• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 5

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 5


மன்னார் நோக்கிப் பயணித்துக்கொண்டு இருந்தான் கிருபன். சாப்பிடுகிறாயா என்று கூடக் கேட்காத மாமியின் செயல் மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியிருந்தது. அந்தளவுக்கு ஏன் விலக்கி வைக்க வேண்டும்? அந்தளவுக்கு ஏன் வெறுத்து ஒதுக்க வேண்டும்? ஒருவனின் பிறப்பு ஒன்றே போதுமா அவனைப்பற்றிய மற்ற எதையும் யோசிக்காமல் விலக்கி வைக்க?

யாரிடமும் இறக்கி வைத்துவிட முடியாத அந்த அழுத்தத்தோடு மத்தியானம் உண்ணாமல் வீட்டுக்கு வந்து விழுந்து படுத்துவிட்டான். எழுந்து பார்த்தபோது மாலை ஆறுமணி ஆகியிருந்தது. பசி வயிற்றைப் பிடுங்கியது. வேக வேகமாக வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்று அனைத்தையும் கண்டதுண்டமாக வெட்டிப்போட்டு அது வதங்கியதா என்று கூடப் பார்க்காமல் மஞ்சள்தூள், மிளகுத்தூள், சின்னச் சீரகத்தூள், மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் போட்டுப் பிரட்டி, இரண்டு முட்டைகளை அடித்து ஊற்றி வறைபோல் செய்தான். இரண்டு பானை டோஸ்ட்டரில் போட்டு எடுத்து, முட்டை வறையோடு சேர்த்துச் சாப்பிட்டான்.

அப்போதுதான் நிதானமாகச் சிந்திக்க வந்தது. துளசிக்கு கலியாணம் பேசுறார் என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்துபோன மாமியும், அவன் பேசச் சந்தர்ப்பமே தராமல் வெளியே போன மாமாவும், அவன் அவனுடைய திருமணப் பேச்சை ஆரம்பித்துவிடுவான் என்றுதான் நழுவினார்களோ? அதன்பிறகும் மாமி அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாரே. உதட்டோரம் விரக்தியாய் வளைந்தது.

மேலே இருக்கிறவனுமா அவனைக் கைவிட்டுவிடுவான்?

வீட்டில் இருந்து, இதையெல்லாம் யோசிக்கப் பிடிக்கவில்லை. அரவிந்தனோடு எங்கேயாவது போவோமோ என்று யோசித்தபோதுதான் அவன் இன்று பிள்ளையார் பந்து விளையாடப்போவதாகச் சொன்னது நினைவு வந்தது.

அதைக் கேட்டபோது, இன்னுமே சின்னப்பிள்ளைகள் போல் இதென்ன விளையாட்டு என்று சிரிப்புத்தான் வந்தது கிருபனுக்கு. இவனையும் வா என்று கூப்பிட, “எந்தக் காலத்திலயடா இருக்கிறீங்க? இன்னும் அதெல்லாம் நினைவு இருக்கா என்ன?” என்று சிரித்தான் கிருபன். அம்மா அப்பா இருந்த காலத்தில் புழுதி மறைத்த காட்சியாக அந்த விளையாட்டு விளையாடிய நினைவு மாத்திரமே நினைவில் இருந்தது அவனுக்கு.

“நீ வா. வந்தா உனக்குத் தெரியும், இது அந்தக்காலத்து விளையாட்டா இல்ல இந்தக் காலத்து விளையாட்டா எண்டு!” என்றுவிட்டு, அரவிந்தன் சொன்ன கதையில் இவனுக்குச் சிரிப்பு வந்திருந்தது.

அவர்கள் பிள்ளையார் பேணி விளையாடும் நிலம் கமலியின் சீதனக்காணியாம். அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டால் அந்தக் காணியில் வீடு கட்டிவிடுவாளாம் என்று அவளின் நண்பர்கள் படை அவளுக்குத் திருமணம் ஆகக்கூடாது என்று நேர்த்தி வைத்திருக்கிறார்களாம். இல்லையோ, வருகிறவன் பணக்காரனாக இருக்க வேண்டுமாம். முக்கியமாக அவனுக்கு வீடு சொந்தமாக இருக்கவேண்டுமாம். அப்படியானவனுக்குத்தான் அவர்கள் அவளைக் கொடுப்பார்களாம்.

தகப்பன் அவளுக்கான வீட்டினைக் கட்ட ஆயத்தமானபோது கமலியும் தடுத்துவிட்டாளாம். ‘இப்ப கட்டுற வீடு நான் கலியாணம் கட்டுற காலத்தில பழைய டிசைன் ஆகிடும். கலியாணம் சரி வந்ததும் கட்டித்தாங்க, இல்லையோ காசை தாங்க எனக்குப் பிடிச்ச மாதிரி நான் கட்டிக்கொள்ளுறன்’ என்று தடுத்துவிட்டாளாம். அப்படிச்சொன்னதற்கு முக்கியம் காரணம் விளையாடுவதற்கு இடம் இல்லாமல் போய்விடும் என்பதுதானாம்.

சிறுபிள்ளைத்தனமான விசயமாகத் தோன்றினாலும், அவர்களுக்குள் இருந்த பிணைப்பு மனத்தைத் தொட்டது. மாலை ஆறு மணி ஆகியிருந்தது. எப்படியும் விளையாடி முடித்திருப்பார்கள் என்று கணித்து அவனுக்கு அழைத்தான்.

“டேய் மச்சான், வாடா மன்னார் கடல்ல போட்டிங் போவம். இப்ப போனா தூண்டிலும் போடலாம்.”

“அதுக்கு நாளைக்குப் போவமடா. இப்ப நீ வெளிக்கிட்டு இங்க வா.” என்று அழைத்தான் அவன்.

“டேய் என்னடா? இன்னுமா முடியேல்ல?”

“இன்னும் இருட்ட இல்லையே. நீ வா!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன்.

‘ப்ச்!’ அலுப்புடன் போனை மேசையில் போட்டுவிட்டுத் தலையைப் பிடித்துக்கொண்டான் கிருபன்.

விருட்டென்று எழுந்துபோன மாமா, அவரின் ஒற்றைப் பார்வையில் அறைக்குள் நழுவிய பெண்கள், ஒட்டுதல் இல்லாமலேயே பேசிய மாமி என்று அவர்களின் செய்கைகள் தான் மீண்டும் கண்முன்னே ஓடியது. அதற்குமேலும் அதைப்பற்றி யோசிக்கப் பிடிக்காமல் தலையை உதறிக்கொண்டு வேகமாக எழுந்து தயாராகி வெளியேறினான்.

அங்கோ, அந்தக் காணியில் அவர்களின் தெருவின் இளவட்டம் முழுவதும் நின்றது. அதில் இளம் பெண்களும் அடக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனான். ‘அடப்பாவி! வெக்கமே இல்லாம பெட்டையளோட விளையாடுறியேடா!’ என்று நண்பனைத் திட்டிக்கொண்டான்.

அதைவிட, எப்போதுமே நேர்த்தியாகப் பார்த்துப் பழகிய கமலி, இன்று குப்பத்து முனியம்மா போல், முழங்கால் வரை நின்ற தொள தொள ஜம்பர் ஒன்றுடன் அரவிந்தனின் பழைய டீ ஷர்ட் ஒன்றினையும் போட்டிருந்தாள். முடி எல்லாம் கலைந்து பறந்து அதைக் கொண்டையாக்கி அந்தக் கொண்டையுமே அவிழ்ந்து தொங்கி என்று படு கன்றாவியாக இருந்தாள். தேகம் முழுக்க மண்ணில் உருண்டவள் போன்று புழுதி அப்பிக்கிடந்தது.

வந்த இவனையெல்லாம் கவனிக்கும் நிலையிலேயே இல்லை அவள். வெகு மும்முரமாக, நண்பர்களுக்குள் உருவாகியிருந்த ஏதோ ஒரு பிணக்கைத் தீர்த்து வைத்துக்கொண்டிருந்தாள்.

“இனி சிரட்டையை ஆரும் கொண்டு ஓடுறேல்ல சரியா. போட்டுட்டுத்தான் ஓடவேணும். ரெண்டு தரப்புக்கும் இதுதான் ரூல். சரிதானே. இனி வாங்கோ.” என்று அழைத்து வந்தாள்.

மீண்டும் விளையாட்டு ஆரம்பமானது. ஒரு ஆறு வயது சிறுவனை இளைப்பாற அமர்த்திவிட்டு அவனுக்குப் பதிலாக, “நீ வாடா!” என்றான் அரவிந்தன்.

எதிரணியில் இருப்பவர்கள் எல்லோருமே பெரும்பாலும் இளம் பெண்கள். அவர்களோடு எப்படி? அவர்கள் வேறு இவனையே பார்ப்பது தெரிய உள்ளுக்குள் நெளிந்தான் கிருபன்.

“நல்ல உடுப்பு மச்சி.” என்று உடையைச் சாட்டி அவன் தயங்க, “நாங்க மட்டும் கூடாத உடுப்பா போட்டிருக்கிறம். ஒண்டுக்கு நாலு தரம் ரின்சோ போட்டு நல்ல வடிவா அலம்பினா சரி!” என்று பட்டென்று பதில் சொன்னாள், கமலி.

பெரும் கூச்சம் அவனுக்கு. பிள்ளையார் பந்து விளையாடும்போது எதிரணியைத் துரத்த வேண்டும். பந்து கையில் கிடைத்தால் சிரட்டைகளை அடுக்கும் அவர்களை அடித்து அவுட்டாக்க வேண்டும். இதையெல்லாம் எப்படிப் பெண்களிடம் செய்வது? அதுவும் பெண்களைப் பின்னால் துரத்துவதை நினைக்கவே அவனுக்கு முகம் சிவந்துவிடும் போலிருந்தது. அவர்கள் அவனைத் துரத்தும் நிலை வந்தால்?

ஆனாலும், வேறு வழியில்லை. இனியும் மறுத்தால் இந்தப் பெண்கள் அவனைக் கேலி செய்தே ஒருவழியாக்கி விடுவார்கள். இப்போதே அவனைக் குறுகுறு என்று பார்க்க ஆரம்பித்து இருந்தார்கள். சும்மா விளையாடுவதுபோல் போக்குக் காட்டுவோம் என்று வந்து நின்றுகொண்டான்.

ஆரம்பத்தில் உடம்பு வளைந்து கொடுக்கமாட்டேன் என்று இறுகி நின்றது. பெண்களின் முன்னே ஓடுவது ஒருமாதிரி இருந்தது. ஆயினும் தேங்கி நிற்க முடியாமல் அந்த விளையாட்டே அவனை விரட்டிற்று. போகப்போக, ஆட்கள் சிரட்டையை அடுக்கப் பார்ப்பதையும், பந்து எறிந்ததும் சிரட்டையைப் போட்டுவிட்டு தலைதெறிக்க அவர்கள் ஓடுவதையும், சில நேரங்களில் விழுந்து எழும்புவதையும் கண்டு சிரித்துச் சிரித்து வயிறே வலித்தது அவனுக்கு. அதைவிட, அவனே அறியாத ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்ளத் தன்னை மறந்து அந்த விளையாட்டில் ஐக்கியமாகிப்போனான்.

ஒருமுறை கமலி அடுக்கப்பார்க்க, அவன் பந்தை எறிய அவள் எழுந்து ஓடியபோதும் சரியாகச் சென்று அவளின் காலில் பட்டது பந்து.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“ஹேய் மச்சி சூப்பர் டா!” என்று ஓடிவந்து அரவிந்தன் கட்டிக்கொண்டாலும், திகைத்துப்போனான் கிருபன்.

சும்மா குருட்டுப் போக்கில் எறிய அது இலக்குத் தவறாமல் அவளைத் தாக்கும் என்று அவன் நினைக்கவே இல்லை.

“என்னையா அவுட் ஆக்கினீங்க, மாட்டுவீங்க தானே, வச்சு வெளுக்கிறன்!” காலைத் தடவி விட்டபடி கருவியவளின் பேச்சில் சின்ன அதிர்வு தாக்க அவளிடம் கண்ணால் மன்னிப்பை யாசித்தான் கிருபன்.

அதன்பிறகு நடந்த விளையாட்டு முழுவதிலும் எதிரணியில் பலர் இருந்தாலும் அவளின் இலக்கு அவன் மட்டுமே என்றாகிப்போனான். அவனும் லேசுப்பட்டவன் அல்ல என்று அவளின் பந்துக்கு அகப்படாமல் நீளக்கால்களால் தப்பித்து ஓடி நிரூபித்தான்.

அவள் தன்னைத்தான் குறிவைத்திருக்கிறாள் என்று கண்டுபிடித்து அவளைத் தானும் குறிவைத்துத் தாக்கினான் கிருபன். ஜீன்ஸ் கால்களை முழங்கால் வரை மடித்துவிட்டுட்டு முகம் முழுக்கச் சிரிப்புடன் அவளை விரட்டி விரட்டி அடித்தான். சந்தர்ப்பம் அமைகிறபோது அவளும் விடாமல் தாக்கினாள்.

உருண்டு ஓடும் பந்தைக் கண்டு பிடிப்பது சிரமம் என்கிற அளவுக்கு இருட்டியபிறகே அவர்களின் விளையாட்டு முற்றுப் பெற்றது. இதை இத்தனை நாட்களாக விளையாடாமல் விட்டுவிட்டோமே என்று நினைக்கிற அளவுக்குக் கிருபனுக்கு விளையாட்டுப் பிடித்துப் போயிற்று. வியர்த்து, களைத்து, கால்களில் மெல்லிய உளைவு தெரிந்தாலும் மனம் உற்சாகத்தில் துள்ளிக்கொண்டிருந்தது. என்னவோ சிறு வயது காலத்திற்கே போன உணர்வு.

அதே தெரு என்பதில் நிமிடத்தில் மற்றவர்கள் தத்தம் வீடுகளுக்கு ஓடிவிட, “மச்சி! வீட்டுக்கு வாறியா?” என்றுகொண்டு தன் பைக்கை கொண்டுவந்து இவனருகில் நிறுத்தினான் அரவிந்தன்.

“இல்லயடா. நான் குளிக்கவேணும். கனகாலத்துக்கு(கன- நிறைய) பிறகு நல்லா வேர்த்திருக்கு!” லாவகமாகத் தன் பைக்கில் ஏறி அமர்ந்தபடி சொன்னான் கிருபன்.

இப்போது அவன் தேகம் முழுவதிலும் கூட புழுதி அப்பிக் கிடந்தது. பார்த்து சந்தோசமாகச் சிரித்துக்கொண்டான்.

“அப்ப நான் போறன். குளிச்சிட்டு உன்ர வீட்டுக்கு வாறன். பிளே ஸ்டேஷன் விளையாடுவம்.” என்றுவிட்டுத் தங்கையைத் திரும்பிப் பார்த்தான் அரவிந்தன்.

அவள் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்து காலைத் தேய்த்துவிட்டுக்கொண்டு இருந்தாள்.

“வெளிக்கிடாம இன்னும் என்ன செய்றாய்? இருட்டுது பார்!”

“கால் நோகுது அண்ணா. சுளுக்கிட்டுதா எண்டு பாக்கிறன். நீ போய்க் கெதியா குளி. நான் அபிய அவன்ர வீட்டுல விட்டுட்டு வாறன். நான் வரேக்க பாத்ரூம் ஃபிரியா இருக்கோணும்!” காலை உருவி விட்டுக்கொண்டே சொன்னாள் கமலி.

அரவிந்தன் புறப்பட்டுவிட அவனின் பின்னால் கிருபனும் போக நினைத்தான். முடியாமல் கால் சுளுக்கிய விடயம் அவனைத் தொந்தரவு செய்தது. அவன் தானே அவளுக்கு அடித்தது. அதனால்தானோ? அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் நிமிர்ந்தாலாவது ஏதாவது கேட்கலாம் என்று நிற்க, அவள் இவனைக் கவனிக்கவில்லை. மும்முரமாகக் காலைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள்.

அதற்குமேல் அவளோடு தானும் நிற்பது சரியல்ல என்று பட, பைக்கை ஸ்டார்ட் செய்தான். அந்தச் சத்தத்துக்கு நிமிர்ந்தாள் கமலி. அவன் பைக்கைத் திருப்பியபோது முழங்கையில் சிவப்பாக இரத்தம்.

“அச்சோ.. என்ன இது ரெத்தம்?” அவளின் பதற்றத்தில் வேகமாகத் திரும்பி அவளின் காலைப் பார்த்தான் அவன்.

“என்ர கால்ல இல்ல. உங்கட கைல!”

அவன் இரண்டு கையையும் திருப்பிப் பார்க்க, வலது முழங்கையில் இரத்தம் வந்துகொண்டிருந்தது. அட! இதை எப்படிக் கவனிக்காமல் விட்டோம்? பனையின் அருகால் ஓடியபோது ஏதோ உரசியதுபோல் இருந்ததுதான். தப்பிக்கும் மும்முரத்தில் அதைக் கவனிக்கவில்லை அவன்.

அவனருகே ஓடிவந்தாள் கமலி. “இவ்வளவு ரெத்தம் வாற அளவுக்கு எங்கபோய் விழுந்தீங்க?” அவளின் கேள்வியில் அவனுக்கு வெக்கமாகப் போய்விட்டது. அவன் என்ன குழந்தைப்பிள்ளையா விழுந்து காயம் வாங்க?

“அது ஒண்டுமில்ல. சின்னக் காயம்தான்!” என்றபடி காயத்தை மறைக்க முனைந்தான்.

“விசரா உங்களுக்கு! காட்டுங்க, ஒரு விரல் நீட்டுக்கு கீறி இருக்கு.” என்றபடி அவனது கையைப் பற்றிக் காயத்தைப் பரிசோதித்தாள் அவள்.

“இல்ல விடுங்கோ.” ஒரு பெண்ணின் கை பட்டதில் அவனுக்குக் கூச்சமாக இருந்தது.

“டேய் லூசாடா நீ. ரெத்தம் வருது எண்டு சொல்லுறன். விடுங்கோ விடுங்கோ எண்டுகொண்டு.. என்ன?” அவளின் அதட்டலில் திகைத்துப்போனான் கிருபன். என்ன சொல்வது என்று தெரியாமல் அவளைப் பார்த்தான்.

அவனைக் கவனிக்கும் நிலையில் இல்லை கமலி. காயம் சற்றே ஆழமாக இருந்ததில், “கொஞ்சம் பொறுங்கோ. கழுவிவிடுவம்!” என்றுவிட்டுத் தண்ணீர் எடுக்க ஓடினாள்.

போகிறவளையே மெல்லிய அதிர்வுடன் பார்த்திருந்தான் கிருபன். சற்றே அதிகமாக எரிந்ததுதான் என்றாலும் அவள் பதறுகிற அளவுக்கெல்லாம் ஒன்றுமே இல்லை. அவனும் இறங்கி குழாயடிக்குப் போய்க் கழுவிக்கொள்ளலாம் தான். ஆனால், அசையக்கூட முடியாதவனாகத் தனக்கான அவளின் துடிப்பை இமைக்க மறந்து பார்த்திருந்தான்.

ஒரு போத்தலில் தண்ணீரைக் கொண்டுவந்து இவனின் முழங்கை பக்கத்தை மென்மையாகத் தேய்த்துத் தேய்த்து கழுவினாள். “நொந்தா(வலித்தால்) சொல்லுங்கோ!” என்றாள் கனிந்த குரலில்.

நன்றாகவே எரிந்தது. ஆனாலும், அசையாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் கிருபன்.

சொந்த மாமா விருட்டென்று எழுந்து போக யாரோ ஒருத்தி இந்தப்பாடு படுகிறாள்.

“நீங்க என்ன சின்னப்பிள்ளையா? விளையாட வந்து காயம் வாங்கி வச்சு இருக்கிறீங்க. நாங்க எல்லாம் எத்தனை வருசமா விளையாடுறோம். ஒரு சின்னக் கீறல் கூட இல்ல.” அவன் அனுபவித்தறியாத ஏதோ ஒன்றை அவனுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தாள், அவள்.

“எருமை மாடு மாதிரி வளந்ததுதான் மிச்சம். கவனமா விளையாட தெரியாதா.”

அவனுடைய உணர்வுகள் பொங்கிக்கொண்டு இருந்தது. அவள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் கையை மட்டும் கொடுத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

வாய் அவனைத் திட்ட, கை இரத்தத் திட்டுகளோடு காய்ந்துபோயிருந்த காயத்தை மிருதுவாகச் சுத்தப்படுத்தியது. “வெண்டிக்காயின்ர அளவுக்கு கீறி இருக்கு. இதுல சின்னக் காயமாம். மண்டையிலயே குட்டவேணும் உங்களுக்கு!” அம்மாவின் பாசத்தை அவளின் கோபத்தில் உணர்ந்தபோது, அவன் விழிகளில் மெல்லிய நீர் படலம்.

ஒன்றுமே சொல்லாமல் நிற்கிறான் என்று நிமிர்ந்தவள் கசிந்திருந்த விழிகளைக் கண்டு மனம் கசிய, "நல்லா நோகுதா?" என்றாள். “வீட்டுக்கு வாங்கோ மருந்து போட்டு விடுறன். அப்பிடியே சாப்பிட்டு போகலாம், சரியா?” என்றவளின் கனிந்த அன்பில் முற்றிலுமாக உடைந்து போனான் அவன்.

“என்னை கல்யாணம் கட்டுறியா?” அவனின் உத்தரவு இன்றியே கேட்டிருந்தது அவனது உதடுகள்.

திகைத்து நின்றுவிட்டாள் கமலி. அதுவும் நொடி நேரம் தான். கையில் இருந்த தண்ணீர் போத்திலாலேயே படார் என்று அவனுக்கு அடித்தாள். “அண்ணான்ர பிரென்ட் எண்டு நம்பிப் பழகினா என்ன கதைக்கிறீங்க? பாவம் எண்டு பாத்தா பல்லைக் காட்ட சொல்லுவீங்களோ? ஓடிப்போயிடுங்க இல்ல என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது!” நொடியில் கோபத்தில் சிவந்துவிட்ட முகத்துடன் சீறினாள் அவள்.

அவமானத்தில் முகம் சிவந்து, கருத்துப் போனது கிருபனுக்கு. ‘நீ எனக்கு அம்மா மாதிரி தெரிஞ்சியேடி’ என்று எப்படிச் சொல்வான். அவனளவில் மனதில் பட்டத்தைப் பட்ட நொடி வாய்விட்டுச் சொன்னதே இமாலய சாதனை. “சொறி!” என்று உதடுகள் முணுமுணுக்க அவனுடைய பைக் அங்கிருந்து சீறிக்கொண்டு பறந்தது.


கருத்திட
 
Status
Not open for further replies.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom