You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

கையாளாகாத என் மனிதம் -ஷர்மி உஷா - இதழ் 12

ரோசி கஜன்

Administrator
Staff member
பள்ளி முதல் புகழ் பெற்ற மேலாண்மை கல்லூரியில் எம்பிஏ பட்டம் வாங்கி உயர்ந்த பதவிக்கு முதல் ஆளாக கேம்பஸ்ஸில் தேர்வாகி, தனக்கு ஏற்றார் போல அழகிலும், அறிவிலும் சிறந்த துணையைப் பெற்று வாழ்க்கை அமைந்தது வரை தோல்வியே அறியாத வெற்றி நடை போட்ட அவள் வாழ்க்கையில் இடியென இறங்கியது விதி!


“ஆட்சிஸம்ங்கிற நரம்பியல் குறைபாட்டால உங்க பையனோட உண்மையான ஐ.க்யூ கணிக்கிறது கஷ்டம். “


“இப்ப இருக்கிற டெஸ்ட் படி ஐ.க்யூ கம்மியா காட்டுறதப் பார்த்தா தெரபி ஓரளவுக்கு உதவுமே ஒழிய பிற்காலத்தில் யார் உதவியும் இல்லாம வாழ்ற அளவுக்குக் குணப்படுத்துறது கஷ்டம்”


தன் வெற்றிகளைப் புறந்தள்ளிய இருபது வருடத்திற்கு முந்தைய அந்த வார்த்தைகளை மனதில் அசை போட்டவளின் கண்கள் நீரை வார்க்க, கண்களால் அது வரை தொடர்ந்திருந்த தன் மகனை அந்தக் கணத்தில் கூட்டத்தில் தொலைத்து விட, ‘அய்யோ, அவனுக்குச் சரியாப் பேச வராதே! எங்கையாவது வழி தெரியாமப் போயிடுவானோ!’ என்ற தவிப்போடு அவனைத் தேட, அவள் முதுகில் தட்டி 60,000$ காசோலையை அவள் கண் முன்னே நீட்டி நின்றான் , பார்வையைக் கோர்க்கத் தெரியாமல் கள்ளமில்லா சிரிப்போடு.



பிண்ணனியில் மூச்சிறைக்க ஓடி வந்த கணவனின் குரல், “அடுத்த முறை ஆர்ட் எக்ஸிபிட்க்கு நான் கூட போகத் தேவை இல்லை போலடி, அவனே சரியா வழியைப் பார்த்து வந்துட்டான்”, என்று ஒலிக்க, தாயாய் வென்ற உவகை அவள் கண்களில் இருந்த கண்ணீரைக் கடலாய்ப் பெருக்கெடுக்க வைத்தது!

கூடிய விரைவில், குடியிருப்பை விரிவாக்கம் செய்யும் பொழுது பூங்கா அமைப்போம் என்று எங்களை வீட்டை வாங்க வைத்த பில்டர், இரண்டு வருடமாய் இழுத்தடித்து இன்று தான் பூங்காவைக் கட்டும் வேலையை ஆரம்பித்து இருந்தார்.



“பார்க் எப்ப தான்மா வரும்?”



நண்பர்களுடன் அதில் விளையாட ஆசைப்பட்டுக் கேட்டுக் கேட்டு அழுத்துப் போன மகன், இன்று இதைப் பார்த்தும் சந்தோசத்தில் குதிப்பான் என்ற எண்ணிய படியே பள்ளியில் இருந்து திரும்பும் அவனின் வரவை எதிர்பார்த்திருந்தேன்.


“அம்மா...”,

வழமை போல் பார்வை தொடும் முன்னே அவன் குரல் கலந்து செவிகளைத் தீண்ட, வழமை மாறி அதீத அதிர்ச்சி அதில் கலந்திருந்ததில் அது இன்ப அதிர்ச்சியாய் இருக்கும் என்று எண்ணும் வேளையில் கண்களில் நீர் திவள மூச்சிரைக்க ஓடி வந்து கொண்டிருந்தான், விழித் திரையில் அவன் விழுந்த சமயம்!

“அம்மா.. ஒரு பிக் ட்ரக் அங்க மரத்தை எல்லாம் காலி பண்றேன்னு அங்க இருந்த உடைஞ்சு... இது கீழ விழுந்து ... மம்மி இல்லாம கத்துது.. பாவம்மா இது...” கையில் குற்றுயிராய் இருந்த குருவிக் குஞ்சை ஏந்திய படி!


“இதுக்கு வீடும் இல்லை..மம்மியும் இல்லை... அவங்க ஹவுஸ் இருந்த இடத்துல் ஏன் பார்க் வைக்கிறாங்க? பார்க்கே வேண்டாம் எனக்கு”

அழுகையோடு எனை நோக்கிக் கேட்க மகனின் நியாயமான கேள்விக்கும் புலம்பலுக்கும் பதில் தெரியாது, ‘கடவுளே, இவன் தலைமுறையிலாவது மனிதத்தை எடுத்துக் கொள்ளாதே அவர்கள் மனிதர்களாக வளர்ந்த பின்.. “ மானசீகமான மனம் வேண்டுதல் வைக்க, வலியில் கண்கள் சொருகி அனத்திய குருவிக் குஞ்சைக் கண்டு கண்ணீர் உகுத்தது கையாளாகாத என் மனிதம்!
 
Top Bottom