• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவள் ஆரணி - 45

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 45


அவன் வாசலை விட்டு அசையவில்லை. அவள் அறையை விட்டு வெளியே வரவேயில்லை. தவழ்வதற்குப் பழகியிருந்த பூவினி தவழ்ந்து வந்து தகப்பனின் கால்களைப் பற்றி எழுந்து நின்றாள்.

வாசல் கதவின் நிலையில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு, கவிழ்ந்துகொண்டிருந்த இருளினுள் தன் விடிவெள்ளியைத் தேடிக்கொண்டிருந்த நிகேதன், குனிந்து மகளைப் பார்த்தான்.

கதவின் பின்னிருந்து எட்டிப் பார்க்கும் குட்டி நிலவாக, பச்சரிசிப் பற்கள் இரண்டு கீழ் தாடையில் தெரிய, முகம் கொள்ளா சிரிப்புடன் அவனைப் பிடித்துக்கொண்டு அவன் முகம் பார்த்துக் குதூகலித்துக்கொண்டிருந்தாள் அவள்.

அவளின் உடல்மொழி அப்பா தூக்கு என்று ஆர்ப்பரித்தது. மனம் கனிய குனிந்து அவளைத் தூக்கி அணைத்துக்கொண்டான் நிகேதன்.

“என்னம்மா?” வாஞ்சையுடன் கேட்டான்.

“ம்மா…க்கா…ம்…” அவன் கைகளுக்குள் வந்துவிட்ட உற்சாகத்தில் என்னென்னவோ நிறையக் கதை பேசினாள் குழந்தை.

கண்கள் பனிக்க அவளையே பார்த்திருந்தான் நிகேதன். இப்படித்தானே அவளும். அவன் காலையே சுற்றிச் சுற்றி வருவாளே. அதுதான் அருமை தெரியாமல் எட்டி உதைத்துவிட்டானோ? இலேசாகத் திரும்பி அறையைப் பார்த்தான். இருந்த அதே இடத்திலேயே அமர்ந்திருந்தாள் ஆரணி.

இது அவள் இல்லை. இப்படி ஒரு இடத்தில் வாயே திறக்காமல் அவளால் இருக்கவே முடியாது. அப்படியானவளைப்போய்… நெஞ்சினுள் யாரோ இரும்புக் குண்டு ஒன்றை வைத்து அழுத்துவது போலிருந்தது.

நடந்துகொண்டிருந்த பேச்சு வார்த்தையைத் தொடர பயந்து, விட்ட இடத்திலேயே விட்டுவிட்டு அப்போதிருந்து இங்கேயே நிற்கிறான். மீண்டும் போய் ஆரம்பிக்கும் தைரியம் இல்லை.

கார்மெண்ட்ஸ் ஹயர் இருந்தது. அதைச் சுகிர்தனைப் பார்க்கச் சொன்னான். இன்று அவன் வருவதாகச் சொல்லியிருந்த மற்ற எல்லா ஹயரையும் ஒவ்வொருவரிடமும் கொடுத்துவிட்டு வீட்டிலேயே நிற்கிறான்.

என்ன பேசுவது? என்ன விளக்கம் சொல்வது? எப்படிச் சமாளிப்பது? எதுவுமே புரிய மறுத்தது.

பூவினியும் அப்பாவின் தோளே போதும் என்பதுபோல் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தோளில் சாய்ந்துகொண்டிருந்தாள். இரவு ஆரம்பித்துவிட்டதில் புறச்சூழல் சத்தமற்று அடங்கிவிட, வீட்டினுள்ளும் நிலவிய அந்தப் பேரமைதியை முற்றிலுமாக வெறுத்தான் நிகேதன்.

பகல் சாப்பிடாததில் வயிறு வேறு கடித்தது.

குழந்தையோடு அறைக்குள் வந்து, “ஆரா பசிக்குது.” என்றான். முகத்தைக் கைகளால் துடைத்துக்கொண்டு எழுந்து வந்தாள் ஆரணி. பிளேட்டை எடுத்து உணவைப்போட்டு மேசையில் வைத்துவிட்டு வந்து மகளுக்காகக் கையை நீட்டினாள்.

கொடுக்காமல், “நீ சாப்பிடேல்லையா?” என்றான் அவன்.

“முதல் நீங்க சாப்பிடுங்க…” அவன் முகம் பாராமல் சொல்லிவிட்டு மகளை வாங்க முனைய, அவளின் கையைப் பிடித்துத் தடுத்தபடி, “பேச்சுல கூட என்னைத் தள்ளி வைக்கிறியா ஆரா?” என்று வினவினான்.

அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு மெலிதாகச் சிரித்தாள் ஆரணி. “நான் உங்களைத் தள்ளி வைக்கிறனா? இல்ல நிகேதன். நீங்கதான் என்னைக் குப்பையா தூக்கி எறிஞ்சிட்டிங்க. அதுதான் நான் ஒதுங்கி நிக்கிறன்.”

பேச்சு வராமல் அப்படியே நின்றான் அவன். நிகேதனாம். அவனுக்குத் தெரிந்து அவனுடைய பெயரை அவள் முழுமையாகச் சொல்வது இதுதான் முதல் முறை.

அவள் மகளை வாங்கிக்கொண்டு போனாள். பசிக்கிறது என்று வாயால் கேட்டவனுக்கு அந்தப் பசியே மரத்துப்போன நிலை. இருந்தும் பேசாமல் சென்று சாப்பிட்டான்.

அவன் உண்டு முடிக்கும் தறுவாயில் அவன் முன்னால் வந்து நின்றாள் ஆரணி.

“நாளைக்கு அப்பாவைப் போய்ப் பாக்கப்போறன்.”

திகைப்புடன் நிமிர்ந்தான் அவன். ஏன் என்று கேட்பதற்குக் கூடத் திராணியற்றுப் போயிற்று. விளக்கம் போல் வேறு ஏதும் சொல்வாளோ என்று அவளையே பார்த்தான். அவ்வளவுதான் என்பதுபோல் நின்றாள் அவள்.

அவன் கை சற்று நேரம் உணவையே அளைந்தது. பின் நிமிர்ந்து, “நான் நினைக்கிறன், கோபத்தில வார்த்தைகள விட்டு உன்ன நோகடிச்சிட்டதால போ போகாத எண்டு அழுத்திச் சொல்லுற உரிமைய நான் இழந்திட்டன் எண்டு. நீயும் போகவா எண்டு என்னட்ட கேக்கேல்லை. போகப்போறன் எண்டுதான் சொல்லுறாய். கொஞ்சத்துக்கு முதல் சொன்னியே, போக்கிடம் இல்லாம பிள்ளைக்காக இருக்கிறன் எண்டு அப்பவே நான் நொறுங்கிட்டன் ஆரா. இனி புதுசா காயப்படுறதுக்கு ஒண்டும் இல்ல. என்னவோ உன்ர மனதுக்கு எது அமைதிய தருதோ அதைச் செய்.” என்றவன் கசப்புடன் சிரித்தான். “என்னாலயும் இத்தனை வருசம் ஆகியும் உன்ன நல்ல நிலமையில இருத்த முடியேல்ல தானே.” என்றுவிட்டு எழுந்து போனான்.

அவள் சாப்பிடுவது, மகளைக் கவனிப்பது, சமையலறையை ஒதுக்குவது என்று அனைத்தும் புறக்கண்ணில் தெரிந்தாலும் விழிகளை மூடியபடி சோபாவில் சரிந்திருந்தான் நிகேதன்.

மனம் மட்டும் தன் நிம்மதியைத் தொலைத்துவிட்டு கதறிக்கொண்டிருந்தது. எல்லாமே கைவிட்டுப் போன உணர்வு. ஒன்றுமே இல்லாமல் வெறும் பயலாக இருந்த காலத்தில் கூட அவன் எதற்கும் பயந்ததில்லை.

இன்றைக்கு எதிர்காலத்தை யோசிக்கக்கூட அஞ்சியவனாகத் தனக்குள் சுருண்டுகொண்டு கிடந்தான்.

வீட்டின் முன் பின் கதவுகளை எல்லாம் மூடி, விளக்குகளை அணைத்துவிட்டு அவள் மகளோடு கட்டிலுக்குப் போனபிறகும் அவன் அப்படியேதான் கிடந்தான். நெஞ்சுக்குள் எதுவோ நின்று அடைத்துக்கொண்டே இருந்தது.

கைப்பொருள் களவு போய்விடப் போவது போலொரு பதைப்பு. மனம் பாதுகாப்பற்ற குழந்தையாக நடுங்கியது. அவள் காயப்பட்டு இருக்கிறாள், கோபமாக இருக்கிறாள் என்று தெரிந்தாலும் அவனுக்கு அவளின் அருகாமை வேண்டுமாயிருந்தது.

அடித்த தாயின் காலையே கட்டிக்கொண்டு கதறும் குழந்தை போல, எழுந்து சென்று அவள் புறமாக அவளின் போர்வைக்குள் நுழைந்து அவளின் இடையைக் கட்டிக்கொண்டு முதுகில் முகம் புதைத்தான்.

ஆரணியும் விழித்துத்தான் இருந்தாள். தன் இடையை வளைத்திருந்த அவன் கையில் தெரிந்த நடுக்கத்தை அவளும் உணர்ந்தாள். நெஞ்சில் வலித்தது. இப்படி, எல்லாமாக நீயே இருக்கிறாய் என்று காட்டியவன்தான் வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னான். எல்லோர் முன்னும் வாயில் விரலை வைத்து வாயை மூடு என்றான். அறைவதற்குக் கையை ஓங்கிக்கொண்டு வந்தான். அதற்குமேல் யோசிக்க முடியாத அளவுக்கு நெஞ்சில் வலி எழுந்தது. அவனுடைய கையை விலக்கிவிட்டு எழுந்து வெளியே வந்தாள்.

தான் ஒன்றியும் அவள் விலகியதில் ஒருவித திகைப்புடன் அசைவற்றுப்போய் அப்படியே கிடந்தான் நிகேதன். வெறுத்தேவிட்டாளா? நினைத்த மாத்திரத்தில் நெஞ்சு, உதடு, தொண்டை எல்லாமே உலர்ந்து போயிற்று.

அவனும் எழுந்து கதவைச் சாற்றிக்கொண்டு வெளியே வந்தான். இருளுக்குள் சோபாவில் அமர்ந்திருந்தாள் அவள். அவளின் முன்னால் வந்து முழங்காலில் அமர்ந்தான் அவன். அவளின் கைகளைப் பற்றிக்கொண்டான்.

“என்னைக் கட்டினது பிழை எண்டு நினைக்கிறியா ஆரா?” அவன் தொண்டை கரகரத்தது.

அவள் விழிகளில் கண்ணீர் அரும்பிற்று. பார்வையை அவனிடமிருந்து அகற்றிக்கொண்டாள்.

“நீ என்னோட வந்த நாளில இருந்து எல்லாமே நீ சொல்லித்தான் செய்தனான் ஆரா. சும்மா இருந்தவனை ஓடு ஓடு எண்டு விரட்டினதும் நீதான். வாழ்க்கையில ஒவ்வொரு படியா உயர்த்திவிட்டதும் நீதான். இடையில சில மன அழுத்தங்கள். என்ன ஓடியும் நினைக்கிற வேகத்துக்கு மேல எழும்ப முடிய இல்லையே எண்டுற கோபம். எப்பிடியாவது முன்னுக்கு வந்திடவேணும் எண்டுற வைராக்கியம். இதுல அம்மா ஒரு பக்கம். நான் உனக்குத் தெரியாம குடுத்திருக்கக் கூடாதுதான். இது எனக்கு அண்டைக்கே தெரியும். அம்மா கேட்டதும் பிழைதான். ஆனா பாசம், பெத்த தாய், கூடப்பிறந்த சகோதரி எண்டு வரேக்க(வரும்போது) சரி பிழைகளை மட்டுமே பாத்து நேர்கோட்டுல நடக்க முடியிறது இல்ல. இது கோழைத்தனமா கூட இருக்கலாம். எல்லாருக்கும் நல்லவனா இருக்கோணும் எண்டு நினைக்கிற ஒருத்தன் கடைசில அதே எல்லாருக்கும் முன்னால என்னை மாதிரி குற்றவாளியாத்தான் நிப்பான் போல.”

அவன் பேசப் பேசக் கண்ணீருடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆரணி.

“நீயும் சீதனம் எதிர்பாக்கிறியா எண்டு என்னட்ட கேட்டு இருக்கக் கூடாது ஆரா. அம்மாவை விடு. அவா என்ன எண்டாலும் கதைச்சிட்டு போகட்டும். ஆனா இத்தனை வருச வாழ்க்கையில எப்பயாவது நான் அப்பிடி நடந்திருக்கிறேனா? கேட்டிருக்கிறேனா சொல்லு? என்னைப் பாத்து நீ அப்பிடி கேட்டிருக்கக் கூடாது ஆரா. உனக்கு என்னைத் தெரியாதா? அந்தக் கோபம், வீட்டுக்கு வந்த மனுசரோட சண்டை பிடிச்சிருக்கிறியே எண்டுற சினம், உனக்குச் சொல்லாம மறைச்சிட்டேனே எண்டு என்னில எனக்கு இருந்த கோபம் இப்பிடி எல்லாம் சேர்ந்து…” என்றவன் மேலே பேச வராமல், தன் இயலாமையைச் சொல்வதுபோல் கைகளை விரித்தான்.

“உன்ர நிக்கி ஒண்டும் பெரிய ஹீரோ இல்லயடி. சாதாரண மனுசன். சரியா சொல்லப்போனா அதுக்கும் கீழ. அவனை மனுசனாக்கினது நீதான். இனியும் நான் மனுசனா இருக்கப் போறேனா இல்ல விசரனா அலையப்போறேனா தெரியேல்ல. நீ எத தந்தாலும் எனக்குச் சந்தோசம் தான்.” என்றவன், அவளின் இடையைக் கட்டிக்கொண்டு அவள் மடியிலேயே முகம் புதைத்தான்.

சிலைபோல் அப்படியே அமர்ந்திருந்தாள் ஆரணி. அவளின் கைகள் அவனை அரவணைக்கவில்லை என்பதை சற்று நேரம் கழித்துத்தான் நிகேதன் உணர்ந்தான். மனது வலிக்க நிமிர்ந்து அவளைப் பார்த்தான். “என்னை வெறுத்திட்டியா ஆரா?” என்றான் குரலடைக்க. இல்லை என்று சொல்லிவிடு என்று இரஞ்சியது அவன் குரல்.

கன்னங்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள் அவள். “நீ ஏன் அழுறாய்?” என்றவன் அவளின் கண்களைத் துடைத்துவிட்டான். அவள் விழிகள் இன்னுமின்னும் பெருகி வழிந்தது. அவன் கைகளும் துடைப்பத்தை நிறுத்தவே இல்லை.

“நாளைக்கு போயிட்டு தி…திரும்பி வருவாய் தானே?” அவளின் முகம் பாராமல் திக்கித் திணறிக் கேட்டு முடித்தான் அவன்.

அவள் விழிகளிலிருந்து மளுக்கென்று கண்ணீர் இன்னும் நிறைந்து கொட்டியது. அவள் என்னவோ சொல்ல வரவும், அவளின் உதட்டில் விரலை வைத்துத் தடுத்தான்.

“ஒண்டும் சொல்லாத. உனக்கு எது சரி எண்டு படுதோ அதைச் செய். ஆனா, என்னை விட்டுடாத. நான் கோபப்படலாம், கத்தலாம், வார்த்தைகளை விடலாம். ஆனா நீயில்லாம எனக்கு எதுவும் இல்ல…” என்றுவிட்டு, அவளின் கையை ஒருமுறை அழுத்திக் கொடுத்துவிட்டு எழுந்துபோய்க் கட்டிலில் சரிந்தான்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom