• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 18

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-18


சூர்யாவின் கையைப் பிடித்து பெற்றவர்களின் அருகே அழைத்துச் சென்றாள் லட்சனா.

“நல்லவர் ஒருவரின் கையில் என்னைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கனவு சூர்யா. இன்று என்னைச் சுற்றியிருக்கும் காற்றோடு காற்றாய்க் கலந்திருக்கும் அவர்களுக்கு, இருக்கும் ஒரே கவலையும் அதுவாகத்தான் இருக்கும். நீங்கள் எனக்குக் கிடைத்துவிட்டதை நினைத்து, என்னைவிட அவர்கள் தான் மிகவும் சந்தோசப்படுவார்கள்.” என்று கண்களில் திரண்ட நீர்ப் படலத்துடன் அவனைப் பார்த்துச் சொன்னவள், இப்போது பெற்றவர்களின் படங்களைப் பார்த்து,

“அம்மா, அப்பா, அண்ணா இவரைப் பாருங்கள். இவர்தான் என் உயிர். உங்களுக்கு இப்போது சந்தோசம் தானே. உங்கள் மகள் நீங்கள் ஆசைப்பட்டது போல் இனிக் காலமெல்லாம் சந்தோசமாக வாழ்வாள்…” என்றாள் நிறைந்த மனதோடு.

மகிழ்ச்சி, சந்தோசம், உற்சாகம் என்று உள்ளமெல்லாம் துள்ளலோடு அவர்களைப் பார்த்துச் சொன்னவளைப் பார்த்தவர்களின் பார்வையில் பரிதாபம் இருந்ததோ? தவிப்பு இருந்ததோ? வேதனை இருந்ததோ?

‘இல்லை மகளே இல்லை! உன் சோதனைக் காலம் இன்னும் முடியவில்லை…’ என்று உரத்துச் சொல்ல முயன்றார்களோ? அல்லது அவர்கள் ஆவியாக நின்று சொன்னது அவள் காதில்தான் விழவில்லையோ?

கண்ணில் கனிவோடு அவளையே பாத்திருந்த சூர்யாவின் தோளில் உரிமையோடு சாய்ந்துகொண்டாள், வரப்போவதை முன்னே அறியும் திறனற்றவள்!

பெற்றவர்களிடம் அவனை அறிமுகப் படுத்தி வைத்ததில், ஏதோ அவர்களே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தது போன்ற நிறைவை உணர்ந்தாள்.

வெளியே போகலாம் என்று அவனை நச்சரித்து அழைத்தவள், அதை மறந்து ஒருவித சுகமான மனநிறைவில் மயங்கி நின்றாள்.

அவளின் நிலையை உணர்ந்துகொண்ட சூர்யா, “உன் பெற்றவர்களிடம் நம்மைப் பற்றிச் சொல்லிவிட்டாய். இனி என்ன லட்டு. வா நாம் ரெஸ்டாரன்ட் போய் இந்தச் சந்தோசத்தைக் கொண்டாடுவோம்..” என்று அவளை அந்தச் சூழலில் இருந்து வெளியே கொண்டுவர முயன்றான் சூர்யா. அதில் அவள் வயிற்றைக் கவனிக்கும் எண்ணமும் கலந்திருந்தது.

“ம்ம்..” என்றவள் அசையவே இல்லை. மோனம் கலையாமல் அப்படியே நின்றாள்.

“இப்போது என்ன, உன்னை நான் தூக்கிப் போகவா..?” என்றவன், குறுஞ்சிரிப்போடு அவளைத் தூக்குவதுபோல் குனிய, அந்தக் கையிலேயே ஒரு தட்டுத் தட்டியவள், “சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என்று காத்திருப்பீர்களே..? வாருங்கள், போகலாம்..” என்றாள் புன்னகையோடு.

ரெஸ்டாரன்ட் ஒன்றில் அவளின் மதிய உணவை முடித்தவர்கள், வெயிலில் எங்கும் வெளியே திரிய முடியாமல் கண்ணில் படும் கடைகளுக்குள் எல்லாம் புகுந்தார்கள்.

அதுவும் ஆண்களுக்கு என்றே பிரத்தியேகமாக உடைகள் விற்கும் கடைக்குள் புகுந்து, தனக்குப் பிடித்த கட்டம் போட்ட டிஷர்ட்களை அவனுக்காக அவள் தெரிவு செய்தபோது, “நான் இப்படியானவை போடுவதில்லை லட்டு.” என்றான் சூர்யா.

“உங்களுக்கு இது நன்றாக இருக்கும் சூர்யா...” என்றாள் லட்சனா, ஆசையோடு அந்த டிஷர்ட்டை தடவியபடி.

“அதற்காக பிடிக்காததை போடமுடியாதே.” என்று அவன் எவ்வளவு சொல்லியும் அவள் தன் பிடியிலேயே நிற்க, ‘எதற்கெடுத்தாலும் பிடிவாதமா..’ என்று தோன்றியது அவனுக்கு.

அதன்பிறகோ எடுத்த ஒவ்வொன்றையும் “போட்டுக் காட்டுங்கள் சூர்யா..” என்றபோது, “எனக்கு என் அளவு தெரியும் லட்டு. இது அளவாக இருக்கும்.” என்றான் அவன்.

அப்போதும், “ஒரு தடவை இதைப் போட்டுக் காட்டுங்களேன்.…” என்று கண்களைச் சுருக்கி, தலையைச் சரித்துக் கெஞ்சி அவள் தன் விருப்பத்தைச் சாதித்துக்கொண்ட போது, அவனுக்குச் சினமாக இருந்தது.

தன் இயல்பை தானே தொலைத்துக்கொண்டிருப்பது போல் ஒரு மாயை அவனிடத்தில்.

ஒருவழியாக அவற்றை வாங்கிக்கொண்டு அவளை அங்கிருந்து அழைத்து வந்தவன், பெண்களுக்கான கடைக்குச் சென்று அவளுக்கு உடைகள் எடுக்கவும் மறக்கவில்லை. ஆனால் அவளைப் போலன்றி, “உனக்குப் பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டே எடுத்துக்கொடுத்தான்.

கைகளைக் கோர்த்தபடி வீதி வீதியாய்ச் சுற்றினார்கள். ஆங்காங்கே வெயிலுக்கு இதமாக குளிர்பானத்தை அருந்திக் கொண்டார்கள்.

சம்மர் காலங்களில், அதைக் கொண்டாடும் முகமாக ஏதாவது ஒரு கலைநிகழ்ச்சியோ அல்லது பாட்டுக் கச்சேரியோ ஜெர்மனியில் அந்தந்த ஊர்களில் பெரும்பாலும் நடந்துகொண்டே இருக்கும்.

ஊரின் ஒதுக்குப் புறமாய் அமைந்திருந்த திறந்தவெளி அரங்கில், நடந்துகொண்டிருந்த கலைநிகழ்ச்சியைக் கண்டுவிட்டு, நடந்து நடந்து கால்கள் வலித்ததில், “அங்கு போய் அமர்வோமா..?” என்று கேட்டாள் சனா.

“வா…” என்று அழைத்துச் சென்றவனுக்கு, அந்த வெயிலும், அங்கிருந்தவர்களின் கைகளில் மிதந்த பியரையும் பார்க்கையில் தானும் அருந்தவேண்டும் போல் பெரும் தாகமே எடுத்தது.

அவள் அருகில் இருக்கையில் அவனால் குடிக்கவும் முடியாது. உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள். ஆசைகளை அடக்கிப் பழக்கம் இல்லாதவனுக்கு, தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருப்பதும் கடினமாகவே இருந்தது.

‘என்ன வாழ்க்கையடா இது..’ என்றிருந்தது அவனுக்கு.

அவளோ அவன் தோளில் சாய்ந்துகொண்டு, அவனின் ஒற்றைக் கையைத் தன் இரண்டு கைகளுக்குள்ளும் அடக்கி, என்னென்னவோ கதைத்தபடி இருந்தாள்.

உலகை மறந்தாள். தன்னைச் சுற்றிக் குழுமியிருந்த மக்களை மறந்தாள். அங்கு ஒலித்துக்கொண்டிருந்த இசையை மறந்தாள்.அவள் நினைவுகளை மொத்தமாக ஆட்சி செய்பவன் அவனாகவே இருந்தான்.

அவனோ அவள் சொல்வதற்கு எல்லாம் கடமைக்காக ஒரு “ம்” கொட்டிக்கொண்டு இருந்தான்.

இரவு எட்டைக் கடந்தபோதும் இருள் கவ்வாமல் பொழுது இருந்ததில், அவளுக்கு வீட்டுக்குப் போகும் எண்ணமே இல்லை.

“போகலாமா..?” என்று அவன் கேட்ட போதெல்லாம், “இன்னும் கொஞ்ச நேரம் சூர்யா…” என்று கெஞ்சிக் கெஞ்சியே, மாலை நன்றாக மங்கும் வரை அவனோடேயே இருந்தாள்.

வீட்டுக்குப் போய் தனியாக இருக்கவேண்டும் என்பதனால் அப்படிக் கேட்கிறாள் என்று புரிந்ததில், அவனாலும் அதை மறுக்க முடியவில்லை. இருந்தாலும் இன்று அம்மாவின் கோபத்துக்கு ஆளாகப் போகிறோம் என்பதும் மிக நன்றாகவே புரிந்தது அவனுக்கு.

தாயிடம் என்ன சொல்வது என்று எவ்வளவு யோசித்தும் அவனால் ஒரு வழியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில் இரவு ஒன்பது மணியை நெருங்கும் நேரம், அவன் அம்மாவே அழைத்து, “இவ்வளவு நேரமாக எங்கே நின்று என்ன செய்கிறாய்..?” என்று கடுமையான குரலில் கேட்டபோது, “இதோம்மா.. வருகிறேன்…” என்று மட்டும் சொல்லி வைத்தான்.

“இதற்கு மேலும் இருக்க முடியாது. வா, போகலாம்..” என்று எழுந்தவன், அவள் பதிலை எதிர்பாராது நடந்தான்.

அவள் வீட்டருகில் காரை அவன் நிறுத்தியபோது, அவன் தோளில் அதுவரை சாய்ந்திருந்தவள், “பாய் சூர்யா. நாளை பார்க்கலாம்…” என்றாள் இறங்க மனமே இல்லாமல்.

“ம்ம்…”அவன் இருந்த மனநிலையில் அது மட்டும்தான் அவனால் சொல்ல முடிந்தது. அவளோ அவனைப் பிரியும் ஏக்கத்தோடு காரை விட்டு இறங்கினாள்.

தானும் இறங்கி, அவளின் பொருட்கள் அடங்கிய பையை டிக்கியிலிருந்து எடுத்துக் கொடுத்தவன், காரைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.

வீட்டின் உள்ளே சென்றவளை மீண்டும் தனிமை தாக்கியது. அவனோடு அவன் வீட்டுக்கே சென்றுவிடமாட்டோமா என்று மனம் ஏங்கியது.

‘ஜெயன் வந்ததும், அவனிடம் சொல்லிவிட்டு முடிந்தவரை விரைவாக திருமணத்தை வைக்கவேண்டும்...’ என்று நினைத்துக்கொண்டவள், உடம்பு கழுவி வீட்டுடையை அணிந்துகொண்டாள்.

அவன் தனக்கு வாங்கித் தந்த உடைகளை வெளியே எடுத்து, ஒவ்வொன்றாக போட்டுப் பார்த்தாள்.

அப்போதுதான் அவன் பையொன்றும் வந்துவிட்டதைக் கவனித்தவள், அதைச் சொல்ல அவனுக்கு அழைத்தாள்.

காரில் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தவன், கைபேசி சிணுங்குவதைக் கண்டு எடுத்துப் பார்த்தான். அங்கே ‘லட்டு’ என்று அது மின்ன, அவன் முகத்தில் இதுவரை தேக்கி வைத்திருந்த எரிச்சல், சினம் அனைத்தும் அப்பட்டமாகத் தெரிந்தது.

“மனிதனை கொஞ்ச நேரமாவது நிம்மதியா இருக்க விடுகிறாளா…” என்று வாய்விட்டே சினந்தவன், கைபேசியை அணைத்து பக்கத்து இருக்கைக்கு தூக்கி எறிந்தான்.

இதை எதுவும் அறியாத அவளோ, ‘வீட்டுக்கு போய்விட்டான் போல. நாளைக்கு கொடுக்கலாம்..’ என்று நினைத்து அதை எடுத்து வைத்தாள்.

மனதில் இனிய பல கற்பனைகளுடன் அந்த இரவு அவளுக்குக் கழிய, அடுத்தநாள் அவனுக்கு வேலை என்பதால், பின் மாலை வரை பெரும் சிரமப்பட்டு நேரத்தைக் கடத்தினாள்.

அப்போதும் பல மெசேஜ்களை அவனுக்கு அனுப்ப மறக்கவில்லை. அவன் வீட்டுக்கு வந்ததும் கைபேசியில் அழைத்து, “ஏன் என் மெசேஜ்களுக்கு பதில் அனுப்பவில்லை..?” என்று கோபத்தோடு கேட்டாள்.

“நீ என்ன ஒரு மெசேஜா அனுப்பினாய். உனக்குப் பதில் போட..” என்றான் அவன் சுள்ளென்று.

“எனக்கு நேரமே போகவில்லை சூர்யா. அதுதான்..” என்றாள் இருந்த சின்னக் கோபமும் நீங்கியவளாக.

“தனியாக இருக்க போரடிக்கிறது. எங்காவது வெளியே போகலாமா…?” என்று ஆர்வத்தோடு அவள் கேட்க,

“இன்று முடியாது.” என்றான் சுருக்கமாக.

“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்று அவள் கெஞ்ச, ‘கெஞ்சியோ கொஞ்சியோ எப்படியாவது தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளப் பார்க்கிறாள்..’ என்று நினைத்துச் சினம் மூண்டதில் அமைதியாகவே நின்றான் அவன்.

“சூர்யா.. இருக்கிறீர்கள் தானே…?” அவனிடமிருந்து பதில் இல்லாமல் போனதில் கேட்டாள்.

“ம்.. இருக்கிறேன்.”

“எனக்கு எல்லோரிடமும் சொல்லி, திருமணம் முடிந்து எப்போது உங்களிடம் வருவேன் என்றிருக்கிறது. ஆனால் ஜெயன் வரும்வரை பொறுக்க வேண்டுமே.. அதுவரை உங்களைத் தினமும் பார்க்காவிட்டால், எனக்குத் தாங்காது சூர்யா.” என்றாள் ஏக்கம் நிறைந்த குரலில்.

அவனுக்கு அதைக் கேட்டுச் சலிப்பாக இருந்தது. ஜெயன் எப்போது வந்து, இவள் எப்போது சொல்லி, அவன் பெற்றோரிடம் கதைத்து, அதன் பிறகு திருமணம் நடந்து என்று நினைக்கவே களைப்பாக இருந்தது.

ஜெயன் வந்ததும் இவள் சொல்வாளா? அடுத்த கேள்வி எழுந்தது. நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து பழகியவனுக்கு, தன்னை யாரோ கயிற்றால் கட்டி வைத்தது போன்று இறுக்கமாக உணர்ந்தான்.

அவள் பேச்சுக்கு பதில் எதுவும் சொல்லாது, “நான் வைக்கிறேன்.” என்றான்.

“இன்று வெளியே போகமாட்டோமா..?” என்று அவள் கேட்க,

“என்ன நீ? கொஞ்சமாவது புரிந்துகொள்ள மாட்டாயா? இன்றும் வந்தால் அம்மா என்ன நினைப்பார்கள்? தினமும் உன்னோடு சுற்ற முடியுமா? எப்போதும் உன்னைப் பற்றி மட்டும்தான் நினைப்பாயா நீ?” என்று சினத்தில் சீறினான் அவன்.

“அம்மாவிடம் எதையாவது சொல்லுங்களேன் சூர்யா. நானும் அப்படித்தானே. இவ்வளவு நாளும் அக்காவிடம் அதை இதைச் சொல்லிவிட்டு உங்களோடு வரவில்லையா?” அவன் கொண்ட சினம் பாதிக்காத குரலில், தன்மையாகச் சொன்னாள் அவள்.

“பொய் சொல்லச் சொல்கிறாயா?” என்றவனின் குரலில் கசப்பு இருந்ததோ?

“நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் அம்மா வீட்டிலா? தாத்தா பாட்டி வீட்டிலா?”
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“இங்கே தாத்தா வீட்டில்..”

“பிறகு என்ன. நீங்கள் என்னோடு வந்தாலும் உங்கள் அம்மாவுக்குத் தெரியவராதே. தாத்தா பாட்டியிடம் சொல்லிவிட்டு வாருங்கள். ப்ளீஸ் சூர்யா.. நிறைய நேரம் வேண்டாம். ஒரு.. ஒரு மணித்தியாலம் என்னோடு இருங்களேன். அதற்குள் உங்கள் அம்மா உங்களைத் தேடமாட்டார்கள்.. ப்ளீஸ்..?”

அவளின் அந்தப் ப்ளீஸில் அவனுக்குச் சிரிப்பும் சினமும் சேர்ந்தே வந்தது. அதோடு மறுக்கவும் முடியவில்லை. அவள் சொன்னது போல் ஒரு மணித்தியாலத்தில் வந்தால் சரிதானே என்று நினைத்தவன், “சரி வை. வருகிறேன்..” என்றான்.

“அப்போ நான் தயாராகிறேன். விரைவாக வாருங்கள். சூர்யா, நேற்று வாங்கிய அந்தப் பச்சை நிற வட்டக் கழுத்து டிஷர்ட் போட்டு வாருங்கள். அது உங்களுக்கு மிக நன்றாக இருந்தது..” என்றாள் உற்சாகக் குரலில்.

அதைக் கேட்டவனின் முகத்திலும் புன்னகை. “சரி..” என்றான் சிரித்துக்கொண்டே.


அவள் வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தான் சூர்யா. நொடிகளே கழிந்திருக்கும், முகம் மலர ஓடிவந்து கதவைத் திறந்தவளைப் பார்த்ததும் அவன் விழிகள் அதிசயத்தைக் கண்டவனைப் போல் மின்னியது.

அவ்வளவு அழகாக இருந்தாள் லட்சனா. அதுவும் நேற்று அவன் வாங்கிக் கொடுத்த கருப்பு ஜீன்ஸ் மற்றும் பச்சையும் வெள்ளையும் கோடுகோடு போட்ட கையில்லாத ப்ளவுஸ் அணிந்திருந்தாள். அதற்கு மேல் மெல்லிய கோர்ட் ஒன்று வரும். வீட்டில் இருக்கிறோம் என்று அதை அணியவில்லை. அதில் அவன் கண்களுக்கு அவள் விருந்தாகிப்போனாள்.

தன் மனத்தைக் கொள்ளை கொண்டபடி நின்றவளைக் கண்டவன், தன்னை மறந்து அவள் இடையில் கையைப் போட்டுத் தன்னோடு இழுத்துக்கொண்டான்.

அவன் கண்களின் பாஷையிலேயே வெட்கியவளை, அவன் செயல் இன்னும் நாணம் கொள்ளச் செய்தது.

“சூர்யா…” அவனை எச்சரிக்க நினைத்தவளின் அழைப்பு, அழைப்பாக இல்லாமல் கிசுகிசுப்பாகவே இருந்தது.

தன் கை வளைவுக்குள் சிக்கிக்கொண்டவளை வீட்டின் உள்ளே தள்ளிக்கொண்டு வந்தவன், “மாயமோகினி போல் மயக்கும் அழகோடு இருந்துகொண்டு என்னைத் தொடாதே என்றால், என்னால் அதைக் கேட்க முடியாது..” என்றவன், ஆசையோடு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனின் நெருங்கிய அணைப்பில் அவள் மேனி சிலிர்த்தது.

“க..தவு தி..றந்திருக்கிறது சூர்யா.” இதைச் சொல்வதற்குள் திணறிவிட்டாள்.

கதவுக்கு முதுகு காட்டி நின்றவனோ, “நீயே மூடிவிடு..” என்றான் இலகுவாக.

எப்படி என்று யோசித்தவள், அவன் தோள் மேலே கையைக் கொண்டுசென்று, எட்டிக் கதவைத் தள்ளிவிட, அது மூடிக்கொண்டது. அவளோ அவனோடு இன்னும் அழுத்தமாகப் போருந்திக்கொண்டாள். இல்லையில்லை, அவன் பொருத்திக்கொண்டான்.

அதில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தவள், கழுத்தில் புதைந்த அவன் உதடுகளை விட, அதன்மேலே புதிதாக பூத்திருந்த மீசையின் உராய்வில் மேனி கூச, துள்ளிக் குதித்துக்கொண்டு விலகினாள்.

அவனுக்கோ கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலை. மோகம் கலையாமல், அவளின் கையைப் பிடித்து மீண்டும் இழுக்க, “சூர்யா, உங்களிடம் என்ன சொல்லியிருக்கிறேன்..” என்றாள் பலமில்லாத குரலில்.

“அதெல்லாம் நினைவில் இல்லை..” என்றபடி அவன் அவளை அணைக்க முற்பட, அதில் அடங்க ஆசை இருந்தாலும், வீட்டின் தனிமையும் அவனின் வேகமும் ஆபத்தில் முடியும் என்பதை, அவள் பெண் மனம் உணர்த்தியது.

“விடுங்கள் சூர்யா…” என்றாள் இப்போது உறுதியான குரலில், அவனிடமிருந்து விலக முயன்றுகொண்டே.

“ப்ச்! சும்மாயிரு லட்டு..” என்றபடி, அவன் அவளை அணைக்க முயல, இப்போது அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் லட்சனா.

அதை எதிர்பாராத சூர்யா சற்றே பின்னகர்ந்து நின்றான். அவன் முகம் இறுகிப்போனது. அவமானப்பட்டதாக உணர்ந்தவன், வேகமாக வெளியே சென்று காரில் ஏறி அமர்ந்துகொண்டான்.

பின்னோடு சென்று தானும் ஏறிக் கொண்டவளுக்கு, அவன் கோபம் புரிந்ததில் அமைதியாகவே இருந்தாள்.

அவள் ஏறிய பிறகும் காரை எடுக்காமல் இருந்தவனைத் திரும்பி அவள் பார்க்க, “எங்கே போவது..?” என்று அவளைப் பாராது, ஒட்டாத குரலில் கேட்டான் சூர்யா.

“எங்காவது. எனக்கு உங்களோடு இருக்கவேண்டும். அது எங்கு என்றாலும் பரவாயில்லை..” என்றாள் அடைத்த குரலில்.

எவ்வளவு சொல்லியும் புரிந்துகொள்ளாமல், இப்படிக் கோபிக்கிறானே என்று வேதனையாக இருந்தது அவளுக்கு.

ஒன்றுமே பேசாமல் காரை எடுத்தவன் ஓடிக்கொண்டே இருந்தான். அவளுக்கும் அவன் அருகாமையில் இருக்கிறோம் என்பதில் மனம் அமைதி கொண்டதில், இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.

இருவருமே கதைக்கவில்லை. அவனும் காரை எங்கும் நிறுத்தவில்லை. சரியாக ஒரு மணித்தியாலத்தில் மீண்டும் அவள் வீட்டில் கொண்டுவந்து நிறுத்தினான்.

அப்போதுதான் திரும்பி நேரத்தைப் பார்த்தவளுக்கு, அதற்குள் ஒரு மணித்தியாலம் கடந்துவிட்டதா என்றுதான் தோன்றியது.

இறங்க மனமின்றி அவள் அமர்ந்திருக்க, அவன் தன் கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான்.

அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், “கோபமா சூர்யா..?” என்று மெல்லக் கேட்டாள். அவனோ எதுவுமே சொல்லவில்லை. தன் பக்கக் கண்ணாடியால் வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.

“சூர்யா…” என்றபடி, அவள் அவன் கையைப் பிடிக்க, “நீ இறங்கினால் தான் நான் போக முடியும்..” என்றான், அப்போதும் அவள் முகம் பாராது.

“ஓ….” அடைத்த தொண்டைக்குள் இருந்து அது மட்டும்தான் வந்தது.

மனமே இல்லாதபோதும், திறப்பதற்காக கார்க் கதவில் அவள் கையை வைக்க, “நாளை நான் வரமாட்டேன்..” என்றான் இப்போது நேராக முகத்தை வைத்து.

திகைத்துப்போனாள் சனா. “ஏ..ன்?” என்று அவள் கேட்க, “நண்பர்களோடு நாளைக்கு கோப்லென்ஸ் போகிறேன்..” என்றான் அவன்.

“அங்கு ஏன்?”

“அங்கே ரைன் நதியில் வைன் பார்ட்டி..”

“ஓ…” எப்போதும் அவனோடு சலசலப்பவளுக்கு இப்போது இதைத்தவிர வேறெதுவும் வரவில்லை.

நாளை அவனைப் பார்க்க முடியாது என்பது வேதனையைக் கொடுத்தது என்றால், அவனின் ஒட்டாத பேச்சும் பாரா முகமும் இன்னும் அவளைப் பாதித்தது.

அவன் பக்கமாகத் திரும்பி, “என்னோடு கதைக்கமாட்டீர்களா..?” என்று ஏக்கம் நிறைந்த குரலில் கேட்டாள்.

“கதைக்காமல் என்ன, கதைத்துக்கொண்டுதானே இருக்கிறேன்..” என்றான் பட்டும் படாமல்.

“ப்ளீஸ் சூர்யா, கோபிக்காதீர்கள். ஏடாகூடமாக ஏதாவது நடந்துவிடுமோ என்று பயந்துதான் அப்போது அப்படிச் செய்தேன்..” என்றாள் சமாதானமாக.

“அப்படி நடந்தால் தான் என்ன? என்ன, உன்னை விட்டுவிட்டு ஓடிவிடுவேன் என்று நினைத்தாயா..? அவ்வளவு நம்பிக்கை இல்லாதவள் எதற்கு என்னைக் காதலிக்கிறாய்?” கோபமாகக் கேட்டான்.

“இப்படியெல்லாம் சொல்லாதீர்கள் சூர்யா..” வேதனையோடு சொன்னவள், தொடர்ந்தாள்.

“நம்பிக்கை இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யலாமா சூர்யா? அல்லது உங்கள் விருப்பத்துக்கு விட்டால்தான் உங்களை நம்புகிறேன் என்று அர்த்தமா?”

“நான் என்ன உன்னைக் கட்டிலுக்கா கூப்பிட்டேன். அழகாய் இருக்கும் காதலியைக் கண்டும் அவளை நெருங்காமல் இருக்க நான் என்ன உணர்சிகள் இல்லாத ஜடமா..? இந்தப் பிரச்சினையே வேண்டாம் என்றுதான், திருமணத்திற்கு வீட்டில் பேசலாம் என்றேன். நீ அதுவும் வேண்டாம் இதுவும் வேண்டாம் என்றால், என்னை என்னதான் செய்யச் சொல்கிறாய்..?” அவர்களுக்குள் கருத்து மோதல் ஆரம்பித்தே இடத்துக்கே மறுபடியும் வந்து நின்றான் அவன்.

ஒரே விஷயத்தை எத்தனை தடவைதான் பேசுவது என்று அவன் கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை. அதோடு அவன் கட்டில் வரை கதைத்ததில் முகம் வேறு கன்றியது. அந்தளவுக்கு எல்லாம் அவளால் வெளிப்படையாக கதைக்க முடியாது. அதற்காக கோபத்தோடு இருப்பவனை விட்டுவிட்டுப் போகவும் முடியவில்லை.

“சரி சூர்யா. நான் செய்தது பிழைதான். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்..” என்றாள் கெஞ்சலாக.

அவன் எதுவும் சொல்லாமல் இருக்க, அவன் கையைப் பிடித்து, “ப்ளீஸ் சூர்யா. கோபிக்காதீர்கள். என்னால் தாங்க முடியாது…” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய. அந்தளவுக்கு அவன் கோபம் அவளைப் பாதித்தது.

சற்று நேரம் அமைதியாக இருந்தவனுக்கு பெருமூச்சொன்று வெளியேறியது. அவளைத் திரும்பிப் பார்த்து, “சரி விடு. நீ அழத்தொடங்காதே…” என்றான், தன்மையான குரலில்.

அந்தளவே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. சிறு விம்மலோடு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

“ப்ச்! அழாதே என்று சொன்னேன்..” என்று அவளைச் சுற்றிக் கையைப் போட்டு, அணைத்துக்கொண்டே சொன்னான் சூர்யா.

“ம்ம்..” என்றபடி கண்களைத் துடைத்தவள், “சூர்யா…” என்று தயங்கி மெல்ல அழைத்தாள்.

“என்ன?”

“அது.. நானும்…” என்று அவள் அப்போதும் இழுக்க, “இழுக்காமல் என்னவென்று சொல்லு…” என்றான் அவன்.

“நானும் நீங்களும் போவோமா ரைன் நதிக்கு?” என்று வேகமாகக் கேட்டாள். அவள் கேட்ட விதத்தில் அவனுக்கு புன்னகை அரும்பியது.

அதில் உற்சாகம் ஆனவள், “எனக்கு உங்களோடு அங்கு வர விருப்பமாக இருக்கிறது சூர்யா…” என்றாள் அவனைப் பார்த்து.

அவனால் மறுக்க முடியவில்லை. ஆனால் பியர் சிகரெட் என்று கொண்டாடும் நண்பர்களோடு அவளையும் கூட்டிக்கொண்டு போகமுடியாதே!

அவர்களைக் கழட்டி விடுவது எப்படி என்றும் தெரியவில்லை. அவர்கள் கூட ‘இப்போதெல்லாம் நீ எங்களோடு நேரம் செலவழிப்பதில்லை’ என்று பலமுறை சொல்லிவிட்டார்கள்.

சிறு குழந்தையைப் போல தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து, அவனை அறியாமலையே சரியென்பதாகத் தலையசைத்தான்.

அதில் மகிழ்ச்சி அடைந்தவள், தன்னை மறந்து, “நன்றி சூர்யா..” என்றபடி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

அந்த முத்தத்தில் விழிகளை இறுக மூடித் திறந்தவனின் உடல் விறைக்க, அதை உணர்ந்தவளுக்கு அப்போதுதான் தான் செய்த செயல் புரிந்தது.

“சாரி சூர்யா..” என்றாள் மனம் குன்ற.

‘என் உணர்வுகளோடு விளையாடுவதே இவள் வேலையா..’ என்று மனம் முரண்ட, அவள் முகம் பாராது, “இறங்கு” என்றான் இறுக்கமான குரலில்.

அவளுக்கும் அவனோடு அதற்கு மேல் கதைக்கத் தயக்கமாக இருக்கவே, எதுவும் சொல்லாது இறங்கினாள்.

போய்வருகிறேன் என்று கூடச் சொல்லாது, காரைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டான் சூர்யா.
 

Goms

Active member
உன் பொறுமையை ரொம்ப சோதிக்கிறாடா இந்த லட்டு..... எங்கே கொண்டு போய் விடப்போகுதோ?🙄
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom