• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவள் ஆரணி - 24

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 24


நிகேதன் ஒரு பக்கம் சகாதேவன் ஒருபக்கம் கூடவே சுகிர்தனும் இன்னொரு பக்கம் என்று மாப்பிள்ளை தேடுதல் வேட்டை ஆரம்பித்திருந்தது. சிலதைக் கயல் மறுத்தாள். சிலது குறிப்புப் பொருந்தாமல் போனது. சில வரன் அருமையாக இருந்தாலும் பொறுப்பு அல்லது நிலையற்ற வருமானம் என்று எப்படியோ தட்டிப்போனது. இப்படியே ஆறுமாதம் கழிந்த நிலையில், செண்டரில் ஆரணியோடு வேலை பார்க்கும் அனுவின் தூரத்து உறவினனான ராகவன் இவர்களின் எதிர்பார்ப்புக்குப் பொருந்தி வந்தான். கயலினி விரும்பியது போலவே ஆசிரியராகவும் இருந்துவிட எல்லோருக்குமே சந்தோசம். ராகவனுக்கும் கயலினியைப் பிடித்திருந்தது.

பெண் பார்க்கும் படலம், சம்மந்தக் கலப்பு, சீதனப்பேச்சு என்று அனைத்துக்கும் சகாதேவனும் மனைவி பிள்ளைகளோடு வந்து நின்று, நிகேதனோடு சேர்ந்து அனைத்தையும் செய்து முடித்தார்.

ஈழத்தவர்களின் வழக்கமாக வீடும் காணியும் பெண்ணுக்கே சீதனமாகச் சேரும். கூடவே நகை நட்டுகள், திருமணச் செலவு, மருமகனுக்கு பைக் என்று வெகு தாராளமாகவே சீதனம் பேசி முடிவானது.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மாலினிக்கு, உள்ளூர பெரும் வியப்பு. மகனின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டுப் போனதற்குப் பிறகு இப்போதுதான் வருகிறார். வந்து பார்த்தால் எல்லாமே மாறியிருந்தது. அதே வீடுதான். ஆனால், காயப்பட்டிருந்த இடங்கள் எல்லாம் நேர் செய்யப்பட்டு, யன்னல்கள், கதவுகள் பழுது பார்க்கப்பட்டு, வீடும் புதுவர்ணம் பூசி அழகாகக் காட்சி தந்தது. முன் முற்றம், தோட்டம், ஆரணியின் டெரெஸ் என்று எல்லாமே அழுது வடிந்த தோற்றம் மாறி சீரமைக்கப்பட்டு மிக நேர்த்தியாகவும் அழகாகவும் உரு மாறி இருந்தது. முக்கியமாகப் புது சோபா செட், நவீன ரகத் தொலைகாட்சி, அறைகளுக்கு நல்ல கட்டில்கள், கப்போர்ட்டுகள், கிட்சன் செட், வோஷிங் மெஷின், பிரிட்ஜ் என்று அவர்களின் தரமே உயர்ந்திருந்தது.

இது எல்லாவற்றையும் விட, வாயில்லா பூச்சியாக எல்லாவற்றையும் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, இறுகிபோய்த் திரிந்த நிகேதனிடம் தெரிந்த நிமிர்வும் ஆளுமையும் தான் அவரின் புருவங்களை உச்சிமேட்டுக்கே கொண்டுபோயிற்று.

மாப்பிள்ளை வீட்டினரைப் பற்றி விசாரித்தது, அவர்களோடு பேசிய முறை, சீதனம் பற்றிய தெளிவான முடிவுகளை எடுத்தது என்று அனைத்திலுமே மிகுந்த தெளிவும் நிதானமும் காட்டினான். உண்மையைச் சொல்லப்போனால் சகாதேவன் மூத்த மகன் என்பதால் கூட நின்றார். அவ்வளவுதான்.

தான் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்குத்தான் போவேன் என்று இருந்தவனை மாற்றி, ஒரு டிரைவராக்கி, பிறகு அதையே சொந்தத் தொழிலாக்கி, இன்றைக்கு இரண்டு வாகனத்துக்குச் சொந்தக்காரனாக மாற்றிவிட்டாளே இந்தப் பெண் என்று ஆரணியைக் குறித்தும் வியக்காமல் இருக்க முடியவில்லை.

இன்றோடு கயலின் விடுமுறை முடிந்து நாளையே யாழ்ப்பாணம் புறப்பட வேண்டும் என்பதில், அவளை வெளியே அழைத்துச் செல்ல அவர்களின் வீட்டுக்கு வந்திருந்தான் ராகவன். மண்டபம் பார்த்தல், மண்டப அலங்காரம், மேக்கப், எந்த ஐய்யரை அழைப்பது, சமையல் பொறுப்பு என்று மிச்சம் சொச்சமாக இருக்கும் திருமணம் சம்மந்தமான பேச்சுக்களைப் பேச என்று அவனுடைய பெற்றோரும் வந்திருந்தனர்.

கண்களில் கனவும் உதட்டினில் சிரிப்புமாக வருங்காலக் கணவனோடு புறப்பட்ட மகளின் தோற்றம் கண்டு அமராவதி அம்மாக்கு மனம் பூரித்துப் போயிற்று. கண்ணோரம் ததும்பிய விழிநீரை உள்ளுக்குள்ளேயே இழுத்துக்கொண்டு, “கவனமா போயிட்டு வாங்கோ.” என்று சிரித்தமுகமாக அனுப்பிவைத்தார்.

நினைவு தெரிந்த காலமெல்லாம் வறுமை. ஒரேயொரு பெண் பிள்ளை. அவளின் திருமணம் என்னாகுமோ எப்படி நடக்குமோ என்பது பெரிய கவலை. இன்றோ அனைத்தும் தீர்ந்து அருமையான வரன் அமைந்து போதும் போதும் என்கிற அளவில் சீதனமும் கொடுத்து அவளுக்குப் பிடித்தவனோடு மணமும் நடக்கப்போகிறது. இதைவிட வேறென்ன வேண்டும்?

மகன்களும் கூடவே அமர்ந்திருக்க, திருமணம் குறித்தான பேச்சுகள் நடந்துகொண்டிருந்தது. நடுநடுவே தன் கருத்தையும் கேட்டுக்கொள்ளும் மகன்களுக்குப் பதில்களைச் சொல்லியபடி சம்மந்தி குடும்பத்துடன் சந்தோசமாக அளவளாவிக் கொண்டிருந்தார், அவர்.

இந்தக் கால இடைவெளிக்குள் சமையல் விற்பன்னியாகிவிட்ட ஆரணி விருந்தைச் சமைத்து முடித்திருந்தாள். சகாதேவன் குடும்பம், மாப்பிள்ளை வீட்டினர், நிகேதன் என்று எல்லோரையும் மேசையில் அமர்த்திப் பரிமாறினாள். அன்று போலவே அவளின் கவனிப்பில் நிகேதன் விசேட இடம் பிடித்திருப்பதைக் கவனித்த மாலினிக்கு, ஆரணியை வியக்காமல் இருக்க முடியவில்லை.

மூன்று வருடங்களைத் தாண்டியாயிற்று. இன்னுமே வேலைக்குப் போகிறாள். குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. கயலினியின் திருமணப் பொறுப்பை முழுமையாக நிகேதன் தான் ஏற்றிருக்கிறான். அது எவ்வளவு பெரிய சுமை? ஆனாலும் நிகேதனின் மீதான அவளின் அன்பும் கவனிப்பும் குறையவே இல்லை.

எப்படி இவளால் இப்படி இருக்க முடிகிறது என்று மாலினிக்கு விளங்கவே இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் மாலினியை விடவும் வசதியான வீட்டுப்பெண் தான் ஆரணி. அப்படியானவள் இங்கு வந்திருந்து இவர்களோடு மல்லுக்கட்டி கணவனையும் உயர்த்தித் தானும் உயர்ந்து நிற்கிறாளே. அவருக்குள் ஓடிய இந்த எண்ணங்கள் அடிக்கடி ஆரணியையே கவனிக்க வைத்தது.

ஆரணியும் இதைக் கவனிக்காமல் இல்லை. அவளுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டு வேலைகளைப் பார்த்தாள். எல்லோரும் உணவை முடித்துக்கொண்டு மீண்டும் கூடத்துக்கு இடம் பெயர்ந்திருந்தனர். கடைசியாகக் கையைக் கழுவிக்கொண்டு வந்த நிகேதன், “நானும் அப்ப இருந்து பாக்கிறன், என்னடி அது ரகசிய சிரிப்பு?” என்று, மற்றவர்களைக் கவராமல் கிசுகிசுத்தான்.

“இல்ல, உன்ர அண்ணி இப்பதான் என்ன பொம்பிளை பாக்கிறா. டிஸ்டப் பண்ணாம போ.” என்று, நகைக்கும் குரலில் அவளும் ரகசியமாகச் சொன்னாள்.

அவளை முறைத்தான் அவன். “சும்மா அவவை வம்புக்கு இழுக்காத ஆரா!” என்று அதட்டினான். ஆனாலும், அவனை அறியாமலேயே அவன் கவனம் மாலினியில் குவிந்தது.

அங்கே பேச்சில் கவனமாக இருந்தாலும் அவரின் பார்வை உண்மையாகவே ஒருவித அளவிடும் நோக்குடன் இவளைத்தான் தொட்டுத் தொட்டு மீண்டது. இப்போது அவனுக்கும் சிரிப்புவர அவளைப் பார்த்தான். குறும்புடன் கண்ணடித்துவிட்டுப் போனாள் ஆரணி.

‘இவளை.. எல்லாரையும் வச்சுக்கொண்டு செய்யிற வேலைய பார்..’ தன் முறுவலை மறைத்துக்கொண்டு கூடத்துக்கு நடந்தான்.

அதன்பிறகும், ஏன் பார்க்கிறார் என்கிற கேள்வியுடன் அவன் பார்வை மாலினியைத் தொட்டுத் தொட்டு மீண்டபோதுதான் அவருக்கும் ஆரணிக்குமான வித்தியாசம் அவன் கண்ணில் பட்டது.

ராகவன் வீட்டினர் வருகின்றனர் என்பதால் ஆரணியைப்போலவே அழகான சுடிதார் ஒன்றில்தான் அவரும் இருந்தார். ஆனால், மொத்தமான தாலிக்கொடியுடன் கூடவே பொலிவான ஒரு செயின். அப்படியே காதில் நல்ல தோடு, கையில் காப்பு, கைச்செயின் என்று தன் தரம் குன்றாதபடிக்கு அவர் இருக்க ஆரணியோ மெல்லிய செயின் ஒன்றுடன் நடமாடிக்கொண்டு இருந்தாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவன் முகம் அப்படியே சுருங்கிப் போயிற்று. அன்றைய நிலையோடு ஒப்பிடுகையில் இன்று அவர்களின் தரம் பலமடங்கு உயர்ந்திருக்கிறதுதான். ஆனால், அவர்களின் எல்லாச் சேமிப்புமே கயலின் திருமணத்துக்கானவை. அவளின் திருமணம் முடிந்ததும் நிச்சயம் அவன் பெரிதளவில் பணவிசயத்தில் இறுகிப்போய்த்தான் நிற்பான். அதனாலோ என்னவோ பலமுறை அவன் கேட்டும் ஆரணி தனக்கு நகைகள் வாங்கச் சம்மதிக்கவே இல்லை. இந்த இரண்டு வருடத்தில் தரமான உடைகளும், வேலைக்குப்போய்வர ஒரு ஸ்கூட்டியும் தான் அவளாக வாங்கிக்கொண்டவை. அந்தச் செயின் கூட வெறும் கழுத்துடன் அவள் இருப்பதைப் பார்க்க முடியாமல் முதலாவது திருமண நாளின்போது அவன் வாங்கிப் பரிசளித்தது.

அவளுக்கும் செய்யவேண்டும் என்கிற பெரும் விருப்பம் அவனுக்கு இருந்தாலுமே அவள் சொல்வதுபோலக் கயலுக்கு முடித்துவிட்டால் அதன் பிறகு எல்லாமே அவளுக்குத்தானே என்றுதான் பொறுத்திருந்தான். ஆனால், இன்று அது சரியாக வராது என்று புரிந்து போயிற்று.

சீரும் சிறப்புமாகப் பெரிய மண்டபத்தில் ஊரையே கூட்டி நடக்கப்போகிற தங்கையின் திருமணத்தில் அவனுடைய ஆரணி நகைகளற்று நிற்பதா? குறைந்தபட்சமாக தாலிக்கொடியாவது அவளின் கழுத்துக்கு வேண்டும். தன் வயது எத்தனையோ அத்தனையில் தான் கொடி செய்து தரவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். அவளின் அந்த ஆசையை நிறைவேற்றுவது என்றால் நிச்சயம் பல லட்சங்கள் வேண்டும். எப்படியாயினும் அதைச் செய்துவிட வேண்டும் என்று இப்போது அவன் மனம் அழுத்தமாய் எண்ணிற்று!

“நிக்கி! இங்க தனியா நிண்டு என்ன செய்றாய்?” ஆரணியின் குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது. அப்போதுதான், யோசித்தபடி தோட்டத்துக்கு வந்துவிட்டதை அவனும் கவனித்தான். ஒன்றும் சொல்லாமல் திரும்பி அவளைப் பார்த்தான்.

அவள் அவனைப்போன்று தன்னை மாலினியோடு ஒப்பிடவில்லை போலும். எந்த வாட்டமும் இல்லாமல் மலரப் புன்னகைத்தபடி அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள். சீதன பேச்சின் போதோ திருமணம் பற்றிய முடிவுகளின் போதோ, ‘இவ்வளவு காசுக்கு நாங்க எங்கயடா போறது?’ என்று ஒரு வார்த்தை கேட்கவே இல்லை. மாறாக, ‘கயலுக்கு ராகவனை நல்லா பிடிச்சிருக்கு நிக்ஸ். அவே என்ன கேட்டாலும் பெருசா மறுக்கப் போகாத. என்ன குடுத்தாலும் எங்கட கயலுக்குத்தானே குடுக்கப்போறம். அதால ஓம் எண்டு சொல்லு.’ என்றுதான் சொன்னாள். இந்த மூன்றரை வருடங்களாக அவனுக்காகத் தானும் சிலுவை சுமக்கிறவளின் பால் அவன் நேசம் மிகுந்து போயிற்று.

தன்னையே பார்த்துக்கொண்டு நின்றவனை வேண்டுமென்றே கூர்ந்து பார்த்தாள், ஆரணி.

“என்னடா இது? பாசமா பாக்கிற?”

“நான் பாக்காம அண்ணியா பாப்பா?” என்றான் அவனும் வேண்டுமென்றே.

கலகலவென்று நகைத்தாள் அவள். “அவா இன்னுமே என்னைப் பாத்து முடியேல்ல மச்சி. எனக்கே என்னில டவுட் வந்திட்டுது. கண்ணாடியில போய்ப் பாத்தன். ஒரு வித்தியாசமும் தெரியேல்ல. எப்பவும் மாதிரித்தான் இருக்கிறன். உனக்கு ஏதாவது தெரியுதா, பார்.” என்றவள் ஒரு சுற்றுச் சுற்றித் தன்னைக் காட்டினாள்.

“நிறைய!” என்றான் அவன் உதட்டுக்குள் சிரிப்பை மென்றபடி.

அந்தக் கள்ளனின் எண்ணம் போகும் திசையை அவள் கண்டுகொண்டாள். “ஏய்.. ஏய்.. இதுதானே வேண்டாம் எண்டுறது. எனக்குத் தெரியுமடா உன்னைப் பற்றி!” என்று விரல் நீட்டி எச்சரித்தபடி நகைத்தாள், அவள்.

சிரிக்கும் இதழ்களைச் சிறை செய்யும் ஆவல் எழுந்தது. வீடு முழுக்க ஆட்களை வைத்துக்கொண்டு அது முடியாமல் போனதில், “நீ போ. நான் வாறன்.” என்றான் அவன்.

“போறன். ஆனா என்ன யோசிச்சுக்கொண்டு நிக்கிறாய். அத சொல்லு.”

“கலியாணத்துக்கு நிறையச் செலவாகும் போல ஆரா. கடன் படவேண்டி வந்தாலும் வரும்.” என்றான் அவளையே கவனித்தபடி.

“அதுக்கு?” என்றாள் உடனேயே.

“இல்ல.. அதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.”

“டேய் லூசா! என்ன மனுசனடா நீ. நடக்கப்போறது தங்கச்சின்ர கலியாணம். அதுக்குக் கணக்குப் பாப்பியா? எவ்வளவு எண்டாலும் சமாளிக்கலாம். வா!” என்றாள் அவனை முறைத்துக்கொண்டு.

அதற்கு மேலும் அவனால் முடியவில்லை. “இந்தக் கலியாணத்துக்கு உனக்கு ஒண்டும் வேண்டாமா ஆரா? ஏதாவது விருப்பம் இருந்தா சொல்லு, வாங்கித் தாறன்.” என்றான்.

அவனின் குரலில் தெரிந்த பேதத்தை ஆரணியும் உணர்ந்தாள். தனக்காகவும் ஏதாவது செய்யப் பிரியப்படுகிறான் என்று விளங்கிற்று. “நல்ல பட்டுச்சாறி, அது எவ்வளவு விலை எண்டாலும் எனக்குப் பிடிச்சதை நான் காட்டுவன். நீ வாங்கித் தரவேணும். சரியோ.” என்றாள் அவள்.

அவனுக்கு மனது பிசைந்தது. இப்போதும் தாலிக்கொடி பற்றி அவள் சொல்லவே இல்லையே. ஏன் இத்தனை புரிதல்? இத்தனை விட்டுக்கொடுப்பு? இத்தனை அன்பு? எல்லாம் அவனுக்காகவா? அவனைத் தானும் நெருக்க வேண்டாம் என்கிற நேசமா? அந்தளவுக்கு அவளுக்கு அவன் என்ன செய்தான்?

“டேய்! என்னடா திரும்பவும் உன்ர அண்ணி மாதிரி என்னையே பாக்கிறாய்?”

“ஒண்டுமில்ல. நீ போ. ரெண்டுபேரும் இங்க நிண்டா சரியில்ல.” அவனுக்குத் தன்னைச் சமாளித்துக்கொள்ளத் தனிமை தேவைப்பட்டது.

“நீ வராம நான் போகமாட்டன்!”

“கொஞ்சமாவது நான் சொல்லுறத கேக்கிறியா நீ?” என்று பல்லைக் கடித்துவிட்டு வேறு வழியற்று அவளுடன் நடந்தான்.

“ஆ.. பிறகு? இவர் பெரிய இவர். இவரின்ர பேச்சு நான் கேக்கோணுமாம். போடா டேய்!” என்றுவிட்டுப் போனாள் அவள்.

அவன் முகத்தில் மென்னகை மலர்ந்தது. கூடவே, நொடியில் தன் உலகையே பலவர்ணங்களால் அலங்கரித்துவிட்டுப் போகிறவளுக்காக என்னவும் செய்யலாம் என்றும் தோன்றிற்று.

-------------------------

கயலின் திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்து வந்திருந்தது. அதைக் கோவிலில் சுவாமியின் காலடியில் வைத்து எடுக்கக் குடும்பமே புறப்பட்டனர். அப்படியே நெருங்கிய உறவுகளுக்கும் கொடுப்பதற்காக மீண்டும் தன் குடும்பத்துடன் வந்திருந்தார் சகாதேவன்.

அன்று காலையிலேயே, “இந்தச் சாறியை கட்டு ஆரா.” என்று ஒரு பட்டுச் சேலையைக் கொண்டுவந்து கொடுத்தான், நிகேதன்.

“கோயிலுக்குப் போறதுக்கு என்னத்துக்குக் கலியாண வீட்டுக்கு கட்டுற ரேஞ்சில இருக்கிற சாறி?”


சொன்னதைச் செய்யாமல் கேள்வி கேட்டவளை முறைத்தான் நிகேதன். “எப்பயாவது நான் சொல்லுறதையும் கொஞ்சம் கேளு!”

“ம்க்கும்!” என்று சிலுப்பிக்கொண்டாலும் அதையேதான் கட்டிக்கொண்டாள்.

அமராவதி அம்மா பார்வையாலும் மாலினி, “நாங்க என்ன கலியாணத்துக்கோ போறம்?” என்று வார்த்தைகளாலும் கேட்டாலும் நிகேதனை முறைத்தாளே தவிர மாற்றிக்கொள்ளவில்லை, அவள்.

கோயிலில், அழைப்பிதழ்களை சுவாமியின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து முடிந்ததும் புறப்படலாம் என்று நினைக்கையில், “கொஞ்சம் பொறுங்க அம்மா.” என்றுவிட்டு நொடியில் மறைந்தான் நிகேதன். வரும்போது பட்டு வேட்டி சட்டையில் வந்தான்.

“என்னடா தம்பி இது? கலியாண மாப்பிள்ள கோலம்?” அமராவதியின் கேள்விதான் அங்கிருந்த எல்லோரின் பார்வையிலும்.

“கலியாண மாப்பிள்ளை தானம்மா. இண்டைக்கு ரெண்டாவது முறையா ஆராக்கு தாலி கட்டப்போறன்.” என்றவன் ஐயரைப் பார்த்தான்.

அவரும் இரண்டு மாலைகளைக் கொண்டுவந்து கொடுத்தார். ஒன்றை அவன் அவளின் கழுத்தில் போட்டுவிட்டுக் கண்ணால் சிரித்தான். ஆரணிக்கும் திகைப்புத்தான். அவள் அணிந்துகொண்டிருக்கும் சேலைக்கான பொருளும் இப்போது புரிந்தது. ஒன்றும் சொல்லாமல் அவளும் மாலையைத் தன் மணவாளனுக்குப் போட்டுவிட்டாள். நெஞ்சம் காரணமற்று விம்மிற்று. விழிகளை அவனிடமிருந்து அகற்றமுடியாமல் நின்றாள். சகாதேவனின் பிள்ளைகள் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் தம்முடைய கைப்பேசிகளுக்குள் புகைப்படங்களாக அடக்கிக்கொண்டிருந்தனர்.

பெரியவர்கள் மூவரும் அதிர்ச்சி விலகாமலே நின்றனர். நிகேதன் ஏற்கனவே ஐயரிடம் கொடுத்து வைத்திருந்த தாலிக்கொடியை, தாம்பூலத் தட்டில், தேங்காயின் மேல் வைத்து, மங்கள அரிசியோடு பெரியவர்களிடம் நீட்டினார், ஐயா. அர்ச்சதையை அவர்களின் கைகள் தாமாக எடுத்துக்கொண்டது. தன் குடும்பத்தினரின் முன்னிலையில் தன்னவளின் கழுத்தில் முகமெல்லாம் பூரிப்புடன் மங்கள நாணைப் பூட்டினான், நிகேதன்.

அவனுடைய கரங்கள் கழுத்தோரம் உரசியபோது ஆரணியின் தேகம் ஒருமுறை சிலிர்த்து அடங்கிற்று. கண்ணில் கண்ணீரும் உதட்டில் சிரிப்புமாக அவனையே பார்த்தாள்.

அமராவதி அம்மாவின் முகம் அப்படியே கடுத்துப் போயிற்று. எத்தனை பவுன் என்று சரியாகக் கணிக்க முடியாமல் போனாலும் அதன் மொத்தமே பெரும் தொகை என்று சொல்லியதில் அவரின் அடிவயிறு எரிந்தது. நெஞ்சு காந்தியது. அங்கே அடிபடப்போவது அவரின் பெண்ணுக்கான செலவுகளாயிற்றே.

எரிச்சலும் ஆத்திரமும் மிகுந்துவிட, விறுவிறு என்று கோயிலை விட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினார்.
 

Goms

Active member
உண்மையில் ஆரணி போல் கணவனுக்காக விட்டுக் கொடுக்கும் பெண்கள் உலகில் இருப்பது அபூர்வம்.

எந்த அளவு காதல் இருந்தால் இவ்வளவு தூரம் குடும்பத்தை நிகேதனுடன் தாங்க முடியும். Love you Aarani 💖💖💞💞

அமராவதிக்கு எப்போவும் தன் பெரிய மகனும், மகளும் தான் கண்ணுக்கு தெரியும்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom