• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 3

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 3


ஜெயந்திக்கு மூத்த மகள் மீது மிகுந்த கோபம். காரணம், திருமணம் குறித்து அவளிடம் பேசிப் பார்த்து அவரும் தோல்வியையே தழுவியிருந்தார். நிலன்தான் வேண்டாம், வேறு வரன்களைப் பார் என்று காட்டினாலும் மறுத்தால் எப்படி?

சுவாதிக்கே திருமண வயது வந்துவிட்டது. அப்படியிருக்க வருகிற வரன்களை எல்லாம் இவள் தட்டிக்கொண்டேயிருந்தால் எப்படி?

இவளுக்குத் திருமணம் செய்கிற எண்ணமே இல்லையோ, தொழிலே போதும் என்று இருந்துவிடுவாளோ என்கிற பயம் இப்போதெல்லாம் அவரைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

ஆனால், கடந்த சில வருடங்களாகத் திருமணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று.

அவளுக்குத் தொழில் முக்கியம். அவளுக்கடுத்து அதைக் கவனிக்க யாருமில்லை. சுதாகரும் தந்தையைப் போல் ஒரு பேராசிரியனாக வரப்போகிறேன் என்று இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டான். சுவாதியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எப்போதடா தமக்கையிடமிருந்து தப்பி ஓடலாம் என்று காத்திருக்கிறாள்.

ஆக, அவளுக்குத் துணையாக வருகிறவன் அவள் சூழ்நிலையை அறிந்தவனாக, அவளைப் புரிந்தவனாக, நாளைக்குக் குழந்தைகள் என்று வந்தபிறகும் அவளுக்கு எந்தத் தடையும் விதிக்காதவனாக இருக்க வேண்டும்.

திருமணம் என்கிற ஒன்றினுள் சென்றபிறகு சண்டை சச்சரவு, பிரிவு, புரிந்துணர்வு இல்லாமை, நிம்மதியற்ற வாழ்க்கை என்று இருப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.

தொழிலில் இருக்கிற பிரச்சனைகளும் பரபரப்பும் அவளுக்குப் போதுமானவை. இல்லற வாழ்க்கை இதமாகவும் இனிமையாகவும் அமைய வேண்டுமென்பது அவளின் அவா.

அதற்கு ஏற்ற ஒருவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாள்.

வரன்கள் வந்துபோகாமல் இல்லை. தொழில்துறையில் கொடிகட்டிப் பறக்கும் அழகும் ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும் நிறைந்த அவளுக்கு என்ன குறை?

என்ன, வருகிறவர்களோடு இரண்டு முறை பேசினாலே அவளுக்குச் சலிப்புத் தட்டிவிடும்.

“அவசரமா ஒரு கலியாணத்தச் செய்யோணும் விசாகன்.” தொழிற்சாலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கையில் திடீரென்று சொன்னாள் இளவஞ்சி.

“மேம்!” அதிர்ந்து திரும்பிப் பார்த்தான் அவன்.

“அம்மா அப்பா கவலைப்படுறதும் நியாயம்தான். எனக்கு அடுத்ததா சுவாதி இருக்கிறாள். ஆனா எனக்குத் தோள் குடுப்பான் எண்டு நினைக்கிற மாதிரி ஒருத்தனும் மாட்டுறான் இல்ல. என்ன செய்யலாம் விசாகன்?” அவன் காட்டிய அதிர்வில் சிறு முறுவல் பூத்தாலும் வினவினாள்.

அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டானே தவிர அவன் எதுவும் சொன்னான் இல்லை.

அவன் எப்போதுமே அப்படித்தான். தன் எல்லையிலேயே நின்றுகொள்வான். அதனாலேயே அவளுக்கு அவன் மீது மிகுந்த நம்பிக்கையும் நல்லபிப்பிராயமும் உண்டு. நண்பனாகப் பாவித்து இலகுவாகப் பேசுவதும் அவனோடுதான்.

அதில், “கலியாணம் நடக்காம இப்பிடியே இருந்திடுவனோ விசாகன்?” என்றாள் கேள்வியாக.

அதற்கு மட்டும், “அப்பிடி எப்பிடி மேம் நடக்காமப் போகும்? வரன் வந்துகொண்டுதானே இருக்கு. வேண்டாம் எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறது நீங்க.” என்று பதில் சொன்னான் அவன்.

“அப்ப என்னிலதான் பிழை எண்டு சொல்லுறீங்களா?” மெல்லிய அதட்டல் போன்று அவள் வினவவும், “மேம்?” என்று விழித்தான் அவன்.

“சும்மா ஃபன்னுக்கு விசாகன்.” என்று முறுவலித்தாள்.

அதற்குள் தொழிற்சாலை வந்திருக்க இறங்கி அலுவலகத்திற்கு நடந்தாள்.

*****

அன்று, மூன்றடுக்கு மாடியில் மிகப் பிரமாண்டமாகச் சக்திவேல் ஆடையகம் வவுனியாவில் திறப்புவிழா காணவிருந்தது. இவ்வளவு காலமும் மொத்த விற்பனையாளர்களாக மட்டுமே இருந்தவர்கள் தற்போது தமக்கான ஆடையகத்தையும் ஆரம்பிக்கிறார்கள்.

அதைப் பற்றி முதன்முறை அறிந்தபோது இலேசாகச் சிரித்துக்கொண்டாள் இளவஞ்சி. காரணம், இது அவள் ஆரம்பித்து வைத்தது. யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை என்று திறந்து, இணைய வாயிலாகவும் விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தாள்.

அது மாத்திரமல்லாமல், வீட்டிலிருந்தே இணையம் வாயிலாக விற்பனை செய்கிற சிறு தொழிலாளர்களுக்கும் சின்ன சின்ன அளவில் கொடுக்க ஆரம்பித்து இரண்டு வருடங்களாகின்றன.

அவளின் இந்த வளர்ச்சிதான் அவர்களின் கண்களை உறுத்துவதே. இப்போது அவள் பாதையில் அவர்களும். அதற்கு அவளுக்கும் அழைப்பு வந்திருந்தது.

அந்த வீட்டின் யாரையும் பார்க்கவே பிடிக்காத அளவில் வெறுப்பும் கசப்பும் மனத்தில் மண்டிக்கிடந்தாலும் அதையெல்லாம் நேரடியாகக் காட்டிவிட முடியாது. தொழில் தந்திரங்களில் இதுவும் ஒன்று. சிரித்த முகமாகப் போய், வாழ்த்தி, அவர்களின் விருந்தில் கலந்துகொண்டுவிட்டு வர வேண்டும்.

கடுஞ்சிகப்பு, டார்க் மெரூன், கடும் பச்சை நிறங்கள் கலந்த, கை இல்லாத, முதுகை மூடிய கலம்காரி பிளவுசின் முதுகுப் பக்கத்தில் கிருஷ்ண-அர்ஜுன உபதேசம் மிகுந்த கலை நேர்த்தியோடு பெயிண்ட் பண்ணப்பட்டிருந்தது.

அந்த பிளவுசை இன்னுமே தூக்கிக் காட்டுவது போன்று டார்க் மரூனில் சின்ன போடர் கொண்ட, மென் பச்சை பிளேன் கொட்டன் சேலை அணிந்துகொண்டாள்.

முதுகிலிருந்த வேலைப்பாடு அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே தன் நீண்ட கூந்தலைப் பிடரியில் கொண்டையாக்கிக்கொண்டாள்.

கழுத்தில் அம்மன் பெண்டண்ட் கொண்ட டெரகோட்டா வகை ஆரம். பொறுத்தமான காதணிகளையும் மாட்டிக்கொண்டு தயாராகி இறங்கி வந்தவளைக் கண்டு, ஜெயந்தி குணாளன் இருவராலும் பார்வையை அகற்ற முடியாமல் போயிற்று.

இந்தப் பெண் ஒரு திருமணத்தைச் செய்துகொள்ளக் கூடாதா என்கிற ஏக்கம் தானாக உண்டாயிற்று.

“அந்தத் தம்பி ஏதும் கதைச்சா முகத்தில அடிச்ச மாதிரிப் பதில் சொல்லாதயம்மா. சாதாரணமாக் கதச்சுப்போட்டு வாங்கோ.” தப்பித்தவறி அவர்கள் திருமணப் பேச்சை எடுத்தாலும் இவள் நன்றாகப் பேச வேண்டுமே என்றெண்ணித் தயவாய்ச் சொன்னார் ஜெயந்தி.

அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டாளே தவிர்த்துப் பதில் எதுவும் சொல்லவில்லை.

விசேசத்துக்குப் புறப்படுகிற மகளிடம் எதையும் பேசிக் கோபப்படுத்த விரும்பாத குணாளன், “விசாகன் கவனமப்பு. உங்கள நம்பித்தான் அனுப்புறன். கவனமாக் கூட்டிக்கொண்டு போயிட்டுக் கூட்டிக்கொண்டு வந்திடுங்கோ.” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அங்கே திறப்புவிழா நடக்கும் நேரத்திற்குச் சரியாகச் சென்று இறங்கினாள் இளவஞ்சி.

முழுமையான கறுப்பில் இருந்த விசாகன் அவளுக்கு இரண்டடி பின்னால் பாதுகாப்பாக நடந்துவர, தனியொருத்தியாகத் தயக்கங்கள் எதுவுமற்று படிகளில் ஏறி வந்தவளின் தோரணையில் அங்கிருந்தவர்கள் பார்வை தவிர்க்கவே முடியாமல் இவள் மீது படிந்தது.

தன் குடும்பத்தினரோடு நின்றிருந்த நிலன் வேகமாக வந்து, “சரியா அந்த நேரத்துக்குத்தான் வருவியா?” என்று அவளைச் சத்தமில்லாமல் அதட்டினான்.

அதைக் கண்ட சக்திவேலரின் முகம் கடுத்துச் சிவந்தது. வயோதிபம் காரணமாகப் பேரன் அளவுக்கு அவரால் அவசரமாக இயங்க முடியவில்லை. இல்லையானால் எட்டிப் பிடித்து அவனை நிறுத்தியிருப்பார்.

அங்கே கடை வாசலில் திறப்புவிழாவிற்கான அத்தனை ஆயத்தங்களும் தயாராக இருந்தன. அதன் அருகில் சக்திவேல் ஐயா, அவர் மகன் பிரபாகரன், நிலனின் அன்னை சந்திரமதி, தங்கை கீர்த்தனா, சக்திவேல் அய்யாவின் மகள் ஜானகி, அவர் கணவர் பாலகுமாரன், அவர்களின் மகன் மிதுன் என்று அவர்கள் வீட்டின் மூன்று தலைமுறை மனிதர்களும் மொத்தமாக நின்றிருந்தனர்.

அங்குச் செல்லாமல், இடையில் அவளுக்குத் தெரிந்த பெண்மணி ஒருவரைக் கண்டுவிட்டு, அவரோடு அவள் ஒதுங்கிக்கொள்ள, “அங்க வா வஞ்சி!” என்று, மற்றவர்கள் காதில் விழாதவாறு மெலிதாக அதட்டி அழைத்தான் நிலன்.

தீர்க்கமாக அவனை நோக்கினாலும், “நீங்க அங்க பாருங்க.” என்று இனிய குரலில் மொழிந்துவிட்டு, அந்தப் பெண்ணோடு பேசுவதுபோல் திரும்பிக்கொண்டாள் இளவஞ்சி.

அவனாலும் அத்தனை பேர் முன்னிலையில் அவளோடு மல்லுக்கட்ட முடியவில்லை. அதைவிட, கடையைத் திறந்து வைப்பதற்காக வவுனியா நகரசபைத் தலைவரை அழைத்திருந்தான். அவர் வேறு சரியாக அந்த நேரம் பார்த்து வந்து இறங்கிவிட, அவனால் வேறு எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.

சிறப்பான முறையில் சக்திவேல் ஆடையகம் திறந்துவைக்கப்பட்டது. சந்திரமதி அம்மா விற்பனை செய்ய, வவுனியா நகரசபைத் தலைவரே முதல் வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தார்.

சக்திவேல் ஐயா உட்பட அவன் வீட்டின் மொத்த ஆட்களின் பார்வையும் அடிக்கடி இவளில்தான் படிந்து படிந்து மீண்டது. அதுவும் சக்திவேல் ஐயா வெறுப்பும் கசப்புமாகவே நோக்கினார்.

கவனித்தவளுக்கு எரிச்சல் உண்டாயிற்று. அவளைப் பிடிக்கவில்லையானால் எதற்கு அழைக்க? கூடவே, தன் பிரசன்னம் அவரை அமைதியிழக்க வைக்கிறது என்பது சிறு சிரிப்பையும் அவளுக்குள் தோற்றுவித்தது.

அதை மறைத்தபடி கடையைச் சுற்றிப் பார்ப்பதுபோல் மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தாள்.

ஆனால், சற்றுத் தூரத்தில் நின்றிருந்தாலும் அவள் மீதே கவனமாக இருந்த விசாகன், அவள் முகத்தில் தெரிந்த மாற்றங்களைக் கவனித்து, “மேம்” என்றபடி அவள் முன்னே வந்து நின்றான்.

“ஒண்டும் இல்ல. எல்லாரும் என்னையே பாக்கிற மாதிரி இருக்கு விசாகன்.” என்றாள் அவள்.

“மாதிரி இல்ல. உங்களையேதான் பாக்கினம்.” தம்மைச் சுற்றி இருக்கிறவர்களிடம் பார்வையைச் சுழற்றியபடி சொன்னான் அவன்.

சட்டென்று சிறு சிரிப்பொன்று அவள் இதழ்களில் முகிழ்க்கப் பார்த்தது.

“ஏனோ விசாகன்?” வேடிக்கையாகப் பேச்சுக்கொடுத்தாள்.

“மேம்!” என்று அவள் புறம் திரும்பியவனுக்கும் அவர்களுக்குள் நடக்கும் தொழில் போட்டியும் திருமணப் பேச்சும் தெரியாமல் இல்லையே. அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் நின்றான்.

இப்போது அரும்பியே விட்ட முறுவலோடு, “நான் ஓகேதான். நீங்க போங்க.” என்று அவனை அனுப்பிவிட்டாள்.

எண்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் சக்திவேல் ஐயாவால் மாடிகள் ஏற முடியாது. அவர் ஒரு புறமாக அமர்ந்துவிட, தந்தையோடு சேர்ந்து நகரசபைத் தலைவரோடு இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு நிலன் ஆளானான். அதில் அன்னையிடம் அவளைக் கண்ணால் காட்டிவிட்டு அவரோடு நடந்தான்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவரும் எப்போதடா அவளோடு பேசலாம் என்று காத்துக்கொண்டு இருந்தவராயிற்றே.

மகள் கீர்த்தனாவோடு அவளிடம் வந்தார். இப்போது என்ன என்று ஒரு சலிப்புத் தட்டினாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் ஒட்டவைத்துக்கொண்ட முறுவலுடன் அவரை எதிர்கொண்டாள் இளவஞ்சி.

“எப்பிடி இருக்கிறீங்கம்மா?”

“நல்லாருக்கிறான். நீங்க?”

“சுகத்துக்கு என்னம்மா? கொஞ்ச நாளா இந்தக் கடையால வேலையே ஒழிய மற்றும்படி எல்லாரும் நல்லாருக்கிறம்.”

அந்தச் சம்பிரதாயப் பேச்சைத் தாண்டிப் பெண்கள் இருவருக்கும் வேறு பேச்சு வருவேனா என்றது.

ஆனாலும் மகனுக்குப் பிடித்த பெண்ணோடு கதைக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவதற்குச் சந்திரமதிக்கு மனமில்லை. “உங்களுக்கும் இஞ்ச கடை இருக்காம் எண்டு தம்பி சொன்னான். நல்லா போகுதாம்மா?” என்று விசாரித்தார்.

“இஞ்ச மட்டுமில்ல யாழ்ப்பாணம் திருகோணமலைலயும் இருக்கு. நல்லாப் போகுது.”

கீர்த்தனாவிற்கு இளவஞ்சிக்கும் தமையனுக்கும் திருமணப் பேச்சு நடப்பதும், அதற்கு இளவஞ்சி மறுப்பதும் தெரியும்.
அப்படித் தன் தமையனை மறுக்கும் இளவஞ்சியோடு பெரிதாக ஒட்டமுடியவில்லை. அதில் அவர்கள் பேசுவதைக் கவனித்தபடி கூடவே நின்றாள்.

அவளை, “இவா என்ர மகளம்மா.” என்று அறிமுகப்படுத்திவிட்டு, கண்ணால் தேடி மிதுனைக் கண்டுபிடித்து அழைத்தார்.

வந்தவனைக் காட்டி, “இவன் இவரின்ர தங்கச்சி மிதுன். தம்பிக்கு முடிச்சுப்போட்டு இவனுக்கும் முடிக்கோணும் எண்டா எங்க?” என்று இயல்பாகச் சொல்லிக்கொண்டு வந்தவர், அவள் முகம் மாற ஆரம்பிக்கவும் சட்டென்று பேச்சை நிறுத்தினார்.

அப்போதுதான் அவளிடம் போய் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. உடனேயே சமாளித்து, “இவாதான் தையல்நாயகி ஓனர். காட்டத்தான் கூப்பிட்டனான். போய்த் தாத்தாவைக் கவனிங்கோ அப்பு. ஒரு கரையா இருந்திட்டார்.” என்று மிதுனை அனுப்புவதுபோல் பேச்சை மாற்றினார்.

இளவஞ்சியும் அங்கே கைக்கு எட்டிய ஒரு உடையைப் பார்ப்பதுபோல் அவரிடமிருந்து நழுவ நினைத்தாள். அவர் விட வேண்டுமே.

“அப்பாக்கு நரம்புத்தளர்ச்சியாம் எண்டு கேள்விப்பட்டன். இப்ப எப்பிடி இருக்கிறாரம்மா?”

“இருக்கிறார். அது சுகமாகிற வருத்தம் இல்லைதானே. அதால மருந்து மாத்திரை எண்டு போகுது.”

இதற்குள், “ஒருத்தரோடயே கதைச்சுக்கொண்டு இருந்தா எப்பிடி அண்ணி? மற்ற ஆக்களையும் பாருங்கோ.” என்று அதட்டலாகச் சொல்லிக்கொண்டு அவ்விடம் வந்தார் ஜானகி.

அவர் பார்வை ஒரு விதமாக இளவஞ்சியை அளவிட்டது. அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அழையா விருந்தாளி போன்று அவளைப் பாவித்து, சந்திரமதியை அங்கிருந்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்.

“நீயும் ஏனம்மா இஞ்ச நிக்கிறாய். வா, அங்க முக்கியமான ஆக்கள் நிறையப்பேர் வந்திருக்கினம். அவேயக் கவனிப்பம்.” என்று கீர்த்தனாவையும் அவர் இழுத்துக்கொண்டு போக, சந்திரமதிக்கு முகம் மாறாமல் காப்பது சிரமமாகப் போயிற்று.

அதைக் கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல், “நீங்க பாருங்கோ அன்ட்ரி. நான் சும்மா ஒருக்கா மூண்டு மாடியையும் பாத்துக்கொண்டு வரப்போறன்.” என்று சிறு முறுவலுடன் இளவஞ்சியே அவரிடமிருந்து விலகி நடந்தாள்.

எதிர்ப்பட்ட பாலகுமாரன் இவளைக் கண்டதும் நின்றுவிட்டார். தவிப்பும் தடுமாற்றமுமாக அவள் பார்வையைச் சந்திக்கவே திணறினார் மனிதர்.

இவர் ஏன் இப்படிப் பார்க்கிறார் என்று உள்ளூர ஓடினாலும் சிறு முறுவலும் தலையசைப்புமாக அவரையும் கடந்தவளுக்கு அங்கு ஒரு நொடி கூட இயல்பாக இருக்க முடியவில்லை. அந்தளவில் எல்லா மூலைகளில் இருந்தும் முதுகைத் துளைத்தன பார்வைகள்.

இரண்டாவது தளம் பெண்களுக்கானது என்று பார்த்ததுமே தெரிந்தது. கீழேயும் கவனித்தாள். வேலைக்கு ஆட்களை நியமித்து, வருகிற வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் எடுத்துக் காட்டுவது போல் அல்லாமல், எல்லா உடைகளும் சுழற்றிப் பார்க்கும் ஸ்டாண்டுகளில் தொங்கவிப்பட்டிருந்தன.

ஜீன்ஸ் வகையறாக்கள் ஒவ்வொன்று மட்டும் சாம்பிலுக்கு தொங்கவிடப்பட்டிருக்க, மற்றையவை சுவற்றில் ராக்கைகள் அமைத்து மடித்து வைக்கப்பட்டிருந்தன.

அதோடு குழந்தைகள் பகுதி, சிறுவர் பகுதி, பெண்கள் பகுதி ஆண்கள் பகுதி, நீச்சலுடைகளுக்கான பகுதி, பெண்களின் உள்ளாடைகளுக்கான பகுதி என்று மேலே அட்டையில் எழுதி ஒட்டப்பட்டிருக்க, அவை எல்லாமே தனித்தனியாக இருப்பதுபோல் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தான்.

கூடவே ஒவ்வொரு தளத்திலும் மூன்று இடங்களில் ‘பில்லிங் செக்க்ஷன்’ வேறு.

தப்பித்தவறி யாராவது பணம் செலுத்தாமலோ, களவாக எடுத்துக்கொண்டோ கடையை விட்டு வெளியேற முயன்றால் அதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு வாயிலை(Anti-theft protection gate) கடையின் வாசலில் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மாடியில் இருந்தும் படியில் இறங்கும் ஆரம்பப் பகுதியிலும் நிறுவியிருந்தான்.

நிறைய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் அவசியம் இல்லாத, அதே வேளையில் கடைக்கான முழுமையான பாதுகாப்பையும், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் கருத்திற்கொண்டு அவன் கடையை வடிவமைத்திருப்பதைக் கண்டு, அதே தொழிலையே உயிராக நேசிக்கும் அவளால் புருவங்களை உயர்த்தாமல் இருக்க முடியவில்லை.

இரண்டாம் மாடி பெண்கள் பகுதி என்பதில் உடை மாற்றும் பகுதி எப்படி இருக்கிறது என்று பார்க்கத் திறந்து பார்த்தாள்.

“உன்ர பிளவுசின்ர முதுகு டிசைன் அருமையா இருக்கு வஞ்சி.” திடீரென்று அவளுக்குப் பின்னிருந்து நிலனின் குரல் கேட்டது.

வேகமாகத் திரும்பி அவனைக் கண்டிக்கும் பார்வை பார்த்தவள் யாராவது கவனித்தார்களா என்று தம்மைச் சுற்றிப் பார்வையைச் சுழற்றினாள்.

“அப்பிடிக் கவனமில்லாமக் கதைப்பனா?” என்றான் அவன் அவள் பார்வையின் பொருள் அறிந்து.

“முதுகு டிசைன் தெரியோணும் எண்டுதானே நீ கொண்டையே போட்டிருக்கிறாய். பிறகு என்ன முறைப்பு?” என்றான் அப்போதும் அவள் பார்வைக்கு அடங்காமல்.

அவனிடம் பேச்சை வளர்க்க விரும்பாமல் அவள் அங்கிருந்து நகர, “இதப் பாத்திட்டுப் போ.” என்று, உடை மாற்றும் அந்தக் குட்டி அறையின் சுவரில் இடையளவு உயரத்தில் சின்னதாக ஜன்னல் கதவுபோல் இருந்ததைத் திறந்து காட்டினான்.

அந்தக் கதவினூடு சதுர வடிவக் குழாய் ஒன்று சறுக்கியைப் போல் சரிவாக்கப் போனது. எட்டிப் பார்த்துவிட்டு அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“போட்டுப் பாக்க எண்டு எடுத்துக்கொண்டு வாற உடுப்புகளை இதுக்கால போட்டுட்டுப் போயிடலாம். அந்தப் பக்கம் ஒரு வாளி இருக்கு. இஞ்ச இருந்து போடுறது எல்லாம் அங்க போய் விழும். அதைப் பிறகு வேலைக்கு இருக்கிறவே எடுத்துக்கொண்டு வந்து திரும்பவும் கடைக்குள்ள மாட்டிவிடுவினம்.”

“இது வேலை கூட இல்லையா?”

“இல்லவே இல்ல. இந்தக் கடை முழுக்க முழுக்க செல்ஃபா வாற கஸ்ட்மர்ஸே பாத்து எடுக்கிற மாதிரி இருக்கிறதால, வேண்டாம் எண்டு நினைக்கிற உடுப்புகளைக் கைக்கு எட்டின இடத்தில போட்டுட்டோ, தொங்க விட்டுட்டோ போயிடுவினம். அதத அந்தந்த இடத்தில கடசிவந்தாலும் வைக்காயினம். பிறகு அதையெல்லாம் தேடிப் பிடிச்சுச் சரியா மாட்டுறதோட ஒப்பிடேக்க இது ஈஸி.” என்றான் அவன்.

“அதவிட எங்கட சனம் எடுத்த மாதிரியே திருப்பி வைக்கவும் மாட்டினம். பட்டன் திறந்தபடி, சிப் போடாம, ஹேங்கர்ல ஒழுங்கா கொழுவாம எண்டு கண்டபாட்டுக்குத் தொங்கவிட்டுட்டுப் போயிடுவினம். ஏன், சில நேரம் லிப்ஸ்டிக், பவுடர், கண் மை எண்டு உடுப்பில அப்பியும் இருக்கும். அதையெல்லாம் கண்டு பிடிக்கிறது சரியான கஷ்டம். இது அதையெல்லாம் செக் பண்ணி, திரும்பவும் நீற்றாவே கொண்டு வந்து கொழுவ வசதி.” என்று விளக்கிச் சொன்னான்.

“நல்ல ஐடியாதான்.” என்று தன்னை மீறியே பாராட்டினாள் இளவஞ்சி.

ஆனாலும் அவனோடு அப்படித் தனியாக நின்று பேசிக்கொண்டிருப்பது வேண்டாம் என்று அறிவு எடுத்துச் சொல்ல, கையில் இருந்த கைப்பேசியைத் திருப்பி நேரத்தைப் பார்த்துவிட்டு, “வெளிக்கிடப்போறன்.” என்றான்.

“வந்ததே இப்பதான். இன்னும் சாப்பிடவும் இல்ல. அதுக்குள்ளே போவியா? முதல் எனக்கு உன்னோட கதைக்கோணும். சாப்பாடு மேல மூண்டாவது மாடில அரேஞ்ச் பண்ணியிருக்கு. போய்ச் சாப்பிட்டுக்கொண்டு இரு. வாறன்.” என்றான் அவன் விடாமல்.

அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவள் மூன்றாம் மாடியை நோக்கி நகர, “இந்த பிளவுஸ் எங்க எடுத்தனி எண்டு நீ இன்னும் சொல்லேல்ல.” என்றான் திரும்பவும்.

திரும்பவும் திரும்பி அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள் இளவஞ்சி.

“வஞ்சி! சும்மா சும்மா என்னவோ நான் கேக்கக் கூடாத கேள்வியைக் கேட்டமாதிரிப் பாக்காத. உண்மையா அவ்வளவு வடிவா இருக்கு. என்ர கண்ணே அங்கதான் போகுது எண்டேக்க கீர்த்தி கட்டாயம் உன்னைக் கவனிச்சிருப்பாள். வீட்டுக்குப் போனதும் முதல் கேள்வியே இதாத்தான் இருக்கும். அதாலதான் கேக்கிறன்.”

“இது என்ர தொழில் ரகசியம். அதச் சொல்லுவன் எண்டு நினைக்கிறீங்களா? அதுவும் எங்கடா சான்ஸ் கிடைக்கும் எண்டு காத்திருந்து, என்ர காலப் பிடிச்சு இழுத்துவிடப் பாத்துக்கொண்டு இருக்கிற உங்களிட்ட?” என்று கேட்டுவிட்டுப் போனாள் அவள்.

அப்படியே நின்றுவிட்டான் நிலன்.
 
Last edited:

padhusbi

New member
மிகவும் அருமை. வஞ்சி நிலன் எப்போ சேருவாங்க? ஆர்வமா இருக்கு. ஆனா எனக்கு தெரியும் நிதனி சீக்கிரம் சேத்து வைக்க மாட்டாங்க 😃😃😃
சேத்து வைச்சாலும் பிரிச்சுடுவாங்க 😜😜
 

Goms

Active member
தன்னை மறுப்பதற்கு காரணம் தெரிய தான் அவளோடு தனித்துப் பேச நினைக்கிறானோ? 🤔

அவன் ஆள் எப்படி என்று போகப்போகத்தான் தெரியும் போல.

ஆனால் எங்க முதலாளிமா அசத்தல். மிடுக்கு, கம்பீரம், அழகு. எப்படி ஒரு பிளவுஸ் டிசைன் காட்டி, தன் தொழில் ரகசியம் என்று சொல்லி ஹீரோவை திகைச்சு தள்ளி நிற்க வச்சுட்டாள்ள?🥰
 
Top Bottom