புரண்டு புரண்டு விளையாடும்
என் குட்டிப் பிரபஞ்சமே!
உன் பிஞ்சுக் கால்கள்
என் வயிற்றில் உதைக்கும் போதெல்லாம்
வயறு மட்டும் அல்ல
என் உயிரும் தான் அதிர்ந்து போகின்றது.
உன் தலையென
நினைத்துக் கொண்டுதான்
அடிக்கடி
தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
என் வயிற்றை!
உன் பாதங்களில்
மீசை முள் குத்திவிடுமோ
என்றுதான் பயந்து போகின்றேன்
உன் அப்பா
என் வயிற்றில்
முத்தமிடும் போதெல்லாம்!
விழுதுகள் பூமியை
பற்றிக் கொள்வது போல்
உனைப் பற்றிக் கொண்டிருக்கிறது,
என் தொப்புள் கொடி!
விழிகளையும் விரல்களையும்
மூடிக்கொண்டவாறே இருக்கிறாய்!
உன் அம்மாவிற்கு
சுகப்பிரவசமாக வேண்டுமென
நேர்த்திக்கடனா?
என் கருவறைக்குள்
கதிர்வீச்சுகளைப் பாய்ச்ச அனுமதிக்க மாட்டேன்
உள்ளிருக்கும் நீ
ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்தாலென்ன?
என் இருளுக்குள் மலர்ந்து கொண்டிருக்கும்
வெளிச்சப் பூ நீ!
நான் பேசும் அதிர்வுகளை வைத்து
அசைவுகளால் பதிலுரைக்கிறாய்
நான் பேசும் போது
என் உதடுகள் அசைவது போல்
நீ பேசும் போது
என் வயிறு அசைகிறது!
என் பனிக்குடத்தில்
ததும்பிக் கொண்டிருக்கும்
உயிர்த் தீர்த்தம் நீ!
என் குரலின்
சப்த அலைவரிசைகள்
உனைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருக்கும்!
அடம் பிடிக்காமல் உறங்கு!
அம்மாவையும் கொஞ்சம் உறங்க விடு!
நான் முதல் முதலாக கேட்ட
உன் இதயத்துடிப்பு தான்
என் உயிர் தீண்டிய
மெல்லிய இசை!
உன் அசைவுகளுள்
ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதுபோல் தான்
என் வருடல்களுள்
கோடி முத்தங்கள் இருக்கிறது!
உன் முகம் காண
என் விழியும்
உன் குரல் கேட்க
என் செவியும்
உன் வாசம் நுகர
என் நாசியும்
உன்னை முத்தமிட
என் இதழ்களும்
உனக்குப் பாலூட்ட
என் மார்புகளும்
உனை வாரியணைக்க
என் கரங்களும்
ஏங்கிக் கிடக்கிறது
தாய் வரம் தரவிருப்பவனே(ளே)
சீக்கிரம் வா!
-அகத்தியா