அழகென்ற சொல்லுக்கு அவளே! - நிதனிபிரபு
அத்தியாயம் 1
ஆறுமுக நாவலர் பிறந்த யாழ்ப்பாணத்தின் நல்லூர், எப்போதும்போல் அன்றும் நல்லூரானின் கோயில் மணியோசையில் சுறுசுறுப்பாக விழித்திருந்தது.
நகரின் சற்றே உட்புறமாகச் சகல வசதிகளுடனும் அமைந்திருந்த அந்த வீட்டின் மாடியறையில் சுறுசுறுப்பாகத் தயாராகிக்கொண்டிருந்தாள் இளவஞ்சி.
‘டி என் கார்மெண்ட்’ஸின் நிர்வாகி. இரவு கொழும்புக்கு வேறு புறப்பட்டாக வேண்டும். அதற்குள் இன்றைய வேலைகளை முடித்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, தங்க நிறத்தில் மெல்லிய போடர் கொண்ட வெங்காய நிற பிளேன் கைத்தறி கொட்டன் சேலைக்கு டிசைனர் பிளவுஸ் பொறுத்தமாக அணிந்துகொண்டாள்.
இடை தாண்டிய அடர் கூந்தல் அவளுக்கு. அதை ஒற்றைப் பின்னலாக்கிவிட்டாள். முகத்தில் அளவான அலங்காரம். கண்ணை உறுத்தாத மெலிய நகைகள் என்று தயாராகி, அறையை விட்டு வெளியே வந்தாள்.
அதற்காகவே காத்திருந்தது போன்று அழைத்தான் விசாகன். அவளின் வாகன ஓட்டி, பாதுகாவலன், நம்பிக்கையான நல்ல நண்பன் என்று எப்படியும் அவனை வரையறுக்கலாம்.
அவளின் அம்மம்மா தையல்நாயகிதான் ‘டி என் கார்மெண்ட்’சை நிறுவியவர். அவரின் பெயரைச் சுருக்கித்தான் ‘டி என் கார்மெண்ட்ஸ்’ என்று பெயர் சூட்டினார். அவரின் அன்னை, வீட்டிலிருந்து தைத்துக்கொடுத்துத்தான் தையல்நாயகி அம்மாவை வளர்த்தாராம்.
அப்படி, அன்னையின் தையலைப் பார்த்தே வளர்ந்த தையல்நாயகி அம்மாவிற்குத் தையற்கலை கைவந்த கலையாகிப்போனது. அன்னையைப் போலவே வீட்டிலிருந்து தைத்துக்கொடுக்க ஆரம்பித்தவரின் வளர்ச்சி ஒரு கார்மெண்ட்ஸாக வந்து நின்றிருந்தது.
அந்தளவில் ஆளுமையான பெண்மணி. தாத்தா குமாரசுவாமி மனைவி சொல் தட்டாத கணவர். அவர்களுக்கு ஒரு மகளும் மகனும்.
மகள் வாசவி இளம் வயதிலேயே இறந்துவிட, மகன் குணாளனானுக்கு அவரின் கார்மெண்ட்ஸை கொண்டு நடத்தும் திறன் இல்லை என்று ஆரம்பமே கணித்தாரா, இல்லை தனக்குப் பிறகு இளவஞ்சிக்குத்தான் இந்தத் தொழில் போய்ச் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டாரா என்பது அவர் அறிந்த இரகசியம் மட்டுமே.
அதற்கு ஏற்றாற்போல் கார்மெண்ட்ஸ்க்கு வந்துபோய் அன்னைக்கு உறுதுணையாக இருந்தாலும் தனித்தியங்கும் வல்லமை இல்லாதவராகவே இருந்தார் குணாளன்.
அன்னை சொல்கிறவற்றை மட்டுமே செய்தார். அதனாலேயே படித்துப் பேராசிரியராகிவிட்ட குணாளனை அவர் வழியிலேயே விட்டுவிட்டார் தையல்நாயகி.
குணாளனின் மூத்த பெண்தான் இளவஞ்சி. தையல்நாயகியின் செல்லப் பேத்தி. தன் கைகளுக்குள்ளேயே வைத்து வளர்த்தவர் சின்ன வயதிலிருந்தே அவளை கார்மெண்ட்ஸ்க்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்திருந்தார்.
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று அவள் அறியாமலேயே அவளுக்கு நிறைய விடயங்களைப் புகுத்தியவரும் அவரே.
அவளுக்கு நினைவு தெரிந்து அவளின் பதினாறாவது வயதிலேயே சின்ன சின்னப் பொறுப்புகளைக் கொடுக்க ஆரம்பித்து, தொழிலின் நுட்பங்களை விளக்கி, தொழிலாளர்களைக் கையாளும் விதங்களைப் பழக்கி என்று அவளை எதிர்காலத்த்தில் தேர்ந்த ஒரு நிர்வாகியாக மாற்றுவதற்கான அத்தனை வேலைகளையும் தொடங்கியிருந்தார்.
இளம் வயதில் விடுமுறை நாள்களில் கூட நண்பிகளோடு சுற்ற விடுகிறார் இல்லையே என்று சிணுங்கினாலும், பதினெட்டுப் பத்தொன்பது வயதிலேயே அந்தத் தொழிலின் சுவையும், தையல்நாயகியின் ஆளுமையும் அவளையும் பற்றிக்கொண்டன.
அவளின் இருபத்தி ஐந்தாவது வயதில் இறைபதம் அடைந்திருந்தார் தையல்நாயகி. அவள் வாழ்வில் நடந்த மிகப்பெரிய இழப்பு அது. அவருக்கு இயலாமல் போன காலத்திலேயே அவளின் பாதுகாப்பிற்கு என்று அவரால் பணியில் அமர்த்தப்பட்டவன்தான் விசாகன்.
இதற்காகவே இருக்கும் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் முறையான பயிற்சிகள் பெற்ற, அனுபவம் மிக்க பாதுகாவலன்.
காலையில் வீட்டை விட்டுப் புறப்படுகிறவளை அழைத்துக்கொண்டு போகிறவன் அவள் திரும்பவும் அந்த வீட்டிற்குள் வந்து சேர்கிற வரைக்கும் பாதுகாப்பாகவும் வாகன ஓட்டியாகவும் இருப்பான்.
இன்று இளவஞ்சி குணாளனுக்கு இருபத்தியெட்டு வயது. ஆறு வருடங்களுக்கும் மேலாக அவளோடு இருக்கிறான் விசாகன்.
அவள் படியிறங்கி முடிக்கையில், “குட் மோர்னிங் மேம்!” என்றபடி வீட்டிற்குள் உள்ளிட்டான். ஒற்றைத் தலையசைப்பில் அதை ஏற்றுக்கொண்டுவிட்டு உணவு மேசையில் சென்று அமர்ந்தாள்.
அவள் அன்னை ஜெயந்தி, விசாகனுக்கும் சேர்த்தே உணவைப் பரிமாற வர, “இல்லை அன்ட்ரி. எனக்கு டீ போதும். மேம்க்கு குடுங்க!” என்று தடுத்தான் விசாகன்.
அவன் எப்போதும் அப்படித்தான் என்பதில் இளவஞ்சி அதைப் பற்றி மேல பேசவில்லை. ஜெயந்தியும் பெண்ணுக்கு உணவைப் போட்டுக் கொடுத்துவிட்டு அவனுக்குப் பால் தேநீரைக் கொடுத்தார்.
“சுவாதியும் சுதாகரும் எங்கயம்மா?” தங்கை தம்பியரைப் பற்றி விசாரித்தபடியே காலை உணவை உண்ண ஆரம்பித்தாள் இளவஞ்சி.
“சுதாகர் டியூஷன் போய்ட்டான். சுவாதி இண்டைக்கு ஃபிரெண்ட்ஸோட வெளில போகப்போறாளாம். கார்மெண்ட்ஸுக்கு வரேல்லையாம் எண்டு சொன்னவள்.” மகள் கோபப்படப்போகிறாள் என்று தெரிந்துமே சின்ன மகளின் ஆசை அது என்பதில் சொன்னார் ஜெயந்தி.
அவரிடம் ஒன்றும் சொல்லாமல் சுவாதியின் அறையை நோக்கி, “சுவாதி!” என்று ஒரு குரல் கொடுத்தாள் இளவஞ்சி.
“அக்கா!” என்று அடுத்த நொடியே வந்து அவள் முன்னால் நின்றாள் சுவாதி.
“உனக்கு எத்தின வயசு? இன்னும் சின்ன பிள்ளை மாதிரி அம்மாவ வச்சுக் கதைப்பியா? முதல் உன்ர பிரச்சினையை நீ பாக்கப் பழகு!” என்று அதட்டவும் அவள் முகம் சுருங்கிப் போயிற்று.
“எங்க போகப்போறாய்?”
“சும்மா ஃபிரண்ட்ஸோட.”
“அப்ப முக்கியமான அலுவல் ஒண்டும் இல்ல.”
“இல்ல!” என்றவளை ஒரு பார்வை தமக்கை பார்க்கவும் உள்ளே நடுங்கியது அவளுக்கு.
“எங்க போறதா இருந்தாலும் பின்னேரம் போ. ரெண்டு மணி வரைக்கும் கார்மெண்ட்ஸ்ல நீ நிக்கோணும். இண்டைக்கு விசாகணும் ஹாஃப் டேதான். அதால போ, போய் வெளிக்கிடு!” என்று அதட்டி அனுப்பினாள்.
தமக்கை அறியாமல் அன்னையை முறைத்துவிட்டுப் போனாள் சுவாதி.
அவள் ஒரு முழுமையான ஈராயிரக்குழவிக் குழந்தை. 24 வயது. ஃபேஷன் டிசைனிங் முடித்திருந்தாலும் அதில் ஆர்வமும் இல்லை, ஈடுபாடும் இல்லை. இன்னுமே சொல்லப்போனால் செழிப்பான வீட்டுப் பெண்ணாக வளர்ந்து, சோம்பி இருப்பதிலும் ஊர் சுற்றலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவளுக்கு கூடப்பிறந்த தமக்கை ஹிட்லரின் பெண் வடிவமாகவே தெரிந்தாள்.
கார்மெண்ட்ஸின் நிர்வாகி அவள் என்பதும், வீட்டின் தலைவராகத் தந்தை குணாளன் இருந்தாலுமே வீட்டு நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்துகிறவளாக அவள் இருப்பதும் பிடிப்பதேயில்லை. அவள் இல்லாத பொழுதுகளில் அன்னையிடம் தமக்கையைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பாள். அதுவே தமக்கையின் முன்னே பேச்சும் வராது, மூச்சும் வராது.
இப்போதும் விசாகனின் முன்னே தமக்கை கண்டித்தது பெரும் எரிச்சலைக் கொடுக்க, அவளைத் திட்டித் தீர்த்தபடியே தயாராக ஆரம்பித்தாள்.
உணவை முடித்துக்கொண்டு நேராகத் தந்தையைச் சென்று பார்த்தாள் இளவஞ்சி.
அவருக்கு நரம்புத்தளர்ச்சி. அவருக்கு இருந்த மது அருந்தும் பழக்கம் காரணமாக இருக்கலாம் என்று வைத்தியர்கள் சொல்லியிருந்தார்கள். இரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகரித்து, அது நீரிழிவு நோயை உண்டாக்கி, நரம்புத்தளர்ச்சியாக வந்து நின்றிருந்தது.
திடகாத்திரமான தேகம் உடைந்து, எடை குறைந்து, பார்வை இலேசாக மங்கி என்று முற்றிலுமாக மாறிப்போயிருந்தார் குணாளன்.
சகல வசதிகளுடனும் கூடிய விசாலமான அறைதான் அவருக்கும் ஜெயந்திக்குமானது. அவருக்கென்றே நியமிக்கப்பட்டிருந்த பாலனின் உதவியோடு காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, தினமும் இந்த நேரத்தில் தன்னைப் பார்க்க வரும் மகளுக்காக அவருமே தயாராகத்தான் இருந்தார்.
இவளைக் கண்டதும் முகம் பூவாக மலர, “வாம்மா!” என்று அழைத்து, அவள் கரம் பற்றித் தன்னருகில் அமர்த்திக்கொண்டார்.
“சாப்பிட்டீங்களா அப்பா? எல்லாம் ஓகேதானே? ஏதாவது வேணுமா?” அன்னையின் கனிவுடன் தளர்ந்துபோயிருந்த அவர் கரத்தை வருடிக்கொடுத்தபடி வினவினாள்.
“எனக்கு என்னம்மா குறை? அம்மாக்குச் சமனா என்ர மகள் என்னைப் பாக்கிறது காணாதா? நான் நல்லாத்தான் இருக்கிறன். நீ சொல்லு. தொழில் எப்பிடிப் போகுது?” இலேசான திணறல் இருந்தாலும் நன்றாகவே பேசினார் குணாளன்.
“தொழிலுக்கு என்னப்பா? எப்பவும் போல நல்லாத்தான் போகுது.” என்று முறுவலித்தாள் அவள்.
“ஆனா ராஜேந்திரன் வேற சொன்னானேம்மா?”