இதயத் துடிப்பாய்க் காதல் - 26

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-26


வீட்டுக்குள் வந்த சனாவைப் பார்த்த சுலோவின் நெற்றி சுருங்கியது. “ஏன் சனா, உன் முகம் ஒரு மாதிரி இருக்கிறது..?” என்று கேட்டவளிடம், சனாவால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

“அது.. அதக்கா தலை வலிக்கிறது. அதுதான்.” என்றாள் தமக்கையின் முகம் பாராது.

“ஏன்.. என்ன ஆச்சு..?” என்று கேட்டவள், அருகே வந்து தங்கையின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.

ஏற்கனவே சூர்யாவால் பலகீனப் பட்டிருந்த மனது, தமக்கையின் செயலால் இன்னும் நெகிழ்ந்தது.

“நெற்றி சுடுகிறதே.. கண்கள் வேறு சிவந்திருகிறது.” என்றபடி, கழுத்திலும் கைவைத்துப் பார்த்துவிட்டு, “நீ முகம் கழுவிக்கொண்டு வா. சூடாக டீ தருகிறேன். குடி. தலைவலிக்கு நன்றாக இருக்கும்.” என்றுவிட்டு, சமையலறைக்குச் சென்றாள் சுலோ.

தன்னறைக்குள் வேகமாகச் சென்ற சனா, கதவை அடைத்துவிட்டு அதிலேயே சாய்ந்து நின்றாள். கண்களில் இருந்து காரணமின்றிக் கண்ணீர் வழிந்தது.

இதுநாள் வரை, என்னை வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கிவிட்டானே என்று தினம் தினம் தவித்திருக்கிறாள். ஒவ்வொரு இரவையும் கண்ணீரில் கழித்திருக்கிறாள்.

இன்றோ, விட்டுப் போனவன் மீண்டும் வந்து நிற்கிறான். ஆனாலும் அவளால் அவனை ஏற்க முடியவில்லை. அவனிடம் சம்மதம் சொல்லி, அவன் கைகளுக்குள் சரண் புகுந்துவிட மாட்டோமா என்று மனம் ஏங்கினாலும், அது எத்தனை நாளைக்கு என்று கேட்டது மூளை!

கடைசிவரையும் இப்படித் தனியாக தவிப்போடு வாழ்வதுதான் என் விதியா என்று விரக்தியோடு எண்ணியவள், வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்று, குளிர் தண்ணீரை முகத்துக்கு நன்றாக அடித்துக் கழுவினாள்.

உடலுக்கு இலகுவான உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவளிடம், டீக்கப்பை நீட்டினாள் சுலோ. “முதலில் இதைக் குடி. பிறகு நெற்றிக்குத் தைலம் தடவி விடுகிறேன்.” என்றாள்.

அதை வாங்கிக்கொண்டு, “சரிக்கா..” என்றபடி, சோபாவுக்குச் செல்ல ஓரடி எடுத்து வைத்த சனா, அங்கிருந்த ஜெயனைக் கண்டதும் தயங்கினாள்.

இவளைப் பார்த்துப் புன்னகைத்தவனிடம், தயக்கத்தோடு சின்னதாகச் சிரித்தவள், அவனருகில் செல்லாமல் பால்கனிக்குச் சென்று நின்றுகொண்டாள். அவனோடு சகஜமாக கதைக்கும் மனநிலை அவளுக்கு அப்போது இருப்பதாகத் தோன்றவில்லை.

வெளியே வீசிக்கொண்டிருந்த குளிர் காற்று, தலைவலிக்கும், அழுததால் எரிந்துகொண்டிருந்த கண்ணுக்கும் இதமாக இருந்தது.

“மெல்லிய குளிர்காற்றும் பனிப்புகாரும் அழகாக இருக்கிறதில்லையா..” அருகில் கேட்ட ஜெயனின் குரலில், திரும்பி பார்த்தாள் சனா.

டீயை உறிஞ்சியபடி நின்றவனின் விழிகள் அவள் முகத்தை ஆராய்ந்தது. அதை உணர்ந்தவள், பனிப்புகாரைப் பார்ப்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“என்ன சனா, என்ன விஷயம்?” என்று கேட்டான் ஜெயன்.

அவனிடம் உண்மையையும் சொல்ல முடியாமல், பொய்யும் சொல்லமுடியாமல், “ஒ.. ஒன்றுமில்லை.. லேசான தலைவலி.” என்று அக்காவிடம் சொன்னதையே அவனிடமும் சொன்னாள்.

“அந்தத் தலைவலி வரக்காரணம் என்ன என்றுதான் கேட்கிறேன்..”

பதில் சொல்ல முடியாமல் அவள் நிற்க, “அழுதாயா..?” என்று கேட்டான் அவன்.

அக்கா கூட கண்டுபிடிக்காததை இவன் எப்படிக் கண்டுபிடித்தான் என்று வியப்போடு அவள் பார்க்க, “அண்ணியைப் பொறுத்தவரை நீ அழுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.” என்றான் ஜெயன்.

அப்படித்தான் இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவள் டீயைப் பருக, “சரி சொல்லு. எதற்கு அழுதாய்..?” என்று விடாமல் கேட்டான்.

“சூர்யாவைப் பார்த்தேன்..” என்றாள் சுருக்கமாக.

“ஓ…”

சற்று நேரம் அவர்களுக்குள் மௌனமே நிலவியது. அவளைத் தாண்டி நடந்து சென்ற ஜெயன், நீள்சதுர வடிவில் இருந்த பால்கனியின் கம்பியில், இவளைப் பார்த்தபடி சாய்ந்து நின்றுகொண்டான்.

“உன்னோடு கதைத்தானா?” மௌனத்தைக் கலைத்தான்.

“ம்..”

“என்ன சொன்னான்?”

பார்வையை எங்கோ பதித்து, “மன்னிப்புக் கேட்டார்..” என்றாள் சனா.

“ஓ..” என்று மீண்டும் இழுத்தவனின் விழிகள் அவளை ஆராய்ந்தது.

“அதற்கு நீ என்ன சொன்னாய்?” என்று, தன் விசாரணையைத் தொடர்ந்தான் அவன்.

“என்ன சொல்லவேண்டும்? எனக்கு வந்த கோபத்திற்கு நன்றாகக் கேட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறேன். மன்னிப்புக் கேட்கிறாராம் மன்னிப்பு! செய்வதை எல்லாம் செய்துவிட்டு, மன்னித்துவிடு என்று வந்து நின்றால், உடனேயே மன்னித்து அவரை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்னை என்னவென்று நினைத்தார்?” என்று அவள் பொரும, அவனோ அவளை வித்தியாசமாகப் பார்த்தான்.

அந்தப் பார்வையின் பொருள் புரியாமல், “என்ன?” என்று வினவினாள் சனா.

“ஒருவர் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டால், அதை ஏற்பது தானே பண்பு..”

“என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? ஒருவர் கொலை செய்துவிட்டு வந்து மன்னிப்புக் கேட்டால், அப்போதும் மன்னித்து விடவேண்டுமா?”

“நீ உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறாய் சனா. கொலையும் இதுவும் ஒன்றல்ல.”

“உண்மைதான்! கொலையும் இதுவும் ஒன்றில்லை தான். அதற்கும் மேலே! ஏனென்றால், இங்கே கொன்றது அவர் என் நம்பிக்கையை! என் மனதை! கொலையுண்டவருக்கு அதன் பிறகு நடக்கும் எதுவும் தெரியாது. அதேபோல நெஞ்சுக்குள் செல்லரிப்பது போன்ற இந்த வலியும் இருக்காது. ஆனால் இங்கே அப்படி இல்லையே.. என் மனம் தினம் தினம் வெந்து சாகிறது. இப்படித் தினமும் சாவதற்கு அன்றே நான் செத்திருக்கலாம். அல்லது சூர்யாவே என்னைக் கொன்றிருக்கலாம்..” என்றவளின் குரல் அடைத்தது. மீண்டும் கண்ணைக் கரித்தது அவளுக்கு.

“இதென்ன பேச்சு.. சாவு அது இது என்று… பைத்தியம் மாதிரிப் பேசாதே! ”
என்று அதட்டினான் ஜெயன்.

“ப்ச்!” என்றாள் விரக்தியாக.

“ஏன் இந்தச் சலிப்பு. நடந்தவைகள் எல்லாம் முடிந்தவைகளாகவே இருக்கட்டும். அதையெல்லாம் மறந்துவிடு. இனி நடக்கவேண்டியதைப் பற்றி மட்டும் யோசி. நல்ல முடிவாக எடு.”

“நீங்கள் சொல்வது போல நடந்தவைகளை மறக்க முடிந்தால் எவ்வளவோ நன்றாகத்தான் இருக்கும். ஆனால் எங்கே முடிகிறது? அவரோடு பழகியதும், அவரை நம்பியதும், கடைசியாக சூர்யா சொன்ன வார்த்தைகளும் தானே திரும்பத் திரும்ப நினைவில் நிற்கிறது..” என்றாள், அவற்றை மறக்கமுடியவில்லையே என்கிற ஆற்றாமையோடு.

தொடர்ந்து, “இதில் திரும்ப வந்து மன்னிப்புக் கேட்கிறாராம் மன்னிப்பு!” என்று உதட்டுக்குள் அவள் முணுமுணுத்தது, ஜெயனின் காதுகளில் மிக நன்றாகவே விழுந்தது.

அவளையே சற்று நேரம் பார்த்துவிட்டு, “அவனாவது தான் செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டான். நீ.. நீ செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்டாயா?” என்று நிதானமாகக் கேட்டான்.

மெல்லிய திகைப்போடு அவனைப் பார்த்தாள் சனா. “நானா? நான் என்ன பிழை செய்தேன்? அவர் மேல் அளவற்ற அன்பை வைத்ததைத் தவறென்கிறீர்களா?”

“அது தவறில்லை. ஆனால் அந்த அன்பின் பெயரால், அவனைக் கட்டுப் படுத்த நினைத்தது தவறு.” என்று அவளுக்குப் புரியவைக்க முயன்றான் ஜெயன்.

“நன்றாக யோசித்துப் பார். ஒருவரை அவரின் குறை நிறைகளோடு ஏற்றுக் கொள்வதுதானே அன்பு. அவன் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவன் என்று உனக்குத் தெரியும் தானே. அப்படி இருந்தும் அவனை நீ மாற்ற முயன்றது தப்பில்லையா? மாற்றம் தானாக நிகழ வேண்டாமா.” என்று அவன் கேட்டபோது, திகைப்போடு ஜெயனைப் பார்த்தாள் சனா.

“முதலில் அப்படி ஒருவரை மாற்ற முடியுமா? நீ அவனை மாற்ற முயன்றாய். அவனும் மாறியது போல் நடித்தான். நடிப்பு எத்தனை நாட்களுக்கு நிலைக்கும்? அதுதான் ஒரு நாள் அந்த நடிப்பு வெடித்துச் சிதறிவிட்டது. இதுதானே நடந்து.” என்று அவன் கேட்டது அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து.

அவள் செய்ததுதான் தவறா? கள்ளமில்லா உள்ளத்தில் வெள்ளமெனப் பாய்ந்த அன்பை அவனுக்கு அள்ளியள்ளிக் கொடுத்தது ஒரு குற்றமா?

“அவன் உன்னிடம் என்ன சொல்லி மன்னிப்புக் கேட்டான் என்று தெரியாது. ஆனால், உணர்ந்து வந்தவனை உதறி, அவன் செய்த அதே பிழையை நீயும் செய்துவிடாதே...” என்றுவிட்டு, அங்கிருந்து நகர்ந்துவிட்டான் ஜெயபாலன்.

ஸ்தம்பித்து நின்றாள் லட்சனா.


அடுத்தநாள் மாலை, டொச் வகுப்பு முடிந்ததும், வகுப்பை விட்டு வெளியே வந்தார்கள் ஜெயனும் லட்சனாவும்.

“இலங்கையிலும் அறிமுக டொச் கோர்ஸ் படித்தேன்தான். அங்கு அவர்கள் சொல்லித்தரும் உச்சரிப்புக்கும், இங்கு கதைக்கும் விதத்துக்கும் நிறைய வித்தியாசம் சனா…” என்றான் ஜெயன்.

“ஆமாம். முதலில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. இப்போது ஓரளவுக்கு..” என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்தவளின் கண்களில், அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த சூர்யா பட்டான்.

அவன் வரமுதல், இங்கிருந்து போய்விடவேண்டும் என்று நினைத்தவள், “இருட்டத் தொடங்கிவிட்டது. வாருங்கள் விரைவாகப் போகலாம்..” என்றபடி, எட்டி நடந்தாள்.

வேகமாக நடப்பவளை வியப்போடு நோக்கி, “பெரிதாக இருட்டவில்லையே.. ஆனாலும் வீடு கிட்டத்தானே..” என்றபடி, அவனும் அவளோடு சேர்ந்துகொள்ள, வேகத்தைக் குறைக்காமலே நடந்தாள் சனா.

அவள் முகத்தில் இருந்த பதற்றம் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. இவளுக்கு என்ன ஆயிற்று. இவ்வளவு நேரமும் நன்றாகத்தானே இருந்தாள் என்று எண்ணியவனின் சிந்தனையை, “லட்டு..” என்கிற அழைப்பு தடை செய்தாலும், யாரோ யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று நினைத்தபடி, நடந்தான்.

ஆனால் சனாவின் வேகமோ இன்னும் கூடியது. “ஏன் இவ்வளவு வேகமாக நடக்கிறாய்..?” என்றவனின் பேச்சை, “லட்டு நில்லு..” என்று சனாவின் கையைப் பிடித்தவனின் பேச்சு நிறுத்தியது.

புருவம் சுருக்கிக் கேள்வியாக ஜெயன் பார்க்க, பிடித்திருந்த சனாவின் கையை விடாமலேயே, மற்றக் கையை முன்னே நீட்டியபடி, “நீங்கள் சிவாண்ணாவின் தம்பி ஜெயபாலன் தானே..” என்று புன்னகையோடு வினவினான் சூர்யா.

அண்ணாவின் பெயரைச் சொன்னதில் உண்டான புன்னகையோடு, தானும் கையை நீட்டி சூர்யாவின் கையைக் குலுக்கியபடி, “ஆமாம். அவர் தம்பிதான். நீங்கள்..?” என்று கேள்வி எழுப்பியவனின் விழிகள், ஜெயனுக்குத் தெரியாமல் உருவ முயன்றுகொண்டிருந்த சனாவின் கையைப் பிடித்திருந்த சூர்யாவின் கையைத் தொட்டு மீண்டது.

அவன் கண்களை நேருக்கு நேர் நோக்கி, அகன்ற புன்னகையோடு, “நான் சூர்யா. சூர்யபிரகாஷ்.” என்றவன், சனாவைப் பிடித்திருந்த கையை எடுத்து, அவள் தோளைச் சுற்றிப் போட்டு, “இவள் என் வருங்கால மனைவி..” என்று, ஜெயனுக்கே சனாவை அறிமுகப் படுத்திவைத்தான்.

சூர்யாவின் பேச்சால் உண்டான பதட்டத்தோடு சனா ஜெயனைப் பார்க்க, “உண்மையாகவா?” என்று, சற்று அதிகமாகவே ஆச்சர்யம் காட்டிக் கேட்டான் ஜெயன். “இதைப் போலவே சனாவும் உங்களை அறிமுகப் படுத்துவாளா..?” என்று கேட்டான் தொடர்ந்து.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“என்னைத் தவிர வேறு யாரையும் அப்படி அறிமுகப் படுத்த மாட்டாள்..” என்றான் சூர்யாவும் உறுதியான குரலில், வற்றாத புன்னகையோடு.

“அவர் சொல்வது உண்மைதானா சனா?” என்று, சனாவைப் பார்த்து ஜெயன் கேட்டபோது, சூர்யாவின் மேல் எவ்வளவு கோபம் இருந்தபோதும், அவனை ஜெயனுக்கு முன்னால் அவமானப் படுத்தவோ, முகம் கன்ற வைக்கவோ முடியவில்லை அவளால். அமைதியாக நின்றாள்.

அதில் முகம் மலர, அவளைப் பார்த்த சூர்யாவின் விழிகளில் நேசம் பொங்கி வழிந்தது. அவள் தோளில் இருந்த கையை விலக்கிக் கொண்டாலும், அவளை விட்டு விலகி நிற்கவில்லை. நெருங்கியே நின்றான்.

“நடந்தா வந்தீர்கள்?” என்று பொதுவாகக் கேட்டாலும், சனாவைப் பார்த்தே கேட்டான் சூர்யா.

“ஆமாம்..” என்றாள் முறைப்போடு. ஜெயனின் முன்னால் தோளில் கையைப் போடுவதும், இப்படி நெருங்கி நிற்பதும் அழகில்லையே. இது புரியவில்லையா இவனுக்கு என்று ஆத்திரம் வந்தது.

அவளின் முறைப்பைச் சட்டை செய்யாமல், “ஜெர்மனி பிடித்திருக்கிறதா உங்களுக்கு?” என்று, சகஜமாக ஜெயனோடு உறவாடத் தொடங்கிவிட்டான் சூர்யா.

“பிடித்திருகிறதுதான். இல்லை என்றில்லை. ஆனால் இந்தக் குளிர்தான்.. சுவாசிக்கும் போது மூக்குத் துவாரம் கூட குளிர்கிறது..” சூர்யாவின் இயல்பை ஆராய முற்பட்டபடியே பதில் சொன்னான் ஜெயன்.

“ஆரம்பத்துக்கு அப்படித்தான். போகப் போக பழகிவிடும். உனக்கும் இதுதான் முதல் வின்டர் இல்லையா லட்டு?” என்று அவளையும் பேச்சுக்குள் இழுத்தான் சூர்யா.

“லட்டு..?” என்று புருவங்களைத் தூக்கினான் ஜெயன்.

சனாவுக்கு முகம் சிவக்க, தலையை குனிந்துகொண்டாள்.

கண்களில் மின்னிய காதலோடு அவளைப் பார்த்தபடி, “இவள் என் லட்டு..” என்ற சூர்யாவின் குரலில் இருந்த கர்வத்தில், ஜெயனுக்குள் ஆச்சர்யம் படர்ந்தது. இவ்வளவு காதலை வைத்துக்கொண்டு, எதற்காக இவன் அவளைப் பிரிந்தான்?

ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்றவனிடம், “நன்றாக இருட்டிவிட்டது. அக்கா தேடப் போகிறார். போவோமா.?” என்று கேட்டாள் சனா. ஏனோ அவளால் சூர்யாவின் அருகில் நிற்கமுடியவில்லை. அதோடு ஜெயனுக்கு முன்னால் அப்படி நிற்பதும் என்னவோ மாதிரி இருந்தது.

“ம்.. போகலாம்..” என்றபடி, ஜெயன் சூர்யாவிடம் விடைபெற முயல, “இரு லட்டு. நான் கொண்டுபோய் விடுகிறேன்..” என்றான் சூர்யா.

“இல்லை வேண்டாம்..” என்றவளின் பேச்சைக் காதில் விழுத்தாது, “எங்களுக்கு ஒரு ஐந்து நிமிடம் தனியாகத் தரமுடியுமா?” என்று ஜெயனிடம் நேரடியாகவே கேட்டான் சூர்யா.

அதைக் கேட்டு மீண்டும் பதறிப்போனாள் சனா. ஜெயன் என்ன நினைப்பான்? என்று அவள் நினைத்து முடிக்க முதலே, “எங்கள் வீட்டுப் பெண்ணை, இன்னொருவரோடு தனியாக அனுப்பமுடியாது. அது அழகல்ல!” என்றான் ஜெயனும் நேராகவே. உள்ளூர சூர்யாவின் தைரியத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

“மறுக்கமுடியாத கருத்து. நானும் அதற்கு உடன் படுகிறேன். ஆனால், ஜெயன்.. நான் உங்களை அப்படிக் கூப்பிடலாமில்லையா?” என்று கேட்டவனிடம், சம்மதமாகத் தலையசைத்தான் ஜெயன்.

“முக்கியமான ஒரு விஷயம் பேசவேண்டும் ஜெயன். அதனால்தான் கேட்கிறேன். அவளின் பாதுகாப்பு என்னுடைய கடமை. நிச்சயம் அதற்கு நான் பொறுப்பு. நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் எங்களுக்குத் தாருங்கள் போதும். என் லட்டுவை உங்கள் வீட்டுப் பெண்ணாகவே ஒப்படைக்கிறேன்...” என்று நயமாகவே கேட்டான். அப்போதும் அவள் தன்னவள் என்பதைச் சுட்டத் தவறவில்லை அவன்!

அவர்களைப் பற்றி அறிந்திருந்த ஜெயனாலும் அதற்கு மேல் மறுக்கமுடியாது போனது. சனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சரி. விரைவாக பேசிவிட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன்..” என்றவன், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான். அவனுக்குத் தன்னை நினைத்தே சிரிப்பாக இருந்தது. ஆனாலும் உள்ளம் அவர்களுக்குள் நல்லதே நடக்கவேண்டும் என்றும் எண்ணிக்கொண்டது.

சூர்யா அனுமதி கேட்டதும், ஜெயன் சம்மதித்ததையும் பார்க்க, சனாவுக்கு தன்னை ஒரு வேடிக்கைப் பொருளாக்கி, அவர்கள் இருவதும் பந்தாடுவது போன்றிருந்தது . அதுவும் சூர்யாவின் மேல் கோபம் கோபமாக வந்தது. ஜெயன் முன்னால் அதைக் காட்ட முடியாமல் பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்றவள், அவனுக்குக் கேட்காத தூரம் வந்ததும், “உங்களுக்கு என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது..?” என்று குரலைத் தனித்து, அவனிடம் சீறினாள்.

அந்த இருளிலும் பளபளத்தது அவன் விழிகள். “அதைச் சொன்னால், நீ இப்போது இருக்கும் நிலைக்கு என்னை உதைப்பாய்...” என்றான் இலகுவான நகையோடு.

ஏன், என் நிலைக்கு என்ன? என்று அவள் சண்டைக்குப் போவதற்கு முதலே, “நான் எப்போது உன் வீட்டுக்கு வரட்டும்?” என்று கேட்டான் சூர்யா.

அதற்கிடையில் அந்தக் கட்டடத்தின் பின்பக்கம் அவர்கள் வந்திருக்கவே, “நீங்கள் எதற்கு எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்?” என்று, அலட்சியமாகக் கேட்டாள் சனா.

அவளை நெருங்கி நின்று, அவள் கன்னங்கள் இரண்டிலும் தன் கையைப் பதித்து, அவளைத் தன் முகம் பார்க்கச் செய்தவன், “எதற்கு என்று தெரியாதா உனக்கு?” என்று, ஆழ்ந்த குரலில் கேட்டான்.

அவன் கைகள் அவள் பட்டுக் கன்னத்துக்கு கொடுத்த கதகதப்பும், அவன் விழிகளில் இருந்த ஈர்ப்பும், அவன் அருகாமை கொடுத்த தடுமாற்றமுமாக தன்னை மறந்து அகன்ற விழிகளால் அவனையே பார்த்தபடி சிலையாகிப் போனாள் சனா.

வெகு நாட்களுக்குப் பிறகு, அவளை அவ்வளவு அருகில் கண்டதாலோ என்னவோ, அவனும் சிலநொடிகள் தன்னை மறந்து நின்றுவிட்டான்.

தலையை உலுக்கி சட்டென்று அந்த மாய வலையிலிருந்து வெளிவந்தவன், “உன்னருகில் வந்தாலே ஆபத்து..” என்றபடி அவளுக்கு முதுகாட்டி நின்றான்.

தடுக்க முயன்றும் முடியாமல், அவள் கன்னங்கள் சிவந்தது. நல்ல காலம் இருள் மறைக்கிறது என்று ஆறுதல் கொண்டாள்.

நெடு மூச்சொன்றை வெளியேற்றியவன், “சும்மா தெரியாதது போல் கதைக்கவேண்டாம் சனா. நம் திருமணம் பற்றிக் கதைக்க எப்போது வரட்டும்?” என்று அவன் அவள் புறம் திரும்பிக் கேட்டபோது, இவளுக்கு பழையவை நினைவில் ஓடியது.

காதலைச் சொன்ன அன்றும் இப்படித்தானே அவளை ஏமாற்றினான். தாத்தாவிடம் சொல்லிவிட்டேன். என் வீட்டில் சம்மதிப்பார்கள் என்று அவன் சொன்னபோது எவ்வளவு கர்வமாக உணர்ந்தாள். பிறகு, தலையில் குண்டைப் போட்டு அந்தக் கர்வத்தை முற்றாக அல்லவா அழித்தான். திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறானே.. எதற்கு? மீண்டும் அவளை நம்பவைத்து மோசம் செய்யவா? இவனாவது பெண் கேட்டு என் வீட்டுக்கு வருவதாவது? எல்லாமே நடிப்பு! அவன் நடிக்கிறான் என்பது கூட அவளுக்கு வலித்தது.

அந்த வலியில் உண்டான கோபத்தோடு, “அன்று ஜெயனுக்கும் எனக்குமான திருமணத்துக்கு வாழ்த்துச் சொன்னீர்கள். இன்று நம் திருமணம் என்கிறீர்கள். நேரத்துக்கு ஒருவனோடு இணை கூட்ட, என்னை என்ன நீங்கள் விளையாடும் பொம்மை என்று நினைத்தீர்களா?” என்று கேட்டாள் கொதிப்போடு.

அதைக் கேட்டவனின் தாடை இறுகியது. பேசும் வார்த்தைகளுக்கு நாம் எஜமானர்.பேசிய வார்த்தைகள் நமக்கு எஜமானர் என்பதை அந்த நொடியில் உணர்ந்தான் சூர்யா.

“அந்தப் பேச்சை விடவே மாட்டாயா..?” என்று கேட்டான் ஆயாசமான குரலில்.

“அப்படி விடக்கூடிய எதையும் அன்று நீங்கள் சொல்லவில்லை!”

“எனக்கும் அது இப்போது தெரிகிறது. அதை மன்னித்து என்னை மணந்துகொள் என்றுதானே கேட்கிறேன்..”

அவன் திரும்பத் திரும்ப மணந்துகொள் என்று கேட்பது அவளுக்கு கோபத்தைக் கிளப்பியது. அன்று அவன் கைப் பிடிப்பதை தவமாய் நினைத்துக் காத்திருந்தவளை அவன் உதறியவிதம் நினைவில் ஆட, “எதற்கு இப்படி மீண்டும் மீண்டும் நடிக்கிறீர்கள்? என்னை ஏமாற்றி நீங்கள் காணப்போவது என்ன?” என்று ஆத்திரத்தோடு பொங்கியவளின் பேச்சு, அவன் பொறுமையைப் பறக்க வைத்தது.

சீற்றத்தோடு அவளை நெருங்கியவன், “என்னடி எப்போது பார்த்தாலும் நடித்தேன் ஏமாற்றினேன் என்கிறாய்? எப்போது நடித்தேன் சொல்? உன்னை எதில் ஏமாற்றினேன்?” என்றான் கிட்டத்தட்ட உறுமலாக.

அந்த உறுமலில், அவன் போட்ட ‘டி’யில் சனாவின் உடல் பயத்தில் நடுங்கியது. சிவரோடு சிவராக ஒன்றியவள், அச்சம் கொண்ட விழிகளால் அவனைப் பார்த்தாள்.

“உன் அன்பை உணராமல் உளறிவிட்டேன் என்றுதானே நானும் சொல்கிறேன். மன்னித்து ஏற்க மாட்டாயா? அந்தளவுக்கு கல்நெஞ்சக் காரியா நீ?” என்றபடி, அவள் தோள்களை அழுத்தமாகப் பற்றியவன், “என் கண்களைப் பார்த்துச் சொல்! என்னை நீ காதலிக்கவில்லை? உன் மனதில் நானில்லை? இல்லை என்று சொல்! திரும்பியும் பாராமல் இப்படியே போகிறேன்.” என்றபடி, அவன் அவளை உலுக்கியபோதும், அவளால் வாயைத் திறக்கமுடியவில்லை.

அவனையே விரிந்த விழிகளால் பார்த்துக்கொண்டு நின்றாள்.

அந்த விழிகளில் எதைக் கண்டானோ.. அச்சத்தில் நடுங்கியவளை இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டவன், அவள் கழுத்து வளைவில் சரணடைந்தான்.

அந்த நேரத்தில் இருவருக்குமே அந்த அணைப்புத் தேவையாக இருந்தது. சற்று நேரத்தில் அவனாகவே அவளை விடுவித்தவன், அதற்கு மேல் அதைப்பற்றி அவளிடம் ஒன்றுமே கதைக்கவில்லை. “வா போகலாம்..” என்று அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

பதுமையாக அவன் பின்னே சென்றவளின் மூளை வேலை நிறுத்தம் செய்துவிட்டிருந்தது.

ஜெயனிடம் சென்று, “எங்களுக்காக காத்திருந்ததற்கு நன்றி ஜெயன். வாருங்கள் போகலாம்..” என்றான் சூர்யா, சனாவின் கையை விடாமலேயே.

சனாவைப் பார்த்தான் ஜெயன். இருளும், அவளின் குனிந்திருந்த தலையும் அவனால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“ம்.. போகலாம்..” என்றபடி அவனும் நடக்க, அவர்களுக்குள் அமைதியே நிலவியது.

காரின் பின் கதவை சூர்யா திறந்துபிடிக்க, ஏறிக்கொண்டாள் சனா. கதவை மூடிவிட்டு, “முன்னால் ஏறுங்கள் ஜெயன்..” என்றபடி, ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமந்துகொண்டான் சூர்யா.

வீடு செல்லும் வரை மூவரும் அமைதியாகவே இருந்தனர். அவர்களின் வீட்டுக்கு முன்னால் காரை நிறுத்திய சூர்யா, “நீ இறங்கு லட்டு.” என்றான் சனாவின் புறம் திரும்பி.

ஜெயனும் சனாவும் கேள்வியாக அவனை ஏறிட்டபோதும், எதுவும் சொல்லாது, சனாவிடமே பார்வையை பதித்து, “கூற்றன் நஹ்ட்!” என்று, இரவு வணக்கம் சொன்னான், தனக்கே உரிய புன்னகையோடு.

“கூற்றன் நஹ்ட்” என்று வாய்க்குள் முணுமுணுத்துவிட்டு, ஜெயனையும் பார்த்துவிட்டு இறங்கிக் கொண்டாள் சனா.
 
Top Bottom