• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவள் ஆரணி - 35

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 35


நிகேதனும் ஆரணியும் அடுத்த வாரமே புது வீட்டுக்கு பால் காய்ச்சி வந்து சேர்ந்தனர். வீட்டுத் தளபாடங்கள் வாங்குவதற்கு நிகேதன் ஆயத்தமானபோது தடுத்து நிறுத்திவிட்டாள், ஆரணி.

அட்வான்ஸ் முப்பதுனாயிரம் எனும்போது சுளையாக முப்பதுனாயிரம் அதற்கே போனது. மாதக்கடைசியில் பத்தாயிரம் வாடகை வேறு கொடுக்க வேண்டும். தளபாடங்களும் எனும்போது செலவு அதிகம் என்று படுப்பதற்குப் பாய் தலையணையும் சமைப்பதற்கு அத்தியாவசியப் பொருட்களும் என்று தன் வீட்டுக்கான செலவை கைக்கூ கவிதைபோல் சிக்கனமாக முடித்துக்கொண்டாள் அவள்.

விறாந்தையில் டீவி இல்லை. அமர்வதற்குக் குறைந்தபட்சமாகப் பிளாஸ்ட்டிக் நாற்காலிகள் கூட இல்லை. உறங்கக் கட்டில் மெத்தை இல்லை. சாப்பாட்டு மேசை இல்லை. ஆனாலும், அவளின் சந்தோசத்துக்கு அளவில்லை.

அதுவரை நடந்த பிரச்சனைகள் அனைத்தும் பனியாய் அகன்றுபோன உணர்வு. புதிதாக முதல் நாளிலிருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டிருந்தது.

பொருட்களே இல்லாத அந்த வீட்டையே ஆசையோடு சுற்றிச் சுற்றி வந்தாள். எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது இதனால்தானோ? இரவு, பாயில் அவனருகில் சரிந்திருந்த ஆரணி அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள். நேரம் பதினொன்றைக் கடந்திருந்தபோதும் அவளுக்கு உறக்கம் வருவேனா என்றது.

“இது எங்கட வீடு நிக்கி. சொல்லவே எப்பிடி இருக்கு பாரு. எங்கட வீடு! நானும் நீயும் இனி இங்கதான் வாழப்போறோம். என்னால நம்பவே ஏலாம இருக்கடா.” என்றவள் தன் சந்தோசத்தைக் காட்டுகிறவளாக அவனைத் தன்னோடு இன்னும் இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

கைகள் இரண்டையும் தலைக்குக் கீழே கொடுத்து மல்லாந்து படுத்திருந்தவன் அவளின் உற்சாகத்தையும், அதில் தன் மார்புக்கு அவள் தருகிற ஆழ முத்தங்களையும், இறுகிய அணைப்பையும் மென்னகையோடு ரசித்திருந்தான்.

அவன் மார்பில் சரிந்திருந்தவள் தலையை மட்டும் மேல்நோக்கித் திருப்பி அவனைப் பார்த்தாள். “ஓய்! என்ன ஒண்டுமே கதைக்கிறாய் இல்ல? உன்ன உன்ர குடும்பத்தில இருந்து பிரிச்சுத் தனிக்குடித்தனம் கூட்டிக்கொண்டு வந்திட்டேனோ?” என்றாள் கண்களில் சிரிப்பு மின்ன.

முகத்தில் இளநகை மின்னியபோதும் ஒன்றும் சொல்லவில்லை அவன். நன்றாக அவன் முகம் பார்ப்பதுபோல் திரும்பிப் படுத்து, “என்னைப் பாத்தா கொடுமைக்கார மனுசி மாதிரி இருக்கோ?” என்றாள் மீண்டும்.

அப்போதும் அவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க அவன் வாயைக் கிண்டும் ஆவல் எழுந்தது அவளுக்கு. அவன் மீசையைப் பிடித்துத் திருகினாள். உதட்டைப் பிடித்து இழுத்தாள்.

“பேசு நிக்கி பேசு. ஏதாவது பேசு நிக்கி பேசு!” என்று அவன் தாடையைப் பற்றி ஆட்டினாள்.

அவன் உதட்டோரம் துடித்தது. கைகள் எதற்கெல்லாமோ துறுதுறுத்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டு இன்னும் என்னவெல்லாம் செய்கிறாள் என்று பார்க்கப் பொறுத்திருந்தான்.

“என்னடா கதைக்க மாட்டியா? எனக்கு அவ்வளவு பயமா நீ? அவ்வளவுக்கு நல்லவனாடா நீ?”

அதற்கு மேலும் அவனால் முடியவில்லை. மின்னல் விரைவில் அவளைத் தனக்குள் கொண்டு வந்தான். “இதையெல்லாம் இவ்வளவு நாளும் எங்கயடி வச்சிருந்தனி?” என்றான் கிறக்கத்துடன்.

“எல்லாம் இங்கதான் மச்சி கிடக்கு!” என்று நகைத்தாள் அவள்.

“சிரிக்காதயடி! கிட்ட வந்தாலே முகத்தைக் கல்லு மாதிரி வச்சிருக்கிறது. ஒரு சிரிப்பு இல்ல. கதைப்பு இல்ல. சோக கீதம் வாசிச்சிட்டு இப்ப பேசு நிக்கி பேசா?” என்று கேட்டவன் அவளைப் பதில் சொல்ல விடவேயில்லை.

நாட்கள் இனிமையாக நகர்ந்தன. அவர்களைப் பற்றி அறிந்துகொண்ட அந்த வீட்டுச் சொந்தக்காரனின் அன்னையான பார்வதி அம்மாவுக்கு அவர்களை மிகவுமே பிடித்துப் போயிற்று.

அவரும் அருமையானவராக இருந்ததில் நிகேதனுக்கும் அவளின் பாதுகாப்புக் குறித்தான கவலை அகன்றிருந்தது. இவள் தனித்திருக்கும் பொழுதுகளில் ஒன்றில் அவர் இங்கு இருப்பார் இல்லையோ இவள் அங்கு இருப்பாள்.

வார இறுதிகளில் இருவருமாகக் கயல் வீட்டுக்குச் சென்று வந்தார்கள். கயலுக்கு ஐந்து மாதங்கள் ஆரம்பித்தும் ஆரணிக்கு எந்த நல்லதும் நடக்கமாட்டேன் என்றது.

‘வைத்தியரிடம் ஒருமுறை காட்டுவோமா?’ என்று ஆரம்பக் காலத்தில் தயக்கமாக ஒலித்த கேள்வி இப்போதெல்லாம் ஆரணியிடமிருந்து ஒரு வற்புறுத்தலோடு ஆரம்பித்திருந்தது.

நிகேதன் தான் அதற்கு உடன்படாமல் நின்றான். சும்மா அறியப் போனாலே ஆயிரம் குறைகளைச் சொல்லி இருக்கிற சந்தோசத்தையும் கெடுத்து விடுவார்களோ என்கிற பயம் அவனை அழுத்தியது.

இந்த ஐந்து வருடங்களும் அவர்கள் அவர்களுக்காக வாழ்ந்ததைக் காட்டிலும் தம்மை நிரூபிக்கவும் கடமையை முடிக்கவும் ஓடியதே அதிகம். இதில் எங்கிருந்து குழந்தை உருவாக. கூடவே, எந்தத் தூண்டுதலும் இல்லாமல் இயற்கையாகவே தன்னுடையவள் சூழ் கொள்வாள் என்கிற நம்பிக்கையும் அவனுக்கு வெகுவாகவே இருந்தது.

“ஏன் ஆரா இவ்வளவு அவசரம்? நாங்க கல்யாணம் கட்டி அஞ்சு வருசம் எண்டாலும் வாழ ஆரம்பிச்சு கொஞ்சக் காலம் தானே ஆகுது. எல்லாம் நடக்கும் அமைதியா இரு.” என்று ஆறுதல் சொன்னான்.

தன் மனதின் ஏக்கம் தீராதபோதும், அவன் சொல்வதிலும் உண்மை இருந்ததில் அவளும் காத்திருக்க முடிவு செய்தாள்.

---------------


சுகிர்தனுக்கு தர்மினி என்கிற பெண்ணைப் பேசி நிச்சயம் செய்து இருந்தார்கள். அடுத்த வாரத்தில் திருமணம் என்று நெருங்கியதும் அந்த வாரம் முழுவதும் நிகேதன் வீட்டிலேயே இல்லை. கயலின் திருமணத்தின்போது அவன் எப்படி இவனுக்குத் தோள் கொடுத்தானோ அதேபோல் இவனும் அவனுக்காக நின்றான்.

சுகிர்தனின் பெற்றோர் வயதானவர்கள் என்பதில் ஆரணியும் பலகாரம் செய்ய, ஆடைத் தெரிவுகளுக்கு, சமையலுக்கு, வீடு ஒதுக்க, ஒழுங்கு செய்ய என்று நேரம் காலம் பாராமல் உதவி செய்தாள்.

அன்று சுகிர்தனுக்குத் திருமணம்.

அமராவதி அம்மா, கயல், ராகவன், ஆரணி என்று எல்லோரையும் நிகேதன் தன் வாகனத்திலேயே அழைத்துப் போனான். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மண்டபத்தில் நிறைந்திருக்க, மேடையில் மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்து சடங்குகளைச் செய்துகொண்டிருந்தான் சுகிர்தன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவனுடைய பெற்றோரும் அருகிலேயே நிற்க, தம் வீட்டுத் திருமணம் போன்று பொறுப்பெடுத்து அனைத்தையும் ஓடியோடிக் கவனித்துக்கொண்டு இருந்தனர் ஆரணியும் நிகேதனும். சுகிர்தனின் சகோதரிகளும் கணவர்களும் கூட இவர்களுக்கு உதவியாகத்தான் நிண்டனர்.

சுகிர்தனின் விழிகள் அங்கிருந்து அவ்வப்போது தன்னைத் தொட்டு மீள்வதைக் கண்டான் நிகேதன். ஏதும் தேவையோ என்று எண்ணி அவனருகில் சென்று, “என்னடா?” என்றான் மெல்லிய குரலில்.

“தேங்க்ஸ்டா மச்சான்.” நெகிழ்ந்த குரலில் சொன்னான், சுகிர்தன்.

நிகேதன் முறைத்தான். “மாப்பிள்ளை எண்டும் பாக்காம மண்டையிலேயே ஒண்டு போட்டுடுவன். பேசாம ஐயா சொல்லுறதை மட்டும் கவனி!” என்றுவிட்டுப் போனான்.

மணப்பெண் தன் முழு அலங்காரத்துடன் வந்து அமர்ந்த வேளையில் வாசலில் மெல்லிய பரபரப்பு. என்ன என்று பார்க்க, சத்தியநாதனும் யசோதாவும் வந்துகொண்டிருந்தனர்.

அவர்களைக் கண்டு திகைத்து நின்றாள் ஆரணி. விழிகளை அகற்றக்கூட முடியவில்லை. இந்த ஐந்து வருடங்களில் அடிக்கடி நினைத்துக்கொள்வாள். அதுவும், வாழ்க்கை என்றால் என்ன என்று அவள் படிக்க ஆரம்பித்துவிட்டதில் இருந்து அவர்களின் அருமை இன்னும் அதிகமாக விளங்க ஆரம்பித்து இருந்தது. எப்போதாவது தூரத்தில் வைத்துக் காண்பாள். ஓடிப்போய்க் கதைக்க ஆவல் எழுந்தாலும் விலகி வந்துவிடுவாள். இன்றைக்கு அவனும் அவளும் எவ்வளவோ நன்றாகத்தான் வாழ்கிறார்கள். இருந்தாலும் அவர்களின் முன்னே சென்று நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு அவளின் தரம் உயரவில்லை. ‘உங்களிடம் நான் எதற்கும் கையேந்த வரவில்லை’ என்கிற இடத்தில் இருக்கிறபோதுதான் போகவேண்டும் என்கிற வைராக்கியம் இத்தனை நாட்களாகத் தடுத்து நிறுத்தியிருந்தது.

ஆனால் இன்று, வெகு அருகாமையில் அவர்களைக் கண்டபோது உள்ளத்தில் எதுவோ ஒன்று உடைந்து அழுதது. யசோதா சற்றே வயதாகி இருந்தார். என்றாலும் அவரிடம் பெரிய மாற்றமில்லை. சத்தியநாதனின் ஆளுமையும் அழுத்தமும் முகத்தின் இறுக்கமும் கூட அப்படியேதான் இருந்தது. ஆனாலும், உடல் அளவில் தளர்ந்து தெரிந்தார். ‘அப்பாக்கு வயசாகிட்டுது..’ அவளுக்குக் கண்ணில் நீர் மல்கியது. அவரிடம் ஓடிப்போக, அப்பா என்று அவரைக் கட்டிக்கொள்ள, ‘உங்களுக்கு என்ன அவ்வளவு பிடிவாதம்’ என்று சண்டை பிடிக்க உடலும் உள்ளமும் துடித்துப் போயிற்று.

அவளுக்குத்தான் சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் போகமுடியாத நிலை. அவர்களுக்கு அப்படி எதுவும் இல்லை தானே. அவளைத் தேடி வரலாமே. ஏன் வரவில்லை? அந்தளவுக்குக் கோபமா? துடித்தாள் ஆரணி.

நிகேதனும் அவர்களை அங்கே எதிர்பார்க்கவில்லை. திகைப்பும் கேள்வியுமாக நண்பனைத்தான் திரும்பிப் பார்த்தான். ‘சொறி மச்சி..’ என்று உதடசைத்தான் அவன். இரு தரப்பும் தாமாக சந்தித்துக்கொள்ளப் போவதில்லை. இப்படி ஒரு சூழ்நிலை அமைந்தால் மாற்றம் வராதா என்கிற நப்பாசையில் தான் அவர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் இவர்களிடம் சொல்லாமல் விட்டான்.

தர்மினியின் பெற்றோர் வாசலுக்கே விரைந்து சென்று அவர்களை அழைத்து வருவதிலேயே அங்கிருந்துதான் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நிகேதன், ஆரணிக்குப் புரிந்து போயிற்று. வேகமாக ஆரணியிடம் சென்று நின்றான் நிகேதன். அவனுடைய கை ஒன்று தானாகவே அவளை மென்மையாக அரவணைத்தது.

கண்ணில் நீருடன் திரும்பி அவனைப் பார்த்தாள் ஆரணி. “அழாத!” என்றான் கனிந்த குரலில். “போய்க் கதைக்கப் போறியா? நானும் வாறன்.” அவள் மறுத்துத் தலையசைத்தாள்.

அமராவதி, கயலினி, ராகவன் மூவருக்குமே அவர்களை இனம் கண்டுகொள்ள முடியாதபோதும் ஆரணியின் கலங்கிய தோற்றம் எதையோ உணர்த்த நிகேதனின் அருகில் வந்தான் ராகவன்.

“ஏதாவது பிரச்சனையா நிகேதன்?”

“இல்ல. அது ஆரான்ர அம்மாவும் அப்பாவும்.”

“ஓ..!” என்றவனுக்கு மேலே என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. அவன் மூலம் பெண்கள் இருவருக்கும் செய்தி போனது. சத்தியநாதனை பார்த்தவர்களுக்கு அவளின் அந்த நிமிர்வும் திமிரும் யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று புரிந்து போயிற்று.

அமராவதிக்குப் புகைந்தது. ‘பெரிய பணக்காரராம். ஒரு ரூபா சீதனம் இல்லாம மகளை அனுப்பிப்போட்டு என்ன திமிர் வேண்டிக்கிடக்கு!’ என்று எரிச்சல் கொண்டார்.

சத்தியநாதன் தம்பதியினர் திருமணம் முடிந்ததுமே மணமக்களை வாழ்த்திவிட்டுப் புறப்பட்டனர். விருந்துக்குப் பெண் வீட்டினர் அழைத்தும் நாசுக்காக மறுத்தார் யசோதா. தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் என்கிற முறையில் அவர்கள் வீட்டு விசேசங்களில் கலந்து கொண்டாலுமே கணவர் இப்படியான இடங்களில் எல்லாம் இறங்கிப் போகமாட்டார் என்று தெரிந்து யசோதாவே அனைத்தையும் சமாளித்தார்.

அதைவிட, மகளையும் அங்கே பார்ப்போம் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. பார்த்த நொடியில் இருந்து மனது பொறுக்கவே இல்லை. அவர்களிடம் பணிபுரிகிறவரின் மகளின் திருமணம் என்பதில், வரவேண்டுமே என்பதற்காக வெகு சாதாரணமாக வெளிக்கிட்டு வந்திருந்தார் அவர். அவரின் அந்த, ‘வெகு சாதாரணம்’ புதுக் கலியாணப் பெண்ணான கயலினியின் ஆபரணங்களின் இரண்டு மடங்கு இருந்தது. ஆனால், ‘ஆரணி இண்டஸ்ட்ரீஸ்’ இன் தனியொரு வாரிசின் தேகத்தில் தங்கத்தைத் தேடவேண்டியிருந்தது. இதில் அவள் ஒரு திருமணத்துக்கு வந்திருக்கிறாள்.

மனம் புளுங்க கணவரோடு மண்டபத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த யசோதா ஒரு கட்டத்துக்குமேல் முடியாமல், “நீங்க போய்க் காரை எடுங்கோ சத்யா. நான் இப்ப வாறன்.” என்றுவிட்டு விறுவிறு என்று மகளிடம் வந்தார். வந்த வேகத்தில் நிகேதனை ஒரு நெருப்புப் பார்வை பார்த்தவர் அவளின் கையைப் பற்றித் தரதர என்று இழுத்துக்கொண்டு வெளியே நடந்தார்.

யாருக்கும் கேட்காத தூரம் வந்ததும் அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டார்.

“இதுதானா நீ தேடி வந்த சந்தோச..மான வாழ்க்கை?”

“அம்மா..” கண்கலங்கினாள் அவள்.

“வாயத் திறக்காத!” என்றார் விரல் நீட்டி. “என்னவோ ஏழ்மை நிரந்தரமில்லை, அவன் முன்னுக்கு வருவான், என்ன நல்லா வச்சிருப்பான் எண்டு நிறையச் சொன்ன. அஞ்சு வருசமாகியும் ஒரு மண்ணாங்கட்டியையும் காணேல்ல. ஆனா ஒண்டு, நீ சொன்ன மாதிரி அவன் நல்ல கெட்டிக்காரன் தான். உன்னையும் வேலைக்கு அனுப்பி ஒண்டுக்கு ரெண்டுபேரா உழைச்சு அவன்ர தங்கச்சிக்கு நல்ல சீதனத்தோட கட்டி குடுத்து இருக்கிறானே. இனி என்ன கைக்கும் வாய்க்கும் அல்லாட போறியா?” என்றவருக்கு ஆத்திரம் அடங்குவேனா என்றது.

அவள் அணிந்திருந்த ஆரத்தை ஒற்றை விரலால் தூக்கிக் காட்டினார். “கழுத்தில தாலி இல்லை எண்டுறதை மறைக்கிறதுக்குப் போலி நகை. கை, காது எங்கயும் ஒரு பொட்டுத் தங்கம் இல்ல. உன்ன இப்பிடி பாக்கிறதுக்கா பெத்து வளத்தம். அப்பாக்கு கிடைச்ச மரியாதைய பாத்த தானே. எங்கட அந்த உயரம் எங்க நீ வாழுற வாழ்க்கை எங்க?”

அவளின் சேலைக்குப் பொருத்தமாகச் சிவப்பும் பச்சையும் கற்கள் பதித்த சற்றே தடிமனான வெளிப்படையாகச் சொல்லப்போனால் கழுத்தில் தாலி இல்லை என்பதைக் காட்டிக்கொள்ளாத அளவுக்குத் தடிமனான நெக்லஸ் மற்றும் ஆரம் அணிந்திருந்தாள். அதற்குப் பொருத்தமான காதணிகள் வளையல்கள் எல்லாமே. அதை அவர் கண்டுகொள்வார் என்று எதிர்பாராதவளின் முகம் அவமானத்தில் சிவந்து போயிற்று.

“அம்மா பிளீஸ். ஆட்களுக்குக் கேக்கப்போகுது!” கண்ணீருடன் முணுமுணுத்தாள்.

“கேட்கட்டும். கேட்டா எனக்கு என்ன? அம்மாவும் அப்பாவும் பெரிய பகட்டா வந்திட்டு போறினம்(போகிறார்கள்). ஆனா மகள் சோத்துக்கே பிச்சை எடுக்கிறாள் எண்டு எங்களுக்குப் பின்னால சனம் கதைக்காது? அதைவிடப் பெருசாவா உன்னைப்பற்றிக் கதைக்கப்போகுது? நீயும் நீ தேடி வந்த வாழ்க்கையும்! ச்சேய்!” வெறுப்புடன் மொழிந்துவிட்டுப் போனார் அவர்.
 

Goms

Active member
போச்சு, தனிக் குடித்தனம் வந்தாலும், அவங்களத் தேடி வந்து கஷ்டப்படுத்தறாங்களே. பாவம் ஆரணி. நிகேதன் இன்னும் என்ன கஷ்டப்படபோரானோ?
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom