அத்தியாயம் 9
ஒளியால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சி போன்று உல்லாச வாழ்வின் மீது ஈர்ப்பும் மோகமும் கொண்ட ஒருத்தியாகத்தான் சுவாதி அதுவரை இருந்திருக்கிறாள். ஆனாலும் அன்னையும் தமக்கையும் சொல்லித் தந்து வளர்த்த நல் நெறிகளும் அவளுக்குள் இல்லாமல் இல்லை.
அதனாலேயே செய்த தப்புகள் அத்தனையும் அவளைக் குன்ற வைத்தன. அதுவும், ‘அவளும்தானே என்னோடு பழகினாள்’ என்று மிதுன் கேட்டதும், தான் முறையற்று வயிற்றில் குழந்தையைச் சுமந்து நிற்கிற அசிங்கமும் அவளை முற்றிலுமாக ஒடுக்கியிருந்தன.
அப்போதுதான் எந்த நிலையிலும் நமக்கான எல்லை தாண்டாமல், கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டியதன் முக்கியம் புரிவதுபோல் இருந்தது. கட்டற்ற சுதந்திரத்திற்கு ஆசைப்பட்டவள் இன்று யாரும் கட்டிப்போடாமலேயே அறைக்குள் அடைந்து கிடக்கிறாள்.
அதுவும் அன்றைக்குப் பிறகு ஒரு வார்த்தை அவள் முகம் பார்த்துப் பேசாத தந்தையின் ஒதுக்கம் இன்னுமே அவளை முடக்கியது.
அவரிடம் மன்னிப்பை வேண்ட எண்ணினாலும் அவர் முகம் பார்க்கும் தைரியம் இல்லாமல் ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறாள்.
மிதுன் இரண்டொருமுறை பேச அழைத்தபோதும் சரி, குறுந்தகவல்கள் அனுப்பியபோதும் சரி அவள் பதில் சொல்லப் போகவில்லை.
‘கலியாணம் முடியட்டும் மிதுன்.’ என்று மட்டும் அனுப்பிவிட்டாள்.
சுதாகருக்கு வீட்டில் நடக்கும் எதுவும் புரிவதாக இல்லை. ஆளுக்கு ஒரு மூலையில் என்று முடங்கிக்கிடந்தனர். காரணம் கேட்டால் யாரும் எதையும் அவனிடம் பகிரத் தயாராயில்லை. படிக்கிற வேலையை மட்டும் பார் என்று விரட்டினர்.
கடைசியில் சுவாதியைப் பிடிவாதமாகப் பிடித்துவைத்துக் கேட்டான். அப்போதுதான் மூத்த தமக்கை தம் சொந்தத் தமக்கை இல்லையாம் என்கிற விடயம் அவனுக்குத் தெரிய வந்தது. அதிர்ந்துபோனவன் நேராகத் தந்தையிடம் ஓடி வந்திருந்தான்.
இனியும் எதையும் மறைப்பதில் அர்த்தமில்லை என்பதில், “நல்ல மனம் இல்லாத உங்கட அம்மாக்கு அவாவச் சுமக்கிற பாக்கியத்தக் கடவுள் எப்பிடி அப்பு குடுப்பார்?” என்று கேட்டார் அவர்.
“என்னப்பா சொல்லுறீங்க? அப்ப அக்கா உண்மையாவே என்ர அக்கா இல்லையா?” இன்னும் அதிர்ச்சி நீங்காமல் வினவினான் சுதாகர்.
“கூடப்பிறந்தா மட்டும்தான் அக்காவா தம்பி? இல்ல, ஒருத்தி அக்காவா இருக்க அந்தத் தகுதி மட்டுமே போதுமா?” என்று திருப்பிக் கேட்டார் தகப்பன்.
சுதாகர் பதினெட்டு வயது நிறைந்தவன்தான். என்றாலும் அந்த வீட்டின் கடைக்குட்டி என்பதாலும், எந்தவிதமான துன்ப துயரங்களையும் இதுவரையில் அனுபவித்தறியாதவன் என்பதாலும் தந்தையின் பேச்சில் மறைந்து கிடந்த சூட்சுமத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. அவரின் கேள்வி புரியாத பாவத்துடன் பார்த்தான்.
“அப்பா இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருப்பன் எண்டு தெரியாப்பு. ஆனா, எண்டைக்கும் அவாதான் உனக்கு மூத்த அக்கா. நீயாவது அக்காட்ட வேற்றுமை காட்டிராத.” என்று அவனிடம் கண்ணீருடன் வாக்குப் பெற்றுக்கொண்டார் குணாளன்.
அதற்கு மேலும் வெளியே நிற்க முடியாமல் உள்ளே வந்தார் ஜெயந்தி. “ஏன் இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க குணா? அவளை வயித்தில சுமக்கக் கூடாத அளவுக்குப் பொல்லாதவளா நான்? அப்பிடித்தான் இத்தின வருசமும் நடந்தேனா? கிட்டத்தட்ட இருவத்தி ஏழு வருச வாழ்க்கை. அதில ஒரு நாள் அவசரப்பட்டுட்டன். அதுக்காக இப்பிடி எல்லாம் கதைப்பீங்களா?” என்றார் கண்ணீரும் ஆதங்கமுமாக.
“எனக்கு ஆரின்ர முகம் பாக்கவும் விருப்பம் இல்ல. வெளில போகச் சொல்லு சுதா!” மிகக் கடுமையான குரலில் மகனிடம் சொன்னார் குணாளன்.
அறிந்துகொண்ட விடயம் தந்த அதிர்விலிருந்தே இன்னும் வெளிவராத சுதாகர், செய்வதறியாது அவர்களை மாறி மாறிப் பார்த்தான்.
“அந்தளவுக்கு வெறுத்திட்டீங்களா குணா? செய்தது பிழைதான். உங்களிட்டயும் உங்கட மகளிட்டயும் இன்னும் எத்தின தரம்தான் நான் மன்னிப்புக் கேக்கிறது?”
அப்போதும் அவர் பேசவில்லை. அவரைக் கவனித்துக்கொள்ளும் பாலனை அழைத்துத் தன்னை வெளியில் கூட்டிக்கொண்டு போகச் சொன்னார்.
பாலனும் என்ன செய்வது என்று தெரியாது பார்க்க, “இல்ல. நானே போறன். ஆனா, நீங்க எனக்குத் தாறது பெரிய தண்டனை குணா.” என்றுவிட்டு வெளியேறினார் ஜெயந்தி.
அவருக்கு மனம் நைந்துபோயிற்று. அவர் விட்டது பெரிய தவறுதான். அதற்கென்று அவளைக் கருவில் சுமக்கக் கூடத் தகுதியற்றவர் என்று சொல்லி, இந்தளவு தூரத்திற்குத் தண்டிக்க வேண்டாம் என்றே நினைத்தார்.
மனைவியின் வார்த்தைகளோ கண்ணீரோ குணாளனின் மனத்தைத் தொடவேயில்லை. அவ்வளவில் கசப்பும் வெறுப்பும் நெஞ்சில் மண்டிப் போயிற்று.
அவர்களின் திருமணத்தின்போது அவர் ஜெயந்தியிடம் வைத்த ஒரேயொரு வேண்டுதல் இது மட்டும்தான். இதில் விருப்பம் இல்லையென்றால் உனக்குப் பிடித்ததுபோல் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள் என்றும் சொன்னார்.
திருமணத்தின் பிறகும் இளவஞ்சி மட்டுமே போதுமென்றுதான் இருந்தார். அன்னையின் வற்புறுத்தலும் ஜெயந்தியின் ஏக்கமும்தான் அவர் முடிவை மாற்றியவை. இன்று அதற்காகத் தன்னையும் நொந்துகொண்டார்.
சுவாதிக்குத் திருமணம் நடந்துவிடும். சுதாகருக்கு வயது இருக்கிறது. இல்லாவிட்டாலும் இளவஞ்சி அவனை விடப்போவதில்லை. ஆனால் இளவஞ்சி?
மனம் பாரமாக விழிகளை மூடிய கணம் அன்னை வந்துநின்றார்.
உன்னை நம்பித்தானே அவளை விட்டுவிட்டுப் போனேன் என்று கேட்டார். அவளைச் சுற்றி நீங்கள் எல்லோரும் இருந்தும் இப்படித் தனியாக நிற்க வைத்துவிட்டீர்களே என்று கோபப்பட்டார். குணாளனுக்கு நெஞ்சுக்குள் ஒருமுறை சுருக்கென்றது. நீவி விட்டுக்கொண்டார்.
அப்போது அவர் அறையின் கதவு தட்டுப்பட்டது. இப்போது யார் என்று திரும்பிப் பார்த்தார்.
இளவஞ்சி நின்றிருந்தாள்.
சற்று முன்னர் அலுவலகம் கிளம்பிப்போன அவள் திரும்பவும் வந்து நிற்கிறாள் என்றால், தான் திடமாக நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார் குணாளன்.
எப்போதும் அவர் கரத்தைப் பற்றிக்கொண்டு அவர் அருகில் அமர்கிறவள் இப்போதெல்லாம் அமர்வதே இல்லை. வருவாள், அவர் நலன் விசாரிப்பாள், தேவைகள் ஏதும் உண்டா என்று கேட்பாள், போய்விடுவாள். இப்போதும் அவர் முன்னால் ஒரு இருக்கையைப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.
அவர் அவள் முகத்தையே பார்த்திருக்க, “எனக்கு என்னைப் பற்றித் தெரியோணும்.” என்றாள் சுருக்கமாக.
அவர் நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
“நான் ஆர்?”
“இந்தக் குணாளன்ர மூத்த மகள்.” குரலும் பார்வையும் நெகிழச் சொன்னார் குணாளன்.
ஒரு வினாடி அமைதியாக இருந்தாலும், “நான் கேக்கிறது என்னைப் பெத்த அம்மா அப்பாவைப் பற்றி.” என்றாள்.
“அப்ப நான் உங்கட அப்பா இல்லையாம்மா?” கண்ணோரம் கசியக் கேட்டார்.
இல்லை என்று எப்படிச் சொல்லுவாள்? அவள் அவர் மகள் இல்லை என்று தெரிந்துகொண்ட அந்தக் கணம் வரைக்கும் அவள் அப்படி உணர்ந்ததே இல்லையே. ஜெயந்தி கூட அப்படித்தானே பார்த்துக்கொண்டார். இன்னுமே சொல்லப்போனால் அவள் முடிவின் கீழ்தானே அந்த வீடே இயங்கியது. இப்போதும் அவள்தான் விலகி நிற்கிறாள். அல்லது அப்படி நிற்க முயல்கிறாள்.
அவரையே சில கணங்களுக்குப் பார்த்தவள் அந்த விழிகளில் தெரிந்த பாசத்திலும் பரிதவிப்பிலும் தன் பார்வையை அகற்றிக்கொண்டாள். இதனால்தான் இத்தனை நாள்களும் இதைப் பற்றிப் பேசாமல் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தாள்.
காரணம் சொல்லாமல் திருமணத்திற்குச் சம்மதி என்கிற நிலனின் பிடிவாதம்தான் சந்தேகத்தைக் கிளப்பி, அலுவலகத்துக்குப் புறப்பட்டவளைப் பாதையை மாற்றி இங்கே வரவைத்தது.
அவரானால் அவரின் பாசத்தாலேயே அவளை முடக்கப் பார்க்கிறார்.
அதற்கு விட்டுவிடக் கூடாது என்று முடிவுகட்டி, “நான் அநாதையா, என்னை எங்கயாவது இருந்து எடுத்து வளத்தீங்களா?” என்று கேட்டு முடிக்க முதலே துடித்துப்போனார் மனிதர்.
“நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நீங்க அந்த வார்த்தையைச் சொல்லக் கூடாது அம்மாச்சி. இந்த வீட்டுப் பிள்ளையம்மா நீங்க. இந்த அப்பான்ர மகள். இப்பிடி எல்லாம் கதைச்சு என்னை நோகடிக்காதீங்கோ.” என்றார் உடைந்துபோய்.
இளவஞ்சியால் அவரைப் பார்க்க முடியவில்லை. பெரும் வேதனை ஒன்று அடிவயிற்றிலிருந்து உருண்டு வந்து தொண்டைக்குழியை அடைத்தது. அழுது பழக்கமில்லாதவள் அழுதுவிடுவோமோ என்று பயந்தாள். ஆனால், மண்ணுக்குள் மறைந்துகிடக்கும் வேரை மரம் தேடிக்கொண்டிருக்கிறதே!
மெல்லத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “வளத்த பாசம் உங்களை இப்பிடிக் கதைக்க வைக்குது. ஆனா எனக்கு என்னைப் பற்றித் தெரியோணும். நான் எப்பிடி உங்களிட்ட வந்தனான்? நான் அநாதையா?” என்று வினவினாள்.
மீண்டும் அநாதை என்கிறாள். கண்ணில் நீரோடு மறுத்துத் தலையசைத்தார்.
“என்னைப் பெத்தவே ஆர்?”
அதற்கு மட்டும் பதில் சொல்ல மறுத்தார் அவர்.
“ஆக நான் அநாதை இல்லை. என்னைப் பெத்தது ஆர் எண்டு உங்களுக்குத் தெரியும். ஆனாலும் சொல்லுறீங்க இல்ல.” மெல்லிய கோபம் தொனிக்கப் படபடத்தாள் அவள்.
தன் பார்வையில் கூடச் சிறு மாற்றத்தையும் காட்டிவிடக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் அமர்ந்திருந்தார் மனிதர்.
“எனக்கும் சக்திவேலர் குடும்பத்துக்கும் ஏதும் சம்மந்தம் இருக்கா?”
உள்ளே உள்ளம் பகீர் என்றாலும் அவர் அசையவேயில்லை. தானும் தையல்நாயகியின் மகன்தான் என்று காட்டினார்.
“அதான் என்னைக் கட்டியே ஆகோணும் எண்டு நிலன் நிக்கிறாரா?”
“...”
அவளுக்குக் கோபம் வந்தது. “வாயத் திறந்து சொல்லுங்க அப்பா! இப்பிடி எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்? எனக்கு உண்மை தெரியோணும்!” என்று சினத்தில் இரைந்தாள்.
“இப்ப அப்பா எண்டு சொன்னீங்களேம்மா. அதுதான் உண்மை. நான்தான் உங்கட அப்பா.” என்றவரை கோபத்துடன் முறைத்தவள் எழுந்து விறுவிறு என்று நடந்தாள்.
ஜெயந்தி எதிர்ப்படவும் நின்று, “நீங்களாவது சொல்லுங்க. நான் ஆர்? என்னைப் பெத்தவே ஆர்?” என்றாள் அவரிடமும்.

Last edited: