• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-4

அன்று வெயில் என்றும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இதமான காலநிலையாக இருந்ததில், சைந்துவோடு அருகில் இருந்த பூங்காவிற்கு வந்திருந்தாள் சனா.

பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் இருவரும். சனா எறிந்த பந்தை ஓடிச்சென்று பிடித்த சைந்து, “தாகமாக இருக்கிறது சித்தி. குடிக்க என்ன கொண்டு வந்தீர்கள்…?” என்று மூச்சுவாங்கக் கேட்டாள்.

வியர்த்து நின்ற சின்னவளைப் பார்க்கையில் சிரிப்பு வந்தது சனாவுக்கு.

“மாம்பழ ஜூஸ் இருக்கிறது. வா, தருகிறேன்.” என்றவள், ஜூசை பிளாஸ்டிக் கப்பில் வார்த்துக் கொடுத்தாள். கொண்டுவந்திருந்த ஆப்பிளையும் துண்டங்களாக வெட்டி, அவள் முன்னே வைத்தாள்.

ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை பிராக்குப் பார்த்துக்கொண்டே அதை உண்டவள், தன் தோழியைக் கண்டுவிட்டு, “சித்தி, அங்கே பாருங்கள், செலின் வந்திருக்கிறாள். நானும் போய் அவளோடு விளையாடட்டுமா…?” என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

“சரி. போய் விளையாடு. ஆனால் கவனம்!” என்று அவளை அனுப்பிவைத்துவிட்டு, அந்தப் புல்வெளியிலேயே அமர்ந்து அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சனா.

அப்போது அவளின் கைபேசி சிணுங்கியது.

‘யார்...’ என்று யோசித்துக்கொண்டே எடுத்துப் பார்த்தவள் அதைப் பார்த்தபடியே இருந்தாள்.

அழைத்தது சூர்யா!

தன்னுடைய இலக்கத்தை பதிந்துகொள் என்று அவன் அன்று சொல்லியும் அவள் பதிந்து கொள்ளவில்லை. ஆனால் அவளின் நெஞ்சம் என்னும் பெட்டகத்தில் அவளை அறியாமலேயே பதிந்துபோனது!

அன்றைக்கு சந்தையில் சந்தித்த பிறகு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அவர்கள் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. இந்த இரண்டு கிழமைகளில் இதோடு அவன் இரண்டாவது முறையாக அழைக்கிறான். அன்றும் அவனின் அழைப்பை அவள் எடுக்கவில்லை. இன்றும் எடுக்கவில்லை. ஏனோ அவனோடு கதைப்பதைத் தவிர்க்கச்சொன்னது மனது. அவனைத் தவிர்த்ததனாலேயே கிடந்தது தவித்தது அதே மனது.

அவனைப் பார்ப்பதற்கும், அவனோடு கதைப்பதற்கும் ஆவலாக அல்ல பேராவலாக இருந்தாள். அப்படியிருந்தும் அவனைத் தவிர்த்தாள்.

ஏதேதோ சிந்தனைகளுடன் அடித்து ஓய்ந்த கைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தவளை சைந்தவி அழைத்தாள்.

“சித்தி, செலின் வீட்டுக்குப் போகப் போகிறாளாம். நாமும் போகலாமா..? இன்று டோராவின் பயணங்கள் பார்க்கவேண்டும்.”

மனதின் எண்ணப்போக்குகளை ஒதுக்கி, “சரி, வா போகலாம்…” என்றபடி எழுந்து, சைந்தவியோடு வீட்டுக்கு நடந்தாள்.

அந்தச் சாலையின் ஓரமாக, பாதசாரிகளுக்கு என்று அமைக்கப்பட்ட தனிப்பாதையில் சைந்தவி தன்னுடைய குட்டிச் சைக்கிளில் முன்னால் செல்ல இவள் நடந்து சென்று கொண்டிருந்தாள். வீதியில் போகும் வாகனங்களை பார்வையிட்டபடி வந்தவளை ஒரு சில்வர் நிறக் கார் ஈர்த்தது.

இதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று எண்ணம் ஓடும்போதே, அவளின் அருகே வந்ததும் வேகம் குறைந்து பின் மீண்டும் வேகமெடுத்த காரை இனங்கண்டு, அதற்குள்ளே இருப்பவனை மெல்லிய அதிர்வோடு பார்த்தாள் சனா.

அவனோ அவளையும் அவளின் கையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு காரை ஓட்டிச் சென்றுவிட்டான்.

‘என்னைக் கண்டுவிட்டும் கதைக்காமல் போகிறானே.’ ஏங்கிப்போனாள் அவள்.

எதற்காக என் கையைப் பார்த்தான் என்று நினைத்தபடி கையைப் பார்க்க, கைபேசி அவளைப் பார்த்துச் சிரித்தது.

கையில் கைபேசி இருந்தும் அவன் அழைத்தபோது அவள் கதைக்கவில்லை என்பதை, அவளுக்கே சுட்டிக் காட்டத்தான் அந்தப் பார்வை பார்த்திருக்கிறான்.
இனி என்னோடு கதைக்கமாட்டானோ என்று உள்ளம் துடிக்க, அவன் கார் சென்ற பாதையையே பார்த்துக்கொண்டு நின்றாள் சனா.

“சித்தி.. யாரைப் பார்க்கிறீர்கள்?” சற்று முன்னால் சென்றுவிட்ட சைந்தவி குரல் கொடுத்தாள்.

அதற்குப் பதிலைச் சொல்லாமல், “இதோ வருகிறேன்…” என்றபடி அவளிடம் விரைந்தாள்.

அவன் அழைத்தபோது எடுத்துக் கதைத்திருக்கலாமோ? அவனைப் பார்க்காதவரை அவனைத் தவிர்க்க முடிந்தவளுக்கு இப்போது முடியவில்லை.

அவள்தான் முதலில் அவனைத் தவிர்த்தாள். இப்போது அவன் காட்டிச் சென்ற புறக்கணிப்பை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்தளவுக்கு வலித்தது. கலங்கிவிட்ட கண்களை இமைகளைக் கொட்டிச் சரிசெய்தாள்.

உடலும் மனமும் சோர வீட்டுக்குள் நுழைந்தவளிடம், “ஹேய் சனா, ஜெயனும் விரைவில் இங்கே வந்துவிடுவான்.” என்றார் சிவபாலன் உற்சாகமாக.

யார் ஜெயன்? என்பதாக அவரைப் பார்த்தாள் சனா.

“என்ன பார்க்கிறாய்? ஜெயன் இங்கே வரப்போகிறானாம்…” என்றார் அவர் மீண்டும்.

நிஜம் புரிய முகம் கன்றியது அவளுக்கு. பின்னே, இன்று அவள் உயிருடன் இருக்கிறாள் என்றால் அதற்கு அவனும் ஒரு காரணம் அல்லவா! அப்படியானவனை மறக்கலாமா அவள்?

“உண்மையாகவா அக்கா…?” முகத்தில் பொய்யான மலர்ச்சியைக் காட்டிக் கேட்பதற்குள் பெரும்பாடு பட்டுப்போனாள்.

“ஆமாம் சனா. விசாவுக்கு கொடுத்துவிட்டானாம். எப்படியும் இரண்டொரு மாதத்தில் வந்துவிடுவான்…” என்றவளின் முகத்திலும் மகிழ்ச்சியே!

அக்காவின் மகிழ்ச்சிக்கான காரணம் புரிய தலையை வலிப்பதுபோல் இருந்தது சனாவுக்கு.

“அதென்ன, நான் சொன்னதை நம்பாமல் உன் அக்காவிடம் கேட்கிறாய்…?” என்று அவளைச் சீண்டினார் சிவபாலன்.

“உங்கள் மீது அவ்வளவு நம்பிக்கை அத்தான். அதுதான்…” தன் திணறலைச் சரி செய்யக் கேலி பேசிச் சமாளித்தாள் சனா.

பிறகு, “மாமாவும் மாமியும் அங்கே தனியே இருக்கப்போகிறார்களா அத்தான்?” என்று, அவரின் பெற்றோர்களைப் பற்றிய உண்மையான அக்கறையோடு கேட்டாள்.

“அவன் வந்தபிறகு கொஞ்ச நாட்களுக்கு அவர்கள் தனியாகத்தான் இருக்கவேண்டும் சனா. வீட்டோடு தங்கி அவர்களுக்கு உதவியாக இருப்பதற்கு வேலைக்கு யாரையாவது அமர்த்தச் சொல்லி ஜெயனிடம் சொல்லியிருக்கிறேன். அவன் வந்தபிறகு அவர்களையும் இங்கேயே அழைத்துக் கொள்ளலாம். பிறகு என்ன.. நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக சந்தோசமாக இருக்கலாம்…” என்றவரின் முகத்தில், எல்லாமே நன்றாக அமையப்போகிறது என்கிற மகிழ்ச்சி தவழ்ந்தது.

ஜெயன், சிவபாலனின் தம்பி ஜெயபாலன். கொழும்பில் பெற்றோருடன் இருக்கிறான்.

பெற்றோரையும் அண்ணாவையும் இழந்துவிட்டு, உடனடியாக அக்காவிடம் வரவும் முடியாமல் தனியே இருக்கவும் முடியாமல் தவித்தவளை, அன்போடு தங்கள் வீட்டிலேயே இரண்டரை வருடங்கள் வைத்துப் பார்த்துக்கொண்டவர்கள் சிவபாலனின் பெற்றோர்.

முற்றிலுமாக உடைந்து தன்னையே உணரமுடியாது பித்துப் பிடித்தவளைப் போல் இருந்தவளை நட்போடு தேற்றியது ஜெயன்! அங்கே கொழும்பில் இருந்த காலத்தில் அவன் அவளின் நண்பன் மட்டுமல்ல நல்ல நலன்விரும்பியும் கூட!

அவனின் நட்புக் கிடைக்காது இருந்திருக்க இன்று அவள் என்ன ஆகியிருப்பாளோ.. வாழ்வின் இறுதிவரை நன்றியோடு நினைக்கவேண்டிய ஒருவனை சில நொடிகள் என்றாலும் மறந்துவிட்டாளே! அதற்குக் காரணம்….?

‘சூர்யா..!’ என்றது அவள் மனம்.

சூர்யா கதைக்காமல் சென்றுவிட்டானே என்கிற வேதனை ஒருபக்கம் ஜெயனை மறந்தோமே என்கிற குற்றவுணர்ச்சி மறுபக்கம் என்று மருகியபடி கிடந்தவளின் அறைக்கதவைத் தட்டினாள் சுலோ.

“கதவை தட்டுவதை விட்டுவிட்டு உள்ளே வாங்கக்கா…” தன்னை ஓரளவுக்குச் சமாளித்துத் தமக்கையை அழைத்தாள்.

சிவபாலன் இதுவரை அவளின் அறைக்குள் வந்ததே இல்லை. சைந்தவியோ தகப்பன் வந்துவிட்டால் மற்றவர்களை மறந்தே விடுவாள். ஆக வந்தது அக்காதான் என்பதை அறிந்து குரல் கொடுத்தாள்.

“உன் நித்திரையைக் கெடுத்துவிட்டேனா சனா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் சுலோ.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“இல்லைக்கா. இன்னும் நித்திரை வரவில்லை. ‘லாப்டப்’ பை நோண்டிக்கொண்டு இருந்தேன்…” என்றாள் தமக்கையைப் பார்த்துப் புன்னகைத்து.

அவள் சொன்னதற்கு சாட்சியாக கட்டிலில் லாப்டப் திறந்தபடி கிடந்தது.

அதைப் பார்த்துவிட்டு, “கவிதாக்காவின் மகளுக்கு பத்தாவது பிறந்தநாளை அவர்கள் பெரிதாகக் கொண்டாடுகிறார்களாம். இன்று வந்து அழைத்தார்கள். பிறந்தநாள் விழா வருகிற சனிக்கிழமை. அதற்காக உடைகள் வாங்க நாளைக்கு டோர்ட்முண்ட்(ஒரு ஊரின் பெயர்) போகலாம் என்று உன் அத்தான் சொன்னார். நாளைக்கு நீ வேலை முடிந்து வரும்போது சைந்தவியையும் பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டு வந்துவிடு. எல்லோரும் மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்பச் சரியாக இருக்கும்…” என்றாள் சுலோ.

“சரிக்கா. சைந்துவைக் கூட்டிவருகிறேன். ஆனால் நானும் டோர்ட்முண்ட் வரவேண்டுமா..? நீங்களே எனக்கும் எதையாவது வாங்கி வாருங்களேன்…” என்ற தங்கையையே பார்த்தாள் சுலக்சனா.

“நீ வராமல்? இங்கே இருந்து என்ன செய்யப் போகிறாய். நாம் எல்லோரும்தான் போகிறோம்..” மெல்லிய கோபம் இருந்தது அவள் குரலில்.

“இல்லைக்கா.. நீங்களே எனக்கும்…” என்று இழுத்தவளை சுலோவின் பேச்சு இடைமறித்தது.

“ஏன் சனா, எதற்காக எங்களை இப்படித் தவிர்க்கிறாய்? உன்னை நாங்கள் என்றாவது பிரித்துப் பார்த்திருக்கிறோமா? அல்லது குறை ஏதும் விட்டிருக்கிறோமா? நீயும் எங்கள் குடும்பத்தில் ஒருத்திதான்!” என்றவளின் குரலில் இப்போது கவலை இருந்தது.

“ஏனக்கா இப்படியெல்லாம் சொல்கிறீர்கள்? அம்மாவும் அப்பாவும் இல்லாத குறை தெரியாமல் நான் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நீங்கள் தான். இப்படி எல்லாம் கதைக்காதீர்கள்…” என்றவளின் குரல் தழுதழுக்க, விழிகளோ கோர்த்துவிட்ட கண்ணீரோடு அங்கே படமாகத் தொங்கிய பெற்றவர்களைப் பார்த்தது.

தங்கையின் பார்வையைப் பின்தொடர்ந்த சுலக்சனாவின் கண்களும் கலங்கிப்போயிற்று. மெல்ல நடந்து தங்கையின் அருகில் வந்து அவளின் கன்னங்களைத் தன் கைகளில் தாங்கினாள்.

“பின்னே எதற்காக நீ எங்களிடம் இருந்து ஒதுங்கியே இருக்கிறாய்…? அத்தானோ அல்லது நானோ உன்னோடு பாசமாக இல்லையா…?” என்று கேட்டாள்.

“அப்படி எதுவுமே இல்லைக்கா. நீங்கள் என் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.” என்றவள் மெல்லிய விசும்பலோடு தமக்கையின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

அவளை அன்போடு அரவணைக்கும் அவர்களிடம் அவளால்தான் முழுமையாக ஒட்டமுடியவில்லை என்பதைச் சொல்ல முடியாமல் அவள் முதுகு அழுகையில் குலுங்கியது.

தன் மேல் சாய்ந்து அழும் தங்கையின் முதுகைத் தடவிக்கொடுத்தாள் சுலோ. மனம் குழம்பிக் கிடந்த அந்த நேரத்தில் தமக்கையின் அணைப்புத் தேவையாக இருந்தது சனாவுக்கு.

“அழாதே சனா. எப்போது பார்த்தாலும் நீ அறைக்குள்ளேயே முடங்கவும், எனக்கு.. நான் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வதில்லையோ என்று சந்தேகம் வந்துவிட்டது. அதுதான் கேட்டேன்.” என்றாள் ஆறுதலாக. கைகளோ கண்ணீரில் நனைந்திருந்த தங்கையின் முகத்தைப் பாசத்தோடு துடைத்துவிட்டது.

அதுவரை ஏதேதோ எண்ணங்களில் தவித்துக்கொண்டிருந்த சனாவின் மனதுக்கு, தமக்கையின் பாசம் பெரும் ஆறுதலாய் இருந்ததில், தானும் கண்களைத் துடைத்துக்கொண்டு, தமக்கையைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“சரிம்மா, நீ தூங்கு. காலையில் வேலைக்குப் போகவேண்டும்.” என்ற சுலோ, அவளின் அறையை விட்டு வெளியேறினாள்.


அடுத்த நாள் வேலை முடிந்து சைந்தவியைப் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வருவதற்காகச் சென்றுகொண்டிருந்தாள் சனா.

இரவு தமக்கையோடு கதைத்ததில் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்த பரிதவிப்பு விடிந்ததும் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டிருந்தது. அதை நிரந்தரமாக விரட்டியடிக்க முடியாத சோர்வோடு நடந்தவளின் கால்கள் ஓரிடத்தில் அப்படியே நின்றுவிட்டது.

காரணம், அங்கே எதிர்புறத்தில் இருந்த வீட்டின் வாசலில், மோட்டார் வண்டியில் அமர்ந்தபடி, ஒரு முதிய பெண்மணியோடு என்னவோ கதைத்துச் சிரித்துக்கொண்டிருந்தான் சூர்யா. அவனின் முகம் நிறைந்த சிரிப்பு அவளின் நெஞ்சை அப்படியே அள்ளியது.

ஏங்கித் தவித்த மனதுக்குப் பெருமருந்தாய் அமைந்தது அவனின் தரிசனம். அவனையே விழியகலாது பார்த்தவளுக்கு, இதுவரை இருந்த சோர்வு போன இடம் தெரியவில்லை. அவளின் உற்சாகம் எங்கே இருக்கிறது என்பது புரிவது போலும் இருந்தது.

அந்தப் பெண்மணியிடம் சூர்யா என்னவோ சொல்லவும் அவர் அவனின் முதுகில் அடியொன்றைப் போட்டார். அவனோ பெரிதாக வலித்துவிட்டதுபோல் நடித்தான். அவனைப் பார்த்து முறைத்தவரின் விழிகளில் கோபம் மருந்துக்கும் இல்லை. அதில் அப்பட்டமாகத் தெரிந்த பாசமும், முகம் முழுவதும் நிறைந்திருந்த சிரிப்பும் அவளுக்கு ஏனோ அவளின் அண்ணனை நினைவுபடுத்தியது. அந்தளவுக்கு உயிர்ப்போடு இருந்தது அந்தக் காட்சி!

இனியவனும் இப்படித்தான். அவள் ஏதாவது தவறு செய்தால் அவளின் காதைப் பிடித்து வலிக்காது திருகுவான். அவளோ காதையே பிடுங்கியதைப்போல் நடித்துக் கத்துவாள். அதை நம்பும் இனியவன் துடித்துப்போய் தங்கையிடம் காதைத் திருகியதற்கு பலமுறை மன்னிப்புக் கேட்பான்.

நினைவுகளின் சுழலில் சிக்கியவளின் விழிகளில் கண்ணீர் திரண்டது. அவளோடு விளையாட, செல்லமாய்த் திட்ட, தவிக்கும் நேரத்தில் தாவியணைக்க அவளுக்கென்று ஒருவர் இல்லையே!

ஆசையும் ஏக்கமும் மனதில் தோன்ற தன்னை மறந்து அவர்களையே பாத்திருந்தாள் சனா. திடீரென்று கேட்ட மோட்டார் வண்டியின் உறுமல் அவளை திடுக்கிடச் செய்ய, அங்கே சூர்யா அவரிடம் கையசைத்து விடைபெறுவது தெரிந்தது.

அவன் தன்னைக் கண்டுவிடப்போகிறானே என்று எண்ணி அந்த இடத்திலிருந்து வேகமாக நடந்தாள். நெருங்கிய மோட்டார் வண்டியின் சத்தம், அவள் நடக்கும் பக்கமாகவே அவனும் வருவதைச் சொல்ல நெஞ்சு மீண்டும் தடதடக்கத் தொடங்கியது.

‘திரும்பிப் பார்க்காதே… பார்க்காதே..’ என்று சொல்லிய மனதின் கூற்றைக் கேட்காமல் அவளின் தலை தானாகவே திரும்பிப் பார்த்தது. அவனும் அவளைக் கண்டுவிட்டான். அதற்கு மேல் அவளால் நடக்கமுடியவில்லை. நிலத்தில் வேரோடிவிட்ட கால்களை அசைக்க முடியாது அவனையே பார்த்தபடி நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள்.

இப்போது, பார்வையை நேராக வீதியில் பதித்தபடி வண்டியில் வந்துகொண்டிருந்தான் சூர்யா. அவளைக் கண்டும் காணாததுபோல் செல்லப் போகிறான் என்பதை உணர்ந்த அந்த நொடியில், இன்னொருமுறை அவனின் புறக்கணிப்பைத் தாங்கும் சக்தி தனக்கு இல்லை என்பதை உணர்ந்துகொண்டாள் சனா.

அவன் அவளைக் கடந்துவிட முதல், இரண்டடிகள் முன்னேவைத்து கையை நீட்டி அவனின் வண்டியை மறித்தாள்.

அவளருகில் வண்டியை நிறுத்திய சூர்யா, அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியை கழட்டி ‘டி-ஷர்ட்’ன் கழுத்தில் கொழுவிவிட்டு, ஒற்றைக்காலை நிலத்தில் ஊன்றியபடி நின்றான். வாய் திறந்து எதுவுமே கதைக்கவில்லை. அவன் விழிகள் மட்டும் கூர்மையுடன் அவளையே ஊடுருவியது.

அவனாக எதையும் கதைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து, “ஹா.. ஹாய்..” என்று இவளே மெல்ல ஆரம்பித்தாள்.

அப்போதும் எதுவும் பேசாது அவளையே கூர்ந்தான் அவன்.

“கோ..பமா?” அவன் விழிகளைப் பார்த்துக் கேட்க முயன்றும் முடியாமல், முகத்தைச் சற்றே தாழ்த்திக் கேட்டவளின் கைகளோ பதட்டத்தில் கைபேசியைச் சுழற்றிச் சுழற்றிப் பிடித்தது.

அவனோ மீண்டும் அவளின் கைபேசியையும் அவளையும் மாறிமாறிப் பார்த்தான்.

“சாரி..” அவன் பார்வையின் பொருள் புரிந்து மன்னிப்புக் கேட்டாள் சனா.

ம்ஹூம், அதற்கும் எதுவுமே சொல்லவில்லை அவன்.

அதற்கு மேலும் அவனுடைய மௌனவிரதத்தை தாங்க முடியாது, “அதுதான் சாரி சொல்லிவிட்டேனே. பிறகும் எதற்குச் சும்மா சும்மா முறைக்கிறீர்கள்..?” என்று கேட்டவளின் குரலில் மெல்லிய அதட்டல் இருந்தது.

அதில் அவன் விழிகளில் ஆச்சரியப் பாவனை வந்தபோதும், வாய் திறந்து பேசவில்லை அவன்.

“இன்னும் எத்தனை தடவை நான் மன்னிப்புக் கேட்டால் நீங்கள் என்னோடு கதைப்பீர்கள்..?” அவனின் அமைதி பொறுக்கமுடியாமல் அவள் கேட்க,
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“ஏன் அப்படிச் செய்தாய்…?” என்று நேரடியாகவே கேட்டான் சூர்யா.

“தெரியாது…” என்றாள் உள்ளே போய்விட்ட குரலில். உண்மையும் அதுதானே!

அவன் விழிகளில் கேள்வியை உணர்ந்து, “உண்மையாகவே எனக்குத் தெரியாது. ஏன் நான் உங்களின் அழைப்பை எடுக்கவில்லை என்று…” என்றாள் தவிப்போடு.

“நான் உன்னோடு கதைப்பதில் உனக்கு விருப்பம் இல்லையா அல்லது ஏதும் பிரச்சினையா…?” என்று அவன் கேட்டபோது, உண்மையைச் சொல்ல முடியாமல், “இல்லை. அப்படி எதுவும் இல்லை…” என்றாள் சனா.

“பிறகு…”

“அதுதான், ஏன் அப்படிச் செய்தேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்லிவிட்டேனே. பிறகு எதற்கு அதையே திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள்? வேண்டுமானால் இப்போது அழையுங்கள். நான் பேசுகிறேன்…” என்றாள் கைபேசியைக் காட்டி.

அவன் முகத்தில் முறுவல் மலர்ந்தது.

“இப்போது தேவையில்லை. ஆனால், இனி நான் அழைத்தால் எடுக்கவேண்டும். சரி, சொல்லு. இப்போது எங்கே போகிறாய்..?” என்று கேட்டான் அவன்.

“சைந்துவைக் கூட்டிவரப் போகிறேன்..” என்றவளின் முகமும், கோபத்தை விடுத்து அவன் இலகுவாகப் பேசியதில் மலர்ந்தது.

“வா.. நான் கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில் இறக்கி விடுகிறேன்…”

‘கார் என்றாலும் ஓரளவுக்கு பரவாயில்லை. இந்தக் குதிரை வண்டியில் எப்படி ஏறுவது… ஏறினாலும் அவனுக்கு மிக அருகில் அல்லவா அமரவேண்டும்..’ என்று சிந்தனை ஓடியபோதும் மறுக்கத் தயக்கமாக இருந்தது அவளுக்கு.

பின்னே மீண்டும் மலையேறி விட்டான் என்றால் அவளால் தாங்கமுடியாதே!

“ஏறு..” என்றான் அவன், தன் கறுப்புக் கண்ணாடியை அணிந்தபடி.

வண்டிக்கு அருகில் வந்தவள் தயங்கி நிற்க, அவளின் நிலையை நொடியில் கணித்தவன், “வருகிறாயா அல்லது நான் போகவா..?” என்று கேட்டான் கோபக் குரலில்.

“இல்லையில்லை, வருகிறேன்.” என்றவள் ஒரு பக்கமாக ஏறி அமர்ந்தாள்.

அவள் ஏறியதை உறுதிப்படுத்தத் திரும்பிப் பார்த்தவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“இப்படி இருந்தாயானால் நான் வண்டியை எடுத்ததும் நீ வீதியில் தான் கிடப்பாய். இரண்டு பக்கமும் கால்களைப் போட்டு அமர்ந்துகொள்..” என்றான் இலகுவான குரலில்.

அவளுக்கு அப்படி அமரச் சங்கடமாக இருந்தது. அதைவிட, அதை அவனிடம் சொல்வது இன்னும் சங்கடமாக இருந்தது.

“இப்படியே இருக்கிறேனே…” என்றாள் மெல்ல.

“சொல்வதைக் கேள் லட்சனா. இப்படி அமர்வது ஆபத்து. மாறி இரு…” என்றவனின் குரலில் அழுத்தம் வந்திருந்தது.

அதற்கு மேலும் மறுக்கமுடியாமல் கால்களை இரண்டுபக்கமும் போட்டு, முடிந்தவரை அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்து, கைகள் இரண்டாலும் வண்டியைப் பிடித்துக்கொண்டாள்.

“ம். இதுதான் சரி…” என்றபடி அவன் வண்டியை எடுக்க, அது ஒருதடவை உறுமிவிட்டுப் பாய்ந்தது. அந்தப் பாய்ச்சலில் அவள் மேனி அவனோடு மோதப்பார்க்கவே அதைத் தவிர்ப்பதற்கு சட்டென்று அவனின் தோள்களைப் பற்றிக்கொண்டாள்.

முதன் முதலில் அவளாக அவனைத் தொட்டிருக்கிறாள். நெஞ்சு படபடத்தது. அவனைப் பற்றியிருந்த கைவிரல்கள் நடுங்கியது. அவன் தோள்களை அழுத்திப் பிடிக்கவும் முடியாமல் கைகளை அகற்றவும் முடியாமல் தடுமாறினாள்.

அவனுக்கு அப்படி எதுவும் இல்லை போலும். “நன்றாக இறுக்கிப் பிடித்துக்கொள்.” என்றவன், இலகுவாக வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.

விழுந்துவிடுவோமா என்று பயமாக இருந்தது அவளுக்கு. “மெல்லப் போங்களேன்…” என்றவள், அவளை அறியாமலேயே அவனருகில் நகர்ந்திருந்தாள்.

“இதைவிட மெல்லப்போனால் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள்…” என்றான் அவன் வேகத்தை குறைக்காமலேயே.

இதுவே மெல்லவா என்றிருந்தது அவளுக்கு.

இறக்கமான வளைவில் வேகத்தைக் குறைக்காமலேயே அவன் வண்டியை வளைக்க, பயத்தில் உடல் நடுங்க தன் கைகளால் அவனை வளைத்துப் பிடித்தவள் கண்களை இறுகமூடி அவன் முதுகில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

அவளின் தாளம் தவறிய இதயத்துடிப்பை அவன் முதுகு உணர, சாலையோரமாக வண்டியை நிறுத்திவிட்டு, “லட்சனா…” என்று மெல்ல அழைத்தான்.

“ம்…” என்றவள் அசையவே இல்லை.

“பயந்துவிட்டாயா…?” கனிவோடு கேட்டான்.

“ம்..ம்..” அப்போதும் அவன் முதுகில் புதைத்துக்கொண்ட முகத்தை அவள் நிமிர்த்தவில்லை.

“தூங்கிவிட்டாயா…?” சிரிப்போடு கேட்டான்.

“ம்ஹூம்…”

“இனித் தூங்கப்போகிறாயா…?” குரலில் நகை துலங்கக் கேட்டான் அவன்.

ஏன் அப்படிக் கேட்கிறான் என்று யோசித்தபடி கண்ணைத் திறந்தவளுக்கு தான் இருக்கும் நிலை புரிந்தது. அவன் முதுகோடு பசை போட்டு ஒட்டாத குறையாக ஒட்டிக்கொண்டு போதாக்குறைக்கு கைகள் இரண்டாலும் அவன் இடையை இறுக்கமாக வளைத்துப் பிடித்தபடி இருந்தாள்.

நெஞ்சப் படபடப்பு அதிகரிக்க, வெட்கத்தில் முகம் சிவக்க, அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் ஒருவித கூச்சம் அவளை ஆட்கொள்ள சட்டென்று தள்ளி அமர்ந்தாள் லட்சனா.

வண்டியின் பக்கக் கண்ணாடியில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகளில் இப்போது ரசனை வந்திருந்தது.

அவளின் படபடத்த இமைகள், வெட்கத்தில் சிவந்துவிட்ட கன்னங்கள், மேலுதட்டின் மேலே பூக்கத் தொடங்கிய வியர்வைப் பூக்கள், கீழுதட்டைப் பற்றியிருந்த முத்துப்பற்கள் என்று அவளின் முகத்தை ஆர்வத்தோடு ரசித்தான்.

அவன் உள்ளத்தில் புதுவித உணர்வுகளின் தாக்கங்கள்! நாணம் கொண்டு நாணும் பெண்ணை முதன்முதலாய்ப் பார்க்கிறான்.

சிறுவயது முதலே ஆண் பெண் பேதமின்றி பழகியவனுக்கு பெண்களின் இயல்பு தெரியாததல்ல. ஆனால் இந்த நாணம், அவளின் தடுமாற்றம், அவன் கண்களைச் சந்திக்க முடியாமல் அவள் படும்பாடு அனைத்தும் புதிது. அதுமட்டுமல்ல, அவைகள் அவன் மனதுக்குப் பிடித்தும் இருந்தது. ஆர்வத்தோடு அவளையே பார்த்தான்.

அவன் தன்னைப் பார்க்கிறான் என்பதை உணர்ந்துகொண்டவளுக்கு பெரும் தடுமாற்றமாய் இருந்தது. அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் தடுமாறினாள்.

அது இன்னும் அவனைக் கவர அவளையே விழிகள் மின்னப் பார்த்தான் சூர்யா.

அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், “ப.. பள்ளிக்கூடம் விடப்போகிறது…” என்றாள் மெல்லிய குரலில்.

காரணமின்றி அவன் முகத்தில் சந்தோஷப்புன்னகை.

“ம்.. போகலாம்…” என்றவன் இப்போது, “என்னைப் பிடித்துக்கொள்..” என்றான் சிரிப்போடு.

அந்தச் சிரிப்பு அவளை இன்னும் தடுமாற வைத்தது!

தயக்கத்தோடு அவள் அவனின் தோள்களைப் பற்ற, அவளின் கைகளைப் பற்றி அவற்றைத் தன் இடையருகே கொண்டுவந்து, அவளை முன்னோக்கி இழுத்தான். வண்டியில் அவனிடமிருந்து தள்ளியிருந்தவள் வழுக்கிக்கொண்டு வந்து அவனோடு ஒட்டிக்கொண்டாள்.

தன் நிலையை உணர்ந்தவளின் உடல் மீண்டும் நடுங்கத்தொடங்க கைகளோ சில்லிட்டுப் போனது. குளிர்ந்துவிட்ட தன் கரங்கள் கதகதப்பான அவன் கரங்களுக்குள் அடங்கிக்கிடப்பது அந்த நிலையிலும் இதமாய் இருந்தது அவளுக்கு!

இப்போது அவளின் கைகளைத் தானே தன் இடையைச் சுற்றிப் போட்டுக்கொண்டான் அவன்.

அப்படி அவனோடு ஒட்டிக்கொண்டு இருக்கமுடியாமல் கைகளை அகற்றப்போனவளிடம், “இப்படியே இரு. இல்லையானால் முன்னை விடவும் வேகமாகப் போவேன்…” என்றான் மிரட்டலாக.

திகைத்து விழித்தவளை வண்டியின் கண்ணாடி வழியே பார்த்து, விழிகளில் குறும்பு மின்ன ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான் சூர்யா.

அவன் விழிகளில் இருந்த ஈர்ப்பு அவளை நிலைகுலையச் செய்ய சட்டென்று பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

அவன் வண்டியை எடுக்க அவளையும் மீறி பயத்தில் அவளின் கைகள் அவனை இறுக்கிக்கொள்ள வாய்விட்டுச் சிரித்தான் அவன்.

அவளுக்குத்தான் வெட்கமாகப் போய்விட்டது. ஆனாலும் அவளாலும் ஒன்றும் செய்ய முடியாதே! காரணம், வேகமாக வண்டியை விரட்டிக்கொண்டு இருந்தான் அவன்.

‘எப்போதடா பள்ளிக்கூடம் வரும்...’ என்று இருந்தது அவளுக்கு.

ஆனாலும் அவன் உடலின் கதகதப்பை உணர்ந்தபடி பயணித்தவளின் நெஞ்சுக்குள் ஒருவித பரவசம்.

தயக்கம் இருந்தபோதும் மெல்ல விழிகளை உயர்த்தி வண்டியின் கண்ணாடி வழியே அவனைப் பார்க்க, அதுவரை அவளையே பார்த்திருந்தவனின் விழிகள் அவளைப் பார்த்துச் சிரித்தன.

விழிகளில் நாணம் வந்து ஒட்டிக்கொள்ள முகத்தை அவன் முதுகிலேயே புதைத்துக் கொண்டாள் சனா. அவளின் செய்கை அவனைக் கவர சந்தோசமாகச் சிரித்தான் சூர்யா.

அவர்களுக்குள் மௌனம் தொடர்ந்தபோதும் அவர்களின் விழிகள் நான்கும் அடிக்கடி சந்தித்து ரகசிய மொழி பேசிக் கொண்டன.

ஒருவழியாக பள்ளிக்கூடத்தை அடைந்து, அங்கு வாகனம் நிறுத்துமிடத்தில் அவன் வண்டியை நிறுத்தியபோது, ஏறும்போது இருந்த தயக்கம் போய் அதற்கிடையில் பள்ளிக்கூடம் வந்துவிட்டதா என்றுதான் தோன்றியது அவளுக்கு.

மெல்ல இறங்கித் தயங்கி நின்றாள். மனமோ அவன் எதையாவது கதைக்கமாட்டானா என்று ஏங்கியது. அவனோ, அவளைப் பார்வையால் பருகியபடி நின்றான்.

அவன் பார்வையில் மீண்டும் உள்ளம் படபடக்கத் தொடங்க, “வ.. வருகிறேன்…” என்றாள் அவன் முகம் பாராது.

முகத்தில் பூத்த புன்னகையோடு அவளை ரசித்தபடி தலையை அசைத்தான் அவன்.

அதற்கு மேலும் அவன் முன் நிற்க முடியாமல் மனமின்றி நகரப்போனவளின் இடையில் கைகொடுத்து தன்னருகே இழுத்தான் சூர்யா. அவன் இழுத்ததில் தடுமாறி நிற்கமுடியாமல் அவன் தோள்களைப் பற்றியவள் நடக்கப்போவதை உணரும் முன்னே, அவளின் மெல்லிதழ்களில் தன் இதழ்களை மென்மையாகப் பொருத்தி மீட்டான் சூர்யா.

நடந்ததை உணர்ந்து மனமதிர, விழிகள் அதிர்ச்சியில் விரிய அவனையே பார்த்தவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிவிட்டு, வண்டியில் காற்றாய்ப் பறந்தான் சூர்யா.

 

Goms

Active member
அடேய் என்னடா பண்ணி வச்சிருக்கே🤔🤔🤔

என்ற ஆள் தமிழ் பொண்ணு. இதுக்குத்தான் உன்னை தவிர்த்தாள். 😟😔
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom