You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

'ஆயிரம் பேரிடம் அறிவுரை கேள். ஆனால் முடிவை நீயே எடு!'- முகிலன் - இதழ் 6

ரோசி கஜன்

Administrator
Staff member
ஒருவன் தனது வாழ்க்கையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த மீன்கடை ஒன்றை நடத்தத் தீர்மானித்தான். அவனிடம் பெரிதாக முதல் இருக்கவில்லை. ஆனாலும் நம்பிக்கை இருந்தது. அவன் சன நடமாட்டம் அதிகம் உள்ள வீதி ஒன்றின் ஓரத்தில் ஓர் இடத்தை தெரிவு செய்தான். ஒரு பலகையில் அழகிய மீன் படம் ஒன்று வரைந்து, “இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்"என்று எழுதி அவ்விடத்தில் நட்டு, அதன் கீழ் தனது வியாபாரத்தை ஆரம்பித்தான்.



அவன் எதிர்பார்த்த மாதிரியே வியாபாரம் ஓரளவுக்கு சிறப்பாக நடக்க தொடங்கியது. வியாபாரம் ஓய்ந்திருந்த பொழுது ஒன்றில் அவனுக்கு தெரிந்தவர் ஒருவர் வந்தார். அவனது கடையை மேலும் கீழும் பார்த்தார்... “மீன் என்றால் எப்படி இருக்கும் என்று குழந்தைகளுக்கும் தெரியும். ஏன் படம் வரைந்து வைத்திருக்கிறாய்?" என்று கேட்டார். வியாபாரியும் அவர் சொன்னதை எற்றுக் கொண்டு, மீன் படத்தை அழித்துவிட்டான். பலகையில் இப்போது மீன் படம் இல்லை.



இன்னும் ஒருநாள்... இன்னும் ஒருவர் வந்தார். “இங்கு பெயர்ப்பலகை வைத்து இங்கிலாந்திலா மீன் விற்க முடியும்?பலகை உள்ள இடத்தில் தானே விற்க முடியும்.. பிறகேன் இங்கு மீன் விற்கப்படும் என்று போட்டிருக்கிறாய்?" என்று கேட்டார். வியாபாரி அதற்கு உடன்பட்டு ‘இங்கு’ என்பதை அழித்து விட்டான். இப்போது பலகை "நல்ல மீன்கள் விற்கப்படும்" என்று மாறியது..



அடுத்த நாள் இன்னும் ஒருவர் வந்தார். “நல்ல மீன்கடை, கெட்ட மீன் கடை என்று இரண்டு விதமான மீன்கடை இருக்குதா? மீன்கள் விற்கப்படும் என்று மட்டுமே போட்டால் போதும்.. எதற்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்று போட்டு இருக்கிறாய்" என்று கேட்டார்.. அவனும் அவரது கருத்தை ஏற்று கொண்டு ‘நல்ல’ என்ற சொல்லை அழித்து விட்டான்... பலகை “மீன்கள் விற்கப்படும்” என்று மாறியது.



வியாபாரம் தொடர்ந்து நடந்தது.... அடுத்த நாள் இன்னும் ஒரு நண்பர் வந்தார்...”நீ என்ன விற்கிறாய் என்று எல்லோருக்கும் மீனை பார்த்தால் தெரியும் தானே?... பிறகேன் மீன் விற்கப்படும் என்று எழுதி இருக்கிறாய்?" என்று கேட்டார். மீன் வியாபாரியும்
அவர் செல்வதற்கு உடன்பட்டான்..... ‘மீன்’ என்பதை அழித்து விட்டான். பலகையில் இப்போது'விற்கப்படும்' என்று மட்டுமே எழுதி இருந்தது.



இன்னும் ஒருநாள் இன்னும் ஒருவர் வந்தார். "மீன்கடை போடுவது மீன் விற்கத்தானே.? கருவாடு போடுவதற்காகவா கடை போட்டு மீனை பரப்பி வைப்பார்கள். எதற்காக 'விற்கப்படும்' என்று எழுதி போட்டிருக்கிறாய்?" என்று கேட்டார். வியாபாரிக்கு அவர் சொல்வது சரியாகப்பட்டது... பெயர்ப் பலகையைப் புடுங்கி கீழே போட்டு விட்டு வியாபாரத்தை தொடர்ந்தான்.



அடுத்த நாள் இன்னும் ஒருவர் வந்தார். அவனது கடையை நிதானமாகப் பார்த்து விட்டு சொன்னார். "ஒரு கடையை நடத்துகிறாய். ஒரு அறிவித்தல் கூட இல்லை.. இதில ஒரு பலகை நட்டு, ஒரு அழகான மீன் படம் கீறி, 'இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்' என்று வைக்கலாமே? அப்படி வைத்தால் தானே இன்னும் இன்னும் நல்ல வியாபாரம் நடக்கும்" என்று சொன்னார்.



வியாபாரிக்குத் தலை சுற்றத் தொடங்கியது....



இது ஒரு பழைய கதை தான். இது நகைச்சுவையாக ஒரு தமிழ்ப் படத்திலும் வந்ததாக ஞாபகம்.. ஆனால் இப்போதும் எல்லா இடமும் இப்படி அறிவுரை வழங்குவோர் நிறைந்து இருக்கிறார்கள்.



அறிவுரைகள் பல வகைகளில் வந்து சூழும்...

சிலர் எழுந்தமானமாக அறிவுரைகளை அள்ளித் தெளிப்பார்கள் ... யாருக்குச் சொல்கிறோம்... எதற்காகச் சொல்கிறோம் என்ற நிதானம் கூட இல்லாமல் .



இன்னும் சிலர் எப்போதும் எதிலும் பிழை கண்டுபிடிப்பதில் திருப்தி அடைபவர்கள்.... இவர்களது அறிவுரைகள் பெரும்பாலும் ஏதாவது குறை கூறுவதாக இருக்கும். சொல்லாவிட்டால் அவர்களுக்குத் தலை வெடிக்கும் . பரிதாபத்திற்கு உரியவர்கள்.



சிலர் உண்மையிலே நல்ல நோக்கத்துடன் தங்கள் மனதுக்குப் பட்டதைச் சொல்லிவிட்டு நகர்வார்கள்.



இப்படியான அறிவுரை மழைக்குள், அனுபவத்தால் செதுக்கப்பட்ட ஒரு சில முத்துக்களும் வந்து விழக்கூடும். அந்த அறிவுரை உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய திருப்புமுனையாகவும் அமையக் கூடும்.



எது எப்படியிருந்தாலும் அறிவுரை சொல்பவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் வரப்போவதில்லை. அறிவுரைகளைப் பெறுபவனுக்குத் தான் சிக்கல்கள் ஆரம்பிக்கும்.



யார் சொல்வது சரி? எவர் சொல்வதைச் செய்வது? செய்தால் என்ன நடக்கும்? செய்யாவிட்டால் என்ன நினைப்பார்? இப்படி பல கேள்விகள் மனதில் தோன்றும்.



எல்லோரும் சொல்வதைக் கேட்பவன்பாடு மேலுள்ள கதையிலுள்ள மீன் வியாபாரி போல ஆகிவிடும். அதேநேரம் யார் சொல்வதையும் கேட்க மாட்டேன். நான் நினைத்ததைத் தான் செய்வேன் என்று தான்தோன்றித்தனமாகச் செயற்படுபவன் வாழ்வும் தறிகெட்டுப் போகக் கூடும்.



எல்லோரும் சொல்வதைக் கேட்டு, தேவையில்லாததைப் புறந்தள்ளி, ஆரோக்கியமான கருத்துக்களை உள்வாங்கி, உங்கள் நிலைமைக்கேற்வாறு தற்துணிவான முடிவெடுங்கள்.



இதனையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர்



“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்



மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று கூறிச் சென்றுள்ளார்.



“ஆயிரம் பேரிடம் அறிவுரை கேள். ஆனால் முடிவை நீயே எடு” என்று சான்றோர் சொல்கிறார்கள்.



“அறிவுரை சொல்பவர்களை கிண்டல் பண்ணுகிறாயே! நீ மட்டும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று முகிலனிடம் கேட்காதீர்கள். இது பிழைப்பு. தப்பிப் பிழைப்பு. செந்தூரம் ஆசிரியர்குழுவிடமிருந்து தப்பிப் பிழைக்க ஏதாவது எழுதிக் கொடுத்தாகணுமே.

 
Top Bottom