போதுமே இப்படித்தான். எல்லாவற்றையும் எழுதித்தான் வைப்பார்.

அவரோடுதான் இவள் படுப்பாள். இவளுக்குச் சகல வசதிகளையும் செய்து தந்துவிட்டு, சின்ன விளக்கைப் போட்டுக்கொண்டு, தன் கண்ணாடியையும் அணிந்துகொண்டு அன்றைய நாளின் வரவு செலவுகள், முக்கியமாகக் குறித்து வைக்க வேண்டியதுகள் என்று எல்லாவற்றையும் குறித்து வைப்பார்.

இன்னுமே அவளிடம் அவையெல்லாம் உண்டு. ஆனால், இதையெல்லாம் என்ன மனநிலையோடு எழுதியிருப்பார்? அழுதிருப்பாரோ? என்றைக்கும் தன் பேத்திக்கு இதெல்லாம் தெரிய வந்துவிடக் கூடாது என்று நினைத்திருப்பாரோ?

மெல்லப் பிரித்தாள். திரும்பவும் முதலிலிருந்து வாசித்தாள், வலி நெஞ்சை ஊடுருவிக்கொண்டு போயிற்று. ஆனாலும் அவளுக்கு அந்த வலி வேண்டுமாய் இருந்தது. அதனூடு அவர் உள்ளத்தோடு பேசினாள். அவரின் உணர்வுகளைத் தனக்குள் வாங்கினாள்.

அதிலே வாசவி இறந்தபிறகு அவள் எண்ணியதுபோல் அவரின் இறப்புச் சான்றிதழைக் காட்டி நிலப்பத்திரத்தை மாற்ற முயன்று இருக்கிறார். அங்கே கிடைத்த பதிலில் அதிர்ந்து, பாலகுமாரனைத் தனியாகச் சந்தித்துச் சண்டை பிடித்திருக்கிறார். அவர் தரமாட்டேன் என்று சொன்னதை எல்லாம் விலாவாரியாக எழுதியிருந்தார்.

அதுவும் தன்னைத் தவிர அந்த நில விடயம் வெளியில் தெரிய வராது என்றும், அதற்குப் பதிலாக அவர் தன் வாழ்வில் குழப்பம் விளைவிக்க வரக் கூடாது என்றும் பாலகுமாரன் சொல்லியிருக்கிறார்.

இன்னும் நிறைய. அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தை விட்டு வெளியே வந்தது, தன் சொந்தங்களோடு பெரிய உறவு பாராட்டப் போகாமல் தொழிலைக் காரணம் காட்டி விலகிக்கொண்டது, அவர்களின் ஊருக்குப் போவதையே முற்றிலுமாக நிறுத்தியது என்று பலவற்றை எழுதியிருந்தார்.

அதாவது அவளுக்கு அவள் பற்றிய தகவல்கள் எங்கிருந்தெல்லாம் வரும் என்று நினைத்தாரோ அந்த வழிகளை எல்லாம் அடைத்திருக்கிறார். அவளுக்கு நல்ல தாய் தந்தை அமையாதபோதும் நல்ல அப்பம்மாவும் அருமையான அம்மா அப்பாவும் கிடைத்திருக்கிறார்கள்.

சொத்துப்பத்துகள் பற்றிய விவரம், எதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி என்று பலது கிடந்தன.

ஒரே நாளில் இதையெல்லாம் எழுதியிருக்கச் சாத்தியமில்லை. அவளோடு உள்ளத்திலிருந்து உரையாட நினைத்த பொழுதுகளில் எல்லாம் எடுத்து எழுதியிருக்க வேண்டும்.

விழிகளில் அரும்பிவிட்ட கண்ணீருடன் அந்தக் கொப்பியைத் தன் மார்புடன் சேர்த்தணைத்துக்கொண்டாள்.

என்னதான் அத்தனையையும் கச்சிதமாக அவர் கையாண்டிருந்தாலும் தொழிற்சாலை நிலத்தின் ஒரு பகுதி பாலகுமாரனின் கையில் இருக்கிறதே என்கிற விடயம் அவரைக் கடைசி வரையும் உறுத்திக்கொண்டேதான் இருந்திருக்கும். அத்தோடுதான் போய்ச் சேர்ந்திருப்பார். அதுவும் அவளிடம் இதைச் சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் என்ன பாடு பட்டிருப்பார்?

பாலகுமாரன் என்கிற அந்த மனிதரையும் அவர் மாமனாரையும் நினைக்க நினைக்க நெஞ்சில் தீ பற்றி எரிந்தது.

இதே சிந்தனையில் ஆழ்ந்திருந்தவள் நேரத்தைக் கவனிக்கவில்லை. திடீரென்று பால்கனி கண்ணாடி அறையின் கதவைத் திறந்துகொண்டு நிலன் வரவும்தான் சிந்தனை கலைந்தாள்.

தொடரும்:)
 
Last edited:

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Today's Birthday

Top Bottom