• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவள் ஆரணி - 55

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 55


நாட்கள் சிறகில்லாமல் பறந்தன. ஆரணியின் சூழ் கொண்ட வயிறு பெருக்கப் பெருக்க நிகேதனும் வீட்டைக் கட்டி முடித்திருந்தான். தந்தைக்கு உதவியாக அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தாள், ஆரணி. யசோதா ஆசை தீர மகளையும் பேத்தியையும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். அங்கும் இங்குமாக அலைவது மிகுந்த சிரமமாக இருந்தபோதிலும், இப்படி மகளைத் தம் வீட்டிலேயே விட்டிருந்த மருமகன் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டாயிற்று. அதில், அவனைப் பெற்ற மகனைப்போன்று நன்றாகவே கவனித்துக்கொண்டார்.

அமராவதி அம்மாதான் எதையோ இழந்ததைப்போன்று நடமாடிக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் எந்தப் பிரச்சனைகளும் இல்லை. எதிர்காலம் குறித்த பயங்களும்
இல்லை. நல்ல மருமகன். கயலும் குறை சொல்வதற்கு இல்லை. அன்னை மீது மிகுந்த பாசமாகவே இருந்தாள். பேரனும் அவரை விட்டுவிட்டு இருக்கவே மாட்டான். ஆனாலும், சின்ன மகனை மனம் தேடியது.

அவனும் அவரை ஒன்றும் தள்ளி வைக்கவில்லை. தினமும் எடுத்து நலன் விசாரித்தான். அங்கு வந்து போகிறபோதெல்லாம் பழங்கள், உடைகள், அவர் விரும்பி வாசிக்கும் புத்தகங்கள் என்று அவருக்காக எதையாவது வாங்கிக்கொண்டு வந்தான். கையில் காசையும் பொத்திவிட்டுத்தான் போவான். அவரின் பெயரில் அவன் வைப்புச் செய்துவிட்ட பணத்தின் வட்டி வருகிறது. அதனால் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை.

மொத்தத்தில் தன் கடமையில் இருந்தும் பொறுப்பில் இருந்தும் அவன் வழுவவேயில்லை. ஆனால், தாய் மனம் கடமையையும் பொறுப்பையும் தாண்டி, சின்ன மகனின் பாசத்துக்கு ஏங்கியது. ஏதோ ஒன்றை இழந்துவிட்டுப் பரிதவித்தார்.

அந்த இழப்பும் தவிப்பும் தான் அவரின் தவறுகளை அவருக்கே உணர்த்தியது. நடந்த பிரச்சனைகளை அவர் சற்றே நிதானமாகக் கையாண்டு இருக்க மகன் அந்த வீட்டை விட்டும் போயிருக்க மாட்டான். இன்று, அவன் அருகில் இல்லாமல் அவர் ஏங்குகிற நிலையும் வந்திருக்காது என்று புரிந்தது.

அவன் வருகிறபோதெல்லாம் இதையெல்லாம் சொல்லி அவனோடு மனம் விட்டுப் பேச நினைப்பார். தன் தவறுக்கு மன்னிப்பும் கேட்க எண்ணுவார். அவன் இல்லாத வேளைகளில் அவனிடம் இப்படி இப்படிச் சொல்ல வேண்டும், இதையெல்லாம் பேசவேண்டும் என்று மனதில் குறித்துக் கொள்கிறவரால் அவன் முகம் பார்த்து ஒரு வார்த்தையேனும் உதிர்க்க முடிவதில்லை. அவற்றைப் பேச நினைத்தாலே வார்த்தைகளை முந்திக்கொண்டு அழுகை வந்தது. நடந்து முடிந்தவற்றை எல்லாம் மீண்டும் பேசத்தான் வேண்டுமா என்கிற சந்தேகமும் வந்து தடுத்துவிடும். இனியாவது அவன் நிம்மதியாக இருக்கட்டும் என்று எல்லாவற்றையும் தன் மனதுக்குள்ளேயே போட்டுப் புதைத்துக்கொள்ளுவார்.

இன்றைக்கு என்னவோ, அவனுக்கும் தனக்கும் இடையிலான இந்த இடைவெளியை இனியும் தாங்க முடியாது என்று மனம் அந்தரித்தது. கடைசியும் முதலுமாக ஒரேயொரு முறை மனதிலிருப்பதை அவனிடம் கொட்டிவிடவேண்டும் என்கிற முடிவோடு அவனுக்கு அழைத்து வரச் சொன்னார்.

அன்று மாலை ஹயர் முடிந்ததும் புறப்பட்டான் நிகேதன். எதற்கு வரச்சொன்னார் என்கிற சிந்தனையில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான். அப்போது, சிவப்பு நிற பி.எம்.டபிள்யு மினி ஒன்று ஒலிப்பானை அலறவிட்டபடி அவனை முந்தியது. முந்துகிற வேளையில் பக்கத்து கண்ணாடியிலேயே கவனித்துவிட்டவனுக்கு உதட்டினில் இளமுறுவல் அரும்பியது. “இவள..” என்றான் வாய்விட்டே.

முந்திய பிறகும் விடவில்லை அவள். ஒருமுறை வேகம் எடுத்தாள். இன்னொருமுறை வேகத்தைக் குறைத்தாள். மறைமுகமாக அவனைப் போட்டிக்கு அழைத்தாள். நிறைமாத வயிற்றோடு அவள் விளையாடிய விளையாட்டில் அவனுக்குக் கோபம் வந்தது. அவன் தன் வேகத்தைக் கூட்டவில்லை. நிதானமாகப் போனான்.

அவன் தன்னை முந்தமாட்டான் என்று அவளும் புரிந்துகொண்டிருக்க வேண்டும். தன் வேகத்தை நன்றாகவே குறைத்தாள். அன்று, ஞாயிறு என்பதும் வாகனங்கள் இல்லாத தெருவும் அவளுக்கு இன்னுமே வசதியாகிப் போனது. நடந்து போனாலே இதைவிட வேகமாகப் போய்விடலாம் போலும். அந்தளவுக்கு காரை உருட்டிக்கொண்டிருந்தாள் ஆரணி. வேண்டுமென்றே தன் ஒலிப்பானை அழுத்தி வழிவிடச் சொன்னான் நிகேதன்.

அவள் காரையே நிறுத்தியிருந்தாள்.

உதட்டினில் மீண்டும் முறுவல் அரும்ப, பின்னால் வருகிற வாகனங்களுக்கு முதலே எச்சரிக்கும் விதமாக, தன் வேனின் நான்கு பக்கத்து சிக்னல் லைட்டையும் ஒளிர விட்டுவிட்டுக் காத்திருந்தான்.

அவன் எதிர்பார்த்ததுபோல் காரிலிருந்து இறங்கி இவனை முறைத்துக்கொண்டு வந்தாள் அவள். கர்ப்பிணிகள் அணிவதற்கு என்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் அணிந்து, அதற்கு மேலே கையில்லாத டாப்பும், வயிற்றைத் தனித்துக் காட்டாமல் இருக்கக் கொட்டன் துணியாலான மெல்லிய கோர்ட் அணிந்து இருந்தவளின் அழகு இன்னுமின்னும் மெருகேறி அவன் கண்களையும் மனதையும் ஒருங்கே பறித்தது.

கண்ணில் சிரிப்புடன் அவன் பார்க்க, “ஹல்லோ, என்ன கோர்ன் அடிக்கிறீங்க? அவசரம் எண்டா முந்திக்கொண்டு போகவேண்டியது தானே.” என்று அதட்டினாள், அவள்.

“நீங்க இதுக்கு நடந்து போகலாமே மேடம்.” என்றவனின் விழிகள் ஆசையோடு அவள் முகத்தில் படிந்து மணிவயிற்றை வருடியது.

அவள் முறைத்தாள். “நடந்து போறதும் கார்ல போறதும் என்ர விருப்பம். அதைப் பற்றி நீங்க என்ன கதைக்கிறது? முதல், என்ன கதைக்கிறதா இருந்தாலும் என்ர கண்ண பாத்து கதைக்கவேணும். பார்வை கழுத்த தாண்டக் கூடாது. இப்பிடித்தான் தனிய நிக்கிற பொம்பிளைய பாப்பீங்களா? வெக்கமா இல்ல?”

‘அடியேய்…’ நிகேதனுக்குச் சிரிப்பை அடக்குவது வெகு சிரமமாக இருந்தது. சிவனே என்று போய்க்கொண்டு இருந்தவனைத் துரத்திப் பிடித்துச் சண்டை இழுக்கிறவளை என்ன செய்வது? நேற்று யாழ்ப்பாண ஹயர் ஒன்றை முடித்துக்கொண்டு வரும்போது இரவு பன்னிரண்டைத் தாண்டி இருந்தது. அந்த நேரத்தில் அவளை எழுப்ப மனமற்று தங்களின் வீட்டிலேயே வந்து படுத்திருந்தான். அந்தக் கோபத்தை இப்போது சாதிக்கிறாள் என்று புரிந்தது.

“தாண்டினா என்னடி செய்வாய்? ஓனரே நான்தான். வந்திட்டா கழுத்த தாண்டாத கைய தாண்டாத எண்டு சொல்லிக்கொண்டு!” என்று அதட்டிவிட்டு எட்டி பக்கத்து கதவைத் திறந்துவிட்டான். “ஏறு, வெயிலுக்க நிக்காம!”

“என்னை பாக்க வராம நீ எங்கயடா ஊரைச் சுத்துறாய்?” ஏறி அமர்ந்தபடி கேட்டாள் அவள். “மனுசி நிறை மாதமா இருக்கிறாளே, அவளைக் கவனமா பாக்க வேணுமே எண்டுற பொறுப்பு மருந்துக்கும் இல்ல உனக்கு. இதுல ஒண்டுக்கு ரெண்டு பிள்ளைக்கு அப்பா ஆகப்போறான்!”
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“ஏன், என்ர செல்லத்துக்கு உடம்புக்கு ஏலாம இருக்கா?” என்று அவளை அணைக்கப் போக பிடித்துத் தள்ளிவிட்டாள்.

“நடிக்காதடா! என்னைப் பாக்க வராம எங்க ஊர் சுத்துறாய்?”

“அம்மா கூப்பிட்டவா. அங்க போயிட்டு வீட்டை வருவம் எண்டு நினைச்சன்.”

“நானும் வரவா? மாமிய பாத்து நிறைய நாளாச்சு.”

“கார்?”

“என்னவாவது செய். எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை!” என்றுவிட்டு நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டாள் அவள்.

எட்டி அவளின் தலையில் செல்லமாகத் தட்டினான் அவன். “என்னைக் கண்டா மட்டும் உனக்கு இருத்தி எழுப்பவேணும் மாதிரியே இருக்குமா?”

“ஓம் அப்பிடித்தான்! இப்ப என்ன அதுக்கு?” என்று அதற்கும் சண்டைக்கு வந்தாள் அவள்.

அவளை முறைத்துவிட்டு முன்னர் இவனின் மற்ற வேனை ஒட்டிய மணிக்கு அழைத்துக் காரை எடுத்துக்கொண்டு போவதற்கு வரச்சொன்னான். பத்து நிமிடத்தில் அவனும் வந்தான். அந்தக் காரில் இருந்த அவளின் கைப்பையையும் கைப்பேசியையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டு மணியைக் காரோடு அனுப்பிவைத்தான் நிகேதன்.

“பெல்ட்ட போடு ஆரா.” புறப்படுவதற்காக வேனின் திறப்பை திருகியபடி சொன்னான்.

“மாட்டன் போ! நீதானே ஓடுறாய் நிக்கி. கவனமாத்தானே போவாய். எனக்கு வயிறு இடிக்குது.”

“நான் கவனமா ஓடுவன், சரி. எனக்கு முன்னாலயும் பின்னாலயும் வாறவன் எப்படி வருவான் எண்டு தெரியுமா உனக்கு?” அவளைக் கடிந்தபடி எட்டி பெல்ட்டை எடுத்து மாட்டினான் அவன். அதற்காகவே காத்திருந்தவள் அவன் தாடையில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள். அவன் முகம் புன்னகையைப் பூசியது. “இதுக்குத்தானே அவ்வளவு வாய்?” என்றவன், தானும் அவளின் கன்னக் கதுப்பினுள் உதட்டினை ஒற்றி எடுத்தான். அவளின் கன்னத்தின் மென்மை இன்னும் பல முத்தங்களை இட வைத்தது.

வயிற்றை ஆசையாகத் தடவிக் கொடுத்தான். “இன்னும் ஒரு கிழமைதானே. கொஞ்சம் பொறுத்துக்கொள்.” என்றான் கனிவுடன்.

அதைக் கேட்டு முறுவலித்தவளின் முகத்தில் தெரிந்த களைப்பில், “நான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம், என்ன?” என்றான் வருத்தத்தோடு.

“டேய்! விடுடா! பிள்ளையே பிறக்கப்போகுது. இப்ப வந்து என்ன கதை இது?”

சோடியாக வந்த இருவரையும் கண்டதும் அமராவதி அம்மாவின் முகம் மலர்ந்து போயிற்று. கயலும் ராகவனும் கூட விரைந்து வந்து வரவேற்றனர்.

“எப்பிடி இருக்கிறீங்க அண்ணி?” என்று நலன் விசாரித்தாள் கயல். அவளுக்கு நாள் எப்போது என்று கேட்டுக்கொண்டான் ராகவன். ராகுலன் ஆரணியின் வயிற்றைத் தடவி அதற்குள் யார் இருப்பது என்று விசாரித்தான். அமராவதி அம்மா ஓடிப்போய் இருவருக்கும் பிரெஷ் ஜூஸ் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தார். அவளுக்குப் பல கவனங்களை சொன்னார். வைத்தியாசாலைக்குச் செல்கையில் மறக்காமல் தன்னிடமும் சொல்லச் சொன்னார்.

அவரின் மனமாற்றம் அங்கிருந்த எல்லோருக்குமே துல்லியமாக விளங்கியது. காட்டிக்கொள்ளாமல் இயல்பாய் ஏற்றுக்கொண்டனர்.

அன்றும், அமராவதி அம்மாவால் நிகேதனிடம் பேச நினைத்ததைப் பேச முடியாமல் போயிற்று. அது பெரிய குறையாகத் தெரியாத அளவில் மலர்ந்திருந்த மகன் முகமும் பூரித்திருந்த ஆரணியின் முகமும் அவரின் மனதை அமைதிப் படுத்தியது. என்றாவது ஒருநாள் அவருக்குக் கிடைக்காமலா போகப் போகிறது? அன்றைக்கு மகனிடம் பேசுவார். அவன் மனம் நோகாதபடிக்கு தன் மனதின் பாரத்தை இறக்குவார். அதன்பிறகு அவரது பழைய பாசமான மகனே கிடைத்துவிடுவான்.

இன்றைக்கு அவர்களை மனம் நிறையக் கவனித்துக்கொண்டார்.

ஆரணிக்கும் நிறைய நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டைப் பார்த்ததில் மனதில் ஒருவித நெகிழ்ச்சி. அவர்களின் அறை, அவள் சமையல் பழகியது, கிணற்றடி, அங்கே அவர்கள் புரிந்த காதல் விளையாட்டுகள், முக்கியமாக அவள் அமைத்த டெரெஸ், அங்கே கழிந்த அவர்களுக்கு மட்டுமேயான நெருக்கமான பொழுதுகள் என்று எல்லாமே அழகிய காட்சிகளை மாத்திரமே நினைவூட்டித் தித்தித்தது.

இதழ்களில் படர்ந்த முறுவலுடன் நிகேதனைப் பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

“எல்லாத்தையும் நினைச்சுப் பார்த்தா நேற்று மாதிரி இருக்கு நிக்கி. ஆனா எவ்வளவு காலம் ஓடிப்போயிட்டுது, பாத்தியா?”

அந்தநாள் நினைவுகளை மீட்டியபடி எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர்.

ஒருநாள் நடு இரவில் ஆரணி மதுரனை ஈன்றெடுத்தாள். மகன் பிறந்து மூன்று மாதங்கள் முடிவுற்ற நிலையில் நிகேதன் ஆரணி தம்பதியர் அவர்களின் சொந்த வீட்டுக்குக் குடி புகுந்தார்கள். அதனைக் கோலாகலம் மிகுந்த விழாவாகச் சத்தியநாதன் மாற்றியிருந்தார். சத்தியநாதன் யசோதா தம்பதியர், அமராவதி அம்மா, சகாதேவன் குடும்பத்தினர், மாலினியின் பெற்றோர், கயல் குடும்பம், ராகவனின் வீட்டினர், சுகிர்தனின் குடும்பம், அவன் பெற்றோர், பார்வதி அம்மா என்று எல்லோருமே வருகை தந்திருந்தனர்.

மூன்று அறைகள், பெரிய விறாந்தை, பாத்ரூம் கிட்சன் என்று எந்தக் குறையுமற்று இருந்தது வீடு. முக்கியமாக அவர்களின் படுக்கை அறையிலிருந்து வெளியே செல்வதுபோல் கதவு வைத்து டெரெஸும் அமைத்திருந்தான் நிகேதன். முன்னே போதுமான அளவு முற்றம் விட்டு வாகனங்களைக் கொண்டுவந்து நிறுத்துவதற்கு ஏற்ப இடமும் ஒதுக்கி, பெரிய கேட்டும் போட்டிருந்தான்.

இரு வீட்டினருக்குமே மிகுந்த திருப்தி. அதுவும், தான் விற்றதைப்போலவே இன்னொரு வாகனத்தையும் வாங்கிக்கொண்டு வந்து அன்றே வீட்டின் முன்னால் நிறுத்தி இருந்தான் நிகேதன். இனி இரட்டிப்பு வேகத்தில் அவன் உயரம் தொடுவான் என்று சொல்லாமல் சொன்னான்.

எண்ணிப் பத்து வருடத்தில் அவனும் இந்த மன்னாரில் விரல் விட்டு என்னும் நபர்களில் ஒருவனாக இருப்பான் என்பது இப்போதே சத்யநாதனுக்குத் துல்லியமாகத் தெரிந்தது.

இரண்டு பிள்ளைகளையும் ஆளுக்கு ஒருவராகத் தூக்கிக்கொண்டு வேட்டி சட்டையில் அவனும், பட்டுச் சேலையில் அவளும் சோடியாக நின்றபோது சந்தோசமிகுதியில் விம்மினார் யசோதா. அவர்களின் திருமணக்கோலத்தை பார்க்கக் கொடுப்பினை இல்லாமல் போயிற்றே. அந்தக் குறையை இன்று தீர்த்துக்கொண்டனர்

குடிபூரல் முடிந்து, அய்யர் சென்றபிறகு மனைவி பிள்ளைகளோடு சென்று எல்லோர் முன்னும் சத்தியநாதன் யசோதாவின் பாதம் பணிந்து எழுந்தான், நிகேதன்.

“அச்சோ தம்பி! என்ன இதெல்லாம்? எழும்புங்கோ.” அவர்கள் தடுக்க முயன்றும் கேட்கவில்லை. உரிமையோடு சத்யநாதனின் கரம் பற்றி, “எங்களை மன்னிச்சுக்கொள்ளுங்கோ மாமா. நாங்க செய்தது பெரிய பிழைதான். ஆனா, உங்கட மகளை… என்ர மனுசிய இன்னுமின்னும் சந்தோசமா வச்சிருப்பன் மாமா.” என்றான் மனதிலிருந்து.

எல்லோருக்கு முன்னுக்கும் அவன் தங்களை கௌரவிக்க நினைப்பதை புரிந்துகொண்டார், சத்தியநாதன். மனம் பெருமிதத்தில் நிறைந்தது. “என்ர மருமகன் யாருக்கும் சளைச்சவர் இல்லை எண்டு எனக்கும் தெரியும் நிகேதன்! சந்தோசமா இருங்கோ!” என்று மனதார வாழ்த்தினார். மாமா மருமகனின் அந்த உரையாடலை முகம் கொள்ளா புன்னகையோடு பார்த்து ரசித்தாள், ஆரணி.
 

Goms

Active member
ஏ...ஏ....ஏ... எங்க ஆரா, நிக்கி சொந்த வீடு கட்டியாச்சு.....🥰🥰🥰

எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும், ஒவ்வொரு மனிதனுக்கும், சொந்த காசில் சொந்த வீடு என்பதுதான் சொர்க்கம்...💞💞
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom