• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 7

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-7

தன் நெஞ்சில் சாய்ந்து கிடந்தவளின் கன்னத்தில் பெருவிரலினால் கோலமிட்டபடி, “முதலில் இந்தக் கண்ணாடியைத் தூக்கித் தூரப்போட.” என்றான் சூர்யா.

மயக்கத்தோடு மூடியிருந்த விழிகளை மலர்த்தி ஏன் என்பதாக விழிகளாலேயே கேட்டாள் லட்சனா.

“பார்! பேசும் உன் விழிகளை முத்தமிட முடியாமல் இந்தக் கண்ணாடி தடை போடுகிறது.” என்றான் அவன் முறையீடாக.

அதைக்கேட்டவளின் இதழ்கள் புன்னகையில் விரிய, அந்தப் புன்னகையால் ஈர்க்கப்பட்டவன் அவளின் இதழ்களை நோக்கிக் குனிந்தான்.

அவன் செய்யப்போவதை நொடியில் ஊகித்தவள் தன் இதழ்களைக் கையினால் பொத்திக்கொண்டாள். அவள் தலையோ வேண்டாம் என்பதாக ஆடியது.

ஆசையாக எதிர்பார்த்தது கிடைக்காமல் போன ஏமாற்றத்தில் செல்லமாய் முறைத்தான் சூர்யா. கண்கள் சிரிப்பைச் சிந்தியபோதிலும் கையை அகற்றவில்லை அவள்!

“ப்ச்..!” உணர்வுகளை அடக்கிப் பழக்கமில்லாதவனுக்கு அவள் போட்ட தடை பெருங்கொடுமையாக இருந்தது.

“நான் இந்த நிலையில் உங்கள் கையில் இருப்பதே தவறு சூர்யா…” என்றாள் சனா மென்மையான குரலில்.

“ஏனோ? நாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம். இன்றைய என் காதலி, வருங்கால மனைவி என் கையில் இருப்பதில் என்ன தவறு..?” அவளைப் பார்த்துக் கேட்டவனின் குரலில் இலகுத்தன்மை விடுபட்டிருந்தது.

அவனுக்கு இதை எப்படி புரியவைப்பது? நேரடியாக சொல்லிவிடலாம்தான். அதில் அவன் மனம் நொந்துவிட்டால் அவளுக்கல்லவா வலிக்கும்.

அவனிடமிருந்து நகர்ந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவனோ அவளை முறைத்தான்.

“கதைப்பதற்கு வசதியாக இருக்கும் என்றுதான்…” என்றாள் லட்சனா மெல்ல.

“நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேட்கிறீர்களா சூர்யா?” இதமாகவே கேட்டாள்.

“ம்.. சொல்லு!” என்றவனின் குரலில் கோபமில்லை என்றதும் அவள் முகம் மலர்ந்தது.

“நாம் மணந்துகொள்ளப் போகிறோம் என்றாலும் இன்னும் மணந்துகொள்ளவில்லையே சூர்யா.” மெல்ல அவள் ஆரம்பிக்க,

“இதுதான் உன் பிரச்சினை என்றால், நாளையே என் தாத்தாவும் பாட்டியும் உன் வீட்டில் வந்து நம் திருமணம் பற்றிக் கதைப்பார்கள்.” என்று முடித்துவைத்தான் அவன்.

“இப்போதே தாத்தா பாட்டியிடம் சொல்லப்போகிறீர்களா?” பதட்டத்தோடு கேட்டாள் அவள்.

“தாத்தாவிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அவர் இன்று பாட்டியிடம் சொல்வார்.” என்றான் அவன் சாதரணமாக.

“அவர்.. அவர் சம்மதித்துவிட்டாரா?” நெஞ்சு பரபரக்கக் கேட்டாள்.

“தாத்தா என் விருப்பத்துக்கு என்றும் தடை சொல்ல மாட்டார். அவர் மட்டுமல்ல, என் வீட்டில் எல்லோருமே அப்படித்தான். அவரிடம் சொன்னபிறகுதான் உன்னிடமே சொன்னேன்.”

கண்களில் காதல் பொங்க அவனைப் பார்த்தாள் லட்சனா.

காதலைக் காதலியிடம் சொல்வதற்கே தைரியம் வேண்டும் என்றால் அதை வீட்டில் சொல்வதற்கு பெரும் தைரியம் வேண்டுமே! இவனானால் வீட்டின் பெரியவரிடம் சொல்லி அனுமதியும் பெற்றுவிட்டல்லவா அவளிடம் கூடச் சொல்லியிருக்கிறான். அதுவும் எந்தவித தயக்கமும் இன்றி!

“என்ன..? பார்வையெல்லாம் பலமாக இருக்கிறது..?” என்று புருவங்கள் மேலுயரப் புன்னகையோடு கேட்டான் சூர்யா.

அவனின் அந்தச் செய்கையில் அவள் உள்ளம் மயங்கியது. அவனருகில் நெருங்கி, தன் கைகளினால் அவன் கையைச் சுற்றிக்கொண்டு, அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

“இப்போதுதான் யாரோ இப்படி இருப்பது தவறு என்றார்கள்..”

“ச்சு! சும்மா கேலி செய்யாதீர்கள், சூர்யா. எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது தெரியுமா.” என்றாள் தான் இருக்கும் நிலையை மாற்றாது.

“சொன்னால் நானும் சந்தோசப்படுவேனே.” மறுகையால் அவள் முகத்தை நிமிர்த்தியபடி கேட்டான் அவன்.

“அது… நம்மைப் பற்றி தாத்தாவிடம் சொன்னீர்களே, உங்களுக்குப் பயமாக, தயக்கமாக இருக்கவில்லையா? ”

“ஏன்?” என்று கேட்டான் அவன் புரியாமல்.

“எதற்குப் பயப்படவேண்டும்? எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. என் விருப்பத்தை அவரிடமும் உன்னிடமும் சொன்னேன். அப்பாவும் அம்மாவும் சுவிஸ் போய்விட்டார்கள். இங்கே இருந்திருந்தால் அவர்களிடமும் சொல்லியிருப்பேன்..” என்றான் அவன் வெகு சாதரணமாக.

“இதனால்தான் சந்தோசமாக இருக்கிறது என்றேன். காதலைச் சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் சூர்யா. என் சூர்யா தைரியமானவர், நல்லவர் என்பதில் பெரும் சந்தோசம் எனக்கு...” என்றாள் பெருமையாக.

அவனோ இதிலென்ன இருக்கிறது என்பதாகத் தோளைக் குலுக்கினான்.

அவனுக்கு சாதாரணமாகப் படும் ஒன்று அவளுக்குப் பெரிதாகப் பட்டது!

மலர்ந்திருந்த அவள் முகத்தை சிலநொடிகள் ரசித்துவிட்டு, “அதுசரி, இவ்வளவு சொல்கிறாயே, என் கைகளுக்குள் நீ இருப்பதைப் பெரும் குற்றம் போல் சொல்வது ஏன்?” என்று விசயத்துக்கு வந்தான் அவன்.

“அதைக் குற்றமாகச் சொல்லவில்லை சூர்யா. நாம் பொது இடங்களில் அப்படி நடந்துகொண்டால் பார்ப்பவர்கள் நம்மைத் தவறாக நினைக்க மாட்டார்களா?”

“என்ன சொல்கிறாய்? மற்றவர்களைப் பற்றி நாமெதற்கு நினைக்கவேண்டும்? நம் வாழ்க்கை நமக்காகத்தான்! நமக்குப் பிடித்த மாதிரித்தான் நாம் வாழமுடியும். அடுத்தவருக்குப் பிடித்த மாதிரி நாம் வாழமுடியாது!” என்றான் அவன் தன் கருத்தில் உறுதியாக.

“நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனாலும் அடுத்தவர்களை முற்றுமுழுதாக ஒதுக்க முடியாதே. அவர்களையும் அனுசரித்து, அவர்கள் நம்மை மதிக்கும் படியாகவும்தானே நம் செயல்கள் இருக்கவேண்டும்.”

பொறுமையிழந்த வேகமூச்சொன்றை இழுத்துவிட்டவன், “இப்போது அடுத்தவர்கள் நம்மை மதியாதபடிக்கு நாம் என்ன செய்தோம்? அதாவது நான் என்ன செய்தேன்?” என்று கேட்டான் கூர்மையாக அவளைப் பார்த்தபடி.

மனதில் மெல்லிய பதட்டம் தொற்றிக்கொண்டது சனாவுக்கு.
“தயவுசெய்து கோபப்படாதீர்கள் சூர்யா.” என்றாள் குரலடைக்க.

அவனின் சிறு கோபத்தை, முகச்சுளிப்பைக் கூடத் தாங்கும் சக்தியை இழந்திருந்தாள். எப்போதிலிருந்து இப்படிப் பலவீனப்பட்டுப் போனோம் என்று யோசித்தவளுக்கு விடைதான் தெரியவில்லை!

“நான் கோபப்படவில்லை லட்சனா. நீ சொல்வதை என்னால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. நான் சொல்வதை நீ ஏற்றுக்கொள்கிறாயும் இல்லை. அதுதான்!” என்றான் அவன் தன்னிலை விளக்கமாக.

அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் முகம் மீண்டும் மலர்ந்தது!
புரிந்துகொள்ள முயற்சிக்கும் அவனால் அவள் சொல்பவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாகரீகம் மிகுதியான நாட்டில் பிறந்து, நம்மவர்களின் வளர்ப்பில் வளர்ந்ததில் உண்டான பாதிப்பு அல்லவா இது!

நம் கலாச்சாரத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கவும் முடியாமல், வாழும் நாட்டின் கலாச்சாரப்படி வாழவும் முடியாமல் திண்டாடும் ஒரு வெளிநாடு வாழ் தமிழனாக, அந்தநொடியில் அவள் கண்களுக்குத் தெரிந்தான் அவன்!

அதோடு ‘நீ என் காதலி. நான் சொல்வதை நீ கேள்..’ என்று அவன் பிடிவாதம் பிடிக்கவில்லையே. அவள் சொல்வதைப் புரிந்துகொள்ள அல்லவா முயற்சிக்கிறான்.

அப்படிப் பட்டவனுக்கு தான் என்ன நினைக்கிறோம் என்பதை அவள் புரியவைக்க வேண்டாமா?

“சூர்யா! பாருங்கள், நம் கலாச்சாரத்தில் திருமணமான பின்னர் கூட யாரும் கண்ட இடத்திலும் கட்டிப் பிடிப்பதில்லை. தங்களுக்கான தனியிடங்களில் மட்டுமே அன்பையாகட்டும் அணைப்பையாகட்டும் ஒருவருக்கொருவர் வெளிக்காட்டுகின்றனர். கணவன் மனைவியான அவர்களே அப்படி என்கையில் நாம் இப்படி நடப்பது தவறில்லையா?” என்று இதமாகக் கேட்டாள்.

சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. அவனையே பார்த்திருந்தாள் அவள். சுருங்கிய புருவங்கள் அவன் யோசிப்பதை அவளுக்கு உணர்த்தியது.

அவள் புறமாகத் திரும்பி, “என்னால் நீ சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை லட்சனா. முதலில் நீ இருப்பது ஜெர்மனியில். அதோடு இந்தக் காலத்தில் இதையெல்லாம் யாரும் பெரிதாகப் பார்ப்பதில்லை.” என்றான்.

“இங்கே எனக்குத் தெரிந்தவர்கள் அன்பையோ, முத்தத்தையோ, அணைப்பையோ அந்த நொடியில் வெளிக்காட்டித்தான் நான் பார்த்திருக்கிறேன். நானுமே அப்படித்தான். மனதில் தோன்றுவதைப் பேசி, அதையே செய்து பழக்கப்பட்டவன். அங்கே மண்டபத்தில் உன்னைப் பார்த்ததும் அழகாய் இருக்கிறாய் என்று தோன்றியது. உன்னை அணைத்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. அதைச் செய்தேன்.. நீ கோபப்பட்டாய்..” என்றான் மண்டபத்தில் அவன் நடந்துகொண்டதுக்கு விளக்கமாக.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவள் கண்களையே பார்த்து, “முடிந்தவரை உனக்காக நீ சொன்னதை நினைவில் வைத்திருக்க முயற்சிக்கிறேன். மற்றும்படி என்னுடைய இயல்பைத் தாண்டி என்னால் பொய்யாக இருக்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை..” என்றான் தெளிவாக.

அவளுக்கு அவன் அப்படிச் சொன்னதே போதுமானதாக இருந்தது. உடனேயே எல்லாவற்றையும் மாற்ற முடியாதே! மெல்ல மெல்ல அவனுக்குச் சொல்லிப் புரியவைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

எனவே மகிழ்ச்சியோடு சரியென்பதாகத் தலையாட்டினாள் லட்சனா. அவளின் அந்தச் செய்கையில் அவன் முகத்தில் புன்னகை பூத்தது.

“இனியாவது தியேட்டருக்குள் போவோமா? அல்லது இப்படியே பேசிக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குப் போகலாமா?” என்று கேலியாக அவன் கேட்க,

“அது… என்னை வீட்டில் விட்டுவிடுங்களேன் சூர்யா.” என்றாள் அவள் மெல்லிய தயக்கத்தோடு.

“என்ன விளையாடுகிறாயா? சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டால், நீயும் வீட்டுக்குப் போகலாம் என்கிறாய். என்னதான் பிரச்சினை உனக்கு?”

“ம்ஹூம்.. எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை..” என்று அவசரமாக மறுத்துவிட்டு, தன்னையே குனிந்து பார்த்தபடி, “நான் சேலையோடு இருக்கிறேன். பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்..?” என்றாள் தொடர்ந்து.

“முதலில் எதற்கெடுத்தாலும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிப்பதை நிறுத்து!” என்றான் அவன் கண்டிப்பான குரலில்.

“சேலையோடு இருந்தால் என்ன? அதுவும் ஒரு ஆடைதானே. அழகாக இருக்கிறது என்று பார்ப்பார்களே தவிர இதென்ன உடை என்று இங்கே யாரும் பார்க்க மாட்டார்கள். அதனால் வா!” என்றவன் கதவைத் திறந்துகொண்டு இறங்கினான்.

அதற்கு மேலும் அவனோடு வாதாடி அவன் கோபத்துக்கு ஆளாகும் தைரியம் அற்றவளாக அவளும் இறங்கினாள். மெல்லிய கூச்சம் ஒன்று ஆட்கொள்ள, கண்களைச் சுழற்றி யாராவது தன்னை வித்தியாசமாகப் பார்க்கிறார்களா என்று ஆராய்ந்தாள்.

அதை உணர்ந்து அவளை அழுத்தமாகப் பார்த்தவன், அவளின் கையைப் பிடித்து தியேட்டரின் உள்ளே அழைத்துச் சென்றான்.

டிக்கெட் எடுத்து, படியேறித் தியேட்டரின் உள்ளே சென்று, இருவர் அமரும் சோபா போன்ற இருக்கைகளில் அமரும் வரை அவளின் கையை அவன் விடவேயில்லை.

இருக்கையில் அமர்ந்ததும் தான், நடந்துவருகையில் எல்லோருக்கும் காட்சிப்பொருளாக இருக்கிறோமோ என்றிருந்த சங்கடம் அகன்று அப்பாடி என்றிருந்தது அவளுக்கு. எனவே நிம்மதியாக அமர்ந்துகொண்டாள். டிக்கெட் வாங்குகையிலேயே வாங்கிவந்த கோக்குகளில் ஒன்றை அவளுக்கு உடைத்துக் கொடுத்தவன் தனக்கும் ஒன்றை எடுத்துக்கொண்டான்.

சற்று நேரத்தில் விளக்குகள் அணைந்து, படமும் தொடங்கியது.

அந்தோ பரிதாபம்! வேகமாக நகரும் பேச்சுவழக்கு டொச் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. மொழியறியா மனுஷியாய் காட்சிகளைப் பார்த்தாவது கதையைப் புரிந்துகொள்வோம் என்று முயன்றவளுக்கு அதுகூட முடியாமல் போனது. சற்று நேரத்திலேயே சலிப்புத் தட்ட அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் படத்திலேயே முழுதாக மூழ்கிவிட்டது தெரிந்தது.

அவனுக்காகவாவது பொறுத்திருப்போம் என்று அவள் நினைக்கையில், அவள் புறமாகக் குனிந்து, “என்ன..?” என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் கேட்டான் சூர்யா.

ஆசையாகப் பார்க்க வந்த அவனாவது ரசித்துப் பார்க்கட்டும் என்று நினைத்து, ஒன்றுமில்லை என்பதாகத் தலையை ஆட்டினாள்.

அவன் அவளையே கூர்ந்து பார்க்க, ‘இவனொருத்தன் பிடிவாதத்துக்குப் பிறந்தவன்..’ என்று மனதில் நினைத்துக்கொண்டே, “ஒன்றுமே புரியவில்லை…” என்றாள் அவள் உதட்டைப் பிதுக்கியபடி.

அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு மலர்ந்தது அவன் முகத்தில்.

“இதற்குத்தான் இந்த நாட்டுக்காரன் ஒருத்தனை நண்பனாக்கு என்று அன்று சொன்னேன்.” என்றான் அவன், கேலி இழையோடிய குரலில்.

அவள் அவனைப் பார்த்து முறைக்க, விரிந்த புன்னகையோடு, “அருகில் வா. நான் தமிழில் சொல்கிறேன்.” என்றான் இதமாக.

ஆர்வமாகப் பார்க்கிறவனையும் குழப்ப வேண்டாம் என்று எண்ணி, “இ.. இல்லை வேண்டாம். நீங்கள் பாருங்கள்..” என்றாள் சனா. அதோடு, அவனுக்கு அருகே நகர வெட்கமாகவும் இருந்ததில் மறுத்தாள்.

“எது சொன்னாலும் கேட்டுவிடாதே..” என்றவன், அவள் புறமாக நகர்ந்து, படத்தில் நடப்பவற்றை முடிந்தவரை மெல்லிய குரலில் சாராம்சமாக தமிழில் சொல்லிக்கொண்டிருந்தான்.

அவன் சொல்வதையும் படத்தில் நடப்பதையும் வைத்து படத்தைப் புரிந்துகொள்ள முயன்று கொண்டிருந்தவளின் நாசியை ஒருவித நெடி தீண்ட, முகத்தைத் திருப்பி அவளுக்கு அடுத்த பக்கம் இருந்தவனைப் பார்த்தாள்.

அவன் கையில் பியர் டின்னைக் கண்டதும் அவள் விழிகளில் மெல்லிய அச்சம் பரவியது.

“இப்போது என்ன..?” என்று கேட்டான் சூர்யா மீண்டும்.

‘இவன் என்ன படத்தைப் பார்க்கிறானா அல்லது என்னையே பார்க்கிறானா..’ என்று மனதில் தோன்றியபோதும், “பக்கத்தில் இருப்பவன் சாராயம்.. பியர் குடிக்கிறான்.” என்றாள், விழிகளில் தெரிந்த பயம் குரலிலும் தெரிய.

‘அவன் பியர் குடித்தால் உனக்கென்ன..?’ என்கிற கேள்வியைத் தாங்கிவந்த அவன் விழிகளில் குறும்புதான் கூத்தாடியது.

அதை உணர்ந்து, “சூர்யா..!” என்று, மெல்லிய குரலில் சிணுங்கினாள் லட்சனா.

“பயமாக இருக்கிறது.” என்றாள் மீண்டும்.

“உன்னை…!” என்று செல்லமாகப் பல்லைக் கடித்தவன், அவளின் இடையில் கையைக் கொடுத்து தன்னருகே இழுத்து, அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.

“அச்சோ! விடுங்கள்! யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்.” பதட்டத்தில் படபடத்தவளின் பேச்சை அவன் காதிலேயே வாங்கவில்லை.

மாறாக, “இதற்கு மேலே நாம் போனாலும் இங்கே யாரும் பார்க்கமாட்டார்கள். அதனால் பேசாமல் படத்தைப் பார்!” என்றான் திரையில் பார்வையைப் பதித்து.

“என்னது…!?” என்றவளின் வாயிலிருந்து சத்தமே வரவில்லை.

‘இதற்கு மேலே போனாலும்...’ என்றதின் பொருளாக விபரீதமாக பலதை யோசித்தவள், அதையெல்லாம் அவன் செய்தாலும் செய்வான் என்று தோன்றவே, அவன் தோளிலேயே ஒன்றிக்கொண்டாள்.

அவளின் செய்கையில் அவனுடல் மௌனச்சிரிப்பில் குலுங்கியது. அதை உணர்ந்தவள் வெட்கத்தோடு அவன் கையைக் கிள்ளினாள்.

காதலோடு மென்மையையும் கலந்து ஆசையோடு அவன் அவளைக் குனிந்து பார்க்க, அவளும் அவனைத்தான் விழிகளை உயர்த்திப் பார்த்தாள்.

மோதிக்கொண்ட விழிகள் நான்கும் பேசிக்கொண்ட மொழி காதல் மட்டுமே!


தொடரும்...
 

Goms

Active member
அருமை 🥰
காதல் மொழி பேசிக்கொண்ட விழிகளின் கனவு சீக்கிரம் நிறைவேறட்டும் 😜😍😍

தமிழ் பேச தெரிந்தாலும் தமிழரின் உணர்வுகளை வேற்று நாட்டவர் புரிந்து கொள்ள இயலாது🤗😄
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom