மரங்கள் – அகத்தியா

கடவுளிடம் வரங்கள் கேட்கவில்லை...
கரங்கள் தான் கேட்கின்றன!
மரம் என்று,
எழுதும் போது கூட
அதில் கால்கள் இல்லை!
இருந்திருந்தால்?
மனித மிருகங்கள்,
காடுகளுள் நுழையும் போதெல்லாம்
மரங்கள்,
வெளிநடப்புச் செய்திருக்கும்!
மனிதர்களிற்கு,
கண்தானம் செய்வதற்குப் பதில்
இனி மரங்களுக்குக்
கண் தானம் செய்யுங்கள்!
மனிதர்கள் காடுகளுள் நுழைகிறார்களா?
என்று
மரங்கள்
கண்காணித்துக் கொள்வதற்காக!
மரங்கள்,
தன் கிளைகளை
சிறகுகளென நினைத்து
அசைத்துக் கொண்டிருக்கின்றது...
மனிதர்களாகிய நாம் தான்,
விறகுகளிற்காக,
சிறகுகளை,
வெட்டி முறிக்கிறோம்.

மரங்களுக்கென,
செயற்கையாய்
ஒரு செவி பொருத்துங்கள்...
மனித சத்தம் கேட்டால்
ஓடி, ஒளிந்து கொள்வதற்காய்!
வாயில்லா ஜீவனின் பட்டியலில்
மரங்களையும் சேர்க்கச் சொல்கிறேன்...
வாய் மட்டும் இருந்திருந்தால்
வெட்டும் போதெல்லாம்
மனிதர்களை
மரங்கள் திட்டித் தீர்த்திருக்கும்
பச்சை பச்சையாய்...
காற்றில்
மரங்கள் அசையும் போதெல்லாம்
அதன் ஈரக்கொலை
நடுங்குவதாகவே நினைத்துக் கொள்கிறேன்
பிடுங்கித் தின்று பிழைப்பு நடத்தும்
நமக்கெங்கே தெரியப் போகிறது
மரங்கள்...
உதிர்ந்த தன் சருகுகளையே
உரமா(ணவா)க்கிக் கொள்ளுமென...
யார் யாருக்கோ
என்றோ நிழல் தந்த
ஒரு மரத்தின் எலும்புக் கூடுதான்
நம் வீட்டின்
யன்னல்களும் கதவுகளும்...