• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவள் ஆரணி - 50

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 50



நிகேதனின் வாகனம் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அவனருகில் ராகவனும், பின்னுக்கு முதல் வரிசையில் அமராவதி அம்மாவும் கயலினியும் ராகுலனுடன் இருக்க, அடுத்த வரிசையில் பூவினியுடன் ஆரணி அமர்ந்து இருந்தாள்.

மன்னாரில் இருந்து கொழும்புக்கு நிற்காமல் சென்றால் கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலப் பயணம். இரண்டு குழந்தைகளோடு செல்கையில் குறைந்தது மூன்று தடவையாவது நிறுத்தவேண்டி வரும். ஆக, இது எட்டு மணித்தியாலப் பயணமாக அமையும் என்பது நிகேதனின் கணிப்பு. அதில், ஆரம்பத்திலேயே சற்று வேகமெடுத்திருந்தான். அவன் வாகனமோட்டுவதில் கவனமாக இருக்க ஆரணி அவன் பற்றிய சிந்தனையில் இருந்தாள்.

காரணம், இன்று வந்துவிட்டுப் போன அன்னை யசோதா. அவரின் வரவைப்போலவே அவர் சொன்னவைகளும் அவள் எதிர்பாராதவையாகவே இருந்தது.

அவள் தாய்மை அடைந்தபோது அன்னையின் அருகாமைக்காக வெகுவாகவே ஏங்கியது உண்மை. அதை அவனிடம் காட்டிக்கொள்ளாமல் கெட்டித்தனமாக மறைத்துக்கொண்டதாகத்தான் இத்தனை நாட்களும் எண்ணியிருந்தாள். ஆனால், அவன் அதைக் கண்டுகொண்டிருக்கிறான்; அன்னையிடம் சென்று சமாதானம் பேசவும் முயன்று இருக்கிறான். படு மோசமாக அவமானமும் பட்டிருக்கிறான். இருந்தும், ஒரு சிறு செய்கையிலோ பார்வையிலோ கூட அவளிடம் காட்டிக்கொண்டதே இல்லை. மாறாக, இன்னும் இரண்டு மடங்கு கவனத்துடனும் கரிசனையோடும் கனிவோடும் அவளைப் பார்த்துக்கொண்டான்.

அந்த நேரத்தில் அவனைச் சுற்றி இருந்த பிரச்சனைகள் நிறைய. இதில் அவளின் தாய் கொடுத்த அவமானம் வேறு. அத்தனையையும் தனக்குள் போட்டுப் புதைத்துக்கொண்டு, குழந்தை பிறந்த பிறகும், அவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டு கடன் கட்டி, உழைத்து என்று அவன் பட்ட பாடுகள் கொஞ்சமா நஞ்சமா? நினைக்கையிலேயே நெஞ்சுக்குள் என்னவோ செய்தது ஆரணிக்கு.

அதுமட்டுமல்ல, சமீபத்தில் திடீரென்று வீட்டுக்கு வந்து சேர்ந்த தாலிக்கொடி, அவசர அவசரமாக வேனை விற்று வீடு கட்ட ஆரம்பித்தது எல்லாமே ஏன் என்று புரிந்தது. ‘மிச்சம் சொச்சமா இருக்கிற மானத்தையாவது காப்பாத்தத்தான்.’ என்று அவன் அன்று சொன்னதன் பொருளும் புரிந்தது.

அவனைச் சார்ந்த எல்லோருமே அவள் உட்பட எப்போதுமே ஏதோ ஒரு விதத்தில் அவனை நெருக்கடியான நிலையிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார்களோ? அந்த மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தான் வெடித்தானா? வெடித்தது அவன். வெடிக்க வைத்தது யார்? தவிப்புடன் அவனையே பார்த்தாள் ஆரணி.

இத்தனை நாட்களாக, அவனை மாத்திரமே உலகமாய் நம்பியிருந்த என்னை நோகடித்துவிட்டானே என்று இருந்த அவளின் பார்வை சற்றே மாறியது. கொஞ்சம் அவனை விளங்கி நடந்துகொண்டிருக்கலாமோ, அவளுக்காக என்று உயிரையும் கொடுத்து ஓடுகிறவன் அவளிடமே ஏன் இப்படிக் கோபப்பட்டான் என்று கொஞ்சமே கொஞ்சம் நிதானமாக யோசித்து இருக்கலாமோ என்று ஓடியது. சீதனம் வேண்டுமா என்று அவள் கேட்டதும் மகா தவறுதானே.

வீதியில் கவனமாக இருந்தவன் ஏதோ ஒரு உணர்வில் கண்ணாடி வழியே அவளைப் பார்த்தான். இருவர் விழிகளும் சந்தித்துக்கொண்டன. நெஞ்சுக்குள் எதுவோ அடைக்கும் உணர்வு அவளுக்கு. இத்தனை நாள் விலகலா அல்லது அன்னையின் வரவால் நெகிழ்ந்திருந்த மனது இயல்பாய் அவனைத் தேடியதா தெரியவில்லை. அவனையே பார்த்தாள் ஆரணி.

அவர்களைச் சுற்றிக் கவிழ்ந்திருந்த மெல்லிய இருளுக்குள், சீடி பிளேயரில் பாடல் அளவான சத்தத்தில் செவிகளை நனைக்க, காலர் வைத்த அரைக்கை டீ ஷர்ட்டில், ஒரு கை இருக்கையின் கைப்பிடியில் சும்மா இருக்க மற்ற கையால் ஸ்டேரிங்கை பற்றியிருந்தான் நிகேதன். வாகனத்தின் வேகம் நூறு தாண்டியிருந்தபோதும் அதைக்குறித்த பயம், பதட்டம் எதுவுமற்று வெகு நிதானமாக அவன் வாகனத்தைச் செலுத்தும் பாங்கு அவளைக் கவர்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளின் மனம் கணவனாகிப்போனவனைக் காதலனின் இடத்தில் வைத்துப் பார்த்து மயக்கம் கொண்டது.

அதனை அவன் உணர்ந்துகொண்டிருக்க வேண்டும். வீதியில் கவனம் இருந்தாலும் கண்களில் சிறு சிரிப்புடன் அவளை நோக்கினான். மெல்லிய தடுமாற்றத்துடன் பார்வையை அகற்றிக்கொண்டாள் ஆரணி. விழுந்துபோயிருந்த விரிசல் காதலைப் புதிதாக உணரவைத்துக்கொண்டிருந்தது.

“போயிட்டு உடனேயே திரும்பப் போறம். தொடர்ந்து வாகனம் ஓடுறது சிரமமா இருக்காதா நிகேதன்?” என்று வினவினான் ராகவன்.

“ஆரம்ப நாட்கள்ல கொஞ்சம் சிரமமாத்தான் இருந்தது ராகவன். இப்ப பழகிப்போச்சு. கொஞ்ச நேரம் படுத்து எழும்பினா காணும்.” வீதியில் கவனம் இருக்க, இலகுவாகப் பதில் சொன்னான் அவன்.

“உங்கட டிரைவிங்கிலேயே உங்கட அனுபவம் தெரியுது.” என்று சிலாகித்தான் அவன்.

அவர்கள் இருவரும் உறவினர்களாகி இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. ஆனாலும், குடும்பத்துக்குள் இருந்த பிக்கல் பிடுங்கல்கள் ஒரு இலகுவான பேச்சு வார்த்தையை அவர்களுக்குள் நடத்த விட்டதே இல்லை. இன்று, வேறு வழியில்லை. இருவரும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்து பயணித்தே ஆகவேண்டும். அதில் இயல்பாகவே பேச்சை ஆரம்பித்திருந்தான் ராகவன்.

“உண்மைய சொல்லுங்கோ நிகேதன், என்னதான் நல்ல வருவாய இந்த வேலை தந்தாலும் சில நேரங்கள்ல யோசிச்சு பாக்கேக்க கவலையா இருக்கிறேல்லையா?”

அந்தக் கேள்வி அவர்களின் ஆரம்ப நாட்களை நினைவூட்டிவிட்டது. மீண்டும் நிகேதன், ஆரணி இருவரின் விழிகளும் கண்ணாடி வழியே சந்தித்து மீண்டது.

“வேலைவெட்டி இல்லாம அந்த நேரம் நானே வீட்டுக்குச் சுமை ராகவன். இதுல கலியாணம் கட்டி ஒரு பெட்டையையும் கூட்டிக்கொண்டு போனா என்ன ஆகும் சொல்லுங்கோ? டிரைவரா எண்டாலும் ஒரு வேலை கிடைச்சதே பெருசு எண்டுதான் இருந்தது. அதே நேரம் எங்கயாவது தெரிஞ்ச அறிஞ்ச ஆட்களைக் காணேக்க(காணும் போது) ஒருமாதிரி.. எப்பிடி சொல்ல வெக்கமா அவமானமா இருந்ததும் உண்மை தான். ஆனா இப்ப உண்மையா எனக்கு எந்தக் கவலையும் இல்ல. அப்பிடி இருந்தா இப்ப எண்டாலும் ஏதாவது ஒரு வேலைக்குப் போகலாம் தானே.” என்றவன், “குறுகிய காலத்துக்க பெரிய முன்னேற்றம் வந்தது இந்த வேலையாலதான்.” என்பதையும் சேர்த்துச் சொன்னான்.

அவன் சொன்னது அங்கிருந்த மூன்று பெண்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது. தம்முடைய இந்த நல்ல நிலைக்கு அவனும் அவனுடைய அந்த வேலையும் காரணம் என்பதை மனதார உணர்ந்தனர்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவனுடைய மகள் தகப்பனின் குரல் கேட்டதும் அவனிடம் தாவ முயன்றாள். “பூவம்மா அப்பா கார் ஓடுறார் எல்லோ. பேசாம இருங்கோ!” என்ற ஆரணியின் பேச்சை அவள் கேட்பதாகவே இல்லை.

“பூவாச்சி! என்ன சத்தம்?” என்றபடி கண்ணாடி வழியே அவன் இவர்களைப் பார்க்க ஆரணியின் விழிகள் வேகமாக மடியில் இருந்த மகளிடம் தாவிற்று. அவனிடம் அவளுக்கு என்ன இது புதிதாகத் தடுமாற்றம் என்று புரியாதபோதும் மனதில் மெல்லிய படபடப்பு. அவன் விழிகள் சில நொடிகள் தன்னிடம் தங்கி விலகியதை உணர்ந்தாலும் அவள் காட்டிக்கொள்ளவில்லை.

ராகுலன் வேறு முன்னே இருந்த தகப்பனின் மடிக்குத் தாவிவிட்டதில், பூவினி இருக்கவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டு இருந்தாள். சிணுங்கினாள். ஆரணியின் பிடியில் இருந்து எப்படியாவது நழுவி விடுவதிலேயே குறியாக இருக்க உண்மையிலேயே ஆரணியால் முடியவில்லை. அதைக் கவனித்துவிட்டு, “அம்மாட்ட கொஞ்ச நேரம் குடு.” என்றான் நிகேதன்.

‘அவள் அவரிட்ட போய்ட்டுத்தான் மற்ற வேலை பார்ப்பாள்.’ என்று அவள் நினைத்ததையேதான் அவரும் வாய்விட்டுச் சொன்னார்.

“உன்ர மகள் என்னட்ட வந்த பிறகெல்லோ!” என்றபடி வாங்க, அவளும் மாட்டவே மாட்டேன் என்று நின்றாள். கயலினியாலும் சமாளிக்க முடியவில்லை. சிணுங்கிச் சினந்து அங்கிருந்த எல்லோரையுமே ஒருவழியாக்கினாள் பூவினி.

வேறு வழியற்று ஒரு தேநீர் கடையின் முன்னே வேனை கொண்டுவந்து நிறுத்தினான் நிகேதன். எல்லோரும் பாத்ரூம் சென்றுவர, மகளைத் தான் வாங்கிக்கொண்டு, “நீயும் போயிட்டு வா!” என்று அனுப்பிவிட்டான்.

இரவு உணவை முடித்துவிட்டுப் புறப்பட்டதில் இஞ்சித் தேனீருக்குச் சொல்லிவிட்டு எல்லோரும் ஒரு மேசையில் அமர்ந்துகொண்டனர். நாற்காலியில் அமர்ந்து பூவினியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவளை நிற்க வைத்தான் நிகேதன். அவளோ தன்னை விடு என்று நின்றாள்.

அந்தத் தேநீர் கடையின் தரை அழுக்காக இருக்க, “பூவம்மா, இங்க தவழ ஏலாது. பிள்ளை நடவுங்கோ பாப்பம். அப்பா பிள்ளையைப் பிடிப்பேனாம். அப்பான்ர செல்லம் நடப்பாவாம்..” என்றபடி அவன் அவளின் கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு நடை பழக்கினான்.

அவளும் முகம் கொள்ளா சிரிப்புடன் தகப்பனின் விரல்களைப் பற்றியபடி தத்தக்கா பித்தக்கா என்று அடிகளைத் தூக்கி வைத்தாள். அவளின் பின்னால் ராகுலன் இழுபட, பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை ஆரணிக்கு.

மீண்டும் அவர்கள் பயணத்தை ஆரம்பித்தபோது, ராகவனின் கையில் வாகனத் திறப்பைக் கொடுத்தான் நிகேதன். முகம் மலர்ந்தாலும் கேள்வியோடு பார்த்தான் ராகவன்.

“கொஞ்ச நேரம் நீங்க ஒடுங்க. என்ர பூவாச்சிய கொஞ்ச நேரம் நான் வச்சிருக்கிறன்.” என்றுவிட்டு ஆரணியின் அருகில் ஏறி அமர்ந்துகொண்டான்.

கணவன் ஓடப்போகிறான் என்றதும் ராகுலனை அன்னையிடம் கொடுத்துவிட்டு தானும் அவனருகில் சென்று அமர்ந்துகொண்டாள் கயலினி.

ஆரணியிடம், “நீ கொஞ்ச நேரம் படுத்து எழும்பு. நான் பிள்ளையை வச்சிருக்கிறன்.” என்றான் நிகேதன்.

ஆரணிக்கு விழிகள் கரித்துக்கொண்டு வந்தது. ஒன்றும் சொல்லாமல் பார்வையை அகற்றிக்கொள்ள, அவனது கையொன்று நகர்ந்து வந்து அவளின் கரத்தைப் பற்றி அழுத்திக்கொடுத்தது. வார்த்தைகளில் வடிக்க வழியற்ற உணர்வுகள் அவர்களிடையே சிக்குண்டு நின்றது. ஆரணியும் மெல்ல விழிகளை மூடிக்கொண்டாள். மனதில் என்னென்னவோ பரிதவிப்பு. அவளின் தலையையும் தன் தோளில் சாய்த்துக்கொண்டான் நிகேதன். அவள் நிமிரப்போக விடாமல் தடுத்து, “படு!” என்றான். அவளுக்கும் அவன் தோள் தேவையாக இருக்க அப்படியே கண்ணை மூடிக்கொண்டாள்.

சகாதேவனின் வீட்டுக்குச் சென்று சேர்ந்தபோது அதிகாலை நான்கு மணியாகி இருந்தது. முதலே அழைத்துச் சொல்லியிருந்ததில் மாலினியும் சகாதேவனும் வாசலுக்கே வந்து வரவேற்றனர்.

உள்ளுக்குள் சென்றதில்லையே தவிர ஆரணிக்கும் அந்த வீட்டைத் தெரியும். கொழும்பில் அவர்கள் இருந்த நாட்களில் அவளுடைய காரில் ஊரைச் சுற்றிவிட்டு அந்தத் தெருவில் வந்து பலமுறை இறங்கிக்கொண்டிருக்கிறான் நிகேதன்.

எல்லோரும் இறங்கித் தம்முடைய பெட்டிகளை எடுத்ததும் வேனை பூட்டிக்கொண்டு வந்தவன் மகளை ஆரணியிடமிருந்து வாங்கினான். வாங்கும்போது இருவர் விழிகளும் சந்தித்துக்கொண்டன. காரணமறியா ஒரு நெகிழ்வு.

அறிமுகமற்ற பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தவர்களை, மன்னாரில் இருந்து வந்தவர்கள் என்கிற ஒற்றைப் புள்ளிதான் முதன் முதலில் இணைத்தது. அதன்பின் காதலர்களாக மாறி இதயங்களைப் பரிமாறிக்கொண்டு ஜோடிப்புறாக்களாகச் சுற்றித் திரிந்த கொழும்பு எப்போதுமே மனதுக்கு நெருக்கமானதுதான். அதை இருவருமே உணர்ந்தனர். “வா” என்று அவளோடு கூட நடந்தவனின் குரலிலும் அந்த நெகிழ்வு அப்பட்டமாகத் தெரிந்தது.

மாலினி நன்றாகவே கவனித்துக்கொண்டார். “வாரும் வாரும்! சிவனே எண்டு இந்த வீட்டில இருந்து படிச்ச பெடியனைத் தானே சும்மா இருக்க விடாம துரத்திப் பிடிச்சு காதலிக்க வச்சனீர்.” என்று ஆரணியைக் கேலி செய்தபடியே வரவேற்றார்.

நிகேதன் ஆரணி இருவர் முகத்திலும் மெல்லிய புன்னகை. சின்ன வெட்கம் கூட வெகு அழகாய் வந்து போயிற்று.

எல்லோருமாக அமர்ந்திருந்து சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு அவர்களுக்கான அறைக்குள் நுழைந்ததும் மகளுக்கு இளஞ்சூட்டில் இருந்த நீரில் மெலிதாக உடம்பு கழுவி, உடைகளை அகற்றி வெறும் டயப்பரோடு பாலும் கொடுத்துப் பக்கத்திலேயே படுத்துத் தட்டிக்கொடுத்தாள் ஆரணி. அதற்குள் குளித்துவிட்டு வந்த நிகேதன், மகளருகில் சரிந்து அந்தப் பணியைத் தான் செய்ய, ஆரணியும் குளித்து இலகுவான ஒரு நைட்டியில் வந்தாள்.

அவன் பார்வை மௌனமாகவே அவளைத் தொடர்ந்தது. கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல் விளக்கை அணைத்துவிட்டு வந்து தன் பக்கத்தில் சரிந்துகொண்டாள். மிகுந்த களைப்பு. உடல் சோர்ந்துபோயிருந்தது. ஆனாலும் இருவருக்கும் உறக்கம் வரவேயில்லை. ஒருவித நெகிழ்ச்சி. உணர்வுகள் கட்டுக்குள் நிற்காமல் அலைபாய்ந்தது. இருவருக்குமே மற்றவரின் அருகாமை வெகுவாகவே தேவைப்பட்டது. நிகேதனின் கை ஒன்று தானாக மகளைக் கடந்துவந்து அவளின் தலையை வருடிக்கொடுத்தது.

ஏனோ கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது ஆரணிக்கு. மனதில் மிகுந்த பாரம். தான் செய்வது தவறோ என்கிற குற்றக் குறுகுறுப்பு. அவளின் அலைப்புறுதலை எப்படி உணர்ந்தானோ, “ஒண்டையும் யோசிக்காம படு!” என்றான் மென்மையான குரலில். வாகனம் ஓட்டிவந்த களைக்குச் சற்று நேரத்திலேயே அவன் உறங்கிவிட நீண்ட நேரம் விழித்திருந்தாள் ஆரணி.
 

Goms

Active member
ஒரு தப்பை தப்பாக காண்பிக்கும்போதும், அதே தப்பை சரியென காண்பிக்கும்போதும், இரண்டு பக்கத்தையும் எங்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறீர் நிதாமா..... எப்படி??🤔
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom