• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 3

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-3

நம் நாட்டில் சாதரணமாக வீடுகளிலேயே வளரும் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அங்கே காண்பது அரிது என்பதால் அவற்றைப் பார்க்க அந்தக் கடையின் முன்னால் மக்கள் கூடியிருந்தார்கள். அப்படிச் சூழ்ந்திருந்த மக்களைப் பார்க்க கோபம் வந்தது சனாவுக்கு. அவர்களால் தானே அவளும் இங்கே என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் கொண்டாள்.

கோழிக்குஞ்சுகளை வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த அந்தக் கடைக்காரனின் மேல் கொலைவெறியே எழுந்தது. இதெல்லாம் ஒரு விஷயம் என்று இப்படி ஒரு கடையைப் போட்டு அவளை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டானே. இது போதாது என்று கடையைக் காட்டுகிறேன் என்று அந்நியன் ஒருவன் அவள் இடையில் கையைப் போட்டபடி நிற்கிறான்.

‘கையை எடுடா…’ என்று கத்தவேண்டும் போல் இருந்தது அவளுக்கு. அப்படிச் செய்தால் அந்த இடத்தில் அசிங்கப்படுவது தான்தான் என்பதால் கோபத்தை அடக்கினாள். மக்கள் நெருக்கியடித்ததில் அவனை உதறிவிட்டு வெளியேறவும் வழியைக் காணோம். உடல் கோபத்தில் நடுங்க அவனை முறைத்தாள். அவனோ வீடியோ எடுப்பதில் தன் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

அதற்கு மேலும் அப்படியே நிற்க முடியாமல், அவனிடமிருந்து விடுபட முயன்றுகொண்டே, “விடுங்கள்…!” என்று கிட்டத்தட்ட அடிக்குரலில் சீறினாள்.

கைபேசியில் இருந்து பார்வையைத் திருப்பி அவளைப் புரியாமல் பார்த்துவிட்டு மறுபடியும் வீடியோ எடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்திய அவன், “எதை விட..?” என்று வெகு சாதாரணமாகக் கேட்டான்.

‘என் இடையை விடுடா...’ என்று சொல்லவா முடியும். விருப்பம் இல்லாதபோதும் இடையில் பதிந்திருந்த அவன் கையைத் தன் கையால் பிடித்து, அகற்றி அவன் எதை விடவேண்டும் என்று செய்கையால் உணர்த்தினாள் அவள்.

அப்போதுதான் உணர்ந்தவனாக, “ஓ.. உன்னை அருகில் இழுப்பதற்காகப் பிடித்தேன்..” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு கையை எடுத்துக்கொண்டான்.

தெரியாமல் செய்துவிட்டேன் என்று அவன் மன்னிப்புக் கேட்காததில் கோபம் இன்னும் ஏறியது. இது போதாது என்று இடையில் இருந்து அவன் கை அகன்றபோதும் அவனோடு ஒட்டிக்கொண்டு நிற்பதைத் தவிர்க்க முடியவில்லை அவளால். அந்தளவுக்கு மக்கள் நெருக்கி அடித்தனர்.

அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல், வெளியே வருவதற்காக முயன்றவளின் கையைப் பற்றிக்கொண்டவன், “பார்த்துமுடித்துவிட்டாய் என்றால் வா போகலாம்.” என்றபடி, பெரும் கஷ்டப்பட்டு அவளோடு அந்த மக்கள் நெருக்கடிக்குள் இருந்து வெளியே வந்தான்.

உடனே அவன் கையில் இருந்த தன் கையைப் பறித்துக்கொண்டு எதுவும் பேசாது நடந்தாள் அவள்.

“லட்சனா, எங்கே போகிறாய்…? வா ஐஸ் குடிக்கலாம். இந்த வெயிலுக்கு நன்றாக இருக்கும்…” என்று அழைத்தான் அவன்.

எல்லோரும் சனா என்று அழைக்க அவன் லட்சனா என்று அழைப்பது கூட அவளுக்கு ஏனோ சினமாக இருந்தது. அப்போதுதான் அவனது பெயர் இன்னும் தனக்குத் தெரியாது என்பது நினைவு வர, நடந்துகொண்டிருந்தவள் நின்று, திரும்பி அவனைப் பார்த்து, “உங்கள் பெயர் என்ன..?” என்று கேட்டாள்.

அவளையே பாத்திருந்தவனின் முகத்தில் மெல்லிய புன்னகை.

“இன்னும் தெரியாதா உனக்கு…?” சின்னச் சிரிப்பினூடே கேட்டான்.

அவனைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக்கொண்டே இல்லை என்பதாகத் தலையை அசைத்தாள்.

முகத்தில் இருந்த புன்னகை மாறாது, “என்னோடு ஐஸ் குடிக்க வந்தாயானால் பெயரைச் சொல்கிறேன்…” என்றான் இலகுவாக.

‘பெயரைக் கேட்டால் பெரிய எடுப்பு எடுக்கிறான் பனங்கொட்டைத் தலையன்!’ ஒரு முறைப்பான பார்வையை அவனிடம் வீசிவிட்டு, “உங்களின் பெயரும் தெரியவேண்டாம். ‘ஐஸ்’உம் வேண்டாம்..” என்றுவிட்டுத் திரும்பி நடந்தாள் அவள்.

அவளின் செய்கைகளைப் பார்க்கையில் அவனுக்குச் சிரிப்பாகவும் ஏதோ ஒரு வகையில் அவனைக் கவர்வதாயும் இருந்தது. எப்போதும் அவனோடு இயல்பாகப் பழகும் பெண்களையே அறிந்திருந்தவனுக்கு, தொட்டதற்கும் சுருங்கும் அவளின் குணம் அவளோடு பழகுவதற்கு அவனைத் தூண்டியது.

வேகமாக நடந்து நான்கு எட்டில் அவளை எட்டி, மீண்டும் அவளின் கையைப் பற்றி, “எதற்காகக் கோபப்படுகிறாய் லட்சனா. சும்மா வேடிக்கைப் பேச்சுத்தானே. இப்போது என்ன என் பெயர் உனக்குத் தெரியவேண்டும். அவ்வளவுதானே…?” என்று கேட்டான்.

முகத்தில் கண்டிப்பைக் காட்டி, “முதலில் என் கையை விடுங்கள்..” என்றாள் அழுத்தமான குரலில்.

“கையைப் பிடிப்பதில் என்ன இருக்கிறது லட்சனா? நாம் ஏற்கனவே அறிமுகமானவர்கள். நண்பர்கள் வேறு. ஓ… நாம் தான் நண்பர்கள் இல்லையே. நீ அப்படித்தானே சைந்துவிடம் சொல்லியிருக்கிறாய். அங்கே திபி நான் பொய் சொல்லிவிட்டேன் என்று என்னோடு கோபமாக இருக்கிறாள். அவளை சமாதானப்படுத்தவே கோழிக்குஞ்சை வீடியோ எடுத்தேன்.” என்றவனின் கை இன்னும் அவள் கையை விடவில்லை.

அவன் சொன்னதைக் கேட்டு முகத்தில் புன்னகை வந்தபோதும், தன்னுடைய கையை விடுவித்துக்கொண்டாள் சனா.

“சாரி. சைந்துவும் நீங்கள் என் நண்பர் என்பதைத் தன்னிடம் சொல்லவில்லை என்று கோபித்தாள். அதுதான் அப்படிச் சொன்னேன்..” என்றாள் இலகு குரலில்.

“அப்படியானால் நாம் நண்பர்கள் தானே…?” முகத்தில் முறுவலோடு அவளின் முகத்தையே பார்த்துக் கேட்டவனிடம், தன் பேச்சால் தானே மாட்டிக்கொண்டதாய் தோன்றியது அவளுக்கு.

எதுவும் சொல்லாது அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“வா, நாம் நண்பர்கள் ஆகிவிட்டதைக் கொண்டாடுவோம்…” அவளின் மௌனத்தைச் சம்மதமாக எடுத்து அழைத்தான் அவன்.

இப்போது ஏனோ மறுக்க முடியவில்லை அவளால். ஆனாலும் தயக்கமாகவும் இருந்தது.

“ஒரு ஐஸ் குடிக்கத்தானே கூப்பிடுகிறேன் லட்சனா. ஏதோ பியர் குடிக்கக் கூப்பிட்டதுபோல் தயங்குகிறாயே…” என்றவனின் குரலில் நகைப்பு நன்றாகவே இருந்தது.

அவள் அவனை முறைக்க, சிரிப்போடு, “வா…” என்று அவளையும் அழைத்துக்கொண்டு நடந்தான்.

“உன்னைப்பற்றி என் பாட்டியிடம் சொன்னேன். அவர்கள் சொல்கிறார்கள் நீ மிகவும் நல்ல பெண்ணாம். இல்லாவிட்டால் பியர் குடிக்கிறாயா என்று நான் கேட்டதற்கு என் கன்னம் பழுத்திருக்குமாம்…” என்றான் நன்றாக மலர்ந்த முறுவலோடு.

அவளின் முகத்திலும் புன்னகை விரிந்தது. போதாததுக்கு மனம் வேறு இலகுவானது. பாட்டியிடம் தன்னைப் பற்றி சொல்லியிருக்கிறான் என்றால், அவன் தவறானவன் அல்ல என்பது தெளிவாகிறது அல்லவா.

“உங்கள் பாட்டியும் உங்களோடுதான் இருக்கிறார்களா..?” ஆர்வத்தோடு கேட்டாள். அவள் அனுபவிக்காத ஒரு சொந்தத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது அவளிடம்.

“ம். பாட்டியும் தாத்தாவும் இங்கேதான் இருக்கிறார்கள். தாத்தா சின்னவயதிலேயே இங்கே வந்துவிட்டாராம். பிறகு பாட்டியும் அம்மாவும் வந்திருக்கிறார்கள். தாத்தாவின் நண்பரின் மகன்தான் அப்பா. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இங்கேயே திருமணம் நடந்திருக்கிறது. பிறகு.. அண்ணாவும் நானும் இங்கேதான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம்..” என்று தன்னைப்பற்றிச் சொன்னான்.

“நான் மட்டுமல்ல எங்கள் வீட்டில் எல்லோருமே மிக நன்றாகத் தமிழ் கதைப்போம். அதற்குக் காரணம் தாத்தாவும் பாட்டியும்தான்…” என்றவனின் குரலில் இப்போது கேலி வந்திருந்தது.

அன்று, நீங்கள் தமிழரா என்று அவள் கேட்டதைக் கேலி செய்கிறான் என்பது புரிந்தது.

“சந்தேகம் என்று வந்துவிட்டால் கேட்கத்தானே வேண்டும்…” என்றாள் அவள் மிடுக்கோடு.

அதற்கிடையில் ஐஸ் விற்கும் கடையடிக்கு வந்திருந்தார்கள்.

இரண்டை வாங்கி, ஒன்றை அவளிடம் நீட்டிவிட்டு, “வா, அங்கே இருக்கும் வாங்கில் அமரலாம்…” என்றான், அங்கிருந்த வாங்கிலைக் காட்டி.

அதில் அவன் அமர்ந்தபிறகு கவனமாக இடைவெளி விட்டு அமர்ந்துகொண்டாள் லட்சனா.

“உங்கள் பெயரை நீங்கள் இன்னும் சொல்லவில்லையே…?” ஐஸ் குடித்துக்கொண்டு கேட்டாள் சனா.

“என் பெயர் என்னவாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்…?”

‘ம்.. பனங்கொட்டைத் தலையன் என்று உனக்கு நான் பெயரே வைத்துவிட்டேன்...’ என்று மனதுக்குள் நினைத்தபோதும், “என்னைக் கேட்டால்..? எனக்கு எப்படித் தெரியும்..?” என்று எதிர்க் கேள்வி கேட்டாள் அவள்.

“என் பெயர்…” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, “சூர்யா…!” என்று அவனை அழைத்தபடி ஓடிவந்தாள் ஒரு பெண்.

அவளைப் பார்த்துப் புன்னகையோடு, ”ஹாய் அலினா…” என்றபடி எழுந்தவன், வந்தவளை அணைத்துக்கொண்டான். அணைப்பு முடிந்து அவர்கள் விலகியபோதும் அவனின் ஒரு கை அவளின் இடையிலேயே தங்கியிருந்தது.

‘இதையே வேலையா வச்சிருக்கிறான் போல!’ முகம் சுருங்கிப்போயிற்று ஜனாவுக்கு.

“இன்று உனக்கு வேலை இல்லையா…?” அலினா கேட்க,

“மதியம்தான் வேலை…” என்றான் அவன்.

அவர்கள் டொச்சில் கதைப்பது இவள் காதிலும் விழுந்தது.

“இவள் யார்..? உன் தோழியா..?”

அலினா தன்னைப்பற்றி அவனிடம் கேட்பது புரிந்தபோதும் முகத்தை அவர்கள் புறம் திருப்பவில்லை அவள்.

“ஆமாம். என் புதுத்தோழி. இன்றுதான் நண்பர்கள் ஆனோம்…” என்றவனின் குரலில் சிரிப்பிருந்தது.

சனாவுக்கோ இவன் ‘நாம் நண்பர்கள் தானா..’ என்று அப்போது கேட்டதற்கு அமைதியாக இருந்தது தப்போ என்று இப்போது தோன்றியது.

“ஓ.. அப்படியா?” என்று கேட்ட அந்த அலினா, சனாவின் அருகே வந்து, “ஹாய்..! நான் அலினா. உன் நண்பனின் பள்ளித்தோழி. உன் பெயர் என்ன..?” என்று நட்போடு கைநீட்டிக் கேட்டாள்.

சட்டென்று அவள் வந்து கதைத்ததில் சற்றுத் தடுமாற்றமாக இருந்தாலும், அதை முகத்தில் காட்டாது தானும் கையை நீட்டிக் கை குலுக்கியபடி,
“என் பெயர் லட்சனா…” என்றாள் அளவான புன்னகையோடு.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“உங்கள் இருவரினதும் நட்பு என்றும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்..” என்றவள் அவளையும் அணைத்துக்கொண்டாள்.

இது என்னடா கொடுமை என்று இருந்தது சனாவுக்கு.

“சரி, எனக்கு வேலைக்கு நேரமாகிறது. நான் வருகிறேன்…” என்றுவிட்டுக் கிளம்பினாள் அலினா.

அவள் சென்றதும், “நேரமாகிவிட்டது. வருகிறேன்..” என்று அவன் முகம் பார்க்காமலேயே சொல்லிவிட்டு நகரத் தொடங்கியவளின் முகத்தைப் பார்த்தான் சூர்யா.

அதிலிருந்த மாற்றத்தைக் கவனித்தவன், “உனக்கு என்னதான் பிரச்சினை லட்சனா..?” என்று நேரடியாகக் கேட்டான்.

அவர்கள் இரண்டு முறைதான் சந்தித்து இருக்கிறார்கள். ஆனாலும், அவளும் தமிழ்ப் பெண் என்பதாலும், அவளின் செய்கைகள் ஏனோ அவனுக்குப் பிடிப்பதாலுமே அவளோடு உரையாடுவதில் ஆர்வம் காட்டினான் அவன்.

அதேபோல அவனோடு கதைப்பதில் அவளுக்கும் ஆர்வம் இருப்பதையும் உணர்ந்திருந்தான். ஆனாலும் நன்றாகக் கதைத்துக் கொண்டிருப்பவள் திடீரென்று முகத்தைத் திருப்புவதும், முறைப்பதும், கோபமாக எதையாவது சொல்வதும் என்று திடீர் திடீரென்று அவளின் இயல்பு மாறுவது ஏன் என்று அவனுக்குப் புரியவே இல்லை. அதை நேராகவே கேட்டான்.

அவளுக்குத்தான் அந்தக் கேள்விக்குப் பதிலைச் சொல்ல முடியவில்லை. “எனக்கு என்ன.. ஒரு பிரச்சினையும் இல்லை…” என்றாள் அவனின் முகம் பாராது.

“என் முகத்தைப் பார்த்துக் கதை லட்சனா. நான் பெயரைச் சொல்லவில்லை என்று கோபமா? என் முழுப்பெயர் சூர்யபிரகாஷ்..” என்றான் சூர்யா. அவனுக்குத் தெரிந்து வேறு எந்தப் பிரச்சினையும் அவர்களுக்குள் இருப்பதாகத் தோன்றவில்லை.

அழகான பெயர் என்று மனதில் தோன்றியபோதும், “உங்கள் மேல் எனக்கொரு கோபமும் இல்லை….” என்றாள் வெளியே.

“பிறகு எதற்கு இவ்வளவு நேரமும் என்னோடு நன்றாகக் கதைத்துக் கொண்டிருந்தவள் இப்போது கிளம்புகிறாய்..?”

“நாள் முழுக்க ஒரு அந்நியரோடு கதைத்துக் கொண்டிருக்க முடியுமா? நான் வீட்டுக்குப் போகவேண்டாமா..?” குரலில் கொஞ்சம் சூடு ஏறியிருந்ததோ அவளுக்கு..

நண்பர்கள் என்று ஆனபிறகும் அந்நியன் என்கிறாள்.

அவளையே சிலநொடிகள் கூர்ந்தான் சூர்யா. அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.

அந்தச் செய்கையே அவள் மனதில் வேறு என்னவோ இருக்கிறது என்பதை உணர்த்த, என்னவென்று புரியாது அவனுடைய வழமையான செயலாக தோள்களைக் குலுக்கினான் சூர்யா.

அதற்கு மேல் எதையும் தூண்டித்துருவவில்லை அவன். அது அவனுக்குப் பழக்கமில்லாத ஒன்றும் கூட.

“உன் மனதில் என்னவோ இருக்கிறது. உனக்கு எப்போது சொல்லத் தோன்றுகிறதோ அப்போது சொல்.” என்றவன், “உன் கைபேசி நம்பரைத் தா....” என்று கேட்டான்.

அவள் கேள்வியாகப் பார்த்தாள்.

“தா….” என்றான் மீண்டும்.

“எதற்கு..?” இப்போது வாயைத் திறந்து கேட்டாள் சனா.

“கைபேசி நம்பரை எதற்கு வாங்குவார்கள். கதைக்கத்தான்!” அவன் குரலிலும் கொஞ்சம் அழுத்தம் வந்திருந்தது.

தயக்கம் இருந்தபோதும், அத்தானுக்குத் தெரிந்தவன் தானே என்று நினைத்து நம்பரைச் சொன்னாள்.

உடனேயே தன் கைபேசியில் இருந்து அவளதுக்கு அழைத்துச் சரி பார்த்துக்கொண்டான் சூர்யா. அவளின் இலக்கத்தை பதிகையில் பெயர் கேட்ட இடத்தில் சுருக்கமாக பதிவதாக நினைத்து லட்சனாவை ‘லட்டு’ என்று பதிந்துகொண்டான்.

“என் இலக்கம் உன்னுடையதில் இருக்கும். பதிந்துகொள்…” என்று அவளிடம் சொன்னவன், “போகலாமா…?” என்று கேட்டான்.

“ம்… நான் வருகிறேன்..” என்றவள் திரும்பி நடக்கத் தொடங்கவும்,

“என்னோடு வா லட்சனா. உன் வீட்டில் இறக்கிவிடுகிறேன்..” என்று அழைத்தான் சூர்யா.

“இல்லை. நான் நடந்தே போகிறேன்…” என்றவளை முறைத்தவன், அவள் புருவங்களைச் சுருக்கிப் பார்க்கவும் பார்வையை திருப்பிக்கொண்டான்.

அவளின் இயல்பைக் கணிக்க முடியாமல் போனதில் உண்டான இயலாமையோடு தலைமுடியை அழுந்தக் கோதிக்கொண்டான் சூர்யா.

“உன்னை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை லட்சனா. என்னோடு காரில் வருவதால் என்ன நடந்துவிடும் என்று நினைக்கிறாய்..? எதற்கு உன்னை அழைத்தாலும் உன் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கிறது. என்னைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரிகிறது?” என்று அவளைப் பார்த்து நிதானமாகக் கேட்டவனின் குரலில் கோபம் இருந்தது.

பதில் சொல்லத் தெரியாது தடுமாறி நின்றவளிடம் ஒரு கோபப் பார்வையை வீசிவிட்டுத் திரும்பி நடந்தான் சூர்யா.

அவனின் கோபம் அவளை என்னவோ செய்தது. நட்போடு பழகிய ஒருவனை தான் அளவுக்கு அதிகமாக ஒதுக்குகிறோமோ என்று தோன்றியது. அவனுடன் பழக விருப்பமாக இருந்தபோதும் அவனின் செய்கைகள் பல அவளை முகம் சுளிக்கவும் வைத்தது.

எது எப்படியானாலும், அவன் கோபமாகப் போவதைத் தாங்க முடியாமல் ஓடிச்சென்று அவனை அடைந்தவள், “நானும் உங்களோடு வருகிறேன்…” என்றாள் மெல்ல.

திரும்பிப் பார்த்து அவளைக் கூர்ந்தவனின் முகம் மலர்ந்தது. அதுவரை வேகமாக நடந்தவன் இப்போது அவளின் நடைக்கு ஏற்ப தன்னுடைய நடையின் வேகத்தைக் குறைத்தான்.

அவனின் காரில் அவனுக்கு அருகில் ஏறி அமர்ந்தவளுக்கு, தானும் டிரைவிங் பழகி தனக்கென்றும் ஒரு கார் வாங்கவேண்டும் என்கிற அவளின் ஆசை இன்னும் வலுத்தது.

“நீங்கள் லைசென்ஸ் எடுத்து எவ்வளவு காலம்..?”

“என் பதினெட்டு வயதிலேயே எடுத்துவிட்டேன். இங்கே எல்லோரும் அப்படித்தானே..” காரில் திறப்பைப் போட்டு கிளப்பிக்கொண்டே சொன்னான்.

“இப்போ உங்களுக்கு இப்போது எத்தனை வயது..?”

“இருபத்தியைந்து முடிந்து இருபத்தியாறு நடக்கிறது. ஏன் கேட்கிறாய்..?”

“இல்லை சும்மா கேட்டேன்…” என்றவள், என்னைவிட மூன்று வயது பெரியவன் என்று நினைத்துக்கொண்டாள்.

“உனக்கு டிரைவிங் பழக விருப்பம் இல்லையா..?”

“விருப்பம் இல்லையாவா..? எப்போதடா பழகுவேன் என்று இருக்கிறது…” என்றவளின் குரலில் அந்த ஏக்கம் நன்றாகவே இருந்தது.

“பிறகு என்ன, பழக வேண்டியதுதானே..?”

“காசு வேண்டாமா..?” என்றாள் வீதியில் பார்வையைப் பதித்து.

வளைவொன்றில் காரை வளைத்தவாறே கேள்வியாக அவளைப் பார்த்தான் அவன்.

“அக்காவும் அத்தானும் என்னை வைத்துப் பார்ப்பதே பெரிய விஷயம். அதற்கு மேலும் அவர்களிடம் எதையும் கேட்க எனக்கு விருப்பமில்லை. கேட்டால் நிச்சயம் செய்வார்கள்தான். நான்தான் கேட்கவில்லை. கபேடேரியாவில் வேலை செய்யும் காசைச் சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். எப்படியும் இன்னும் இரண்டு மாதத்தில் பழக ஆரம்பித்து விடுவேன்.” என்றாள், அவன் பார்வையில் இருந்த கேள்வி புரிந்து.

சில நொடிகள் அமைதியில் கழிந்தது.

“உனக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் எப்போதும் என்னிடம் நீ தயங்காமல் கேட்கவேண்டும்..” என்றான் அவன் உள்ளத்தில் இருந்து.

ஏனோ மனம் நெகிழ்ந்தது அவளுக்கு. அவன் உதவி அவளுக்கு தேவைப்படுகிறதோ இல்லையோ, அது வேறு. ஆனால், இப்படி ஒரு வார்த்தையைச் சொல்வதற்கு அவளுக்கும் ஒருவன் இருக்கிறான். உறவுகளை நாடி அலைந்துகொண்டிருக்கும் அவளின் உள்ளத்துக்கு பெரும் ஆறுதலாக இருந்தது அவனின் வார்த்தைகள்.

“நன்றி…!” என்றாள் குரல் நெகிழ.

‘இதற்கெல்லாமா நன்றி சொல்வாய்...’ என்பதாய் அவளைப் பார்த்தவன், அவளின் வீட்டடியில் தன் காரை நிறுத்தினான்.

அதை அப்போதுதான் உணர்ந்தாள் அவள்.

புன்னகையோடு, “வருகிறேன்…” என்றவள், திறப்பதற்காக காரின் கதவில் கையை வைக்க மற்றக்கையைப் பற்றினான் சூர்யா.

கேள்வியாக அவள் நோக்க, அவன் கைக்குள் அடங்கியிருந்த அவளின் கையை அழுத்தி, “ச்சூஸ்..(பாய்)” என்றான் புன்னகையோடு.

அந்த நிமிடம் காரைவிட்டு இறங்கவே மனமில்லை அவளுக்கு. ஏன், அவனிடம் சிக்கியிருந்த கையை இழுக்கும் எண்ணம் கூட வரவில்லை. ஏனோ தொண்டை அடைத்தது.

நெஞ்சம் தவிக்க, “ம்..” என்றவள் இறங்குவதற்காக கதவைத் திறக்க அவனும் அவளின் கையை விட்டான்.

வீட்டின் வாசல்வரை சென்றவள், அவளையே பார்த்தபடி காருக்குள் இருந்தவனைப் பார்த்துத் தலையை அசைத்துவிட்டு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.

தொடரும்
 

Goms

Active member
அடப்பாவி உண்மையிலேயே லட்டுன்னு பெயர் வச்சிட்டியா??🤩🤩🤩

எந்த பொண்ணுக்கிட்டையும் இடுப்ப பிடிச்சுத்தான் பேச வருமா?🤔🤔

ஏம்மா லட்டு நண்பனா ஏத்துக்கவே இவ்வளவு யோசிக்கிற உனக்கு எதுக்கு அதுக்குள்ள possesiveness??🤗🤗🤗😍😍😍
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom