• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 24

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 24


கணவன் இந்தளவில் தன்னைத் தண்டிப்பான் என்று இளவஞ்சி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவள் பேசியது தவறுதான். நிச்சயமாகத் தவறுதான்.

அதுவும் இறுகிப்போய் இருந்தவளைத் தன் நேசத்தால் மட்டுமே ஆராதித்த அவனைப் பார்த்து அவள் அப்படிச் சொல்லியிருக்கவே கூடாது. அதற்காக இந்தக் கணம் வரையிலும் வருந்துகிறாளும் கூட.

அவனும் கோபப்பட்டிருக்கலாம். இப்படி இனிமேலும் நீ பேசக் கூடாது என்று கடுமையாகக் கண்டித்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு அவளைத் திரும்பியும் பாராமல் இருக்கிறானே.

அவளுக்கு அழைக்கவில்லை. ஒரு குறுந்தகவல் கூட இல்லை. பார்க்க வரவில்லை. முற்றிலுமாகத் தள்ளி நின்று அவளை அவனுக்காக ஏங்க வைக்கிறான். அதுதான் வலித்தது. தான் இந்தளவில் பலகீனமானவளா என்று அவளால் நம்பவே முடியவில்லை. அந்தளவில் சதா தொண்டை அடைத்துக்கொண்டிருந்தது. கண்கள் கரித்தன. அடிக்கடி தொண்டையைச் செருமியும், தண்ணீரைப் பருகியும் தன்னைச் சமாளித்துக்கொண்டிருக்கிறாள்.

அவளே அவனைப் போய்ப் பார்க்கலாம் என்றால் ஒன்றில் அவன் வீட்டிற்கு போக வேண்டும். இல்லையா சக்திவேலுக்குப் போக வேண்டும். இரண்டிற்கும் போக விருப்பமில்லை. தானாக அவனுக்கு அழைக்கவும் வர மாட்டேன் என்றது. அவனாகக் கோபம் விடுத்து வரமாட்டானா என்று தவிக்க ஆரம்பித்தாள்.

அந்த வாரம் முழுக்க ஆன உறக்கமில்லை. பால்கனியில் கிடக்கும் கூடையே தஞ்சமாயிற்று. உடலில் உற்சாகம் என்பது மருந்துக்கும் இல்லை. ஆனால், அறைக்குள் முடங்கிக் கிடைக்க முடியாதே. மனமே இல்லாமல் எழுந்து தயாராகி அவள் கீழே வந்தபோது உள்ளே வந்துகொண்டிருந்தான் நிலன்.

அப்படியே நின்றுவிட்டாள் இளவஞ்சி. அவனையே பார்த்தாள். என்னவோ நீண்ட நெடிய வருடங்களின் பின் பார்ப்பதுபோல் ஒரு உணர்வு. இத்தனை நாள்களும் என்னைப் பார்க்க வராமல் எங்கே போனாய் என்று கத்துகிற அளவுக்கு ஆத்திரமும் அழுகையும் சேர்ந்து வந்தன.

இதற்குள் மகளுக்காகக் காலை உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்த ஜெயந்தி அவனைப் பார்த்துவிட்டார். சட்டென்று முகம் மலர, “தம்பி வாங்கோ. எங்க உங்களைக் காணவே இல்லை எண்டு இவர் சொல்லிக்கொண்டிருந்தவர். வாங்கோ நீங்களும் சாப்பிடலாம்.” என்று அவனை வரவேற்றுவிட்டு,

“என்னம்மா பாத்துக்கொண்டு நிக்கிறாய். கூப்பிடு!” என்று அவளையும் உசுப்பி விட்டுவிட்டார்.

அன்னை முன்னே எதையும் காட்டிக்கொள்ளாமல், “வாங்க!” என்றவள் அவன் வந்து அமர்ந்ததும் தானே அவனுக்குப் பரிமாறினாள். தனக்கும் போட்டுக்கொண்டு அவனருகிலேயே அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள்.

இதற்குள் ஜெயந்தி போய்ச் சொன்னதில் பாலனின் துணையுடன் சாப்பாட்டுக்கு மேசைக்கு வந்து அமர்ந்தார் குணாளன்.

“வாங்கோ தம்பி. கொழும்புப் பயணம் எல்லாம் நல்லா இருந்ததோ?” என்றவரின் கேள்வியில் வேகமாய்த் திரும்பிக் கணவனைப் பார்த்தாள் இளவஞ்சி.

அதை உணர்ந்தாலும் பெரியவர்கள் முன் எதையும் காட்டிக்கொள்ளாமல், “ஓம் மாமா. ஒரு பிரச்சினையும் இல்ல.” என்றான் அவன்.

“குறையா நினைக்காதீங்கப்பு. எங்க உங்களை ஒரு கிழமையா காணவே இல்லையே எண்டுதான் நேற்று எடுத்துக் கேட்டனான். உடனேயே நீங்க வந்தது சந்தோசம். நான் ஒண்டும் தொந்தரவு தரேல்லையே?” என்றதும் உணவை வாய்க்குள் கொண்டுபோன இளவஞ்சியின் கை அப்படியே நின்றுபோயிற்று.

ஆக அவனாக வரவில்லை. அவளுடைய தந்தை அழைத்து விசாரித்ததில்தான் வந்திருக்கிறான். அதுவும் முதல் நாள் இரவு வந்தால் அவளோடு தங்க நேரிடும் என்பதில் காலையில் வந்திருக்கிறான். தன் கோபத்தை அவளிடம் அப்படியே தொடர்ந்துகொண்டு மாமனாருக்கு நல்ல மருமகனாகவும் நடந்துகொள்கிறான்.

சட்டென்று தன் முன்னே இருந்த தண்ணீர் குவளையை எடுத்து முழுவதுமாக அருந்தினாள். அதற்குமேல் உணவு இறங்கவில்லை. ஒரு வாரம் கழித்து என்றாலும் என்னைப் பார்க்க வந்துவிட்டான் என்கிற மகிழ்ச்சி துணி கொண்டு துடைத்தாற்போல் மறைந்து போயிற்று. இதற்கு அவன் வராமலேயே இருந்திருக்கலாம் என்றிருந்தது.

“அப்பிடி எல்லாம் ஒரு தொந்தரவும் இல்லை மாமா. எப்ப எண்டாலும் நீங்க எடுங்கோ.” என்று குணாளனுக்குப் பதில் சொன்னாலும் அவளை நிலன் கவனிக்காமல் இல்லை. பெரியவர்கள் முன் எதுவும் சொல்ல முடியாமல் பேசாமல் இருந்தான்.

“சந்தோசம் தம்பி. நீங்க பிஸி, அதான் வரேல்ல எண்டு மகள் சொன்னவாதான். எண்டாலும் சுகம் விசாரிக்காம இருக்கக் கூடாது எண்டுதான் எடுத்தனான்.” என்று அவரும் சமாளித்தார்.

குணாளனுக்கு இளவஞ்சியைத் தெரியும். என்ன நடந்தாலும் திடமாக இருக்கிற பெண். அந்த வாரம் முழுக்க தொழிற்சாலைக்குச் செல்வதிலோ, வேலைகளிலோ எந்த மாற்றமும் இல்லாதபோதிலும் அவள் முகத்தில் தெரிந்த வாட்டத்தைக் கண்டுகொண்டார்.

நிலனும் இங்கு வரவில்லை என்றதும் அவளிடம் விசாரித்தார். அவள் எதையும் சொல்லத் தயாராயில்லை. அதன் பிறகுதான் அவனுக்கு அழைத்திருந்தார். அவன் உடனேயே வந்ததில் பெரும் ஆறுதல்.

அதுவும் விசாகனை அவள் காரை எடுத்துக்கொண்டு வரச் சொல்லிவிட்டு அவளை அவன் தன் காரில் அழைத்துக்கொண்டு போவதைக் கண்ட பிறகே நிம்மதியானார்.

தையல்நாயகியை நோக்கிச் சீரான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த காருக்குள் பெருத்த அமைதி. அவன் வீதியில் கவனமாயிருக்க, அவள் ஜன்னல் பக்கம் திரும்பி இருந்தாள்.

சற்று நேரத்தில், “கொழும்புக்குப் போகோணும் எண்டு ஏற்கனவே உனக்குச் சொன்னான் எல்லா.” என்றான் நிலன் தானாகவே.

அவளிடமிருந்து சத்தமே இல்லை என்றதும் திரும்பி ஒரு முறை அவளைப் பார்த்துவிட்டு, “முத்துமாணிக்கத்த வாங்கிப் போட்டத்தோட அப்பிடியே கிடக்குது. அதான் போய்ப் பாத்து, செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஆக்களை ஏற்பாடு செய்துபோட்டு வந்தனான்.” என்று விளக்கம் கொடுத்தான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவள் திரும்பி அவனைப் பார்ப்பதற்கு கூட மறுத்தாள்.

“வஞ்சி!” அவள் பெயருக்கு அவன் கொடுத்த அழுத்தத்தில் திரும்பி அவனைப் பார்த்தாள்

“எப்பிடி இருக்கிறாய்?”

“எனக்கென்ன? நல்லாருக்கிறன்.”

இப்படி இறுக்கமாய் இருக்கிறவளை எப்படிப் பேச வைக்க என்று நிலனுக்கும் தெரியவில்லை.

மிக மிக ஆசையாய் அவளோடு வாழ்ந்தான். அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுத்துவிட வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்குள் ஓங்கி நின்றதுதான் அதிகம்.

பாலகுமாரனோடு அவளைப் பேச வைக்க முயன்றதுகூட அவளுக்காகத்தான். இப்படி அவர்கள் மட்டும் தனியாகப் பேசிக்கொள்ளத் திரும்பவும் சந்தர்ப்பம் அமையுமா தெரியாது. கிடைக்கிறபோது தன் கோபத்தை எல்லாம் அவள் கொட்டிவிட்டால் இன்னும் கொஞ்சம் தன் இறுக்கங்களில் இருந்து வெளியில் வருவாள் என்று நினைத்தான்.

அப்படியிருக்க திருமணம் என்கிற ஒன்று நடந்து, இருவர் மனமும் ஒன்றுபட்டு, தாம்பத்ய வாழ்க்கையும் ஆரம்பித்த பிறகும் ‘இதனால்தான் கலியாணம் வேண்டாம் என்று சொன்னேன்’ என்று அவள் சொன்னதே அவனைக் கோபம்கொள்ள வைத்திருந்தது. இதில் அதன் பிறகு அவள் சொன்னது?

அப்படி அவள் சொன்ன பிறகு எப்படி அவள் பக்கத்தில் போவான்? அவளை பக்கத்தில் வைத்துக்கொண்டு அவனால் தள்ளியிருக்கவும் முடியாது. இங்கேயே இருந்தால் அவள் சொன்னதையும் மீறி அவளை பார்க்கப் போய்விடுவோமோ என்றுதான் கொழும்புக்கு ஓடினான்.

ஆனாலும் என்ன சாட்டைச் சொல்லிக்கொண்டு அவளைப் பார்க்கலாம் என்று அவன் யோசித்துக்கொண்டு இருக்கையில் சரியாக அழைத்திருந்தார் குணாளன். அவரின் அழைப்பைப் பற்றிக்கொண்டு இதோ ஓடி வந்துவிட்டான்.

அவளானால் என்னவோ அவன் தவறிழைத்ததுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டு இருக்கிறாள்.

இதற்குள் தையல்நாயகி வந்திருந்தது. என்னவோ அவளை வாசலோடு விட்டுவிட்டுப் போக மனமில்லை அவனுக்கு. அவளோடு கூடவே அலுவலகம் வரை வந்தான். அதற்கு முதல் காண்டீனிலிருந்து காலை உணவைக் கொண்டுவரச் சொல்லி ஆனந்தியிடம் சொல்லி அனுப்பினான்.

அது வந்ததும் சாப்பிடச் சொன்னான். அவள் சாப்பிடவில்லை. அன்று அவளுக்கு ஒரு மீட்டிங் இருந்தது. அதற்கு தேவையானவற்றை ஒழுங்குசெய்ய ஆரம்பித்தாள்.

கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தான். அவள் உணவைத் தொடுவதாக இல்லை என்றதும் அன்று போலவே இன்றும் கரண்டியால் அதைக் குழைத்து, ஒரு கரண்டி அல்லி அவள் உதட்டருகில் நீட்டினான்.

சட்டென்று அவள் வேலைகள் எல்லாம் அப்படியே நின்றன. இப்படித்தான் ஒவ்வொன்றையும் அவளுக்குப் பார்த்து பார்த்துச் செய்து, மறுபடியும் அவள் மனக்கதவுகளை திறந்துகொண்டு வந்தான். பிறகு என்ன செய்தான்? இப்போது கூட அவள் தந்தை அழைக்கவில்லையானால் வந்திருக்கப் போவதில்லை.

சட்டென்று எழுந்து அங்கிருந்து வெளியேறப்போனவள் நின்று, “அப்பா இனி கூப்பிட மாட்டார். அதால அவர் கூப்பிட்டுட்டாரே எண்டு நீங்களும் விருப்பம் இல்லாம வர வேண்டாம்.” என்றுவிட்டு நடந்தாள்.

நிலனுக்கும் மெல்லிய கோபம் மூள, “நானும் ஆசைப்பட்டு வராம இருக்கேல்ல வஞ்சி. அண்டைக்கு நீ கதைச்சது பிழை!” என்றான் இறுக்கமான குரலில்.

“உண்மைதான். அதைச் சொன்ன நிமிசமே எனக்கும் விளங்கிட்டுது. நீங்களும் மிஸ்டர் பாலகுமாரனை கூட்டிக்கொண்டு இஞ்ச வந்திருக்கக் கூடாது நிலன். மிஸ்டர் சக்திவேலரை கூட என்னால ஏதோ ஒரு வகைல விளங்கிக்கொள்ள முடியுது. தொழில் போட்டி, மகள் வாழ்க்கை எண்டு அவர் யோசிச்சு இருக்கலாம். ஆனா இந்த மனுசன்? நஞ்சு. நச்சுப் பாம்பு. இந்தாளால ஒரு உயிர் என்ர வீட்டில போயிருக்கு இன்னொரு உயிர் வாழுற காலம் வரைக்கும் நிம்மதியா வாழவும் இல்ல, சாக்கேக்க நிம்மதியா செத்திருக்கவும் மாட்டா. அப்பிடியான இந்த மனுசனோட நான் என்ன கதைக்கோணும்? இல்ல, இதுக்கெல்லாம் அந்த ஆள் என்ன விளக்கம் சொல்லப் போறார்? அப்பிடியே சொன்னாலும் போன உயிர்கள் திரும்பியா வரப்போகுது?” என்று சீறிக்கொண்டு வந்தவள் ஒரு கணம் நிதானித்தாள்.

“ஆனாலும் நான் அப்பிடிச் சொல்லியிருக்கக் கூடாது. ஆனா அதுக்கு இப்பிடித்தான் வராமையே இருந்து தண்டிப்பீங்களா நிலன்? இதுக்கு எதுக்கு அவ்வளவு பாசத்தைக் காட்டினீங்க? நான்தான் உங்கட வாழ்க்கையே எண்டுற மாதிரி உணர வச்சீங்க? இல்ல, எல்லா ஆம்பிளைகளையும் மாதிரி ஆசைப்பட்டவள் கிடைக்கிற வரைக்கும்தான் அது எல்லாமா? இனி இவள் எங்க போகப்போறாள், என்ன செய்தாலும் எனக்குப் பின்னால வருவாள் எண்டுற நினைப்பா?”

இப்படியெல்லாம் யோசித்துத் தன்னைத் தானே வருத்திக்கொள்வாள் என்று யோசிக்காதவன் அவள் பேச்சில் அதிர்ந்துபோனான்.

“வஞ்சி…”

“போதும் நிலன். இனி இந்த இடைவெளிலயே நில்லுங்க. சத்தியமா இந்த உணர்வுப் போராட்டத்தை எல்லாம் தாங்கிற சக்தி எனக்கு இல்ல. நாங்க விலகியே இருப்பம்.” எண்றுவிட்டுப் போய்விட, தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான் நிலன்.

தொடரும்…


சொறி மக்களே, குட்டி எபிதான். நாளைக்கும் வரமாட்டேன். சிந்துக்கு அடுத்த செமஸ்ட்டர் தொடங்குது. நாளைக்கு ஆளைக் கூட்டிக்கொண்டு போய் விட்டுட்டு வரோணும். சோ அதோடேயே நாள் போயிடும். இண்டைக்கும் அவாக்குத் தேவையானதுகளை ரெடி பண்ணுறதுலையே நேரம் போயிட்டுது. என்னை பேசாம கொஞ்சம் சமாளிங்க.
 

Nandhu15

Member
கொஞ்சம் குட்டி தான் இருந்தாலும் பரவாயில்ல நிதனி பாவம் எண்டு விடுறேன் 😃😃😃
 

Parameswari G.

New member
வஞ்சி கேட்டதுக்கு அந்த சகதிவேல் கூட பதில் சொல்ல முடியாது. இந்த நிலா என்ன பண்ணுவான்?!
ஆமா... என்ன நிதா சிஸ் டீசர் போட்டு இருக்காங்க!?🤔😜
 
Top Bottom