• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 16

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-16


“எவ்வளவு நேரம்தான் இப்படியே அழுவாய் லட்டு. நடந்ததை மாற்றமுடியாது எனும்போது, அதை ஏற்று வாழப் பழக வேண்டாமா…” அழுகையில் குலுங்கும் அவள் முதுகை மென்மையாக வருடிக்கொண்டே சொன்னான் சூர்யா .

சாலையில் இருந்த இருக்கையிலேயே அவன் நெஞ்சில் சாய்ந்து அழத்தொடங்கி விட்டவளை, காருக்குள் கொண்டுவந்து சேர்ப்பதற்குள் அவன் பெரும்பாடு பட்டுவிட்டான்.

அவன் கோபம் கூட மறைந்திருந்தது. அந்தளவுக்கு அழுதுகொண்டிருந்தாள் லட்சனா:அன்று கொழும்பில் ஜெயன் வீட்டில், பெற்றவர்களின் படங்களைப் பார்த்துவிட்டுக் கதறியவள் மீண்டும் கதறுவது இன்றுதான்.

இதுநாள் வரை மனதை அழுத்திக்கொண்டிருந்த வேதனைகளை, வலிகளை, வெறுமையை அவனிடம் வாய்விட்டுச் சொன்னதாலோ என்னவோ, அவள் அழுகை நிற்கமாட்டேன் என்றது.

சூர்யாவுக்கு அவளை எப்படித் தேற்றுவது என்றே தெரியவில்லை.

சுலக்சனாவின் பெற்றோர்களும் அண்ணாவும் இறந்துவிட்டதாகவும், தங்கை மட்டுமே தப்பியதாகவும், மூன்று வருடங்களுக்கு முதல் அவனும் கேள்விப் பட்டான் தான். அன்று ‘அடப் பாவமே’ என்று பரிதாபத்தோடு மறந்துவிட்ட விஷயம், இன்று அது தன் காதலியின் குடும்பம் என்று அறிந்தபோது வேதனையாகத்தான் இருந்தது.

அதுவும் நடந்து மூன்று வருடங்கலானபோதும், இன்றும் அவள் படும் இந்தப் பாட்டைப் பார்க்கையில் மனதைப் பிசைந்தது. ஆனால், அதற்காக அழுதுகொண்டே இருந்தால் நடந்தவை மாறிவிடுமா என்ன?!

“லட்டு, இங்கே பார். முதலில் அழுகையை நிறுத்து.” என்றவனின் பேச்சைக் கேட்காது தொடர்ந்து அழுதவளிடம்; “சொல்வதைக் கேட்கமாட்டாயா!” என்றான் அதட்டலாக.

அவன் அதட்டியத்தில் கன்னங்களில் வழிந்த கண்ணீரோடு, திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அவனைப் பரிதாபமாகப் பார்த்து விழித்தாள். அந்தப் பார்வை மனதைத் தாக்கவே, “ப்ச்! லட்டு, என்ன இது?! கண்ணைத்துடை.” என்றவன், தானே ‘டிஷ்யு’ வினால் அவள் முகத்தைத் துடைத்துவிட்டான்.

“இன்றும் நடந்தது கண்முன்னால் நிற்கிறது சூர்யா. அந்த விபத்து ஏன் நடந்தது? அம்மா, அப்பா, அண்ணா உடல்கள் என்ன ஆனது. அவற்றைப் பார்க்காததாலேயே, அவர்கள் எங்காவது உயிரோடு இருந்துவிட மாட்டார்களா என்று உள்ளம் கிடந்தது தவிக்கிறது. இறந்துவிட்டார்கள் என்று தெரியும். ஆனாலும்...” அதற்கு மேலும் சொல்ல முடியாமல் அவள் கேவ, “இந்தப் பேச்சுப் போதும் லட்டு. அதையே திரும்பத் திரும்பக் கதைத்து உன்னையே நீ வருத்தி என்ன காணப்போகிறாய்..?” என்றான் சூர்யா கண்டிப்பும் கனிவுமாக.

“அவர்களோடு சந்தோசமாக இருந்த நாட்களை, மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்துப்பார். மனதுக்கு ஆறுதலாக இருக்கும். கஷ்டமாக இருந்தாலும், சிலவற்றை மறக்கவும் ஒதுக்கவும் பழகவேண்டும்..” என்று தொடர்ந்து அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினான்.

“ம்ம்..” என்று கேட்டுக்கொண்டவளும் அவன் கைகளுக்குள் புகுந்து, வாகாக அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். மனம் இலகுவாக இருந்தது. இதுவரை சுமந்த சுமைகளை இறக்கி வைத்ததுபோல், மூச்சடைத்துக் கிடந்தவளுக்கு மூச்சுச் சீரானதுபோல் ஒரு உணர்வு.

இருவருமே சற்றுநேரம் அமைதியாக இருந்தார்கள். அவன் கை அவள் முதுகைத் தடவிக்கொடுக்க மட்டும் மறக்கவில்லை.

தன் தோளில் சாய்ந்திருந்தவளின் முகத்தைக் குனிந்து பார்த்தான் சூர்யா. அவன் பார்ப்பதை உணர்ந்து அவளும் அவனைப் பார்க்க, “ஜெயனிடம் நீ நம்மைப் பற்றிச் சொல்லிவிட்டாயா..?” என்று கேட்டான்.

லேசாக முகம் கன்ற இல்லை என்பதாகத் தலையை அசைத்தாள்.

“ஏன்?”

“அது.. ஏனோ சொல்ல முடியவில்லை.”

“அது தப்பில்லையா லட்டு. அவனுக்கு உன்னை நிச்சயித்திருக்கிறார்கள். நீயும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிறாய். அப்படி இருக்கையில் என்னை நீ காதலித்ததே தப்பு. சரி, காதல் தான் நம்மை அறியாமல் வந்துவிட்டது என்றால், அதை நீ உடனடியாக அவனிடம் சொல்லியிருக்க வேண்டாமா? அவனைப் பற்றி எப்படி யோசிக்காமல் இருந்தாய்..?” நேரடியாக எதையும் கதைத்துப் பழகியவன், அவளிடம் நேராகவே கேட்டான்.

அவள் முகமோ அவன் பேச்சில் சுண்டிப்போனது. தான் செய்வது பிழை என்று தெரிந்தாலும், அதை இன்னொருவர் வாயால் அதுவும் சூர்யாவின் வாயால் கேட்கையில் பெரும் பிழையாகத் தோன்றியது.

“அது.. நான் இங்கு வந்த புதிதில் அவர் என்னோடு தொலைபேசியில் கதைக்க முயன்றார். நான் இரண்டு மூன்று தடவைகள் தவிர்த்துவிட்டதில், பிறகு அவரும் கதைப்பதில்லை. அதனால் சொல்லமுடியவில்லை..”

“அவர் கதைக்கவில்லை என்றால் என்ன, நீயாக அழைத்துச் சொல்லியிருக்க வேண்டாமா? இதெல்லாம் ஒரு காரணமா?” என்று அவள் பேச்சை இடைமறித்துக் கதைத்தவனின் குரலில் கண்டனம் இருந்தது.

“எனக்கு.. எனக்கு அவரிடம் சொல்ல ஒருமாதிரி.. தயக்கமாக இருந்தது..” என்றாள் மெல்லிய குரலில்.

“என்ன தயக்கம்? எதுக்குத் தயக்கம்? அவனும் மனிதன் தானே. உன் நிலைமையைச் சொன்னால் புரிந்துகொண்டிருப்பான். அல்லது நீ புரியவைத்திருக்கலாம். இரண்டையும் நீ செய்யவில்லை. அவன் உன்னைத் தன் வருங்கால மனைவியாக நினைத்துக் கொண்டிருப்பான். அப்படியான ஒருவனை நீ ஏமாற்றுவது போல் இருக்கிறது!” என்றவனின் குரலில் கோபம் இருந்ததோ?! தன்னவளை ஒருவன் மனதில் நினைத்திருக்கிறான் என்பது பிடிக்கவில்லையா அல்லது தன் காதலி செய்வது பிழை என்று நினைத்தானா, ஏதோ ஒன்று அவன் குரல் இறுக்கமாக இருந்தது.

“அவர் வந்ததும் சொல்லலாம் என்று நினைத்தேன்..” என்று முணுமுணுத்தாள் லட்சனா.

“அதுவரை..?” அவன் புருவங்கள் சுருங்கக் கேட்க, அவளால் பதில் சொல்ல முடியவில்லை. தலையைக் குனிந்துகொண்டாள்.

“சொல்லு?” அவன் மீண்டும் கேட்க, “என்னால் அவரோடு இலகுவாகவே கதைக்கமுடியவில்லை சூர்யா. அதனால்தான் தொலைபேசியில் கதைப்பதையும் தவிர்த்தேன். நம்மைப்பற்றி அக்கா அத்தானிடம் சொல்லாமல் அவரிடம் சொன்னால், அது எப்படியும் சுற்றிச் சுழன்று எல்லோருக்கும் தெரிய வந்துவிடும். அதோடு எனக்கு.. அவரிடம் எப்படிச் சொல்வது என்று.. அதுவேறு தயக்கம். அதுதான் அவர் வரட்டும் என்று இருக்கிறேன்…” என்று தன்னிலையை அவனுக்கு உணர்த்த முயன்றாள்.

“தயக்கமாக இருக்கிறது, ஒருமாதிரி இருக்கிறது.. இதெல்லாம் என்ன லட்டு. உன் தயக்கத்துக்கு ஒருவனின் மனதைப் பலியாக்காதே!” என்றான் கண்டிப்பான குரலில் கடினமாக.

அந்தக் கடினத்தில் நின்றிருந்த கண்ணீர் மீண்டும் துளிர்த்தது அவள் கண்களில்.

“முதலில் இப்படி எதற்கெடுத்தாலும் அழுவதை நிறுத்து. அடுத்ததாக எல்லாவற்றிற்கும் தயங்குவதை நிறுத்து. எதையும் பிறகு பிறகு என்று தள்ளிப் போடுவது. பிறகு தவறு செய்துவிட்டுக் கண் கலங்குவது. இதெல்லாம் சரியில்லை.” என்று அவள் தவறுகளை அவளுக்குச் சுட்டியவன், “சரி, உனக்குத்தான் சொல்லமுடியவில்லை. அவன் நம்பரைத் தா, நான் சொல்கிறேன் அவனிடம் நம்மைப் பற்றி..” என்றான்.

“இல்லையில்லை… வேண்டாம்…” என்று அதற்கும் அவசரமாக மறுத்தாள் அவள்.

“ஏன் வேண்டாம்..?” இறுகிய குரலில் அவன் கேட்க, “அது… நானே சொல்வதுதான் முறை….” என்று இழுத்தாள் அவள்.

“அப்படியானால் நீ இப்போதே அவனுக்கு அழை. அழைத்துச் சொல் நம்மைப் பற்றி..” அவனும் விடுவதாக இல்லை.

அதுவும் முடியவில்லை அவளால். முதலில் அக்கா அத்தானிடம் சொல்லவேண்டும். பிறகு ஜெயனிடம் சொல்லவேண்டும் என்றுதான் நினைத்திருந்தாள். அதற்கு முதலில் அவள் தன்னைத் தானே தயார் செய்யவேண்டும். இவனோ திடீர் என்று சொல் என்கிறான். அவளால் அது முடியவில்லை.

அதோடு அவள் செய்வது தவறு என்று அவளுக்குமே புரிந்ததில், ஜெயனிடம் நேரடியாகவே சொல்லி மன்னிப்புக் கேட்கவே அவள் மனம் விரும்பியது.

“சூர்யா, ப்ளீஸ் கொஞ்சம் பொறுங்கள். அவசரப் படவேண்டாம். முதலில் அக்காவிடம் சொல்லிவிட்டு, ஜெயனிடம் நேரவே சொல்கிறேனே. அதுதான் முறை சூர்யா..” என்றாள் கெஞ்சலாக.

“ப்ச்! என்ன நீ…” என்று சலித்தவன், “என்னவாவது செய். ஆனால் நீ செய்வது தவறு.” என்றான் அழுத்தமான குரலில். அவள் முகம் அதைக் கேட்டுக் கூம்பியது.

அதற்கு மேல் அதைப்பற்றி அவன் பேசவில்லை. இனி அது அவள் பொறுப்பு என்று நினைத்தவன், காரைக் கிளப்பினான்.

காரைக் கொண்டு சென்று நிறுத்திய இடம், அவன் தாத்தா பாட்டியின் வீடு.

யோசனையில் இருந்தவள் கார் சென்ற பாதையைக் கவனிக்கவில்லை. அவன் நிறுத்தியதுமே, இடத்தை இனங்கண்டு, “அச்சோ சூர்யா. இங்கு எதற்கு வந்தீர்கள்? நான் வேறு அழுது வீங்கிய முகத்தோடு இருக்கிறேன்.. அக்காவுக்கு தெரிந்தால் அதுவேறு பிரச்சினை..” என்று படபடத்தவளிடம், எதுவும் சொல்லாது காரைவிட்டு இறங்கினான் அவன்.

அவள் இருந்த பக்கமாக வந்து, கதவைத் திறந்து, “இறங்கு..” என்றான்.

“என்ன சூர்யா இது..?”

“அழுதாலும் அழகாகத்தான் இருக்கிறாய். உன் அக்காவுக்கு நீ இங்கு வந்தது தெரியவராது. அதனால் இறங்கு..” என்றவன், அவள் கையைப் பிடித்து இறக்கி அவளோடு சேர்ந்தே நடந்தான்.

பெரியவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று சங்கடமாக இருக்க, கையை அவனிடமிருந்து உருவப் பார்த்தாள் அவள்.

அதை உணர்ந்து, “பேசாமல் வா. இல்லையானால் தூக்கிக்கொண்டு போவேன்..” என்றான் அவன். படக்கென்று பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனாள் சனா.

பின்னே, அவன் என்றும் எதையும் பேச்சுக்காகச் சொன்னதே இல்லையே. சொன்னதுபோல் அவளைத் தூக்கிவிட்டான் என்றால் என்ன செய்வது. அதற்கு இப்படிக் கையைப் பிடித்துக்கொண்டு போவது எவ்வளவோ மேல் அல்லவா!

சோபாவில் இலகுவாக அமர்ந்து, சாக்ஸ் பின்னிக்கொண்டிருந்த பாட்டி உள்ளே வந்தவர்களைக் கண்டதும், முதலில் யோசனையாகப் பார்த்தார். பின்னர் முகம் மலர எழுந்து வந்தார்.

“வாம்மா லச்சு.. வாவா. உன்னைக் கூட்டிக்கொண்டு வா என்று இவனிடம் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் தெரியுமா. இன்றுதான் மனம் வந்திருகிறது இவனுக்கு…” என்றவர் மருந்துக்கும் அவன் முகம் பாராது, லட்சனாவை அன்போடு அணைத்துக்கொண்டார்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
தன் வீட்டினர் தன் விருப்பத்துக்கு தடை சொல்லமாட்டார்கள் என்று சூர்யா சொல்லியிருந்தாலும், அந்த வீட்டுக்குள் நுழைகையில் அவளுக்கு நடுக்கமாகத்தான் இருந்தது.

எப்படி வரவேற்பார்களோ, என்ன சொல்வார்களோ என்று நொடிக்குள் பலதைக் கற்பனை பண்ணிக் கலங்கியவள், இப்படியான பாசமான வரவேற்பைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அதைவிட அவளின் அம்மா அப்பா அழைக்கும் பெயரை நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்டதில், அவளுக்கு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கியது.

“ஏன் கண்கள் கலங்குது லச்சும்மா. இந்தப் பாட்டியைப் பார்க்க அவ்வளவு பயமாகவா இருக்கிறது?” என்று அவர் கேட்க, அழுகையும் சிரிப்பும் ஒருங்கே வந்தது அவளுக்கு.

“இல்லை பாட்டி. அம்மா அப்பா இப்படித்தான் என்னைக் கூப்பிடுவார்கள்.. அதுதான்…”தழுதழுத்த குரலில் அவள் சொல்ல, “அதற்கென்ன லச்சும்மா. என்னையும் உன் அம்மாவாக நினைத்துக்கொள். எனக்கும் உன் அம்மா வயதுதான் இருக்கும். அல்லது ஒன்றிரண்டு குறைவாக இருக்கும்..” என்றார் அவர் உண்மை போல.

“ம்கும்.. இந்த நினைப்பு வேறு உங்களுக்கு இருக்கிறதா பாட்டி…” என்ற சூர்யாவின் முகத்திலும் முறுவல்.

“அவன் பேச்சை நம்பாதே லச்சு. எனக்கு வயது குறைவுதான். அவனை விட நான் அழகு என்பதால் அவனுக்குப் பொறாமை..” என்றார் அவர் மீண்டும்.

அதைக் கேட்டவளுக்குச் சிரிப்புப் பீறிட கலகலத்துச் சிரித்தாள். அவர்களுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறது என்பதும், அவரின் பேச்சும் கலங்கியிருந்த அவள் மனதை இலேசாக்க, உற்சாகம் பீறிட்டது. வார்த்தைகளால் வடிக்க முடியாத நிறைவை அந்த வீட்டிற்குள் நுழைந்த நொடியிலிருந்து அனுபவித்தாள்.

அவளின் மலர்ந்த முகத்தை ஆசையோடு பார்த்தவர், “எப்போதும் இப்படியே இரம்மா. அப்போதுதான் என் பேரன் உன்னிடம் மயங்கியே கிடப்பான்…” என்றார் பாட்டி அப்போதும்.

அவரின் பேச்சில் மலர்ந்த முகத்தோடும் கதகதத்த கன்னத்தோடும் அவள் அவனைப் பார்க்க, அவனும் அவளைத்தான் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான். இன்னும் சிவந்தது அவள் முகம்.

“பக்கத்தில் இருக்கும் பேரனோடு ஒரு வார்த்தை கதைக்கவில்லை. இதில் பேரனை மயக்குவதற்கு வழி சொல்லிக் கொடுக்கிறீர்களே, நீங்கள் என் பாட்டியா அல்லது அவளின் பாட்டியா..?” என்று பொய்க் கோபம் காட்டிக் கேட்டான் அவன்.

“இதிலென்ன சந்தேகம் உனக்கு? நான் இனி லச்சுவின் பாட்டிதான். நீ போடா..” என்றார் ஒரேடியாக.

லட்சனாவுக்கோ வியப்பாக இருந்தது. அவன் அவள் காதலனாக இருந்தாலும், கம்பீரமாகவே அவனைப் பார்த்துப் பழகி இருக்கிறாள். அவனிடமும் ஒருவித நிமிர்வு எப்போதுமே இருக்கும். அப்படியானவனை ஒருவர் இப்படிச் சிறுபிள்ளை போல் நடத்துவது, அவளுக்கு அதிசயமாக இருந்தது.

“நீ வாம்மா. அவன் கிடக்கிறான். அவனுக்கு தான் பெரிய இவன் என்று நினைப்பு..” என்றபடி பாட்டி அவளை உள்ளே அழைத்துச் செல்ல, நடந்துகொண்டிருந்தவள் அவனைத் திரும்பிப் பார்த்து, புருவங்களைத் தூக்கி மிதப்பாக ஒரு பார்வை பார்த்தாள். விழிகளோ அவனைப் பார்த்து நகைத்தது.

அதைக் கண்டவனின் முகத்தில் ரசனையுடன் கூடிய புன்னகை தோன்ற, கண்களோ ரகசியச் சிரிப்பில் மின்னியது. அந்தக் கண்களில் இருந்த காந்த சக்தியில் அவனைத் தொடர்ந்து பார்க்க முடியாமல், சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டாள் லட்சனா.

“தாத்தா எங்கே பாட்டி..” அவளோடு எதையெதையோ கதைத்தபடி, பேரீச்சம்பழக் கேக்கை அவளுக்காக வெட்டிக்கொண்டிருந்த பாட்டியிடம் கேட்டாள்.

“அவரா.. என்னையே எப்போதும் பார்த்துச் சலித்துவிட்டதாம். அதுதான் அழகான பெண்களைப் பார்த்து வருகிறேன் என்று வெளியே போய்விட்டார்…” என்றவரிடம், “என்னது..?” என்று அதிர்ந்து விழித்தாள் சனா.

அவளின் பாவனையில் சிரித்துக்கொண்டே, “சும்மா ஒரு நடை நடந்துவிட்டு வருகிறேன் என்று போய்விட்டார் லச்சும்மா.” என்ற பாட்டியை, அவள் விழிகள் அளந்தன.

ஒரு முக்கால் ஜீன்ஸும் கொஞ்சம் பெரிதான ப்ளவுசும் போட்டிருந்தவரை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. இதில் குதிரை வால் கொண்டை வேறு. வெளிநாட்டவர்கள் அப்படித்தான் அணிவார்கள் என்றாலும், நம் நாட்டவர்கள், அதுவும் வயதானவர்கள் இலகுவில் இப்படி மாறமாட்டார்கள். ஆனால் இங்கே.. அவரின் பேச்சு, நடை, உடை என்று எல்லாமே அதிசயமாக இருந்தது அவளுக்கு.

இந்த மாற்றங்கள்தான் சூர்யாவிடமும் தென் படுகிறதோ என்று ஓடிய அவள் சிந்தனையை, “என்னம்மா, என்னைப் பார்த்து முடித்துவிட்டாயா? ஒரு தொண்ணூறு மார்க்ஸ் போடுவாயா?” என்று கேட்டார் அவர்.

“என்னது? மார்க்கா?” என்று மீண்டும் அதிசயித்தவள், “பாட்டி! நீங்கள் மிகவும் பொல்லாதவர்கள்…” என்றாள் மலர்ந்துவிட்ட நகையோடு.

“உடையிலும் பேச்சிலும் என்னம்மா இருக்கிறது? மனம் நல்லதாக இருந்தால் போதும். இங்கு வந்து நிறையக் காலம் ஆகிவிட்டதாலோ என்னவோ எங்களுக்கு இது பழகிவிட்டது…” என்றார் தன் உடையைக் காட்டி.

“உங்களைப் போலத்தான் சூர்யாவும் பாட்டி. எதையும் வெளிப்படையாகவே கதைக்கிறார்..” என்றாள் அவளும் இலகுவான குரலில். ஏனோ அவளுக்கு பாட்டியையும் தாத்தாவையும் நிரம்பவுமே பிடித்திருந்தது. அதுவும் அவரின் வெளிப்படையான பேச்சு மிக மிகப் பிடித்தது.

“ம்ம்.. அவன் மிகவும் நல்ல பிள்ளை லச்சு. உன்னை விரும்புகிறேன் என்று தாத்தாவிடம் சொல்லி இருக்கிறான். அதைக் கேட்டதும் எங்களுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? எங்கே, எந்த வெள்ளைக்காரியைக் கூட்டிக்கொண்டு வருவானோ என்றிருந்தது. இப்போது நிம்மதியாக இருக்கிறோம். நீ வேறு தங்கமான பிள்ளையாக இருக்கிறாய்..” என்றார் அவர் அன்போடு.

“பாட்டி, இப்படி ஐஸ் வைக்காதீர்கள்..” என்றபோதும், அவர் சொன்னதைக் கேட்டு அவளுக்கு சந்தோசமாக இருந்தது.

“எப்படிப் பாட்டி சூர்யா இவ்வளவு நன்றாகத் தமிழ் கதைக்கிறார். என்னைப் போலவே..” அவளின் நெடுநாள் சந்தேகத்தைக் கேட்டாள்.

“எங்களால்தான். இந்த நாட்டு மொழி முக்கியம் என்பதால், பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு முதலில் அதையே முதன்மையாக கற்பிக்கிறார்கள் லச்சு. அதைப் பிழை என்றும் சொல்ல முடியாது. அதனால் அவர்கள் தமிழ் நன்றாக கற்றுக்கொள்ள முடிவதில்லை. எங்கள் வீட்டில் தாத்தா பாட்டி என்று நாங்கள் இருவரும் இருந்தபடியால், நானே அவர்களுக்கு தமிழைக் கட்டாயமாக சொல்லிக்கொடுத்துவிட்டேன். அவர்களுக்கு இப்போதும் எழுத வாசிக்கக் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் நன்றாகக் கதைப்பார்கள். அதுவும் சூர்யா மிக நன்றாகக் கதைப்பான். காரணம், அவன் அவர்களின் வீட்டில் இருப்பதை விட இங்குதான் அதிகம் இருப்பான்.” என்றார் அவர், அவளிடம் தேநீரை நீட்டியபடி.

“உங்களுக்கு எதற்குப் பாட்டி சிரமம். என்னிடம் சொல்லியிருக்க, நானே போட்டிருப்பேனே..” அவர் தேநீர் ஊற்றியதைக் கூட கவனியாமல் மூழ்கிவிட்ட தன்னையே கடிந்தபடி சொன்னாள் அவள்.

“இதில் என்ன இருக்கிறது. எங்கள் வீட்டுக்கு வரப்போகும் மகாலட்சுமி நீ. உனக்குச் செய்யாமல் யாருக்குச் செய்யப் போகிறேன்.” என்றவர், “உங்கள் பிள்ளைகளுக்கும் தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு. அதனால் அவர்களைப் பற்றி நீ யோசிக்காதே…” என்றார் தொடர்ந்து.

அதைக் கேட்டதும் அவள் உள்ளமெல்லாம் புதுவித உணர்வுகளின் ஆரம்பம். அவளுக்கும் அவனுக்குமாய் பிள்ளைகள். அவனைப் போல ஒன்று. அவளைப்போல ஒன்று. அதுவும் அவனைப் போன்று ஒரு குழந்தை, நினைக்கவே நெஞ்சம் இனித்தது. கண்களிலோ அந்தக் காட்சிகளின் கனவு மின்னியது.

கையில் பிடித்திருந்த கப்போடு, கனவு மிதக்கும் விழிகளோடு உலகை மறந்து நின்றவளைப் பார்க்க, பாட்டிக்கும் சந்தோசமாக இருந்தது.

அவருக்கும் வேறு என்ன வேண்டும்? பிள்ளைகளின் நல் வாழ்வைப் பார்த்துவிட்டார். இனிப் பேரப்பிள்ளைகள் வாழ்க்கைதானே அவர்களின் கனவும். அதுவும் அவரின் செல்லப் பேரன் சூர்யாவின் தேர்வு, குடும்பப் பாங்கான பெண்ணாக இருக்கக் கண்டு அவருக்கும் உள்ளம் நிறைந்தது.

இன்னொரு கப்பையும் வெட்டிய கேக் துண்டுகளையும் ஒரு தட்டில் வைத்தவர், அதை அவளிடம் கொடுத்து, “மேலே சூர்யா இருப்பான். அவனுக்கும் கொடுத்து, நீயும் குடி. நான் உன் தாத்தாவுக்கு சாக்ஸ் பின்னவேண்டும்..” என்றவர், இளையவர்களுக்கு இடம் கொடுத்துத் தான் ஒதுங்கினார்.

“சரி பாட்டி..” என்றவள், நெஞ்சில் என்னென்னவோ இனிய கற்பனைகள் ஓட, தேநீர் கப்புக்களோடு சூர்யாவின் அறைக்குச் சென்றாள்.

இரண்டு கைகளாலும் தட்டைப் பிடித்திருந்தவள், கதவைத் தட்டாமல், தட்டத் தோன்றாமல், “சூர்யா..” என்று கூப்பிட்டபடி உள்ளே செல்ல, அங்கே அவன் நின்ற கோலத்தைக் கண்டு, அவள் குரல் உள்ளேயே பதுங்கிக்கொண்டது.

மேல் ஷர்ட் ஐ மட்டும் கழட்டிவிட்டு முகம் கழுவி இருக்கிறான் என்று தெரிந்தது. வெள்ளை உள் பனியன் தண்ணீர் பட்டு நனைந்திருக்க, முகம் துடைத்த துவாயை ஒரு பக்கத் தோளில் போட்டபடி, கப்போர்டைத் திறந்து என்னவோ தேடிக்கொண்டிருந்தான். உருண்டு திரண்ட புஜங்களும், பரந்துவிரிந்த மார்பும் அவளை என்னவோ செய்தது.

அவள் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்து, “ஹேய் லட்டு, வாவா. ஏதாவது குடிக்கலாமே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நான் கீழே வருவதற்குள் நீயே கொண்டு வந்துவிட்டாய்..” என்றான். அவளோ அவனைப் பார்க்க முடியாமல் நிலம் பார்த்தபடி நின்றாள்.

உடலிலும் மனதிலும் இளமையின் தாக்கங்கள் புதிதாக வந்து அவளைப் போட்டுப் புரட்டியெடுத்தன!

அவனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை. “என்ன லட்டு?” என்றபடி அவன் அருகே வர அவளுக்கோ கைகள் நடுங்கியது. அவள் கையில் இருந்த தட்டு ஆடவும், அதை வாங்கி அங்கிருந்த மேசையில் வைத்தவன், அவள் தோள்களைப் பற்றி, “என்ன லட்டு…” என்று மீண்டும் கேட்டான்.

குனிந்த முகம் நிமிராமல் நின்றவளின் முகத்தை, ஒற்றை விரலால் அவன் நிமிர்த்த, அங்கே வெட்கத்தில் சிவந்துவிட்ட கன்னங்களோடு, சிப்பியாய் மூடிக்கொண்ட இமைகள் துடிக்க, உதட்டை மெலிதாகக் கடித்தபடி நின்றவளின் தோற்றம் அவனைக் குறுகுறுக்க வைத்தது.

காரணம் தெரியாதபோதும், அவன் முகத்தில் அவளை எண்ணிக் குறுநகை தோன்றியது. “என்னை நிமிர்ந்து பார் லட்டு. இதென்ன இப்படி வெட்கப் படுகிறாய்…” என்று அவன் அவள் முகத்தை இன்னும் நிமித்த, அவள் பார்வை மின்னலென அவன் தேகத்தைத் தீண்டி விலகியது.

அவளைத் தொடர்ந்து, தானும் தன்னைப் பார்த்தவனுக்கு, இதற்கா இவளுக்கு இந்த வெட்கம் என்று தோன்றினாலும், மனதில் உல்லாசமும் உண்டானது.

அதில் சந்தோசமாக வாய்விட்டு நகைத்தவன், “என்ன லட்டு. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருப்பாய்..” என்றபடி அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom