• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் 1

Status
Not open for further replies.

ரோசி கஜன்

Administrator
Staff member
தன் அறையின் கண்ணாடியின் முன்னே வந்து நின்றான் கிருபன். கருப்பு நிற காற்சட்டைக்கு வெண்மையில் பளபளத்த முழுக்கை ஷேர்ட்டினை கண்ணாடியை பார்த்தபடி உள்ளே விட்டு நேர்த்தியாக்கினான். காலைக் குளியலின் பயனாக அடங்காமல் நின்ற கேசத்துக்குக் கொஞ்சமாய் ஜெல்லை அப்பி அடக்கிக்கொண்டு, மீசையை நீவி விட்டவனுக்குத் தன் தோற்றத்தின் மீது மிகுந்த திருப்தி!



அலுவலகத்துக்கான பெயர் பட்டியை இப்போதே கழுத்தில் மாட்டாமல் ஜீன்ஸ் பொக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டு, சமையலறைக்கு நடந்தான். கொதித்திருந்த நீரிலிருந்து தேநீரை ஊற்றி, அங்கேயே நின்றபடி பருகினான். மெல்லிய பசி தெரிந்தாலும், தானே செய்து உண்ணும் உணவை நினைக்கும்போதே அந்தப் பசியும் பறந்து போனது.



புதிய கட்டத்தில் மூன்றாவது மாடியில் அமைந்த ஒற்றைப் படுக்கையறை கொண்ட வீடுதான் அவனுடையது. அவன் வாங்கிப்போட்டிருந்த அத்தியாவசியப் பொருட்களோடு மிகவும் நேர்தியாகக் காட்சியளித்தது.



ஆனால், யாருமில்லாத வீட்டில் நேர்த்தி இருந்தென்ன? அழகு இருந்தென்ன? கைபட்டுக் கலையாத பொருட்கள் சலிப்பைத்தான் உண்டாக்கின. அந்தத் தனிமைக்குள்ளிருந்து தப்பித்து வெளியே ஓடவேண்டும் போலிருக்க, அருந்திய கோப்பையை அலசி வைத்துவிட்டு, தன் லாப்டாப் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு, அரவிந்தனின் வீடு நோக்கிப் புறப்பட்டான்.



அவன் பணிபுரியும் IT நிறுவனத்தின் கிளிநொச்சிக் கிளையில் இருந்து மன்னாருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து கடந்த மூன்று மாதமாகத்தான் இங்கே மன்னாரில் வசிக்கிறான்.



மாமா வீட்டிலிருந்து வெளியேறியது பெரிய விடுதலை. அவனை வளர்த்தது அவர்கள்தான். அந்த நன்றி மனதிலிருந்தாலும், எப்போது வெளியே வருவோம் என்று காத்திருந்து வந்துவிட்டான்.



அவனுடைய இயல்பான சுபாவம் என்ன என்று அவனுக்கே தெரியாது. நினைவு தெரிந்த நாளில் இருந்து எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நின்றுதான் பழக்கம். மாமா மாமியின் காதுக்குப்போய்ப் பிரச்சனையாகிவிடுமோ என்று யாரிடமும் எதையும் மனதிலிருந்து பேசப் பயம். என்னால் அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம். எப்போதுமே, இருக்கிற இடம் தெரியாமல் இருந்துகொள்வான். அதுவே, நாளடைவில் அவனை அமைதியான சுபாவமுள்ளவனாக மாற்றியிருந்தது.



இப்படி, தன்னைச் சுற்றி அவன் அமைத்திருந்த வேலிக்குள் அனுமதியே கேளாமல் குட்டி ஒட்டை ஒன்றைப் போட்டுக்கொண்டு நுழைந்தவன் தான் அரவிந்தன். ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டதில்லை. அவனுடைய ஒதுக்கத்தைக் கவனித்து மற்றவர்களுக்கு முன்னால் வைத்து கிண்டல் கேலி செய்தது இல்லை. அவனை அப்படியே ஏற்றுக்கொண்டு, வலியவந்து பேசிப்பழகும் அரவிந்தனின் சுபாவம் கிருபனுக்கு மிகவுமே பிடிக்கும். அதுவே அவர்களுக்குள் ஆழமான நட்பை விதைத்திருந்தது.



இன்று, அவர்களின் நிறுவனத்தின் மேலதிகாரி ஒரு மீட்டிங்கை ஒழுங்கு செய்திருந்தார். அதுவும் அரவிந்தனோடு இணைந்து செய்து முடித்த பிராஜெக்ட் பற்றியது என்பதால், ஒன்றாகப் போவதற்காக அரவிந்தன் வரச்சொல்லி இருந்தான்.



எத்தனையோ முறை அரவிந்தன் அழைத்திருந்த

போதும் அன்றுதான் முதன் முதலாக அவர்களின் வீட்டுக்கு வருகிறான். கேட் வாசலிலேயே இருந்த, ‘பரந்தாமன் GS’ என்கிற அவனது அப்பாவின் பெயர் அதுதான் வீடு என்று உறுதிப்படுத்தியது. உள்ளே செல்லாமல் வண்டியின் ஒலிப்பானை ஒருமுறை அழுத்திவிட்டுக் காத்திருந்தான்.



அடுத்த நொடியே, “எந்த எளியவன் விடியக்காலமயே வந்து நிண்டு உயிரை எடுக்கிறது?” என்று, ஒரு பெண்ணின் குரல் அதட்டவும் அரண்டுபோனான், கிருபன்.



ஒரு தங்கை இருக்கிறாள் என்று அரவிந்தன் சொல்லியிருக்கிறான் தான். அதனால் தான் உள்ளே போக ஒருமாதிரி இருக்க வெளியே நின்று தான் வந்துவிட்டதை அப்படித் தெரிவித்தான். அது பிழையோ? வேகமாகக் கைபேசியை எடுத்து, ‘வெளில நிக்கிறன். கெதியா வாடா!’ என்று அனுப்பிவிட்டான்.



அவர்களின் வீட்டு வாசலுக்கும் வெளி கேட்டுக்கும் பெரிய தூரம் இல்லாததால் வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த கமலி, கேள்வி கேட்டும் பதில் வராத கோபத்தில் வாசலில் வந்துநின்று எட்டிப்பார்த்தாள்.



யாரோ ஒருவன். முன்பின் பார்த்திராத முகம். கேள்வியோடு அவனை ஏறிட்டாள்.



திட்டப் போகிறாளோ என்று இவனுக்குப் பதட்டமாயிற்று. சமாளித்துக்கொண்டு, “அரவிந்தன் நிக்கிறானா?” என்று தயக்கத்துடன் வினவினான்.



“ஓம், குளிக்கிறான். நீங்க?”



“நான் கிருபன். அவன்ர பிரென்ட்.”



“புது பிரென்ட்டோ?” அவள் விழிகள் அவனை ஆராய்ந்தது.



ஆம் என்பதாகத் தலையை மட்டும் ஆட்டினான் கிருபன்.



“பொறுங்கோ! அண்ணாட்ட சொல்லுறன்!” என்றவள் உள்ளுக்குள் போகாமல், “இப்பிடித்தான் விடியக்காலம வந்துநிண்டு ஊரை கூட்டுவீங்களா? ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டியதுதானே. ஆள் வளந்த அளவுக்கு அறிவு வளர இல்ல போல!” என்று அதட்டினாள்.



நொந்தே போனான் கிருபன். “சொறி!” அவன் வாய் தானாகச் சொன்னது.



“ம்ம்..! இன்னொருமுறை இப்பிடி ஏதாவது நடந்தது மண்ணெண்ணையை ஊத்தி பைக்கை கொளுத்தி விட்டுடுவன்.”



அவளின் மிரட்டலில் ஒருகணம் பயந்துதான் போனான், அவன். “இல்ல. இனி இல்ல.” என்றான் அவசரமாக.



“அதையும் பாக்கத்தானே போறன்.” முறைப்புடன் மேலும் கீழுமாக அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனாள், அவள்.



அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை அப்போதுதான் வெளியேற்றினான் கிருபன். ஊரை கூட்டியதாகச் சொல்லிவிட்டாளே. வாழ்க்கையில் இனி எந்த அவசர ஆபத்துக்கும் தன் ஒலிப்பானை அழுத்துவானா என்பதே சந்தேகம்.



அவனுக்கான அன்றைய சோதனை இன்னும் முடியவில்லை என்பதுபோல், “யாரோ கிருபனாம் அண்ணா. வெளில நிக்கிறார்.” என்று அவள் சொல்வதும்,

“வந்திட்டானா? எட்டுக்குத்தானே வரச்சொன்னான்.” என்று அரவிந்தன் சொல்வதும்கூட கேட்டது.



முன்னே பெரிதாக முற்றம் இல்லாமல் வீதியோரமாகவே அவர்களின் வீடு அமைந்து இருந்ததில் அவர்களின் பேச்சு இவன் காதில் அப்படியே விழுந்தது.



“இப்ப நேரம் எட்டுப் பத்து. எட்டுக்கு வரச்சொன்னா, அதுக்கு முதல் நீ ரெடியா நிக்கோணும். இப்பிடித்தான் காக்க வைப்பியா. என்ன பழக்கம் அண்ணா? அவர் வேற வெளில நிண்டு கத்தி கூச்சல் போடுறார்.” என்று அவள் கடிவதும், “சரி சரி கத்தாத. ஜீன்சும் ஷேர்ட்டும் மாத்துறது மட்டும் தான்!” என்று அரவிந்தன் சொல்வதும் கூட கிருபனுக்கு அப்படியே கேட்டது.



அழுதுவிடும் நிலைக்கே போயிருந்தான் கிருபன். தெரியாம ஒரு கோர்ன் அடிச்சது இவ்வளவு பெரிய பிழையா?



“அவனை உள்ளுக்கு வந்து இருக்கச் சொல்லு.”



“நீயே சொல்லு! என்னால ஏலாது!” என்று அவள் மறுப்பதைக்கூட கேட்டுக்கொண்டுதான் இருந்தான்.



சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் இருக்கவேண்டும் என்பதில் கிருபனும் வெகு கவனமாக இருப்பான். அதைவிட அரவிந்தனும் இவனைப்போலவே இருபத்தியாறு வயது நிரம்பியவன். இருந்தும் இவளின் பேச்சுக்கு அடங்கிப்போகிறானே. அல்லது அடக்குகிறாளோ? அப்படித்தான் தெரிந்தது. முதன் முதலாகப் பார்த்த அவனையே ஒரு அரட்டு அரட்டவில்லையா!



தன் தங்கையைப்பற்றி எதேற்சையாகச் சொல்கையில் சேட்டைக்காரி என்று அரவிந்தன் சொல்லி இருக்கிறான்தான். என்றாலும் இந்தளவில் எதிர்பார்க்கவில்லை.



பைக்கில் இருந்தவாறே அவன் கைபேசியை ஆராய்ந்துகொண்டு இருக்க, சற்று நேரத்தில், “அம்மா! வாறன் போயிட்டு!” என்றபடி அவள் வெளியே வருவது தெரிந்தது.



வேகமாக நிமிர்ந்தான் கிருபன். அவளை எதிர்கொள்வதை நினைக்கவே அவனுக்கு வியர்க்கும் போலிருந்தது. ‘இப்ப அவளைப் பாத்துச் சிரிக்கிறதா இல்லையா’ பெரும் கேள்வி ஒன்று எழுந்துவந்து அவன் முன்னே நின்றது.



வளரிளம் பருவத்திலிருந்து பெண்களுடனான பழக்கம் இல்லாமலேயே வளர்ந்தவனுக்கு, இன்னும் சொல்லப்போனால் ஒதுங்கிப்போயே பழகியவனுக்கு, பெண்கள் என்றாலே சற்றுத் தடுமாற்றம் தான். வெளியே காட்டிக்கொள்ள மாட்டானே தவிர, தனக்குக் கீழே வேலை செய்யும் பெண்களிடம் கூட வேலை வாங்குவதற்குப் பெரும்பாடு பட்டுவிடுவான்.



சாதாரணப் பெண்களை எதிர்கொள்வதற்கே அந்தப்பாடு என்றால் இந்த வாயாடியை? சிறு தவறு செய்தாலும் வாயாலேயே அவனைக் கழுவில் ஏற்றிவிடுவாளே!



என்ன செய்வது என்று தெரியாமல் அவன் நிற்க, ஸ்கூட்டியில் வந்த அவளோ அவனைப் பார்த்துப் பளீரெனப் புன்னகைத்தாள்.



ஒருவித அதிர்வுடன் பார்த்தான், கிருபன்.



“அண்ணா ரெடியாயிட்டான், இப்ப வருவான்!” என்றுவிட்டு, ஒரு தலையசைப்போடு விடைபெற்றுக்கொண்டாள்.



‘அப்பாடி… போறா’ என்று இவன் நினைத்து முடிக்க முதலே மீண்டும் ஸ்கூட்டியை நிறுத்தித் திரும்பி இவனைப் பார்த்தாள்.



“இன்னொரு விசயம். இனி அண்ணா எட்டுக்கு வரச்சொன்னா எட்டே காலுக்கு வாங்கோ. அவன் ஒரு முழுச் சோம்பேறி. எதையும் அந்த நேரத்துக்குச் செய்யவே மாட்டான்.” என்று, அவள் சொன்னதைக் கேட்டு நகைப்பில் விரியப்பார்த்த உதடுகளை அடக்கிக்கொண்டு வேகமாகச் சரி என்று தலையை ஆட்டினான், கிருபன்.



அவளின் பார்வை அவன் மீது ஒரு கணப்பொழுது சற்றே அதிகமாகப் படிந்ததுபோல் ஒரு தோற்றம். அவன் தடுமாறும்போதே அவள் பறந்து போயிருந்தாள்.



‘ஊப்ஸ்…’ கிருபன் மூச்சை இழுத்து விட்டபோது, “என்னவாமடா சொல்லிப்போட்டு போறாள். எப்பிடியும் என்ர மானத்த தான் வாங்கி இருப்பாள்!” என்றபடி ஓடிவந்து பின்னால் ஏறிக்கொண்டான், அரவிந்தன்.



ஒன்றும் சொல்லாமல் சிறு முறுவலுடன் வண்டியைக் கிளப்பினான், கிருபன்.



இங்கே, வேலைக்குப் பயணித்துக்கொண்டிருந்த கமலியின் உதட்டினில் மெல்லிய குறுஞ்சிரிப்பு. தன்னைப்போன்ற இளம் பெண்களின் முன்னே, தங்களின் அலட்டல்களைக் காண்பித்து ‘படம்’ காட்டும் ஆண்களுக்கு மத்தியில், அவனுடைய தயக்கம் வித்தியாசமாகத் தோன்றிற்று. அவள் அதட்டியதற்கு கோபப்படவும் இல்லை முகம் கருக்கவும் இல்லையே!



சீறிப்பாயும் குதிரையைப்போலிருந்த புல்லெட்டில் கம்பீரமாக ஆரோகணித்திருந்தவனின் முகத்தில் தெரிந்த கூச்சத்தையும், பார்வையில் தெரிந்த தடுமாற்றத்தையும் நினைக்க நினைக்க சிரிப்பு அரும்பிக்கொண்டே இருந்தது.
 
Status
Not open for further replies.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom