• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 5

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-5

அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு நடந்தது நிஜம்தானா இல்லை கனவேதுமா என்று பிரித்தறிய முடியாது நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள் சனா. அப்படி நின்றது எவ்வளவு நேரமோ அவளே அறியாள்!

“என்னைக் கூப்பிட வந்துவிட்டு இங்கே என்ன செய்கிறீர்கள் சித்தி..?” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கேட்டாள் சைந்தவி.

அவளிடம் அசைவே இல்லை.

“சித்தீ..!!”

“ஆ..?” மலங்க விழித்தவள், அக்கா மகளைக் கண்டதும் சுற்றுமுற்றும் விழிகளைச் சுழற்றி நிற்கும் இடத்தை இனங்காண முயன்றாள்.

“என்ன சித்தி.. எங்கே பார்க்கிறீர்கள்..?” என்று கேட்ட அந்தச் சின்னப்பெண்ணிடம் என்னவென்று சொல்வாள்.?! எதுவும் சொல்ல முடியாமல் நின்றாள்.

“ஏன் சித்தி இங்கேயே நின்றுவிட்டீர்கள்? நான் உங்களைக் காணவில்லை என்று தேடினேன் தெரியுமா..? பிறகு செலின் தான் வந்து சொன்னாள், அவளின் அப்பா உங்களை இங்கே கண்டதாக..”

“அது… தெரிந்த ஒருவரை இங்கே கண்டேன். கதைத்துக்கொண்டு நின்றதில் நேரத்தைக் கவனிக்க மறந்துபோனேன்.” என்றவளுக்கு, இப்போதுதான் ஓரளவுக்குப் பேச்சு வந்தது.

சைந்தவி மீண்டும் வாயைத் திறக்க, “வா வா, நேரம் போகிறது. நாம் இன்று உடையெடுக்க டோர்ட்முண்ட் போகவேண்டுமே…”என்று அவளின் எண்ணப்போக்கைத் திசை திருப்பினாள் சனா.

பின்னே, யாரைக் கண்டு கதைத்தீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வது?

உடைகள் என்றதும் எல்லாக் குழந்தைகள் போல சைந்துவும் என் உடை அப்படி இருக்கவேண்டும் இப்படி இருக்கவேண்டும் என்று வாய் ஓயாமல் சலசலத்தபடி வந்தாள்.

அவளின் பேச்சுக்கு காதுகொடுக்காமலேயே எல்லாவற்றுக்கும் ஒரு ‘ம்..’ஐக் கொட்டிக்கொண்டு வந்தாள் சனா.

நெஞ்சப் படபடப்பு அடங்க மறுத்தது. கைகால்களில் மெல்லிய உதறல். கண் பார்வை கூட மங்கிவிட்டது போல் இருந்தது. அவன் பதித்த முத்தம் அவளின் பெண்மைக்குள் அத்துமீறி நுழைந்ததில், உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும் பெரும் மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தது அவளுக்கு!

சத்தமில்லாமல் ஒரு முத்தத்தைப் பதித்து அவளைச் சலனப்படுத்திவிட்டானே!

உள்ளத்தில் பெரும் பிரளயமே நடக்க, வேலை நிறுத்தம் செய்துவிட்ட மூளையால் எதையும் சிந்திக்கமுடியாமல் வீட்டை அடைந்தவளை வித்தியாசமாகப் பார்த்தாள் சுலோ.

அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவளிடம், “என்ன சனா.. ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்..?” என்று கேட்டாள்.

“ஒ.. ஒன்றுமில்லையே அக்கா..” என்றாள் முகத்தை வேறுபுறம் திருப்பி. பதட்டத்தில் வியர்த்து வழிந்தது அவளுக்கு.

“இல்லையே… ஏதோ..” என்ற தமக்கையைப் பேசவிடாமல், “அது.. அதக்கா வெளியே நல்ல வெய்யில்.. அதுதான்…” என்றாள் விழுந்தடித்துக்கொண்டு.

ஏன் இப்படித் தடுமாறுகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.

அதற்கு மேல் அங்கே நிற்க முடியாது, “குளித்து, உடை மாற்றிக்கொண்டு வருகிறேன்…” என்றுவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டாள்.

‘வெய்யிலில் நடந்ததில் களைத்துவிட்டாள் போல…’ என்று ஓடிய சுலோவின் சிந்தனையை, “பசிக்குதும்மா…” என்றபடி வந்த சைந்தவி கலைத்தாள்.

அதற்கு மேல் சுலோ அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை. அதற்கு அவளுக்கு நேரமும் இருக்கவில்லை. மகளைக் கவனித்து, மதிய உணவைப் பார்த்து, வெளியே செல்வதற்கு தயாராகுவது என்று அவளின் நேரம் ஓடியது.


காரில் சிவபாலனும் சுலோவும் முன்பக்கம் அமர்ந்துகொள்ள, சைந்துவோடு பின்பக்கம் அமர்ந்திருந்தாள் சனா. வேக வீதியில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தது அவர்களின் கார்.

எப்போதுமே இப்படியான தூரப்பயணங்கள் சனாவுக்கு மிகவும் பிடிக்கும். போக நான்கு பாதைகள் வர நான்கு பாதைகள் என்று அமைக்கப்பட்ட அதிவேக வீதியில், காற்றாய்ப் பறக்கும் வாகனங்களைப் பார்வையிட்டபடி, வேகமாய் நகரும் மலைகளை ரசித்தபடி செல்வது அவளுக்கு விருப்பமான ஒன்று!

காரின் ஒருபக்கக் கதவில் சாய்ந்து, வெளியே பார்வையை பதித்திருந்தவளின் விழிகளில் இன்று அவை எதுவுமே படவில்லை. அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல வெளியேறியிருந்த அவள் உள்ளம் இப்போது இனிமையாய் படபடத்துக் கொண்டிருந்தது.

முகமோ மல்லிகைப்பூவாய் மலர்ந்திருக்க, செவ்விதழ்கள் புன்னகையில் விரிந்திருக்க, கண்களோ கனவில் மிதந்தது. ரிதமாய்த் துடித்த இதயத்திற்குள் மதியம் நடந்த நிகழ்வுகளே மையம் கொண்டிருந்தது.

அவனைக் கட்டிக்கொண்டு பயணம் செய்கையில் அனுபவித்த அவன் உடலின் கதகதப்பு, அவளின் உயிர்மூச்சுக்குள் நுழைந்துவிட்ட அவன் வாசனை, அவள் கைகளைப் பற்றியவனின் வலிமை, அவளைப் பார்க்கையில் அவன் விழிகளில் தோன்றும் ரசனை, கடைசியாக அவளை இழுத்தணைத்து அவன் பதித்த இதழ் முத்தம்!

அதை நினைத்ததும் அவள் கன்னங்கள் தன்னாலே சிவந்தது. உள்ளத்தின் இனம்புரியா தவிப்பைத் தாங்கமுடியாது கீழுதட்டைப் பற்கள் பற்ற, அதிலே அவன் இதழ்களின் சுவை இன்னும் மிச்சமிருப்பதாய்த் தோன்ற சட்டென்று பற்றிய இதழ்களை விட்டுவிட்டாள். கண்களோ நாணம் தாங்காது தாழ்ந்துபோனது.

அவள் உள்ளம் உணர்வுகளின் ஆக்கிரமிப்பில் தள்ளாடியது. மனம் ஏனோ மயங்கியது!

கோபம் வரவேண்டிய ஒரு செயலை உள்ளம் ரசிக்கிறதே! அவனைத் திட்டமறந்து மனம் தித்திக்குதே! வெறுத்தொதுக்க வேண்டியவனை மறுபடியும் காணமாட்டோமா என்று கண்கள் அலைபாய்கிறதே! இத்தனை மாற்றங்களும் எதற்காக?

அழையா விருந்தாளியாய் உள்ளத்தில் நுழைந்துவிட்டவனின் நினைவுகளை ஒதுக்கமுடியாமல் திணறினாள். ஆனால் அந்தத் திணறல் கூடப் பிடித்திருந்தது. இப்படியே அவன் நினைவுகளுக்குள்ளேயே மூழ்கி விடமாட்டோமா என்றிருந்தது.

அவளின் அன்றைய தினத்தின் மிகுதி, புதுவித உணர்வுகளின் தாக்கத்தோடே கழிந்தது.

அடுத்தடுத்த நாட்களை அவனைக் காணமாட்டோமா, அவன் அழைக்கமாட்டானா என்கிற எதிர்பார்ப்போடேயே கழித்தாள். வீதியில் நடக்கையில் அவன் எங்காவது தென்படுகிறானா என்று விழிகளால் தேடினாள்.

அவனுக்கு நாமே அழைப்போமா என்று கைபேசியை எடுப்பதும், அழைத்தால் அவன் ஏதும் நினைப்பானோ என்று அந்த எண்ணத்தைக் கைவிடுவதும் என்று அவளின் கனவுகள் முதல் நினைவுகள் வரை அனைத்திலும் அவனே நிறைந்திருந்தான்.

ஏன் இப்படி அவனையே நினைக்கிறோம் என்கிற கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. அவனுடன் பேசுவதை, பழகுவதை தவிர்ப்போமா என்கிற கேள்வி தோன்றவே இல்லை!

இப்படியே அந்த வாரம் ஓடிப்போக, அன்று சனிக்கிழமை. பிறந்தநாள் விழாவுக்குச் செல்வதற்காக சிவபாலன் வீட்டில் எல்லோரும் தயாரிக்கொண்டு இருந்தார்கள்.

தலைக்குக் குளித்து, அரைவாசி முடியை கிளிப்பில் அடக்கி, தளரப்பின்னிய கூந்தல் இடை தாண்டி நிற்க, ஆகாயநீலக் கரைகொண்ட மாம்பழ வண்ணச்சேலையில் அழகிய மங்கையாகத் தயாராகி வந்தாள் சனா.

“அடடா சனா.. மிகவும் அழகாய் இருக்கிறாய். உன்னைப் பார்க்கவேண்டியவர்கள் பார்த்தால் அப்படியே உன் காலடியில் சரணடைந்து விடுவார்கள்…” என்றார் சிவபாலன்.

அவர் யாரை மனதில் நினைத்துச் சொன்னாரோ தெரியாது. அவர் அப்படிச் சொன்னதும் சனாவின் மனதில் மின்னிய உருவம் சூர்யாவினுடையது.

“ஆமாம் சனா.. உனக்கு இந்தச் சேலை மிகவும் நன்றாக இருக்கிறது..” என்றாள் சுலோவும் மகிழ்ச்சியோடு.

“சித்தி, நீங்கள் மிகவும் வடிவாக(அழகாக) இருக்கிறீர்கள்..” என்றாள் சைந்து அவளின் காலைக் கட்டிக்கொண்டு.

அவர்களின் பாராட்டுக்கு வெட்கத்தோடு புன்னகைத்தவளின் உள்மனது
விழாவுக்கு சூர்யாவும் வரவேண்டும் என்று எதிர்பார்த்தது.

விழா நடக்கும் மண்டபத்துக்குள் நுழைந்ததுமே சிவபாலனின் நண்பர்கள் அவரைப் பிடித்துக்கொள்ள, பெண்கள் மூவரும் நான்கு கதிரைகள் கொண்ட வட்ட மேசையருகில் சென்று அமர்ந்துகொண்டனர். இவர்களைக் கண்டதும் சுலோவின் வயதை ஒத்தவர்கள் வந்து சேரவே அங்கே பெண்களுக்கே உரித்தான சலசலப்புத் தொடங்கியது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

“சைந்தவி.. வா விளையாடலாம்…” என்றபடி ஓடிவந்தாள் திபி.

அவளோடு, “எல்லோருமாகச் சேர்ந்து என்ன அரட்டை அடிக்கிறீர்கள்..?” என்றபடி திபியின் தாய் சுமித்ராவும் வந்து சேர்ந்தாள்.

“அதுதான் நீயே சொல்லிவிட்டாயே அரட்டை என்று… அதுசரி எங்கே ஆன்ட்டி அங்கிள், தாத்தா பாட்டி ஒருவரையும் காணோம்…” என்று விசாரித்தாள் சுலோ.

“மாமாவும் மாமியும் சுவிஸ் போய்விட்டார்கள். தாத்தாவும் பாட்டியும் இனித்தான் வருவார்கள். அவர்களைக் கூட்டிவர சூர்யா போய்விட்டான்…” என்றாள் சுமித்ரா.

இதைக் கேட்டதும் சனாவின் உள்ளம் துள்ளிக்குதித்தது. அவள் நினைத்ததுபோல் அவன் வரப்போகிறான்! இன்னும் கொஞ்ச நேரத்தில் தன் மனம் கவர்ந்தவனைப் பார்க்கப்போகிறாள்!

சுமித்திராவைக் கண்டதுமே ‘சூர்யாவின் அண்ணி..’ என்று முகம் மலர, மற்றவர்கள் கவனிக்காத வகையில் அவள் விழிகள் சுழன்று மண்டபத்தில் அவனைத்தான் தேடியது.

இனித்தான் வரப்போகிறான் என்றதும் இப்போது அவள் விழிகள் மண்டபத்தின் வாசலுக்குத் தாவியது. அவளை நீண்ட நேரம் காத்திருக்க விடாமல், ஒரு பக்கம் தாத்தாவும் மறுபக்கம் பாட்டியுமாக கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான் சூர்யா.

கருப்பு ஜீன்ஸும், பட்டர் கலர் சேர்ட்டும் அவனை இன்னும் அழகனாய்க் காட்ட, அன்று ‘செம்பட்டை’யாகத் தெரிந்த அவனின் அடர்ந்த கேசம் இன்று அவன் முகத்துக்குத் தனிக் களையைக் கொடுத்தது.

தன்னை மறந்து விழியகற்றாது அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சனா. யாரையோ தேடிச் சுழன்ற அவன் விழிகள் அவளைக் கண்டதும், அதுவும் அவள் ஆவலுடன் தன்னைப் பார்ப்பதைக் கண்டதும் மின்னியது.

போதாக்குறைக்கு ரசனையோடும், ஆசையோடும் மேலிருந்து கீழ்வரை அவளை அவன் விழிகள் ரசனையுடன் பருகியதில், அவள் மேனி முழுவதும் வெட்கத்தில் சிவந்தது.

ஒரு பார்வையிலேயே தன்னைப் பெண்ணாக உணர வைக்கும் அவனின் ஆளுமையில் தடுமாறி, இதயம் தடம்புரள பார்வையைத் திருப்பியவளுக்கு நொடியளவு கூட அவனைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

மீண்டும் அவன் புறமாக அவள் பார்வையை திருப்பியபோது, உதட்டில் நெளிந்த புன்னகையோடு தாத்தாவின் பக்கமாக் குனிந்து எதுவோ அவன் சொல்வதும், அவர் மெதுவாக பார்வையைச் சுழற்றுவதும் தெரிந்தது.

அவரின் ஆராயும் பார்வை தன்னில் நிலைப்பதைக் கண்டவள் தடதடத்த நெஞ்சத்தோடு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“அதோ சூர்யாவோடு தாத்தா பாட்டி வருகிறார்கள்…” என்று சுமி சொன்னதும் அங்கிருந்தவர்கள் அந்த முதிய தம்பதியினரைச் சூழ்ந்துகொண்டனர்.

அந்த ஊரில் வாழும் தமிழ் குடும்பங்களிலேயே பெரியவர்கள் அவர்கள் என்பதாலும், வயது கிட்டத்தட்ட எழுபதைத் தாண்டிய அவர்களைக் காண்பது அரிது என்பதாலும், அவர்களோடு உரையாடுவதில் எல்லோரும் ஆர்வம் காட்டினார்கள்.

அவளுக்கும் ஆர்வம் இருந்தாலும் ஏதோ ஒன்று தடுக்கத் தனித்து நின்றாள் சனா. அப்படி நின்றவளை விரிந்த புன்னகையோடு நெருங்கிய சூர்யா, “ஹாய் மைன் ஷட்ஸ்.. ” என்றபடி அவளின் இடையைத் தன் கைகொண்டு வளைத்தான்.

அவள் காதருகில் குனிந்து, “இவ்வளவு அழகாக இருக்கிறாயே.. என் நிலையைக் கொஞ்சமாவது நினைத்துப்பார்த்தாயா…” என்றான் தொடர்ந்து மயக்கும் குரலில்.

மயங்க வேண்டியவளோ அவனின் செயலில் உச்சக்கட்ட அதிர்ச்சியில் பதறிப்போய், “கையை எடுங்கள்…” என்றாள் நடுங்கும் குரலில்.

யாராவது பார்த்துவிட்டால்? கடவுளே..!

அவன் அவளின் மனம் கவர்ந்தவன்தான்! அவனின் அருகாமையை அவளின் மனதும் பெரிதும் நாடுகிறதுதான்! அதற்காக அனைவரும் கூடியிருக்கும் இடத்தில் அவன் நடந்துகொள்ளும் முறை சரியல்லவே!

அவள் சொல்லியும் எடுக்காத அவன் கையைத் தள்ளிவிட்டு வேகமாக விலகி நின்றவள், நடந்ததை யாராவது பார்த்தார்களா என்று பதட்டத்தோடு சுற்றிப் பார்த்தாள்.

அவர்கள் பார்த்தார்களோ இல்லையோ, அவளுக்கு எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் தோன்ற கண்கள் கலங்கியது.

அவளின் செய்கைகளின் அர்த்தம் புரியாது பார்த்தவன், “இப்போது என்ன நடந்துவிட்டது என்று இந்தப் பாடுபடுகிறாய்..?” என்று கேட்டான்.

அந்தக் கேள்வியில் சுள்ளென்று ஏறிய கோபத்தோடு, “இவ்வளவு பேர் இருக்குமிடத்தில் இப்படி நீங்கள் கையைப் போடலாமா…?” என்று சீறினாள் லட்சனா.

“அப்போ யாருமில்லாத இடமென்றால் கை போடலாமா…?”

இதென்ன கேள்வி? என்ன சொல்லிப் புரிய வைப்பது என்று புரியவில்லை அவளுக்கு.

ஆனாலும் அவன் தவறை உணர்த்திவிடும் எண்ணத்தோடு, “எங்கானாலும் ஒரு பெண்ணைத் தொடுவது தவறு!” என்றாள் அழுத்தமான குரலில்.

“நீ சொன்ன அந்த ‘ஒரு பெண்’ நீயாக இருந்தால் எங்கு வைத்தும் தொடும் உரிமை எனக்கிருக்கிறது!” என்றான் அவன் அவளை விட அழுத்தமாக.

பதட்டத்தில் இருந்தவளுக்கு அவன் சொன்னதன் பொருள் புரியவில்லை.
அதேபோல மனதை அவனிடம் பறிகொடுத்திருந்த அவளும் அவனுக்குத் தோதான பதிலைச் சொன்னாள் தன்னை அறியாமலேயே.

“அதற்காக? எல்லோர் முன்னிலையிலும் இப்படியா நடந்து கொள்வீர்கள்? பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அக்காவோ அத்தானோ பார்த்திருந்தால்…?” அதைச் சொல்லவே அவள் குரல் நடுங்கியது.

“அவர்கள் பார்த்தால் என்ன, விரைவாக நம் திருமணம் நடக்கும்.” என்றான் அவன் அப்போதும் அழுத்தமான குரலில், அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி!

என்னது..? இவன் இப்போது என்ன சொன்னான்… நம் திருமணமா? குழப்பத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அப்போதுதான் அவன் பேச்சின் பொருள் மெல்லமெல்லப் புரியத் தொடங்கியது.

என்னைத் தொடும் உரிமை தனக்கு உண்டு என்றல்லவா சொன்னான். அப்படி உரிமையோடு ஒரு பெண்ணைத் தொடும் உரிமையுள்ளவன் கணவனாக மட்டும்தானே இருக்கமுடியும்!

ஆக அவன் காதலைச் சொல்லியிருக்கிறான். அதைப் புரிந்துகொள்ளாமல் என்னென்னவோ கதைத்துக் கொண்டிருந்திருக்கிறாள் அவள். இதில் வேடிக்கை என்னவென்றால், அவன் காதலை ஏற்றுக்கொண்டு காதலியாகப் பதிலை வேறு அவள் சொல்லியிருக்கிறாள் தன்னை அறியாமலேயே!

ஆக அவள் மனதும் அவன் மேல் காதல் கொண்டிருந்திருக்கிறது!

அப்படி இல்லாமல் இருந்திருக்க உத்தரவின்றி உள்ளே நுழைந்தவனை அவள் உள்ளம் உருகி உருகி நினைத்திருக்காதே! தூக்கம் தூரப்போய் இரவில் அவனுடனான கனவுகள் மட்டுமே அவளுக்குச் சொந்தமாக இருந்ததே, அதன் பெயர் காதலன்றி வேறேது?

இதழ் வழி நுழைந்தவன் அவளின் இதயத்தைக் களவாடிச் சென்றிருக்கிறான். களவாடிச்சென்ற இதயத்துக்குப் பதிலாய் காதலைப் பரிசளித்திருக்கிறான்! கண்களும் முகமும் மலர அவனை அவள் நிமிர்ந்து பார்க்க, அவன் முகமோ இறுக்கத்தில் இருந்தது.

அவனோடு கதைக்க எந்தளவுக்கு அவளுக்கு ஆர்வம் இருந்ததோ அந்தளவுக்குத் தயக்கமும் இருந்தது.

அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, “ம்க்கும்…” என்றாள் அவள் ஆரம்பமாக.

அவளைத் திரும்பிப் பார்த்த அவன் பார்வையில் இருந்த கூர்மையில் திகைத்து விழித்தாள் சனா. கோபமாக இருக்கிறான் என்பது புரிந்தது. ஆனால் அந்தக் கோபத்தில் எந்த அர்த்தமும் இல்லையே! நியாயமாகப் பார்த்தால் கோபத்தில் முகத்தைத் திருப்ப வேண்டியவள் அவளல்லவா?

ஆனாலும் அவன் கோபத்தைத் தாங்கமுடியாது, “கோபமா…?” என்று மெல்லக் கேட்டாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன், கையால் தன் தலையைக் கோதியபடி முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

அவனின் அந்த நிராகரிப்பில் அவளின் நெஞ்சில் வலியொன்று எழுந்தது. அவன் கைகளைப் பிடித்து ‘நான் செய்ததுதான் பிழை. இனி இப்படிச் செய்யமாட்டேன்… என்னோடு கதையுங்களேன்..’ என்று அவனைச் சமாதானப்படுத்த உள்ளம் துடித்தது.

ஆனால் வாயைத் திறந்தாள் அழுதுவிடுவோம் என்று தெரிந்ததில் கலங்கிய கண்களை அவனுக்குக் காட்டாது மறுபுறம் திருப்பிக்கொண்டாள்.

அவன் ஒரு பக்கம் அவள் ஒரு பக்கம் என்று முகத்தைத் திருப்பி நின்ற இருவருக்கும் இடையே காதலைப் பரிமாறிக்கொண்ட அந்த நொடியே கருத்து வேறுபாடும் தோன்றியிருந்தது!

தொடரும்...
 

Goms

Active member
சுத்தம்🥰 🥰🥰
ஆரம்பமே அம்சமாத்தான் இருக்கு 😍 😍 😄😄
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom