You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

வஞ்சம் செய்ததே விழி - யாழ் வெண்பா- இதழ் 7

ரோசி கஜன்

Administrator
Staff member
1547577183221.png




"வர்ஷா என்ன நேரமாவே கிளம்பிட்ட மாதிரி இருக்கே. நேரமா போவேன்னு சொல்லவே இல்லை."



"எனக்கு மட்டும் தெரியுமா?" மனதிற்குள் எண்ணியபடி, "இல்லைடி ஒரு சின்ன வேலை அதான். அதோட மணி 6:30 ஆச்சு. இதையவே நேரம்ன்னு சொன்னா எப்படி?" மம்தாவிடம் சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினாள்.


"என்ன எப்பொழுதும் 7 மணிக்கு தானே கிளம்புவாள். இன்னைக்கு என்ன நேரமா போகிறாள்?" மனதினில் சிந்தித்தபடியே வேக வேகமாக நடந்தாள் வர்ஷா.


வர்ஷா பிரபலமான நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவளுக்கு இங்கே வேலை கிடைத்தவுடன் அவள் தாய் வள்ளியுடனும், தங்கை தனுஜாவுடனும் அலுவலகம் அருகினிலேயே ஒரு வீடு எடுத்துத் தங்கி இருந்தனர். அவர்கள் வீடு இருக்கும் பகுதி சற்றே உள்புறமாக ஒதுங்கி இருக்கும். அவள் வீடு செல்லும் முன்பு சில தெருக்களைக் கடப்பது மிகவும் பயமாகவும், பாதுகாப்பின்மை உணர்வையும், ஆள் நடமாட்டமின்றியும், இருள் அடர்ந்தும் இருக்கும்.


வேலைக்குச் சேர்ந்த பொழுதில் வீடு போய் சேர்வதற்குள் பெரிய சாதனை போன்று இருக்கும். அப்பொழுதுதான் அவள் அலுவலகத்தில் பணி புரியும் முகிலன் அங்கே அருகினிலேயே அதே தெருவினில் தங்கி இருப்பது தெரிந்து கொண்டாள்.


ஆனால், அவனுடன் பேசிப் பழக்கம் இல்லாததாலும் இவளாகப் பேசவும் தயக்கம் இருந்ததாலும், அவன் அலுவலகம் விட்டுக் கிளம்பும் பொழுது இவளும் கிளம்பி விடுவாள்.


இவளால் செல்ல முடியும் தொலைவு வரை வேகமாக அவனுக்கு முன்னால் சென்று விடுவாள். அவள் கடக்க முடியா இடங்களின் முன்பு தனது வேகத்தைக் குறைத்துக் கொள்வாள். அவன் இவளைக் கடந்ததும், அவனையே பின் தொடர்ந்து இல்லம் சேர்ந்து விடுவாள். இதுவே கடந்த 3 மாதங்களாக அவளுடைய வாடிக்கை.


எங்கே அலுவலகத்திலிருந்தே பின் தொடர்ந்தால், சந்தேகம் வந்துவிடுமோ? என்ற ஐயம் அவளை அவனுக்கு முன்னர் சென்று காத்திருக்க வைத்தது. இன்றும் அதே போல வேக வேகமாக நடந்தாள்.


செல்லும் பொழுது அவள் மனமும் முகிலனைப் பற்றிச் சிந்தனையை தொடங்கி இருந்தது. "இதே இடத்தில் வேறு ஒருவர் இருந்தால், நாம் அவரையும் நம்பிப் பின்னால் செல்வோமோ?" என்ற கேள்விக்கு "இல்லை" என்பதே அவளுடைய பதிலாய் இருந்தது.


வர்ஷா முகிலனைத் தொடர, முகிலன் இவளது அலுவலகம், இவளுடைய தெரு என்பதனையும் தாண்டி அவன் மேல் அவளுக்கு ஏற்பட்டிருந்த நல்ல அபிப்பிராயமும் காரணம். தன் தெருவினிலே நமது அலுவலகத்தில் பணி புரிபவர் ஒருவர் இருக்கிறார் என்று அறிந்ததுமே, அவனைப் பற்றி தெரிந்து கொண்டாள். அது நல்ல விதமாக இருந்ததாலேயே அவனை நம்பிப் பின் தொடர்ந்தாள்.


பெண்களே தங்கள் பின்னால் வரும் ஆண் பிள்ளைகளை இனம் கண்டு கொள்ளும் பொழுது, முகிலனால் இதனை உணராமல் இருக்க முடியுமா? அவனுக்கும் அனாவசியமாய் பெண்களிடம் பேசும் பழக்கம் இருக்கவில்லை. ஆகவே, அவள் பின் தொடர்கிறாள் என்பதை உணர்ந்த சில நாட்களிலே அலுவலகத்தில் அவளைக் கண்காணிக்க ஆரம்பித்தான்.


அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டுமே இருந்தாள். இவனைப் பார்ப்பதோ, இவனிடம் பேச முயற்சிப்பதோ, பின் தொடர்வதோ என எதுவுமே இல்லை. ஏன் இவனைக் கடந்தால் கூட அப்படி ஒருவன் இருப்பது போலக் கண்டுகொண்டதே இல்லை. மற்றவர்களிடமும் கண்ணியத்தோடு இருந்தாள். அதுவே வர்ஷாவின் மீது நன்மதிப்பை உருவாக்கியது.


முகிலன் இதுவரை எந்தப் பெண்ணையும் கண்டு கொண்டதோ கண் காணித்ததோ இல்லை. முதல் முறை வர்ஷாவைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் எழுந்து கொண்டே இருந்தது. அவள் தன்னைப் பின் தொடரவில்லை ஏதோ உதவிக்காக அப்படிச் செய்கிறாள் என்ற எண்ணம் வலுப்பெற்றது. பிறகு நன்கு ஆராய்ந்ததில் அவள் பின் தொடரும் தெருக்களின் அபாயமும் அவனுக்குக் காரணத்தைத் தெளிவுற விளக்கியது.


காரணம் தெரிந்த பின்பும் அவளைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் துளியும் குறைவதாய் இல்லை. அவனையும் அறியாமல் அவளைக் கண்காணித்தான். இப்பொழுது அவள் அணியும் உடை, வளையல்கள், கொலுசு என அனைத்தையும் ரசிக்கத் தொடங்கிவிட்டான். அவன் மனதில் அவள் நுழையத் தொடங்கி இருந்தாள் என்பதே மறுக்க முடியாத உண்மை.


நாட்கள் அழகாக நகர்ந்து வந்தன . அவன் விடுப்பு எடுக்கும் நாட்களில் பெரிதும் திணறி விட்டாள் வர்ஷா. ஒரு நாள் அவன் வெளியில் ஏதோ வேலை விஷயமாகச் செல்வதால் விடுப்பு எடுக்கவே, அன்று மாலை விரைவிலேயே (அது அவளுக்கு 6 மணி தான்) கிளம்பி விட்டிருந்தாள். இருப்பினும் அவள் அத்தெருக்களை அடைந்த பொழுது இருள் சூழத் தொடங்கி இருந்தது. தாயை வர சொல்லலாம் என்றால் பிறகு அவர் பழைய புராணங்களைத் தொடங்கி விடுவாரே.


ஆம்! அவளுடைய தாயார் வள்ளிக்கு இங்கே வந்து, சொந்தங்களைப் பிரிந்து தனித்து இருப்பதில் துளியும் விருப்பம் இல்லை.


"இதற்குத் தான் நம்ம ஊருக்கே போய்டலாம். நம்ம கிட்டே இல்லாத பணமா? நீ ஏன் சம்பாரிக்கணும்" அடுக்கிக் கொண்டே போறவரைச் சமாளிக்கவே முடியாது.


ஆகவே அவரையும் அழைக்க முடியாமல் திக்கித் திணறி ஒரு வழியாகச் சிரமப்பட்டு ஒரு தெருவைக் கடந்து விட்டாள்.


முகிலன் தனது தோழனைச் சந்தித்துவிட்டு வரும் பொழுது மிகத் தயக்கத்தோடு அவள் செல்வதைக் காண நேர்ந்தது. "என்ன தான் செய்கிறாள் என்று பார்ப்போமே!" என, அவளைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.


அவளின் அன்ன நடை அவனுக்குச் சிரிப்பை வரவழைக்க, அவள் அடுத்தத் தெருவைக் கடக்கும் பொழுது வீடுகள் மிக மிகக் குறைவாக இருக்கும் அந்தத் தெருவில், நாய்கள் இரண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்க அத்தனை நேரம் இருந்த தைரியமும் வற்றி நகர கூட முடியாமல் அசையாது நின்றுவிட்டாள் வர்ஷா.


"இது எப்ப சண்டை போட்டு முடிக்கிறது. நாம எப்ப வீடு போறது? இந்த நாய்களைத் தாண்டிப் போகவும் பயமா இருக்கே" என்று எண்ணமிட்டவாறே, தனது கயல் விழிகளைச் சுற்றிலும் சுழற்றினாள் வர்ஷா.


இவளுக்குப் பின்னால் முகிலன் சிறு கேலிப் புன்னகையோடு நின்று கொண்டிருந்தான். அவளுக்கு மிகுந்த வெட்கமாய் போய்விட, அவன் கேலி தந்த கடுப்பில் அவளே அந்த நாய்களை தாண்ட முடிவெடுத்து முன்னால் நடக்கத் தொடங்கினாள்.


சட்டென அருகினில் வந்தவன், "ஏய்! அதுங்க சண்டையைச் சமாதானம் பண்ண உன்னை யாரு பஞ்சாயத்துக்குக் கூப்பிட்டது. பேசாம இங்கேயே நில்லு!" என, அவள் கை பிடித்து இழுத்துக் கொண்டு ஓரமாய் வந்தான்.


அவன் செய்கையில் விரிந்த விழிகள், கைகளை உதற எத்தனிக்க அவனே விடுவித்து, "சாரி.." என்றதோடு மொபைலில் கண்களைப் பதித்து ஏதோ தீவிரமாய் ஆராய்ந்தான். அவள் என்ன சொல்வாளோ என்ற எண்ணம் வேறு அவனைப் படுத்தியது.


வர்ஷாவுக்கு அவன் பேசியதே ஆச்சர்யம். அவனுடன் அவனுடைய டீம்-ல் வேலை செய்யும் இவளுடைய தோழிகள் கூட, அவன் பேசியதே இல்லை எனக் குறைப்படுவது, அவனைப் பற்றி வர்ணிப்பது, அவனது அறிவைச் சிலாகிப்பது என இருப்பார்கள்.



 

ரோசி கஜன்

Administrator
Staff member


சில நேரங்களில், "பெரிய இவன்! பேசுனா குறைஞ்சு போயிடுவானா?" என, பொரிந்து தள்ளுவதையும் பார்த்திருக்கிறாள். இன்று அவன் தனக்குப் பாதுகாப்பாய் தன் முன் நிற்பதையே அதிசியத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் எதுவும் திட்டாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதால், ‘என்ன ஆச்சு? ஆள் இல்லாத இடம்னு பயந்து இருப்பாளோ?’ மனதினில் எண்ணியபடி இருந்தான் அவன். நாய்கள் தங்கள் சண்டையை முடித்தது கூடக் கவனியாமல் இருவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கி இருந்தனர்.


"உன் பெயர் என்ன?" திடீரென்று முகிலன் கேட்கவும், அப்பொழுதுதான் அவ்வளவு நேரமும் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, சட்டென விழிகளைத் தாழ்த்தி, ‘ச்ச.. என்ன நினைச்சு இருப்பான்? ஏன் இப்படிப் பார்த்தேன்?’ தன்னையே மனதிற்குள் நொந்தபடி மிக மெதுவாய், "வர்ஷா..." என்றாள்.


முகிலனுக்கு ஏற்கனவே தெரிந்த பெயர்தான் ஆனால், அவள் வாயிலிருந்து முத்தை உதிர்க்க வேண்டாமா? இருந்தும் சிறிய ஏமாற்றம், அவள் தன் பெயரைக் கேட்பாள் என எதிர்பார்த்து ஏமாந்து போனான்.


இருந்தும் இயல்பாக, "சரி வா போகலாம்." என்றான்.


அப்பொழுதே நாய்களின் சண்டை முடிந்ததை உணர்ந்தவள், "இல்லை நீங்க முன்னாடி போங்க.. நான் போய்க்கிறேன்." எனக் கூறினாள்.


"அவ டீம் பசங்க கிட்ட நல்லாத்தானே பேசுவா? பின்ன என்ன, நம்மகிட்ட இவ்வளவு தயக்கம்?" என்று எண்ணியவனுக்கு, அவள் பார்வை பூமித்தாயை ஆராதனை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, ‘ஓ! வெக்கமா? படட்டும் படட்டும்’ என, மனதினில் எண்ணியவாறே தோளினை ஸ்டைல் ஆகக் குலுக்கி விட்டு முன்னே நடந்தான்.


"அதானே, என்னடா அதிசயமாப் பேசுதேன்னு நினைத்தேன். சரி இதுவும் நல்லது தான், நமக்கு வீணா எந்த நினைப்பும் வேண்டாம். தங்கச்சி காலேஜ் முடிக்கட்டும் மத்ததெல்லாம் பிறகு பார்த்துப்போம். அம்மாக்கு தெரிஞ்சிது அவ்வளவுதான்" என்று எண்ணிக்கொண்டே அவனைப் பின் தொடர்ந்தாள்.


அதற்குப் பிறகு முகிலன் செயல்களில் பெரிதும் மாற்றம் இருந்தது. அலுவலகத்தில் அவள் இருப்பிடம் வந்து ஏதாவது பேச்சுக் கொடுப்பான். எல்லோர் முன்னிலையிலும் தவிர்க்கத் தெரியாமல், தயங்கியபடியே பதில் தருவாள்.


‘யாரும் ஏதும் நினைத்துக் கொள்வார்களோ!’ என்ற பயம் அவள் முகத்திலும் வழியும். அவள் படபடப்பை விழிகளின் நாட்டியம் உணர்த்த, ரசித்துக் கொண்டே கதை அடிப்பான் அவன்.


எதிரினில் பார்க்கும் பொழுதெல்லாம் சிரித்துவிட்டுச் செல்வான். பலமுறை பேசுவான், அவள் தோழிகள் எல்லாம் இப்பொழுது இவளை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.


"ஏன்டி நாங்க டவுட் கேட்டா... திட்டறாரு, எங்ககிட்ட அனாவசியமாப் பேசவே மாட்டார். உன்கிட்ட எப்படிப் பேசறார்?"


இந்த கேள்விக்கு, அவளுக்குமே பதில் தெரிந்தால் தானே பதில் சொல்வாள். அனைவரிடமும் வாய் அடிப்பவள் அவனைக் கண்டால் அமைதியாகி விடுகிறாள். அனைவரிடமும் அமைதி கடைபிடிப்பவன் அவளைக் கண்டால் ஓயாமல் பேசுகிறான். இந்த முரண்பாடு புரிந்தும், அதற்கான காரணம் உணர்ந்தும், எதுவும் தோழிகளிடம் சொல்லும் நிலையில் அவள் இல்லை. ஒருவேளை உண்மையை ஒப்புக்கொள்ள அவள் மனம் விரும்பவில்லையா?


இவள் உறுதிப்படுத்தா விட்டால் என்ன? இவள் தோழிகள் உறுதி செய்து விட்டார்கள். அவனைக் கண்டாலே, "அண்ணா வருகிறார் பாரு; நீ பேசிட்டு வா, நாங்க முன்னாடி போகிறோம்." என, முன்னே சென்று விடுவார்கள்.


வர்ஷாவுக்கு அவனிடம் ஒதுங்கிப் போக முடியாத சூழல். அனைவரும் மதிக்கும் நல்ல பொறுப்பில் இருப்பவன், அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவன் அவனாக வந்து பேசும் பொழுது முகத்தில் அடித்தால் போல ஒதுங்கிப் போவது இவளால் இயலவில்லை. அவன் கேள்விகளுக்குப் பதில் கூறிவிட்டு முடிந்த வரை அவ்விடம் விட்டு நகரவே நினைப்பாள். ஆனால், பாவம் அதுவும் நடந்ததில்லை.


முகிலனும் வர்ஷா அதிகம் பேசாமல் இருப்பதை உணராமல் இல்லை. அதோடு அலுவலகத்தில் பேசுபவள் பெரிதாக இல்லாவிடினும் கேட்பதற்குப் பதில் என்ற மட்டும் பேசுபவள், வீட்டிற்கு செல்லும் பொழுது உடன் வர மறுப்பதையும் புரிந்து கொள்ள முடியாமல் இல்லை. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி அவளிடம் மீண்டும் மீண்டும் பேசுவது அவள் விழி உரைக்கும் காதல் மொழிகளை நன்கு புரிந்து கொண்டதினாலே.


வேண்டுமென்றே சில நாட்கள் பேசாமல் செல்வான், அவள் விழிகள் தவிப்போடு பின் தொடர்வதை ரசித்துக் கொள்வான். அவளின் பொறாமையைத் தூண்ட அவன் பிற பெண்களிடம் பேசினால், அவள் விழிகளில் பொறாமையை எதிர்பார்த்து ஏமாந்துதான் போவான். ஏனெனில் அவள் விழிகளில் ஒரு புரிதல் இருக்கும், தன்னவன் மீது கொண்டுள்ள புரிதல். அது முகிலனை மிகவும் பெருமைப்படுத்தும்.


அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பெண்கள் புடவையிலும், ஆண்கள் வேஷ்டியிலும் வந்திருந்தனர். உரிமையோடு அவனது கண்கள் அவளை அளந்தன. வெக்கம் தாளாமல், அவ்விடம் விட்டு மறைந்தாள்.


அவன் பார்வை அவளையே தேட, வர்ஷாவுக்கு, ‘ தன் மனம் போடும் கட்டுப்பாடுகள் என்ன? அதை நாம் முரண்பாடாய் செயல் படுத்துவது என்ன?’ என்ற போராட்டம். அவள் கண்களில் நீர்த்திரையிட, அந்த நேரம் அங்கு வந்து சேர்ந்தான் முகிலன்.


அவள் கண்களில் நீரினை பார்த்ததும், படபடப்பாய், "ஏய் வரு.. எதுக்கு அழற? ஸ்ஸ்ஸ்.. அழாதே!” என்றவாறு தோளோடு சேர்த்தணைக்கச் சட்டென அவன் பிடியில் சிக்காமல் அவள் அவ்விடம் நகர்ந்து, பெண்களுக்கான ஓய்வறையில் தஞ்சம் புகுந்தாள்.


"கம் அவுட்சைட்.." என்ற மெசேஜ் முகிலனிடம் இருந்து வர, அதை கண்டு கொள்ளாமல் தன் வேலைகளை தொடர்ந்தாள்.


கம்பெனியின் வெளியில் வர்ஷாவுக்காகக் காத்திருந்து, அவள் வாராமல் இருந்ததாலும், அவனுடைய அலைப்பேசி அழைப்பை ஏற்காமல் இருந்ததாலும் மிகுந்த கோவத்தோடு, மீண்டும் அலுவலகம் வந்தான் முகிலன். அங்கே, இவன் வரும் முன்பே அவள் இருக்கும் இடம் விட்டு நகர்வதும், அவனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும், மீறி பேசினால் போன் வந்ததைப் போலத் தவிர்ப்பதும் அவன் கோவத்தை விறு விறுவென ஏற்றியது. அன்று மாலையும் அவளாகவே ஒரு ஆட்டோவை பிடித்து இல்லம் போய் விட்டாள்.


இதுவே இரு தினங்கள் தொடர்கதையாக, பின்னர் கோவம் தலைக்கேற, அவனும் அவளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான்.


இரு வாரங்கள் இருவரின் பாராமுகங்களோடு கடந்தது. நிராகரிக்க வேண்டும் என்று எண்ணியது அவள் தான். ஆனால், முகிலனின் நிராகரிப்பு மனதை அரிக்க, உண்மை புரிந்தும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தாள் வர்ஷா. தோழிகளிடமும் பகிர முடியாமல், தாய் மடியிலும் அழுது கரைய முடியாமல் தினமும் இரவில் கலங்கும் விழிகளோடே உறங்கி எழுவாள்.


பொறுக்கவே இயலாமல், முகிலன் அவளைக் கடக்கும் பொழுதெல்லாம் கலங்கிய விழிகளோடு அவளையும் அறியாமல் அவளுடைய விழிகள் அவனையே யாசிக்க, இரு தினங்கள் பொறுத்தவன் அதற்கும் மேலும் பொறுமையை கடைபிடிக்க இயலாமல் அவள் அருகில் வந்து, "அலுவலகம் என்பதால், அமைதியாக இருக்கிறேன். அதிகம் சோதிக்காதே. இப்பொழுது என்னோடு வெளியே வரவில்லை என்றால், இன்று மாலை உன் வீட்டில் இருப்பேன்" கண்டிப்போடு கூற, மறுக்க முடியாமல் அவன் பின்னே சென்றாள்.


‘மனம் நினைப்பது என்ன? விதிக்கும் கட்டுப்பாடுகள் என்ன? ஆனால், இந்த விழிகள் இப்படி வஞ்சனை செய்கிறதே…’ என கலங்காமல் வர்ஷாவால் இருக்க முடியவில்லை.


அவன் நண்பனின் வாகனத்தில் அவளை அமரச் சொல்ல அதற்கு அவள் மறுக்க அவனது கோவப்பார்வையின் தரிசனம் கிடைத்த பிறகே அதில் ஏறி அமர்ந்தாள், முகிலன் அருகில் இருந்த பார்க்கிற்குச் செல்ல, வேகமாக உள்ளே சென்றவனின் கோவம் அவன் நடையிலே தெளிவாகத் தெரிய, பின்னால் கிட்டத்தட்ட ஓடினாள் வர்ஷா.


வர்ஷா அருகினில் வந்ததும் மொத்தக் கோவத்தையும் சேர்த்து வைத்து, அவளது தோள்களைப் பற்றி, "என்னதான் உனக்கு பிரச்சனை? ஏன் இப்படிச் செய்யற? என்கிட்டே பேசாம உன்னால இருக்க முடியாது தானே? பின்ன எதுக்கு அவ்வளவு சீன் போடற?"


"ப்ளீஸ் விடுங்க... யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க?"


"ஹம்ம்ம்... கல்யாணத்துக்கு அவசரம்னு நினைப்பாங்க" அவளது பதற்றம் அவனை இயல்பாக்கிட, மென்னகையோடே கூறினான்.


அவனிடம் இருந்து விலகி, "எனக்கு எந்த அவசரமும் இல்லை" என்றாள்.


"ஆனால், எனக்கு அவசரம்" என்றான் புன்னகை மாறாமல்.


"அப்போ போய்க் கல்யாணம் பண்ணிக்கோங்க!" அவன் முகம் பார்க்காமலே பதில் கூறினாள்.


‘ஓ! மேடம் அப்படி வரீங்களா?’ என மனதினில் எண்ணியபடி, "யாரு மாட்டேன்னு சொன்னாங்க? நாளைக்குப் பொண்ணு பார்க்கப் போறேன்" என அவன் சொன்னது தான் தாமதம் அதற்குள் அவள் விழிகள் கலங்க, "உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு தான் நினச்சேன், சரி பார்க்கப் பாவமா இருக்கேன்னு சொல்லறேன்" என்ற பீடிகையோடு அவள் முகம் பார்த்து நிறுத்த,எதுவும் புரியாமல் அவள் விழிக்க, "ஏன்டி இந்த கண்ணு பேசறதுல கொஞ்சமாச்சும் இந்த வாய் பேசக் கூடாதா?" என அவளை நெருங்க,சட்டென அவள் பின்னால் நகர, அவளைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தபடி, "உன்னைக் கடிக்க மாட்டேன் வரு குட்டி.. கிட்டே வா..." என இயல்பாய் கூற, ‘கொஞ்சறதப் பாருங்க, இத்தனை நாளா திரும்பி கூடப் பார்க்கவில்லையாம்’ அவள் மனதின் எண்ணத்தை முகம் வெளிக்காட்ட, "ஹ்ம்ம்.. நீ நினைக்கிறதும் சரி தான். ஆனா, உன்னை மாதிரி சோம்பேறியை வெச்சுக்கிட்டு நான் என்ன பண்ண? என் வீட்லேயும் உன் வீட்லேயும் தனி ஒருத்தனா பேசிச் சம்மதம் வாங்கி இருக்கேன். நாளைக்கு லீவ் போட்டுக்க. பொண்ணு பார்க்க வரோம்" அவள் விழிகளைப் பார்த்தபடியே சொல்ல, ஆனந்தத்தில் அவள் விழிகள் நனைந்தது. அதைத் துடைப்பதற்காக என்ற பெயரில் அருகில் நகர்ந்தான் அவள் அன்புக்குரியவன்.
 
Top Bottom