You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

அத்தியாயம் - 6

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 6


இரண்டு மாதங்கள் எப்படி ஓடிற்று என்று தெரியாமலேயே ஓடிப்போயிற்று. இன்னுமே தனக்குள் சுருங்கிப் போனான் கிருபன். அவர்களின் வீட்டுப் பக்கம் போகவும் இல்லை அவளைக் காணவும் இல்லை. இன்று வரையிலும் அரவிந்தனின் முகம் பார்க்கத் தடுமாறினான். என்ன என்ன என்று விசாரித்தவனுக்கு மாமா வீட்டுக்குப் போய்வந்ததைக் காரணமாக்கினான்.

எதையும் தூண்டித் துருவும் பழக்கம் அரவிந்தனுக்கு இல்லையாதலால் நண்பனை அப்படியே ஏற்றுக்கொண்டு அவனுக்கு இதமாக நடக்கமுயன்றான். அது இன்னுமே அவனைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கிற்று.

அவர்கள் வீட்டிலிருந்து வராமல் நின்றுவிட்ட பலகாரங்கள் அவளின் தீராத கோபத்தைச் சொல்லியது. எப்படியாவது மன்னிப்புக் கேட்க முடிந்தால்? அவனே எதிர்பாராமல் நடந்துவிட்ட பிசகு என்று சொல்லிவிட முடிந்தால்? அது தன்னால் முடியுமா என்கிற சந்தேகமும் கூடவே வந்து நின்றது.

அரவிந்தனின் அன்னை சுகுணா மட்டும், சோற்றை ரைஸ் குக்கரில் போட்டுவிட்டுச் சாப்பிடட்டும் என்று அவ்வப்போது கறி கட்டிக் கொடுத்துவிடுவார். அதுவே, அவள் மற்றவர்களிடம் நடந்ததைச் சொல்லவில்லை என்று உணர்த்திற்று.

‘அண்ணான்ர பிரென்ட் எண்டு பாத்தா என்ன கேக்கிறீங்க?’ என்று கேட்டாளே ஒரு கேள்வி. இப்போது நினைக்கையிலும் மனதளவில் குன்றினான். அவளின் குறும்பை, அதட்டலை, உருட்டலை, ரசனையை, கைப்பக்குவத்தை எல்லாம் ரசித்திருக்கிறானே தவிர அவளை ரசித்தது இல்லை. ஒரு இளம் பெண் பிள்ளையின் கண்களை நேராகப் பார்ப்பதே அவனுக்கான மிகப்பெரிய சவாலாக இருக்கையில் அவளை எப்படிப் பார்ப்பான்? எப்படி ரசிப்பான்?

ஒதுங்கி ஒதுங்கி மட்டுமே போனவன் ஏன் அப்படிக் கேட்டான்?

மாமா வீட்டுக்குப் போய்வந்ததில் ஆழமாகக் காயப்பட்டிருந்த மனது, எனக்கு யாருமே இல்லையா என்று தனக்குள் அழுதுகொண்டிருந்தபோது, அம்மாவைப்போலவே அக்கறையும் கோபமுமாக அவனைக் கவனித்தவளை காலத்துக்கும் தன்னுடனேயே வைத்திருக்கும் உந்துதலில் கேட்டுவிட்டது.

அதைக் கேட்டதும் எவ்வளவு கேவலமாகப் பார்த்தாள். அல்லும் பகலும் நிம்மதியாக இருக்கவிடாமல் அவளின் அந்தப் பார்வை அவனைத் துரத்தியது. இன்றைக்கும் வேலை முடிந்ததும் அரவிந்தனின் கண்ணில் படாமல் நழுவி பைக்கை எங்கு என்றில்லாமல் விரட்டினான்.

போய்வருவதற்கு என்று அவனுக்கு இருந்த ஒரேயொரு வீட்டைக்கூட, தன் செய்கையால் கெடுத்துக்கொண்டு அநாதரவாக வீதியில் அலைகிறான். அமைதி வேண்டி மன்னார் மடுமாதா ஆலயத்துக்கு வந்தவன் ஒரு மெழுகு திரியைக் கொளுத்திவிட்டு அப்படியே வாங்கிலில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான். ஆறாத காயத்திலிருந்து வடியும் நீரினைப்போல கண்ணோரஙகள் மெல்ல மெல்ல கசிந்தன.

யாரிடமிருந்தும் ஆறுதல் கிடைக்காது என்கிற உண்மை சிறு வயதிலேயே புரிந்துவிட்ட படியினால் இதுவரைக்கும் யாரின் அருகாமையையும் அவன் தேடியதில்லை. இழப்பை எண்ணி வருந்தியதில்லை. அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி அன்னை தந்தையின் நினைவு வந்தால் கூட எதையாவது செய்து மாற்றிவிடுவான். இன்றோ எதுவுமே முடியாமல் என்ன காரியம் செய்துவிட்டேன் என்று மனம் அரித்துக்கொண்டே இருந்தது.

அதட்டி உருட்டி வீட்டுக்குள் அழைத்த அவள், சாப்பிட்டு முடிச்சிட்டுத்தான் போகவேணுமென்று மிரட்டிய அவள், சிம்ரன் என்று அழைத்து அவனைக் கூச்சப்பட வைத்த அவள் என்று அவர்களின் வீட்டுக்கு அவனை அந்நியமாக உணரவைக்காமல் உரிமையாக வந்துபோகச் செய்ததில் அரவிந்தனைக் காட்டிலும் அவளின் பங்குதானே அதிகம். அப்படியானவளிடம் போய்.. ப்ச்! கண்களைத் திறந்து மாதாவையே பார்த்திருந்தான். மடுவில் வீற்றிருக்கிறவள் அன்னைக்கும் மேலான அன்னையல்லவா. தன் கருணையினால் அவனை அருள் பாலித்தாள்.

மெல்ல மெல்ல மனம் அமைதி அடைந்தது. நடந்தவை அனைத்தும் முடிந்தவைதான் என்கிற உண்மை புரிந்தது. எதன் காரணத்துக்காகவும் வாழ்க்கை அதனிடத்தில் தேங்கி விடுவதில்லையே. அப்பா இல்லை என்று அறிந்தபோதும் கடந்து வந்தான் தான். எல்லாமாக இருந்த அம்மா இறந்ததையும் அந்தப் பிஞ்சு வயதிலேயே தாங்கிக்கொண்டான் தான். மாமா வீட்டுக்கு நான் பாரமாக இருக்கிறேன் என்று தெரிந்துமே அங்கேயே இருந்து அதையும் கடந்தான் தான். அப்படியே இதையும் கடக்க வேண்டியதுதான். கடப்பான்! வாழுவான்! காலம் அதைச் செய்யும்.

ஆனால், ஆசைப்பட்ட வாழ்க்கை அமையுமா? நம்பிக்கை இல்லை அவனுக்கு! ஒரு பெரு மூச்சுடன் எழுந்து அன்னையை வணங்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.

வரும்போதே இடியப்ப பார்சல் ஒன்றையும் வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிட்டு குளித்துவிட்டு வந்தான். இப்போதெல்லாம் அவனுடைய படுக்கை, இருப்பு, ஓய்வெடுப்பு, வேலை பார்ப்பது எல்லாமே அந்த ஹாலின் தரையில் இருக்கும் மெத்தை தான். அதிலேயே அமர்ந்து டிவியைப் போட்டுவிட்டு பார்சலைப் பிரித்தான்.

தொலைக்காட்சியில் பாதிக் கவனமும் சாப்பாட்டில் மீதிக்கவனமுமாக இருக்கையில் அவன் வீட்டு பெல்லை யாரோ அழுத்தினார்கள். யாரோ என்ன அரவிந்தனாகத்தான் இருக்கும். இன்றைக்கு மனம் அளவுக்கதிகமாகக் குழம்பிப்போய் இருந்ததில் அவனிடமிருந்து தப்பித்து ஓடி வந்திருந்தான். தேடிவந்திருக்கிறான் என்று விளங்கிற்று. அவனுடைய அந்த அக்கறை காயப்பட்டிருந்த மனதுக்கு இதம் சேர்க்க எழுந்துபோய்க் கதவைத் திறந்தான்.

“வா…” என்று ஆரம்பித்தவனின் பேச்சு அரவிந்தனின் அருகிலேயே நின்றவளைக் கண்டதும் அப்படியே நின்றுபோயிற்று. தன்னை மறந்து தவிப்புடன் அவளையே பார்த்தான்.

“நந்தி மாதிரி நடுவிலேயே நிக்காம தள்ளுடா!” என்று தள்ளியபடி உள்ளே வந்தான் அரவிந்தன்.

அவனது கோபத்தை உணர்ந்தாலும் அதைவிட அவளின் முன்னால் தன்னை நிலைப்படுத்துவதே பெரிய விடயமாக இருக்க, “சொறிடா. வா மச்சான். வா...ங்கோ!” என்று அவளையும் அழைத்தான்.

வீட்டுக்குள் வந்தவளின் பார்வை அவனை ஆராய்ந்து தரையில் பிரித்தபடி கிடந்த பார்சலில் தங்கவும் வேகமாக அதைத் தூக்கிக்கொண்டுபோய் உள்ளே வைத்துவிட்டு கையைக் கழுவியவனுக்குள் பெரும் போராட்டம்.

ஏன் வந்திருக்கிறாள்? ஏதாவது சொல்லுவாளோ? சட்டையைப் பிடிப்பாளோ? அரவிந்தன் வேறு நிற்கிறானே என்று பலதும் மண்டைக்குள் ஓட மெலிதாக வியர்க்க ஆரம்பித்து இருந்தது.

“தேத்தண்ணி ஊத்தவாடா?” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தான்.

“நீயும் உன்ர தேத்தண்ணியும்! இங்க வா முதல். ஒபீஸ்ல ஃபோனை மறந்து வச்சிட்டு வாற அளவுக்கு அவசரமா எங்க ஓடினனி?” என்று அரவிந்தன் கேட்டபோதுதான் அவனுக்கே அது உரைத்தது.

“ஓ..! மறந்திட்டன் போல. மேசையில வை வாறன்.” என்றுவிட்டு வேகமாகக் கெட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொதிக்க விட்டான்.

சும்மா கொறிக்க என்று வாங்கி வைத்திருந்த மிக்ஸரை இரண்டு குட்டி பிளேட்களில் போட்டு தேக்கரண்டி இரண்டையும் அதில் ஓரமாக வைத்தான். அப்படியே ஒரு லெமன் பஃப் பிஸ்கட் பக்கெட்டை உடைத்து இன்னொரு தட்டில் அடுக்கினான். எல்லாவற்றையும் ஒரு ட்ரேயில் எடுத்துவைத்து கொண்டுவந்து அவர்களுக்கு முன்னே இருந்த டீப்போவில் வைத்துவிட்டு, “ரெண்டுபேரும் எடுத்துச் சாப்பிடுங்கோ.” என்றான் பொதுவாக.

அவர்களின் வீட்டுக்குப் போனால் அவளும் இப்படித்தானே பார்த்துப் பார்த்துக் கவனிப்பாள். இயலாமையோடு அவளைப் பார்க்க அவளும் இவனைத்தான் கவனித்துக்கொண்டு இருந்தாள். வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டான் கிருபன். ஃபோனை எடுத்துச் சார்ஜில் போடுவதுபோலச் சமாளித்துவிட்டு வந்து தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தான்.

மிக்ஸர் தட்டை எடுத்துக்கொண்டாள் கமலி. விழிகள் அவன் வீட்டை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்தது.

“பிறகு? ரெண்டுபேரும் எங்க போயிட்டு வாறீங்க?” ஒன்றுமே நடவாததுபோல் காட்டிக்கொள்ள முயன்றான், கிருபன்.

“கமலி கேக்குக்குச் சாமான் வாங்கவேணும் எண்டு சொன்னவள். அதுதான் கூட்டிக்கொண்டு போயிட்டு வாறன். வேல முடிஞ்சும் ஃபோன தர வந்தனான். நீ இல்ல. அதுதான் இப்ப திரும்ப வந்தனான். சொல்லாம கொள்ளாம போற அளவுக்கு உனக்கு என்ன அலுவல்?” என்று, அப்போதும் தீராத கோபத்துடன் கேட்டான் அரவிந்தன்.

“இல்ல மச்சான், அது வேலை முடியிற நேரம் தான் மாமா கடைக்குச் சாமான் வாங்க மன்னார் வந்திருக்கிறார் எண்டு தெரிய வந்தது. அதுதான் அவசரமா போயிட்டன்.” என்று ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, தொடர்ந்து அரவிந்தனிடம் இருந்து வரப்போகிற கேள்விகளைத் தவிர்க்க அவசரமாக எழுந்து, “இருங்கோ, தேத்தண்ணி கொண்டுவாறன்!” என்று உள்ளே நடந்தான்.

அவள் தன்னோடு ஏதாவது பேசமாட்டாளா என்று மனம் ஏங்கிற்று. அவளின் குறு குறு பார்வைக்கான அர்த்தத்தை மனது தேடிற்று. முதன் முதலாக அவனைப் பார்த்தபோது கூட என்ன விசயம் என்று அதட்டியவள் இன்று அமைதியாக இருந்து அவனைத் தடுமாற வைத்துக்கொண்டிருந்தாள்.

சிந்தனை அவளிடம் இருக்க, கைகள் தேநீரை ஊற்றியது. சிங்குக்குள் டொங் என்று பாத்திரம் விழுந்த சத்தத்தில் வேகமாகத் திரும்பிப் பார்த்தான். கமலி நின்றுகொண்டு இருந்தாள். மிக்ஸர் சாப்பிட்டு முடித்த தட்டும் தேக்கரண்டியும் சிங்குக்குள் விழுந்த வேகமே அவளின் கோபத்தைச் சொல்ல, அவன் விழிகள் அவனே உணராமல் அவளில் நிலைத்தன.

“என்ன பார்வை?”

“இல்ல. ஒண்டும் இல்ல.”

“பயந்தவன் மாதிரி பம்முறது. ஆனா, கதைக்கிறது எல்லாம் தேவையில்லாத கதைகள் என்ன?”

அவன் முகம் கருத்துப்போனது. “சொறி… அது..” என்றபோதே அவனை நெருங்கி வந்தாள் அவள். பதட்டத்துடன் வேகமாக விலகினான் அவன். அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவன் ஊற்றி வைத்திருந்த தேநீர் கோப்பைகளில் ஒன்றை எடுத்து ஒருவாய் பருகிப் பார்த்தாள்.

ஏதாவது சொல்வாளாக்கும் என்று தன்னை மீறிய ஆவலோடு பார்த்தான். அவளோ கோப்பையை எடுத்துக்கொண்டு சமையலறையை விழிகளால் ஒரு சுழற்றுச் சுழற்றினாள். அப்படியே வந்து மூடியிருந்த பாத்ரூம் கதவைத் திறந்து பார்த்தாள். பெட் ரூம் திறந்தே இருக்க விறாந்தையில் நின்று எட்டிப் பார்த்துக்கொண்டாள்.

அப்போதும் தொடர்ந்த அவளின் மௌனத்தில் அவன் மனது ஏமாற்றத்தில் சுருண்டு போயிற்று! காட்டிக்கொள்ளாமல் அவனுக்கும் அரவிந்தனுக்குமான கோப்பைகளை கட்டு ஒன்றில் எடுத்து வைத்தான்.

சிறுவயதில் இருந்து தன்னுடைய வேலைகளைத் தானே செய்து பழகியதில் வீடு எப்போதுமே ஒழுங்கு குலையாமல் இருக்கும் என்பதில் அவனுக்குள் ஒரு நிம்மதி. இல்லையோ அதற்கும் அவனை எப்படியெல்லாம் நினைப்பாளோ யாருக்குத் தெரியும்?

அரவிந்தனுக்கு ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டு அவனும் ஒன்றை எடுத்துக்கொண்டு அருந்த, அவள் மீண்டும் கிச்சனுக்குள் சென்று ஆராய்வது தெரிந்தது.

‘என்னத்த பாக்கிறாள்? அப்பிடி என்ன கிடக்கு அங்க?’ அரவிந்தனோடு பேசிக்கொண்டிருந்தாலும் கவனம் முழுவதும் அவளிடமே இருந்தது.

இங்கே அரவிந்தனும் ஏன் வீட்டுக்கு வருவதில்லை, விளையாட வருவதில்லை, முன்னர்ப் போன்று தன்னோடு பழகுவதில்லை என்று கேள்விகளாகக் கேட்டுத் தாளித்துக்கொண்டிருந்தான். அவனைச் சமாளிப்பது பெரும் பாடாக இருந்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“உன்ர போக்கு வரவர சரியில்ல மச்சி. எண்டைக்கு என்னட்ட மாட்டுறியோ அண்டைக்கு முதுகில டின் கட்டுவன்!” என்று முறைத்துவிட்டு எழுந்தான், அரவிந்தன்.

“போவமா கமலி? இருட்டிட்டுது.” என்று குரல் கொடுக்க, தன் கோப்பையை அங்கேயே வைத்துவிட்டு வந்து கைப்பையை எடுத்துக்கொண்டாள், கமலி.

கிருபனின் மனதில் ஒருவித தவிப்பு. போகிறபோதாவது போய்வருகிறேன் என்பதுபோல் ஒரு பார்வையையேனும் வீசமாட்டாளா என்று பார்த்தான்.

அவள் திரும்பியும் பாராமல் அரவிந்தனின் பைக் அருகே சென்று நின்றுகொண்டாள்.

மனதில் பாரத்துடன் அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குள் வந்தபோது வெறிச்சோடிப்போயிருந்தது வீடு. அவள் நின்றது, நடந்தது, பார்த்தது எல்லாம் காட்சிகளாக விரிந்தன. கிட்சன் சென்று பார்த்தான். அவள் பயன்படுத்திய மிக்ஸர் தட்டு மற்றும் தேநீர் கோப்பையைக் கழுவி வைத்திருந்தாள். நெஞ்சுக்குள் என்னவோ அடைக்கச் சாப்பிடப் பிடிக்காமல் வந்து மெத்தையில் விழுந்தான்.

திருமணத்துக்கு கேட்டபோது அவன் மனதில் அவள் இருக்கவில்லை. ஆனால் இன்றைக்கு? அவளைப் பற்றி நினைத்து நினைத்தே அவனின் நெஞ்சமெங்கும் நிறைந்துபோயிருந்தாள் அவள்.


……………


வீட்டுக்குச் செல்கிறபோதும் அமைதியாக வந்த கமலியைக் கவனித்துவிட்டு, “அவனோட உனக்கு ஏதும் சண்டையா?” என்று கேட்டான் அரவிந்தன்.

இதைக் கமலி எதிர்பார்த்தாள். எனவே, “இதென்ன திடீர் கேள்வி?” என்று தயக்கமற்று வினவினாள்.

“வழமையா அவனோட சண்டைக்கு நிப்பாய். இண்டைக்குச் சத்தமே இல்ல. அவனும் உன்ன உன்ன பாத்த மாதிரி இருந்தது. இப்ப அவன் எங்கட வீட்டை வாறதும் இல்ல. என்னட்ட இருந்தும் ஒதுங்கிற பீல். ஏன் எண்டு கேட்டா மழுப்புறான். உனக்குத் தெரியுமா? அவன்ர மாமா குடும்பம் அவனோட கதைக்கிறதே இல்ல. அத சொன்னதே அவன்தான். இண்டைக்கு மாமா வந்தவராம், இவன் போனவனாம் எண்டு பொய்யை சொல்லுறான். என்ன எண்டாலும் மறைக்காம சொல்லு கமலி.” மிதமான வேகத்தில் வண்டியைச் செலுத்தியபடி விசாரித்தான், அரவிந்தன்.

“அவனோட எனக்கு என்ன சண்டை வரக்கிடக்கு? அப்பிடியே வந்தாலும் நான் என்னத்துக்குப் பயப்பட? என்னால முடியாத ஒரு நிலை வந்தா உன்னட்டையும் அப்பாட்டையும் தானே வருவன்.” என்று பதில் சொன்னாள் கமலி. அது உண்மையும் கூட. “இப்ப நீ கேக்கிற மாதிரி நான் அமைதியா இருந்ததாலயே அவனும் என்னை என்னைப் பாத்திருக்கலாம். அவனுக்கு ஒருத்தரும் இல்லை எண்டது எனக்குத் தெரியும் தான் அண்ணா. எண்டாலும் அங்க அப்பிடி தனியா அவனைப் பாத்தது மனதுக்குச் சரியில்ல. அதுவும், நிலத்தில விரிச்சுக்கிடந்த சாப்பாட்டுப் பார்சலை பாத்தது ஒரு மாதிரி இருந்தது. என்ன இருந்தாலும் கடவுள் ஒருத்தரையும் இப்பிடி தண்டிக்கக் கூடாது!” என்றாள் மனதில் இருந்து.

அமைதி, கூச்ச சுபாவம், யாருடனும் கலகலப்பாகப் பழக மாட்டான், பாவம் என்றுதான் அதுவரை எண்ணியிருந்தாள். யாருமில்லை என்பதில் ஒருவித பரிதாபமும் இருந்தது. அப்படியிருக்க அன்று அவன் அப்படிக் கேட்டதில் கமலிக்கும் மிகுந்த கோவமே. வரட்டும் கிழித்து அனுப்புகிறேன் என்று கருவிக்கொண்டு இருக்க அவன் வரவேயில்லை.

நாட்கள் வேகமாக நகர்ந்து, வாரமாகி, மாதமாகி அதுவும் நகர்ந்துகொண்டு இருக்கையில் சற்றே நிதானத்துக்கு வந்து இருந்தாள். அறிவுகெட்டவன் கேட்டா நான் ஏன் அதைத் தூக்கிச் சுமக்கவேணும் என்று அதை ஒதுக்கியும் இருந்தாள். கூடவே, கேட்டுவிட்டு தன் கேள்வியில் தானே அதிர்ந்து நின்ற அவன் தோற்றமும், கேட்டது பிழை என்று புரிந்து உடனேயே அவன் கேட்ட மன்னிப்பும் நடந்ததை ஒதுக்க உதவிற்று. அவனே உணர்ந்துவிட்ட ஒன்றை மீண்டும் எதற்குப் பேச என்று விட்டுவிட்டாள்.

இருந்தபோதிலும், அவன் காதலைச் சொல்லவில்லை; கலியாணத்துக்குத்தான் கேட்டான் என்கிற விடயம் மனதின் ஏதோ ஒரு மூலையில் நின்று நிரடிக்கொண்டே இருந்தது. ‘எனக்கு உன்னை பிடிச்சிருக்கு’ என்றோ, ‘நான் உன்ன விரும்புறன்’ என்றோ சொல்லவில்லை. அநாதரவான குழந்தை ஒன்று என்னை ஏந்திக்கொள்ளேன் என்று இறைஞ்சுவதுபோல், ‘என்னைக் கல்யாணம் கட்டுகிறாயா’ என்றுதானே கேட்டான். அது நினைவு வருகிற போதெல்லாம் அவள் மனது பிசைந்தது.

இன்றைக்கும், கடைக்குப் போய்விட்டு வருகிறபோது அரவிந்தன் ஃபோனை குடுத்திட்டுப் போவம் என்று சொல்ல, ஓடி ஒளிந்தவனைச் சும்மா பார்த்துக்கொண்டு வருவோம் என்று விளையாட்டாகத்தான் எண்ணினாள். தன்னைக் கண்டதும் என்ன செய்கிறான் என்று பார்க்கலாம் என்கிற குறுகுறுப்பு.

ஆனால், கதவைத் திறந்தவனின் அளவுக்கதிகமான மெலிவில் அவள்தான் அதிர்ந்து போனாள். அவன் வேறு கிளீன் ஷேவ் செய்திருக்கக் கன்னமெல்லாம் ஒட்டி, முகத்தில் கண் மட்டுமே தெரிந்தது. அதுவும் அந்த விழிகளில் தென்பட்ட பரிதவிப்பில் வாயைத் திறக்கவே முடியாமல் போயிற்று அவளுக்கு.

நாட்கள் அதன் பாட்டில் நகர்ந்தன. கமலியின் சிந்தனையின் ஒரு பகுதியை அவ்வப்போது கிருபன் பறித்துக்கொண்டு இருந்தான். அவர்கள் அவன் வீட்டுக்குப் போய்வந்த பிறகும் அவன் இங்கே வருவதில்லை.

சுகுணா கூட, “கிருபனுக்கு எங்களோட ஏதும் கோவமாமோ? இந்தப் பக்கம் வாறதே இல்ல.” என்று அரவிந்தனிடம் விசாரித்தார்.

“எத்தனையோ தரம் கூப்பிட்டாச்சு அம்மா. அவனுக்கு என்னவோ பேயடிச்சிட்டுது போல. இந்தப் பக்கம் வாறானே இல்ல.” என்று எரிச்சலுடன் பகிர்ந்தான் அரவிந்தன்.

இப்போதெல்லாம் அவளுக்கும் அந்தக் கோபம் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. அத்தனை நாட்களாக அவள் ஏதாவது செய்தால் அரவிந்தன் அவனுக்கும் கொண்டுபோய்க் கொடுப்பான் என்பதில் டயட் என்று சொல்லிவிட்டு ஒன்றுமே செய்யாமல் இருந்தவள், அன்று சனிக்கிழமை என்பதில் மோதகம் செய்தாள்.

அரவிந்தனும் வெளியே செல்லத் தயாராவதைக் கவனித்துவிட்டு, “உன்ர நண்பர் இடைக்காவது வருவாரா?” என்று வினவினாள்.

“இல்ல. அவனுக்கு நேரமில்லையாம்!” ஷேர்ட்டை எடுத்து மாட்டியபடி பதில் கொடுத்தான், அரவிந்தன்.

சினம்தான் வந்தது அவளுக்கு. “முதல் எல்லாம் எப்பிடி நேரம் வந்ததாம் அவனுக்கு. எங்கட வீடு கடந்துதானே ஒவ்வொரு நாளும் போகவேணும். போற வழியில உன்ன ஏத்திக்கொண்டு போறதுக்கும் நேரம் இல்லையாமோ?” என்று படபடத்தாள்.

ஏற்கனவே இதையெல்லாம் கேட்டு ஒழுங்கான பதில் கிடைக்காத எரிச்சலில் இருந்த அரவிந்தன், “இப்ப என்ன பிரச்சினை உனக்கு? அவன் வந்தா என்ன வராட்டி என்ன?” என்று எரிந்து விழுந்தான்.

“இவ்வளவு நாளும் வந்த ஒருத்தன் இப்பிடி ஒரேடியா வராம விட்டா கேக்கிறேல்லையா? அண்டைக்கு நீ மட்டும் என்னத்துக்கு அவனோட சண்டையா எண்டு என்னட்ட கேட்டனி? நீ வேற சிடுமூஞ்சி. ரெண்டுபேருக்கும் சண்டையோ என்னவோ எண்டு நினைச்சன். நிறைய நாளைக்குப் பிறகு மோதகம் செய்தனான். ஆரும் இல்லாம இருக்கே அந்த லூசு குடுத்துவிடுவம் எண்டு நினைச்சன். விருப்பம் எண்டா கொண்டே குடு. இல்ல தூக்கி குப்பைல போடு.” அவன் மீதிருந்த எரிச்சலைத் தமையன் மீது காட்டிவிட்டுப் போனாள், கமலி.

அரவிந்தனுக்குத் தன் தவறு புரிந்தது. கூடவே, பிள்ளையார் பந்து விளையாடிய நாளில் ஏதும் நடந்திருக்குமோ என்கிற சந்தேகம் அவன் மனதில் இருந்ததில் தான் சற்றே கூடுதலாகக் கோவமும் பட்டிருந்தான். “சரியடி தங்கச்சி. கோவிக்காத. நீ துருவி துருவி கேட்கவும் டவுட் வந்திட்டுது.” என்றான் சமாளிப்பாக.

“என்ன டவுட்?” மீண்டும் சமையலறைக்குள் இருந்து வெளிப்பட்டுக் கேட்டாள் அவள்.

“அவனை சைட் ஏதும் அடிக்கிறியோ எண்டு.”

“அப்பிடி அடிச்சாத்தான் என்ன? எனக்கு பிடிச்சிருந்தா அடிக்கப்போறன். அப்ப வந்து நீ தடுத்தாலும் கேப்பன் எண்டு நினைக்கிறியோ?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.

பயந்துபோனான் அரவிந்தன். விளையாட்டுப் பேச்சு இப்படித் திரும்பும் என்று அவன் நினைக்கவில்லை. “ஏய் என்னடி சொல்லுறாய்?” என்றான் அதட்டலாக.

“நீ சொன்னதுக்கு பதிலச் சொன்னனான்.” என்று அப்போதும் அசராமல் சொல்லிவிட்டு, “அதுசரி, உன்ர தங்கச்சிக்கு கட்டிக் குடுக்கிற அளவுக்கு அவன் நல்லவன் இல்லையா?” என்று விசாரித்தாள்.

“கமலி, இது விளையாட்டு இல்ல. நீ சின்னப்பிள்ளையும் இல்ல. உண்மையைச் சொல்லு! அவனை உனக்கு பிடிச்சிருக்கா?” அவளின் பேச்சில் அரவிந்தன் திகைத்துத்தான் போனான். இருந்தாலும், அவள் மனதை அறிவது முக்கியமாகப் பட்டதில் தன்மையாகக் கேட்டான்.

அவளும் சற்று அமைதியானாள். கொஞ்சமாய் யோசித்தாள். பின், “இன்னும் இல்ல அண்ணா. பிடிச்சா சொல்லுறன்” என்றுவிட்டுப் போனாள்.

“அடியேய்! என்னடி பதில் இது?” அவனுக்குச் சிரிப்பு வந்தது. அப்படி ஏதும் என்றாலும் நண்பன் நல்லவன் என்பதில் அவனுக்குப் பெரிதாகக் கவலையும் இல்லை.

—------------------

அரவிந்தன் கொண்டுவந்து தந்த மோதகப் பார்சலை திறக்கவே பயந்தான் கிருபன். திரும்பக் கொடுத்துவிட்டிருக்கிறாள் என்றால் மன்னித்துவிட்டாள் என்று அர்த்தமா? அவன் மீதிருந்த கோபம் போய்விட்டதாமா? அரவிந்தன் போனபிறகும் அதைப் பார்த்தபடியே நேரத்தை ஓட்டினான். ஒரு கட்டத்துக்குமேல் முடியாமல் வேகமாகப் பிரித்தான்.

இரண்டு நாட்களுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு வைத்திருந்தாள். அதுவும் வாழையிலையில் வைத்து அதை ஒரு பேப்பரில் கட்டிக் கொடுத்திருந்தவளின் அக்கறை அவனை என்னவோ செய்தது. தொண்டை அடைக்க எடுத்துச் சாப்பிட்டான். அற்புதமான இனிப்புச் சுவையுடன் மனதையும் வயிற்றையும் நிறைத்த மோதகம் அவன் விழிகளையும் நிறைத்த மாயம் என்ன என்று புரியவே இல்லை அவனுக்கு.

இந்த இனிப்போடு இனிப்பாக அவளும் அவனுக்குக் கிடைத்துவிட மாட்டாளா? மனம் ஏங்கித் தவிக்க, அந்த வீட்டில் தன்னந் தனிமையில் தவித்திருந்தான் கிருபன்.

கருத்திட
 
Status
Not open for further replies.
Top Bottom