• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 10

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-10

சூர்யா காரை நிறுத்த, நிமிர்ந்து வெளியே பார்த்தாள் சனா. அது ஓர் வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் எடுப்பதற்குப் படிக்கும் பாடசாலை என்றதும், இங்கே ஏன் வந்திருக்கிறான் என்று நினைத்தபடி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவனோ அவளின் முகம் பாராது, “இறங்கு…” என்றபடி இறங்க முற்படவும், “இங்கே எதற்குச் சூர்யா…?” என்று இறங்குவதற்கு எந்த முயற்சியும் செய்யாது கேட்டாள்.

“டிரைவிங் படிக்கவேண்டும் என்றாயே. அதற்குப் பதிவதற்கு!” இப்போதும் அவள் புறம் அவன் திரும்பவில்லை.

‘என் முகத்தைப் பார்த்துக் கதைக்க முடியாத அளவுக்கு நான் என்ன செய்தேன்..’ என்று உள்ளம் பரிதவித்தபோதும், “அதற்கு எதற்கு இப்போது வந்தீர்கள்?” என்று மனக்குமுறலைக் காட்டாத குரலில் கேட்டாள்.

“இப்போதே ஆரம்பித்தால் தான் இன்னும் மூன்றோ நான்கு மாதத்தில் நீ பழகி முடிக்கலாம்…”

“ஆனால் என்னிடம்...” என்று ஆரம்பித்தவள் அமைதியானாள். அவளுக்கு பணத்தைப் பற்றி மீண்டும் அவனிடம் கதைக்க விருப்பமில்லை. அதோடு அவனே பணம் கட்டும் எண்ணத்துடன் வந்திருக்கிறான் என்பதும் தெரிந்தது.

என்னதான் உயிர்க் காதலனாக இருந்தாலுமே திருமணத்திற்கு முதல் அவன் செலவில் ஒன்றைச் செய்வதில் அவளுக்குச் சம்மதமில்லை. அதை அவனிடம் அவளால் வாய்விட்டுச் சொல்ல முடியாது. சொன்னால் திரும்பவும் முருங்கைமரம் ஏறிவிடுவான். இன்னுமொரு வாக்குவாதத்தை தாங்கும் சக்தியும் இப்போது இல்லை.

“இப்போதைக்கு வேண்டாமே. எனக்கு மொழியும் அவ்வளவாகப் புரியாது…” மொழி மேல் பழியைப் போட்டு அந்த விஷயத்தை தள்ளிப்போடப் பார்த்தாள்.

“அது ஒரு பிரச்சினை இல்லை. அதே கேள்விகள் இணையத்தில் தமிழில் இருக்கிறது. நான் பதிவிறக்கம் செய்து தருகிறேன். அதைப் படித்துவிட்டு ஐந்தோ அல்லது ஆறு வகுப்புக்களுக்கு நீ போனால் போதும். நீ பரீட்சை எழுதலாம்…” என்று அவளின் எண்ணத்தை மிக இலகுவாக முறியடித்தான் அவன்.

“இணையத்தில் தமிழில் இருக்கிறது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்..?” ஆச்சரியமாகக் கேட்டாள் சனா. தமிழில் ஒன்றைத் தேடவேண்டிய அவசியம் அவனுக்கு இல்லையே.

“உனக்காகத் தேடியதில் தெரியும். டொச்சில் படிக்கச் சிரமப்படுவாயே என்று நினைத்து தேடினேன்....” என்றான் சிறு புன்னகையோடு.

அதைக் கேட்டதும் இதுவரை இருந்த மனநிலை மாறி அவள் உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சி! நெகிழ்ச்சி! அவளுக்காக அவன் ஒன்றைச் செய்தான் என்பதில் பெருமையாக இருந்தது.

அவள் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம். ஆனால் அது அவன் காதலில் கசிந்த ஆனந்தக்கண்ணீர் மட்டுமே!

“எதற்கும் கொஞ்ச நாட்கள் போகட்டுமே சூர்யா…” என்றாள் நெகிழ்ந்த குரலில். அவன் காட்டிய நேசத்தில் அவளின் எதிர்ப்பு முற்றாக அடிபட்டிருந்தது. திடமாகப் பேச முடியாவிட்டாலும் அவன் பணத்தில் டிரைவிங் பழகுவதைத் தவிர்க்க முயன்றாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே கண்களில் கோபம் மின்ன, “ஏன்..?” என்று சுருக்கமாகக் கேட்டான் அவன்.

“அது.. அது இன்னும் இரண்டுமாதம் கழித்து…” அவளைச் சொல்லிமுடிக்க விடாது, “அதுதான் ஏன் என்று கேட்கிறேன்..!” என்று கூர்மையோடு கேட்டான் அவன்.

உள்ளதைச் சொல்ல விருப்பம் இல்லாதபோதும், சொல்லாமலும் விடமாட்டான் என்று தெரியவே, “என்னிடம் போதியளவு பணமில்லை…” என்றாள் அவன் முகம் பாராது.

“இப்போது உன்னிடம் யாராவது பணம் கேட்டார்களா..?”

“அது… நானே கட்டிப் படிக்கிறேன்.” என்றாள் தயக்கமாக. இன்னுமொரு வாதாட்டம் தொடங்கப் போகிறது என்பதையறிந்து உள்ளம் படபடக்கத் தொடங்கியது.

“ஏன்? நான் கட்டினால் நீ படிக்க மாட்டாயா?” பார்வையை அவளிடமிருந்து பிரிக்காது கேட்டான்.

இவ்வளவு நேரமும் முகம் பார்த்துக் கதைக்கிறான் இல்லையே என்று தவித்தவள், இப்போது அவன் பார்வையை விலக்கிக் கொண்டால் நல்லது என்று நினைத்தாள். அந்தளவுக்கு கூர்மையாக இருந்தன அவன் விழிகள்.


எதுவும் சொல்லாது, முகத்தில் மறுப்பைத் தேக்கி எங்கோ பார்த்தவளின் நாடியைப் பிடித்துத் தன்பக்கமாகத் திருப்பி, “உனக்கு நான் செய்வதில் என்ன தவறு கண்டாய் நீ..?” என்று அவள் விழிகளையே ஊடுருவியபடி கேட்டான்.

அப்போதும் அவளின் மௌன யுத்தம் தொடரவே, “உனக்குச் செய்வதற்கு எனக்கு உரிமை இல்லை என்கிறாயா..?” என்று அவன் கேட்க, அதற்கு மேலும் அவளால் அமைதியாக இருக்கமுடியவில்லை.

“இல்லை.. அப்படி இல்லை..” என்று திக்கியவளைப் பேசவிடாது,

“எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா? இதற்கு மட்டும் பதிலைச் சொல்!” என்றான் அவன்.

“சூர்யா.. நான் சொல்வதைக் கேளுங்களேன்..” அவள் கெஞ்ச,

“நான் கேட்டதற்கு மட்டும் பதிலைச் சொல்லு..!” என்று தன் பிடியிலேயே நின்றான் அவன்.

அதற்கு மேல் முடியாமல், “இருக்கிறது…” என்றாள் மொட்டையாக.

“அப்படியானால் இறங்கு…” என்றவன் காரைவிட்டு இறங்கினான்.

உள்ளே சென்று அவள் டிரைவிங் பழகுவதற்குப் பதிந்து, முதற்கட்டப் பணத்தைத் தானே கட்டி என்று மிக வேகமாக வேலைகளை முடித்து, “கையெழுத்துப் போடு..” என்று அவன் ஒரு பத்திரத்தை நீட்ட, அதிலே என்ன இருக்கிறது என்று பாராமலேயே கையெழுத்திட்டாள் சனா.

எல்லா வேலைகளும் முடிந்து காருக்கு வரும்வரை அவளாக ஒரு வார்த்தை அவனோடு கதைக்கவில்லை. சாவி கொடுத்தால் இயங்கும் பொம்மையாக அவன் சொன்னதை மட்டுமே செய்தாள்.

“இப்போ எதற்கு முகத்தை நீட்டிக்கொண்டு இருக்கிறாய்..?” எதையும் பிடித்துத் தொங்கும் இயல்பு இல்லாதவன் என்பதாலோ அல்லது அவளின் ஆர்ப்பாட்டமான மறுப்பை விட இந்த அமைதியான மறுப்பின் தாக்கம் அதிகமாக இருந்ததாலோ என்னவோ, காருக்குள் ஏறியபிறகும் அமைதியாக இருந்தவளிடம் கேட்டான்.

மடியில் இருந்த தன் கைவிரல் நகங்களை ஆராய்ந்தபடி இருந்தவள் எதுவும் பேசவில்லை.

“என்னோடு கதைக்க மாட்டாயா லட்டு…?” தணிந்த குரலில் அவன் கேட்க, பதில் சொல்ல முடியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

‘என்னால் அது முடியுமா..?’ என்று கேட்டது அந்தப் பார்வை. அதைப் புரிந்துகொண்டான் போலும், அவன் இதழ்களில் சின்னப்புன்னகை.

“நமக்குத் திருமணம் நடந்தபிறகு உன் பொறுப்பு என்னதுதானே! அதை நான் இப்போதே செய்கிறேன். அதிலே உனக்கு என்ன பிரச்சினை?” தன் செயலுக்கான காரணத்தை விளக்க முயன்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு அவள் நெஞ்சம் அவன் பால் இன்னுமின்னும் உருகியது! மனைவியின் கடமைகளையே தட்டிக்கழிக்கும் கணவன் வாழும் இந்தக் காலத்தில், காதலி மறுத்தபோதும் பிடிவாதமாக அவளின் தேவைகளை நிறைவேற்றும் காதலன் கிடைப்பது வரமல்லவா!

ஆனாலும் பணத்துக்காக அவள் அவனோடு பழகுவதாக நினைத்துவிட்டான் என்றால்...

அப்படி நினைக்க மாட்டான் என்று காதல் கொண்ட மனது வாதிட, அவன் நினைத்துவிட்டாலோ அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அப்படி அவன் சொல்லிவிட்டாலோ அதன் பிறகு என்ன செய்வாய் என்று கேட்டது அவளின் பெண் மனது.

“பணத்துக்காக நீ என்னோடு பழகுவதாக நான் நினைத்துவிடுவேன் என்று நினைக்கிறாயோ..?” அவள் மனதை அப்படியே படம் பிடித்தவனாகக் கேட்டான்.

திகைப்போடு அவனைப் பார்த்து விழித்தவளின் விழிகளே உண்மையைச் சொல்ல, “என்னைப் பற்றி நல்லதாகவே நினைக்கமாட்டாயா..?” என்று கேட்டவனின் முகத்தில் சிரிப்பிருந்தது.

“அச்சோ சூர்யா.. அப்படியெல்லாம் இல்லை…” மனதை மறைத்து அவள் சிணுங்க,

“விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்கிறாயா.…”என்றான் விரிந்த புன்னகையோடு!

‘இவனுக்குக் கோபம் போய்விட்டதா… சிரிக்கிறானே.. ’ என்று ஆவலோடு அவள் அவனைப் பார்க்க, “கண்ணாடி இல்லாமல் உன் கண்கள் இன்னும் அழகாக இருக்கிறது…!” என்று ரசனையோடு சொன்னவனின் கை, அவளின் மூக்கைப் பிடித்துச் செல்லமாக ஆட்டியது.

அவன் அவளை ரசிக்கிறான் என்பதில் உள்ளம் துள்ள, “கண்களைச் சொல்லிவிட்டு மூக்கை பிடிக்கிறீர்களே சூர்யா…” என்றவளின் குரல் காதலில் குலைந்து வந்தது.

அவளையே பார்த்தபடி, “உன்னைப்பற்றி, உன்னைவிட எனக்கு நன்றாகத் தெரியும்! அதனால் இப்படி லூசுத்தனமாக எல்லாம் சிந்திக்காதே…!” என்று இதமாகச் சொன்னவனின் வார்த்தைகள் அவள் நெஞ்சில் இனிமையைச் சேர்த்தது.

எதையும் நேராகப் பேசுபவன், அவளைத் தவறாக நினைத்திருந்தால், அதையும் நேராகச் சொல்லியிருப்பான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவன் அப்படி நினைக்கவில்லை என்பதும், கோபத்தைக் கைவிட்டு இலகுவாக அவளோடு கதைத்ததும், அவள் மனதில் அதுவரை அழுத்திக்கொண்டிருந்த தவிப்புக்களை பனிபோல் அகற்றியது.

மனமும் உடலும் லேசாகிவிட, சாய்ந்துகொள்ள அவன் தோள் வேண்டும் என்று உள்ளம் கேட்க, இதற்கு முதல் நடந்த கருத்து மோதலை மறந்து, அவன் தோள் சாய்ந்தாள் லட்சனா.

அவனுமே அவள் இடையில் கையைப் போட்டு தன்னோடு சேர்த்து இறுக்கியபடி அவள் முகம் பார்க்க, அதில் நிறைந்துவழிந்த காதலில் அவன் பார்வை மாறியது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அவள் முகம் நோக்கி வேகமாகக் குனிந்தவன், நொடியில் சுதாகரித்துக்கொண்டான்.

உடல் இறுக கண்களை மூடித்திறந்தவன், அவள் இடையிலிருந்த கையையும் இழுத்துக்கொண்டு, “தள்ளியிரு லட்சனா…” என்றான் கரகரத்த குரலில்.

அவளுக்கோ பெருத்த ஏமாற்றம். உடலும் உள்ளமும் அவன் இதழ் ஒற்றுதலுக்காய் ஏங்கியது. எதிர்பார்த்தது கிடைக்காத ஏமாற்றத்தில், ஏக்கம் பாதி எதிர்பார்ப்பு மீதியாக அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“ஒரு அளவுக்குமேல் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியாது..” என்றான் அவன், அவள் விழி வழி வந்த கேள்விக்குப் பதிலாக.

அப்போதுதான் அவள் சொன்னது அவளுக்கே நினைவில் வர, விழுந்தடித்துக்கொண்டு விலகியமர்ந்தாள்.

என்னைத் தொடாதே, என்னருகில் வராதே என்று பெரிதாகச் சொல்லிவிட்டு இப்படிச் செய்துவிட்டாளே. அவளைப் பற்றி என்ன நினைப்பான் என்று தோன்றியதும் அவள் முகம் கன்றிச் சிவந்தது.

“தடையை விதித்தவள் நீதான். நானல்ல!” கன்றிவிட்ட அவள் முகத்தைப் பார்த்து அவன் சொல்ல, அவளுக்கு அது இன்னும் அவமானமாக இருந்தது.

அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் தடுமாறியவளின் உள்ளம் அவனது அருகாமைக்கு ஏங்கியது!

அவனிடமிருந்து விலகியிருப்பதுதான் நல்லது என்பதை புத்தி அறியும்! அவன் அருகாமை மட்டுமே வேண்டும் என்று உள்ளம் கதறும்! இவை இரண்டுக்கும் மத்தியில் போராடிக்கொண்டிருந்தாள் லட்சனா.

வெட்கத்தை விட்டு அவன் தோள் சாய்ந்தால், இந்தப் போராட்டத்துக்கு முடிவு வந்துவிடும்தான். அதன்பிறகு அவனின் தேடல் அல்லவா அவளிடம் தொடங்கிவிடும்! அதை அனுமதிக்க முடியாதே!

“சா..” மன்னிப்புக் கேட்கத் தொடங்கியவள் படக்கென்று வாயை மூடிக்கொண்டாள். அதுவும் வில்லங்கத்தில் போய் முடியும் அபாயம் உண்டே!

அவளைப் புரிந்துகொண்ட புன்னகை அவன் முகத்தில் அரும்பியது.

காரை இயக்கிக் கொண்டே, “நாளை மாலை டொச் வகுப்புக்கு பள்ளிக்கூடம் வருவாய் தானே. சாலை விதிகள் பற்றிய இணையத்தில் இருக்கும் தமிழ் கேள்விகளை பிரிண்ட் எடுத்துத் தருகிறேன். படி…” தன்னைத் தானே கட்டுப்படுத்தியவன் ஒன்றுமே நடக்காததுபோல் பேசினான். அது அவளுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

“ம்ம்.. வருவேன். நீங்களும் நாளைக்கு விளையாட வருவீர்களா..?” என்று ஆவலோடு கேட்டாள்.

“ம்.. அப்படியே உன்னையும் பார்த்ததாகுமே…” என்றபடி பெட்ரோல் செட்டில் சூர்யா காரை நிறுத்த, அவனோடு அவளும் இறங்கினாள்.

காருக்குப் பெட்ரோல் நிரப்பும் விதத்தைக் காட்டிக்கொடுத்தான் சூர்யா. அவளின் அத்தான் நிரப்புகையில் பார்த்திருக்கிறாள் தான். என்றாலும் அவன் காட்டித் தந்தது மனதுக்கு இதமாக இருந்தது.

பணம் கொடுக்க, உள்ளே சென்றவனோடு கூட நடந்தபடி, “நான் கொடுக்கிறேன் சூர்யா…” என்றாள் அவசரமாக.

அவன் நடை ஒரு நொடி தயங்கி மீண்டும் தொடர்ந்தது. “ஏன், அங்கே நான் கட்டிய பணத்துக்குப் பதிலாகவா..?” என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்டான்.

அவள் நினைத்ததையே அவன் கேட்டதில் பதில் சொல்லச் சற்றே சிரமப் பட்டாள் லட்சனா.

என்றாலும் உண்மையை அவனிடம் ஒப்புக்கொள்ளாது, “அந்தத் தொகைக்கும் இந்தத் தொகைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது சூர்யா…” என்றவள் அவன் என்னவோ சொல்லவர, “எனக்குச் செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறதென்றால், உங்களுக்குச் செய்ய எனக்கு உரிமை இல்லையா..?” என்று வேகமாக அவனை மடக்கினாள்.

அவன் விழிகளில் மெச்சுதலான பார்வை ஒன்று வந்துபோனது. “கெட்டிக்காரிதான்…!” என்றான் புன்னகையோடு.

“புரிந்தால் சரிதான்..” என்றபடி பணத்தைச் செலுத்தச் சென்றவளிடம், “கொஞ்சம் பொறு..” என்றவன், ஒரு பியர் டின்னையும் சிகரட் பெட்டியையும் எடுத்து வைத்து, “இதற்கும் சேர்த்துக் கொடு..” என்றான்.

அவற்றைப் பார்த்து அதிர்ந்தவளின் பாதங்கள் இரண்டடி வேகமாக பின்னால் நகர்ந்தது.

“என்ன..?” அவளின் செய்கையின் அர்த்தம் புரியாது கேட்டான் சூர்யா.

“இது.. இது எதற்கு…?”

“இதென்ன கேள்வி.. எதற்கு என்று தெரியாதா..?” என்று பதிலுக்குக் கேட்டான் அவன்.

“தெரியாமல் என்ன? நன்றாகத் தெரியும்! ஆனால் இவை இல்லாமல் உங்களால் இருக்க முடியாதா…?” என்று வெடுவெடுத்தாள் லட்சனா.

பெட்ரோல் செட்டில் வேலைக்கு இருந்த மனிதன், புரியாத மொழியில் கதைக்கும் இவர்களை வேடிக்கை பார்ப்பதைக் கவனித்துவிட்டு, “நாம் அடுத்தவர்களுக்கு வேடிக்கைப் பொருளாக வேண்டாம். முதலில் பணத்தைக் கொடுத்துவிட்டு வா. நம் சண்டையை வெளியே வைத்துக்கொள்ளலாம்…” என்றான் சூர்யா.

அவனை மீண்டும் முறைத்துவிட்டு, ‘இந்தக் கருமத்தை எல்லாம் நான் வாங்கிக் கொடுக்கவேண்டி இருக்கிறதே..’ என்று தன்னையே நொந்தபடி, பணத்தைக் கொடுத்து சில்லறையை வாங்கியவள், வேகமாக வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்துகொண்டாள்.

ஒரு கையில் பியர் டின்னும் மற்றக் கையில் சிகரட் பெட்டி சகிதம் வந்தவனும், காரிலமர்ந்து எதுவும் பேசாது காரைக் கிளப்பினான்.

சனாவோடு சைந்தவி விளையாடச் செல்லும் பூங்காவின் வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு, “இனி நாம் நமது சண்டையைத் தொடங்கலாமா..?” என்றவனின் குரலில் கேலி இருந்தது.

“என்னைப் பார்த்தால் உங்களுக்குச் சண்டைக்காரி மாதிரி இருக்கிறதா..?” என்றபடி அவள் அவனை முறைக்க, “அம்மாடி.. பயமாயிருக்கிறதே…” என்று நடித்தான் அவன்.

அவள் அப்போதும் சிரிக்காமல் இருக்க, “இப்போது என்ன கோபம் உனக்கு?” என்று விளையாட்டை விட்டுவிட்டுக் கேட்டான் சூர்யா.

அவள் அப்போதும் பேசாமல் இருக்கவே, சிகரட் ஒன்றை எடுத்து உதட்டில் பொருத்தி நெருப்பை மூட்டியவன், கார்க் கதவின் கண்ணாடியைக் கீழே இறக்கினான். அதைப் பார்க்க அவளுக்குப் பத்திக்கொண்டு வந்தது.

வேண்டாம் என்று சொன்னதைக் காதில் வாங்காமல், அவள் முன்னாலேயே புகைக்கிறானே.

“அந்தக் கருமத்தை முதலில் தூக்கி எறியுங்கள்...” என்று சீறினாள் சனா.

ஆட்காட்டி மற்றும் நடுவிரலால் அதைக் கைகளில் ஏந்தி, அந்தக் கையை காரின் வெளியே நீட்டிச் சாம்பலைத் தட்டியபடி, “ஏன்..?” என்று கேட்டவனின் மூக்கில் இருந்து புகை வெளியேறியது.

“என்ன ஏன்? இதெல்லாம் நல்ல பழக்கமா சூர்யா? உடம்புக்கு கேடு என்று தெரியாதா? உங்கள் வீட்டில் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்?” என்று பொரிந்து தள்ளினாள் அவள்.

“ஹேய்.. நிறுத்து.. நிறுத்து! இப்படிக் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டால் நான் எப்படிப் பதில் சொல்ல? ம்..?” என்றவனின் உதடுகளில் புன்னகைதான் தவழ்ந்தது.

எப்போதும் அந்தப் புன்னகையில் மயங்குபவளுக்கு இன்றைக்கு கோபம் வந்தது.

“சிரிக்காதீர்கள் சூர்யா…” என்றாள் கடுப்பை மறையாது.

புன்னகை விரிந்தபோதும், “சரி..சிரிக்கவில்லை.” என்றான் அவன் தன்மையாக.

“இது நல்ல பழக்கம் இல்லைதான். நீ சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பழக்கமாகிவிட்டது லட்டு. அதற்காக எப்போதும் என்றில்லை. எப்போதாவதுதான்.” என்றான் அவள் கேள்விகளுக்குப் பதிலாக.

“உங்களுக்கே தெரிகிறதுதானே, நல்லதில்லை என்று. பிறகும் ஏன் சூர்யா இவற்றைச் செய்கிறீர்கள்?”
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“அதுதான் சொன்னேனே.. பழகிவிட்டது. விடமுடியவில்லை என்று…” என்றான் சிகரட்டை புகைத்தபடி.

“இப்படிச் சொன்னால் எப்படி சூர்யா? தயவுசெய்து விட்டுவிடுங்கள். இந்த மணமே எனக்கு என்னவோ செய்கிறது…” என்றாள் முகத்தைச் சுளித்தபடி.

“ஓ.. சாரி. இனி உன்னருகில் புகைக்கவில்லை….” என்றவன் உடனேயே காரிலிருந்து இறங்கி, அருகே இருந்த குப்பை வாளியில் அதைப் போட்டுவிட்டு வந்தான்.

“ப்ச் சூர்யா! புரியாமல் பேசாதீர்கள். என்னருகில் மட்டுமல்ல எப்போதுமே புகைக்காதீர்கள்.” மீண்டும் வந்து காருக்குள் அமர்ந்தவனிடம் சொன்னவள், அங்கிருந்த பியர் டின்னைக் காட்டி, “இந்தக் கருமத்தையும் குடிக்காதீர்கள்..” என்றாள் கோபத்தோடு.

“என்னால் அது முடியும் என்று நான் நினைக்கவில்லை லட்டு.” என்றான் அவன்.

“எனக்காகத்தன்னும் விடமாட்டீர்களா சூர்யா..:?” அவளுக்காக அவன் எதையும் செய்வான் என்கிற நம்பிக்கையில் கேட்டாள்.

“அதென்ன உனக்காக விடுவது..? எனக்குப் பிடித்தால் தான் ஒன்றை என்னால் செய்யமுடியும் லட்டு! அவ்வப்போதுதான் என்றாலும் என்னால் இவை இல்லாமல் இருக்கமுடியாது.” என்றான் அவன் தெளிவாக.

அதில் அவள் உள்ளம் தான் பெரிதாக அடிபட்டது. கண்கள் வேறு கலங்கியது. மறுபக்கமாகத் தலையைத் திருப்பி, இமைகளை மூடித் திறந்து கண்களில் சேரப்பார்த்த நீரைத் தடுத்தாள்.

“உங்களுக்குப் பிடிகிறது என்றுதானே நான் கண்களுக்கு லென்ஸ் வைத்தேன். அதேபோல எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக உங்களால் இதை விடமுடியாதா.?” என்று வாதாடினாள்.

“இதென்ன புதுக்கதை? லென்ஸ் உனக்கு அழகாக இருக்கும், அதைவிட வசதியாக இருக்கும் என்றுதான் சொன்னேன். உனக்கும் அது பிடித்ததில் செய்தாய். நான் உன்னைக் கட்டாயப்படுத்தவில்லையே! அதேபோல நீ சொல்லும் ஒன்று எனக்கும் பிடிக்க வேண்டாமா? பிடிக்காமல் ஒன்றைச் செய்ய என்னால் என்றுமே முடியாது.” என்றான் உறுதியான குரலில்.

அவளுக்கு வலித்தது. லென்ஸ் வைத்தபிறகு அவளுக்கு அது பிடித்துவிட்டதுதான். ஆனால் வைக்கச் சென்றது அவனுக்குப் பிடிகிறது என்பதால் தானே! அது புரியவில்லையா அவனுக்கு?

அவள் முகத்தில் எதைக் கண்டானோ, “முடிந்தவரை குறைக்கப் பார்க்கிறேன் லட்டு…” என்றான்.

அவளுக்கும் அதற்கு மேல் அவனைக் கட்டாயப்படுத்த வாயெழவில்லை. உனக்காக என்னால் செய்யமுடியாது என்று அவன் சொன்னது பெரிய அடியாக இருந்தது. ஆனாலும் குறைக்கப் பார்க்கிறேன் என்றதில் ஆறுதல் கொண்டாள்.

“ம்.. முடிந்தவரை நன்றாகக் குறையுங்கள் சூர்யா. உங்கள் உடல் நலமும் இதில் அடங்கியிருகிறது.” என்றாள், அவன் மேல் கொண்ட அக்கரையில்.

“கட்டாயம்…” என்று அவன் சொல்ல, இதற்காவது சம்மதித்தானே என்று இருந்தது அவளுக்கு!

“அதுசரி சூர்யா. அந்த பியரை ஏன் வாங்கினீர்கள்?”

“இந்தப் பேச்சை விடவே மாட்டாயா…?” அலுத்துக்கொண்டான் அவன். “இப்போது குடிக்கலாம் என்றுதான் வாங்கினேன். அதுதான் நீ கத்துகிறாயே.”

“அதைக் குடித்துவிட்டுக் காரை ஓடுவது தப்பில்லையா சூர்யா? தப்பித்தவறி போலிஸ் மறித்தால் என்ன செய்வீர்கள்..?”

“பியர் தானே லட்டு. இல்லாவிட்டாலும் உன்னை உன் வீட்டில் இறக்கிவிட்டு, என் வீட்டுக்குப் போக ஒரு பத்து நிமிடம் பிடிக்குமா? அதுவே அதிகம். அதற்குள் வெறிக்காது, நான் எப்போதும் செய்வதுதான். ”

“எப்போதும் செய்வதாலே ஒன்று நியாயம் ஆகிவிடாது சூர்யா. இதை விடத்தான் உங்களால் முடியாது என்று விட்டீர்கள். குடித்துவிட்டுக் காரோட மாட்டேன் என்றாவது சொல்லுங்கள். நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்!” என்று உறுதியான குரலில் கேட்டாள் லட்சனா.

அவன் பதில் சொல்லாது அவளைப் பார்க்க, “ப்ளீஸ் சூர்யா.. உங்கள் நல்லதுக்காகத்தான் கேட்கிறேன். இல்லையானால் நீங்கள் குடித்துவிட்டு ஓடி எங்கே என்ன நடந்ததோ என்று எனக்கு ஒரே பயமாக இருக்கும். எனக்…” எனக்காக என்று சொல்லப் பார்த்தவள், அவன் அவளுக்காகச் செய்யமாட்டானே என்று நினைவில் வர, தொண்டை அடைக்க அதற்கு மேல் எதுவும் சொல்லாது நிறுத்தினாள்.

“சரி! உனக்காக இனிக் குடித்துவிட்டுக் கார் ஓடவில்லை.. சரிதானா..” என்றவன் அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டான்.

அந்த மெல்லிய அணைப்பில் அவள் உள்ளம் பெரும் அமைதி கொண்டது. இதைத்தானே.. அவனின் இந்த அருகாமையைத்தானே அவள் விரும்புவது!

சில நொடிகள் கண்களை மூடி அவனிடமிருந்து கிடைக்கும் அந்தக் கதகதப்பை அனுபவித்தாள். விலக மனம் இல்லாதபோதும் வீட்டுக்குச் செல்லவேண்டுமே என்று தோன்ற, “நான் கிளம்பவா சூர்யா…” என்று மெல்லக் கேட்டாள்.

அவனுக்கும் அதில் விருப்பம் இல்லை போலும். சற்று நேரம் அமைதியாக இருந்தவன், “ம்.. வா வீட்டில் இறக்கி விடுகிறேன்…” என்றபடி அவள் தோளில் இருந்து கையை எடுத்தான்.

“இல்லை சூர்யா. நான் இப்படியே நடந்து போகிறேன். வீடு கிட்டத்தானே..” என்றவளிடம், “இவ்வளவு தூரம் காரில் வந்துவிட்டு இப்போது என்ன..?” என்று கேட்டான் அவன்.

லென்ஸ் வைத்ததுக்கே அக்காவிடம் கேள்வி எழும்பும், இதில் இவனோடு போய் இறங்குவதை அவர்கள் கண்டால் அதுவேறு அடுத்த பிரச்சினை. வீட்டில் மறைக்கும் எண்ணம் இல்லாதபோதும் இப்போதைக்கு வேண்டாம் என்றே அவளுக்குத் தோன்றியது. அவனிடம் இதைச் சொன்னால் மீண்டும் ஒரு வாக்குவாதம் வரும். இருக்கும் நல்ல நிலையை கெடுத்துக்கொள்ள அவள் தயாரில்லை.

அதனால், “இன்று முழுவதுமே காரில் சுத்துகிறேன். நடந்தால் நல்லதுதானே சூர்யா…” என்றவள், அவன் எதிர்பாராத நேரத்தில் தன் பட்டிதழ்களை அவன் கன்னத்தில் அழுத்தமாகப் பதித்தாள்.

வியப்பில் அசந்து நின்றவனிடம், “பை சூர்யா! நாளைக்குப் பார்க்கலாம்…” என்று மலர்ந்த புன்னகையோடு சொன்னவள் காரை விட்டு வேகமாக இறங்கினாள்.

“ஹேய் லட்டூ! என்னைச் சொல்லிவிட்டு நீ இப்படிச் செய்யலாமா…?” என்று, அவள் முத்தத்தை அனுபவித்த ஆனந்தக் குரலில் அவன் கேட்க,

“நான் செய்யலாம். ஆனால் நீங்கள் செய்யக் கூடாது…” என்றாள் அவள் கலகலத்துச் சிரித்தபடி.

அவளின் சிரிப்பில் மலர்ந்த முகத்தோடு, “ராட்சசி! இன்று தப்பிவிட்டாய். நாளை மாட்டுவாய் தானே. அப்போது இருக்கிறது…” என்றான் அவன் உல்லாசக் குரலில்.

“நாளை விஷயத்தை நாளை பார்க்கலாம்! பாய் சூர்யா!” என்றவள் அங்கிருந்து சிட்டாகப் பறந்தாள்.

தொடரும்...
 

Goms

Active member
Super super 🥰 🥰
ஆசை பட்ட படி Driving சேர்ந்தாச்சு, அந்த டச்சு மொழியையும் சீக்கிரம் படித்துவிடு 😍😍
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom