• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் 2

Status
Not open for further replies.

ரோசி கஜன்

Administrator
Staff member
மீட்டிங் முடிந்து வெளியே வந்தபோது என்னவோ சிறையிலிருந்து தப்பிய உணர்வுதான் இருவருக்கும். அந்தளவுக்கு மூளை சூடாகிப் போயிருந்தது. இரண்டு கோல்ட் கோஃபி வாங்கிக்கொண்டு வந்து ஒன்றை அரவிந்தனிடம் நீட்டினான் கிருபன்.


“வெளில எங்கயும் போவமா மச்சி? மண்டை எல்லாம் காஞ்சு போச்சு. இவனுகளுக்கு எல்லாம் ஏன் சொட்டை எண்டு இப்ப விளங்குதடா. என்ன அறுவ!” நாளைய நாளும் விடுமுறை என்பதில் அதைக் கொண்டாடும் மனநிலைக்கு வந்திருந்தான், அரவிந்தன்.

கிருபனின் எண்ணமும் அதுதான். வீட்டுக்குப் போவதை நினைத்தாலே அலுப்படித்தது. “போட்டிங் போகலாம். ஆனா மழை வரும் போல இருக்கேடா.” மெல்லிய கருமையைச் சுமந்தபடி இருந்த வானத்தைப் பார்த்தபடி சொன்னான்.

“தியேட்டருக்கு ஏதாவது புதுப்படம் வந்திருக்கா?” என்று வினவிய அரவிந்தனின் கைபேசி, குறுஞ்செய்தி வந்திருப்பதை ஒலியெழுப்பி அறிவித்தது.

எடுத்துப்பார்த்தான். ‘டேய் அண்ணா, வரேக்க கோழிக்கொத்து வாங்கிக்கொண்டு வா! மறந்தியோ மண்டையிலேயே குட்டுவன்!’ என்று அனுப்பியிருந்தாள் கமலி.

“இவளுக்கு இருக்கிற திமிருக்கு..” அரவிந்தன் பல்லைக் கடிக்கச் சிறு சிரிப்புடன் பார்த்தான் கிருபன். “ஒரே ஒரு தங்கச்சி தான்டா எனக்கு. ஆனா, அந்த ஒருத்தி ஒரு ஊருக்கே சமன். பார் என்ன எழுதி இருக்கிறாள் எண்டு!” என்று கைப்பேசியைக் காட்டினான்.

கைப்பிடிச் சுவரில் இலகுவாகச் சாய்ந்தபடி கோப்பியை பருகிக்கொண்டு இருந்த கிருபன் இலேசாக எட்டிப் பார்த்தான். அதில் இருப்பதைக் கண்டு உதட்டு முறுவல் நன்றாகவே விரிந்து போயிற்று.

யார் என்றே தெரியாத அவனை முதல் சந்திப்பிலேயே அந்த அரட்டு அரட்டியவள் கூடப்பிறந்தவனை விட்டு வைப்பாளா?

உணவை வெளியிலேயே முடித்துக்கொண்டு புறப்பட்டபோது, வண்டியைக் கிளப்பாமல், “உன்ர தங்கச்சிக்கு?” என்றான் கிருபன்.

“அவளின்ர வாய்க்குக் கொத்துதான் இல்லாத குறை. நான் இண்டைக்கு இரவுதான் வீட்டுக்கு போவன். அப்ப பாப்பம். நீ உன்ர வீட்டுக்கு விடுடா. நெட்பிளிக்ஸ்ல ஏதாவது படம் பாப்பம்.” என்றபடி அவன் பின்னால் ஏறிக்கொண்டான் அரவிந்தன்.

இன் பண்ணியிருந்த இருவரின் சேர்ட்டுகளும் இப்போது வெளியே வந்திருக்க, முழுக்கை அரைக்கையாக மாறியிருந்தது. நண்பர்கள் இருவரும் விறாந்தையின் தரையில் கிடந்த மெத்தையில் ஆளுக்கொரு கோக் டின்னுடன் சரிந்திருந்தனர். திரில், சஸ்பென்ஸ் என்று கலந்துகட்டி வெகு சுவாரசியமாக நகர்ந்துகொண்டிருந்தது ஆங்கிலத் திரைப்படத்தின் திரைக்கதை. அதில் மூழ்க விடாமல் டொங்கு டொங்கு என்று அரவிந்தனின் கைபேசியில் செய்திகள் வந்து விழுந்துகொண்டே இருந்தது.

“இவளோட நான் படுற பாடு இருக்கே!” பல்லைக் கடித்தபடி எடுத்துப் பார்த்தான், அரவிந்தன்.

‘அண்ணா பசிக்குது. எப்ப வருவாய்?’ என்று அனுப்பியிருந்தாள் கமலி. இவன் பார்க்கிறான் என்று தெரிந்ததும், முகத்தைக் கையில் தாங்கியபடி கண்ணீர் சொட்டச் சொட்டக் காத்திருக்கும் ஒரு பெண் குழந்தையின் இமோஜி வந்து விழுந்தது.

கிருபனுக்கே சிரிப்பை அடக்குவது சிரமமாயிற்று. எல்லாரையும் அழ வைக்கிற இவள் கண்ணீர் வடிக்கிறாளாமா? காரியம் சாதிக்க நாடகமாடுகிறாள் என்று நன்றாகவே புரிந்தது.

“பாரடா எப்பிடி நடிக்கிறாள் எண்டு. வீட்டுக்கு போனன் எண்டு வை, இவ்வளவு நேரமா என்ன செய்தனி எண்டு கேட்டு என்ர முடியை போட்டு ஆட்டு ஆட்டு எண்டு ஆட்டுவாள்.” என்றபடி எழுந்துகொண்டான், அரவிந்தன்.

என்னதான் கோபமாகப் பேசினாலும் அவள் பசி என்று சொன்னதிலேயே மனம் கசிந்திருந்தது அவனுக்கு. உண்மையிலேயே சாப்பிடாமல் காத்திருப்பாள் என்றும் தெரியும். திரைப்படத்தை நிறுத்திவிட்டு கிருபனும் எழுந்து புறப்பட்டான்.

அவள் கேட்ட கோழிக்கொத்தோடு அவளுக்குப் பிடித்த ஐஸ்கிறீமும் வாங்கிக்கொண்டு வந்தவனைக் கொண்டுபோய் அவன் வீட்டினில் இறக்கிவிட்டு வந்த கிருபன், மீண்டும் படத்தைப் போட்டுவிட்டு மெத்தையில் விழுந்தான்.

மனம் படத்தில் லயிக்க மாட்டேன் என்றது.

ஒருகாலத்தில் அம்மா, அப்பா, அவன் என்று அவர்களின் வாழ்க்கையும் நல்லமாதிரித்தான் இருந்தது. ஒருநாள் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி போன அப்பா திரும்பி வரவேயில்லை. என்ன ஆயிற்று, எங்கே போனார் என்று இவர்கள் பயந்துகொண்டு இருக்க, வீடு தேடிவந்த காவல்துறையினர் அவர் விபத்தில் காலமாகிவிட்ட செய்தியைத்தான் தெரிவித்தனர்.

வீட்டுக்குத் திரும்பிக்கொண்டு இருந்தபோது டிப்பர் மோதி வண்டியோடு பற்றைக்குள் தூக்கி எறியப்பட்டதில், அந்த விபத்து மற்றவர்களின் பார்வைக்கு வராமலேயே போயிற்று. டிப்பரும் நில்லாமல் தப்பித்து ஓடியிருக்கிறது. காப்பாற்ற யாருமற்று உயிருக்குப் போராடி மரணத்தைத் தழுவியிருக்கிறார் அவனது தந்தை. அவர் இருந்த இடத்தைச் சுற்றி நாய் விடாமல் குலைத்ததில் யாரோ பார்த்துத்தான் அவரைக் கண்டு பிடித்தார்களாம்.

ஐந்து வயது மகனை வைத்துக்கொண்டு மறுமணம் புரிய மனமற்று, கூடப்பிறந்த அண்ணா வசித்துவந்த கிளிநொச்சிக்கே வந்து சேர்ந்தார் அவனது அன்னை பாக்கியவதி. அவர் நர்ஸ் என்பதில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி அரச வைத்தியசாலைக்கே மாற்றலையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களின் வாழ்வாதாரத்தை தான் பார்க்கத் தேவையில்லை என்பதில் இவனது மாமாவான சோமசுந்தரமும் அவர்களை ஏற்றுக்கொண்டார்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
கணவரை இழந்திருந்த அந்த நிலையிலும் கூடப்பிறந்த தமையனின் பாதுகாப்பு மாத்திரம் போதும் என்பதில் தெளிவாக இருந்த பாக்கியவதி, தன்னுடைய ஒற்றைக் காப்பை விற்று சோமசுந்தரத்தின் காணியிலேயே கொட்டில் வீடு ஒன்றைப் போட்டுக்கொண்டு தனியாகவே இருந்துகொண்டார். யாழ்ப்பாணத்தில் இருந்த அவர்களின் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு, அதை மகனின் பெயருக்கு சேமிப்பாகவும் மாற்றிவிட்டார். காலம் இப்படியே நகர்ந்திருந்தால் கூட அப்பா இல்லை என்கிற ஒற்றைக் குறையோடு அவன் வாழ்க்கை சந்தோசமாக அமைந்திருக்கும்.

அவனுடைய பதின்மூன்றாவது வயதில் பாக்கியவதிக்கு மார்புப் புற்றுநோய் அதுவும் முற்றிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பதினான்காவது வயதில் அவரும் அவனைப் பிரிந்ததைத்தான் அவனால் தாங்கவே இயலாமல் போயிற்று.

அதன்பிறகு மாமா வீட்டினரோடு இருந்து வளர்ந்தவனுக்கு, தினமுமே மனதில் படுவது அந்த வீட்டுக்குத் தான் சுமை என்பதுதான்.

மாமா நல்லவரா கெட்டவரா? இன்றுவரை அவனுக்குத் தெரியாது. அவனை வைத்துப் பார்த்தார். உணவு கொடுத்தார், படிக்க வைத்தார். வேலை கிடைக்கும்வரை தன்னோடேயே வைத்துக்கொண்டார். கிடைத்தபின்னும் வெளியே போ என்று அவராகச் சொன்னதில்லை. ஆனாலும் தன்னைச் சுற்றி இறுக்கமான வட்டம் ஒன்றைப் போட்டுக்கொண்டு அவனை வெளியேதான் நிறுத்தி வைத்திருந்தார். எதற்கும் அவரை அணுக முடியாது. அவனைப் பார்த்து எப்போதாவது சிரித்திருக்கிறாரா என்றெல்லாம் யோசித்து இருக்கிறான். நினைவே இல்லை. அவரின் இறுக்கமான நடமாட்டமே அவனது நடமாட்டத்தை அந்த வீட்டில் குறுக்கியது.

அவன் உயர்தரம் வந்தபோது டியூஷன் போகிறாயா என்று கேட்கவில்லை. அவனும் போகப்போகிறேன் என்று சொல்லவில்லை. ஆரம்பம் வெகு சிரமமாக இருந்தாலும், பள்ளி ஆசிரியர்களைப் பிடித்துப் படித்துக்கொண்டான். மிகுதிக்குத் தன் வகுப்பிலேயே நன்றாகக் கற்பவர்களின் உதவியோடு விளங்கிக்கொண்டான்.

அதுவே, அவர்களது இரண்டு மகள்களும் உயர்தரம் வந்தபோது டியூஷன் சேர்த்துவிட்டனர். இதுவே நானும் ஒரு மகனாக இருந்தால் எப்பாடு பட்டேனும் சேர்த்துத்தானே இருப்பார்கள் என்று அந்த இளம் பிராயத்தில் நினைக்காமல் இருக்க முடிந்ததில்லை. ஆனால், தெருவில் விடாமல், தங்க ஒரு இடம், சாப்பிட உணவு, உடுக்க உடை தருவதே பெரிது என்று தேற்றிக்கொண்டான். எனக்கான படிப்பை நான் தானே படிக்கவேண்டும். எனக்கான தகுதியை நான் தானே தேடிக்கொள்ள வேண்டும் என்று மனதில் உறுதியாக எண்ணிக்கொண்டான்.

கடைசி நாட்களில், "தம்பி என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. நல்லா படிச்சிடு. படிச்சு உன்ன நீயே பாக்கிற மாதிரி நல்ல உத்தியோகத்துக்குப் போயிடு. நல்ல நிலமையில நீ இருந்தாத்தான் உன்ன நம்பி ஒருத்தி வருவாள். சொத்து சேர்த்து வைக்க அப்பா இல்ல. நல்லது கெட்டது சொல்லித்தந்து வளக்க அம்மாவும் இல்லாம போகப்போறன். நீ நல்லவனா கெட்டவனா எண்டுறதை நீ நடந்துகொள்ளுற முறையும் உன்ர நிலமையும் மட்டும் தான் சொல்லும். அதால நீ மற்றப் பிள்ளைகளை விடவும் பத்து மடங்கு கவனமா இருக்கோணும் ஐயா. நீ எண்டைக்கும் நல்லா இருக்கவேணும். இதுதான் என்ரயும் உன்ர அப்பான்ரையும் ஆசை. அதை நீ நிறைவேத்த வேணும்." என்று அன்னை சொன்னதை மந்திரமாகப் பற்றிக்கொண்டான்.

மாமாவின் பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து அந்த வீட்டில் மீண்டும் ஒரு மாற்றம். என்ன செய்கிறான், தம் பெண்களோடு வழவழக்கிறானா என்று அவனுடைய மாமி நோட்டம் விடத் தொடங்கவும் கூசிப்போனான். தப்பித்தவறி அவர்கள் மூவரும் ஒரு இடத்தில் இருந்துவிட்டால் போதும் உடனேயே அகற்றிவிடுவார். பிள்ளைகளோடு வள் என்று விழுவார். சின்னவள் சற்றே குறும்புக்காரி. மச்சான் என்று அழைத்து ஏதாவது சொன்னால் போதும், இரண்டு நாட்களுக்குச் சிடுசிடுத்தே அவளை உண்டு இல்லை என்று ஆகிவிடுவார் மாமா.

எதற்கு இதெல்லாம் என்று அவர்களோடு கதைப்பதையே நிறுத்திவிட்டான் கிருபன். கூட வளர்ந்தவர்கள், ஆசையாக ஆவலாக எதையாவது சொல்ல வரும்போது கல்லைப்போல முகத்தை வைத்துக்கொண்டு விலகிப்போவது அவனுக்கே வருத்தத்தைக் கொடுத்தது. நாளடைவில் அவர்களும் இவனை ஒதுக்க ஆரம்பித்தபோது மனதில் பெரும் துயரம். சாப்பாடு கூடக் கசக்கத் துவங்கிற்று! அதுவே அவனை இன்னுமே அந்த வீட்டிலிருந்து இன்னும் ஒதுக்கியது.

ஒருவழியாக பள்ளி, கல்லூரி என்று முடித்து, கடவுளின் கருணையா அல்லது அவனது அன்னை கடவுளோடு இருந்து புரியும் கருணையா வேலையும் உடனேயே கிடைத்தது. வெளி உலகம் பற்றிய தெளிவும், பக்குவமும் கிடைக்க ஆரம்பித்தபிறகு மாமா மாமி மீது அவனுக்கு எந்தக் குறையும் இல்லை. மனவருத்தமும் இல்லை. அவர்கள் அவனுக்காற்றியது மிகப்பெரிய உதவி என்பதை மாத்திரம் பற்றிக்கொண்டான்.

வேலை கிடைத்ததும், அவர்களுக்குப் பாரமாக இராமல் வெளியே போய்விடுவோமா என்று பலமுறை நினைத்திருக்கிறான். ஆனால், அவர்களின் தயவிலேயே வளர்ந்து, படித்துவிட்டு நல்ல உத்தியோகமும் சம்பளமும் கிடைத்தும், அப்படித் தனியாகப் போவது சுயநலம் இல்லையா? நன்றி கெட்ட தனமாகிவிடாதா என்கிற அவனின் தயக்கமும் உடையும் நாள் வந்தது.

“உனக்கு மூத்தவளுக்கு வெளில பாக்கத் தேவையில்லை. நல்ல வேலையோட இருக்கிற நல்ல மாப்பிள்ளை வீட்டுலையே இருக்கிறான்.” என்று, ஒருநாள் வீட்டுக்கு வந்தவர்கள் யாரோ சொல்லிவிட, “இதென்ன கதை? அதெல்லாம் நடக்காது. சொந்தத்துக்க கட்டிக் குடுக்கிறது இல்ல. சேர்ந்து வளர்ந்தா சகோதரமெல்லா.” என்று மாமா குரலை உயர்த்திச் சொன்னவிதம், அவருக்கான பதிலாக அல்லாமல் அவனுக்கான செய்திபோலிருந்ததில் குறுகிப்போனான் அவன்.




உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வானா? அவனை வளர்த்த அவர்களுக்கு அவனைப்பற்றித் தெரியாமல் போனதா என்ன? உறவு முறைப்படி இவன் மச்சான் என்றாலும் கூடவே வளர்ந்த சின்னப் பெண்களை அவனால் எப்படி அப்படிப் பார்க்க முடியும்?


ஏற்கனவே ஒட்டாமல் இருந்த உறவு அதற்குப்பிறகு பெரும் விரிசலாகவே மாறிப்போயிற்று. இருந்தாலும் பல்லைக் கடித்தபடி இரண்டு வருடங்களாக வேலை செய்து சேமித்த பணத்தை, “துளசி, பிரியா ரெண்டுபேரின்ரையும் கலியாணத்துக்கு இருக்கட்டும் மாமா.” என்று அவன் கொடுத்தபோது, “உன்ர காசுக்காகத்தான் உன்ன வச்சுப் பாத்தது எண்டு நினைச்சியா? உன்ர வீட்டு வாடகையில கூட ஒரு ரூபா நான் தொட்டது இல்ல. பார்!” என்று அவர் அவனது பாஸ்புக்கை கொண்டுவந்து முகத்தில் அடித்தாற்போல் போட்டபோது மனதே விட்டுப் போயிற்று அவனுக்கு.

இனி முடியவே முடியாது என்று ஆகிவிட, முழு மூச்சாக நின்று வேலையில் மாற்றலை வாங்கிக்கொண்டு மன்னாருக்கு வந்து சேர்ந்துவிட்டான்.

ஆரம்பம் என்னவோ அடைத்து வைத்திருந்த காற்றை எல்லாம் திறந்துவிட்டது போன்று இந்தப் பரந்த உலகில் சுதந்திரமாக உலவுவது நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும், நாளடைவில் ஒரு பாதுகாப்பற்ற தன்மையை மனம் உணர ஆரம்பித்தது. வெறுமை, அலுப்பு, சலிப்பு என்று ஒன்றிலும் பற்றில்லாத தன்மை. ஏன் விடிகிறது? ஏன் இருள்கிறது? ஏன் வேலைக்குப் போகிறான்? ஏன் சம்பாதிக்கிறான்? எதற்குமே அர்த்தம் அற்றதுபோன்ற ஒரு மரத்த உணர்வு.

அப்போதுதான் திருமணம் செய்வோமா என்று யோசித்தான். இனி அவனுக்கு என்று வரக்கூடிய துணை அது ஒன்றுதானே.

நினைவு தெரிந்த காலம் முழுக்க தனித்தே வாழ்ந்துவிட்டவனின் மனது, மிகுதிக் காலமெல்லாம் துணையாக வரக்கூடிய ஒருத்தியை தேடத் தொடங்கியிருந்தது.

இதை யாரிடம் போய் சொல்லுவான்? அவனே அவனுக்குப் பெண் பார்ப்பானா? மாமா அதையெல்லாம் செய்வார் என்கிற நம்பிக்கை இல்லை. அவனே அவனுக்குப் பார்ப்பது என்றாலும் எப்படி? என்னென்னவோ நினைவுகள் இலக்கற்று அலைய தன்னை அறியாமலேயே அவன் விழிகள் உறக்கத்தில் மூடிக்கொண்டன.

தொடரும்
...
 
Status
Not open for further replies.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom