You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இந்தியத் தந்தை - ஜெகந்நாதன் - இதழ் 4

ரோசி கஜன்

Administrator
Staff member

கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வாசலில் தரகர் கந்தசாமி நின்று கொண்டிருந்தார்.

“உள்ள வாங்க” என்று சொல்லி வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றேன். மனைவியிடம், “ஒரு தம்ளர் நீர் மோர் கொண்டு வா” எனச் சொல்லிவிட்டு கந்தசாமியை நாற்காலியில் உட்காரச் சொன்னேன்.

“என்ன விசயமா வந்திருக்கீங்க கந்தசாமி?” என்றேன்.

“உங்க சிநேகிதர் விசுவநாதனிடம் எனக்கு ஒரு காரியம் ஆகவேண்டியிருக்குது. நீங்க சொன்னா அவர் கண்டிப்பாத் தட்ட மாட்டாரு. கொஞ்சம் மனசு வய்யிங்க.” என்றார் தரகர் பவ்யமாக. “ மேல சொல்லுங்க” என்றேன்.

“வேற ஒண்ணுமில்லீங்க...உங்க சிநேகிதருக்கு வெள்ளலூருக்குப் பக்கத்தில ‘பை பாஸ்’ சாலையைத் தொட்ட மாதிரி கொஞ்சம் நிலமிருக்கறது உங்களுக்குத் தெரியுமுண்ணு நெனக்கிறன்.” என்று ஆரம்பித்தார் கந்தசாமி.

“ஆமா...ஒரு ஐம்பது சென்ட் நெலம். பூர்வீகச் சொத்தில வித்தது போக மிஞ்சுன தம்மாத் துண்டு நிலம். சரி…சரி... மேல சொல்லுங்க.” என்றேன் நான்.

கந்தசாமி பேச ஆரம்பித்தார்.

“உங்களுக்குத் தெரியாதது இல்ல...பை பாஸ் சால போட்டதுமே அதுக்குப் பக்கத்துல இருந்த நெலங்க குதிர வெல ஆன வெலயென மதிப்புக் கூடிப் போச்சு. ஒரு சென்ட் சாதாரணமா மூணு, நாலு லட்சத்துக்குப் போகுது.”மூச்சு வாங்கியது தரகருக்கு. கொஞ்சம் நிறுத்திவிட்டு நீர்மோரைக் குடித்தார்.

“ சரி, கந்தசாமி.நீங்க என்ன சொல்ல வரீங்க?” என்றேன் நான்.

“வேற ஒண்ணுமில்ல. உங்க சிநேகிதருக்கு நிலத்தை விக்கிறதா ஏதாச்சும் உத்தேசம் உண்டா? இப்ப வித்தா நல்ல வெலக்கிப் போகும். இரண்டு கோடி தேறும். எனக்கும் கணிசமான அளவு தரகு கிடைக்கும். எம் பொண்ணு கல்யாணத்தை கொஞ்சம் நல்லபடியா நடத்த ஒத்தாசையா இருக்கும்” என்று சொல்லி முடித்தார் கந்தசாமி.

“ ஒரு வாரம் கழிச்சி வாங்க. அதுக்குள்ள நான் விசுவநாதனிடம் பேசிப் பாக்கறன்” என்று கூறி கந்தசாமியை ஒருவாறு அனுப்பி வைத்தேன்.

”நீங்க நெனச்சா உங்க சிநேகிதரை சம்மதிக்க வைக்க முடியும். உங்க சொல்லை அவர் தட்ட மாட்டாரு. கொஞ்சம் மனசு வையுங்க” என்று ஒரு பாரத்தை என் மீது சுமத்திச் சென்றார் கந்தசாமி.

விஸ்வநாதன் என் பால்ய காலச் சிநேகிதன். இரண்டு பேரும் ஒரே ஊர்க்காரர்கள். கல்லூரி முடிய ஒன்றாகவே படித்தோம். அவன் அரசுப்பணியில் அமர, நான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன்.

திருமணம் முடிந்து இருவருக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தை பிறக்க, காலம் வேகமெடுத்து ஓடியது.

நான் சொந்த ஊரிலேயே பணியைத் தொடர அவன் பல இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டான்.

என்னுடைய மகன் படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் அமர்ந்ததும் அவனுக்கு திருமணத்தை முடித்தோம். கடைசியில் விசுவநாதனும் சொந்த ஊருக்கே வந்து சேர்ந்தான். விசுவநாதனின் மகன் சம்பத் எம். சி.ஏ முடித்துவிட்டு கணினித் துறையில் நல்ல வேலையில் சேர்ந்து கணிசமான சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தான். விசுவநாதனுக்கும் அவன் மனைவிக்கும் மகனை நினைத்துப் பெருமையாக இருந்தது. அவன் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தனர். தங்கள் சொல்லை எந்நாளும் தட்டாத தனயன் என மனம் பூரித்திருந்தனர்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member

ஆனால், அவர்களுடைய கணிப்பு பொய்த்துப் போன பொழுது அவர்களால் தாங்கமுடியவில்லை. பேரதிர்ச்சிக்கு உள்ளானார்கள். விசுவநாதனுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளுடைய ஒரே பெண்ணான மரகதத்தை தங்களின் மருமகளாக்கிக் கொள்ளவேண்டும் என்பது அவர்களின் நெடுநாளைய விருப்பம். ஆனால் விதி வேறு விதமாக எழுதப்பட்டிருந்தது.

விசுவநாதன் தம்பதியர் மகனிடம் தங்கள் விருப்பத்தைச் சொல்லியபொழுது,அவன் எரிந்து விழுந்தான். அந்த அப்பாவிப் பெற்றோர்கள் அன்று தான் தங்கள் மகனின் புதிய முகத்தைப் பார்த்து அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

“யாரைக் கேட்டு இந்த முடிவுக்கு வந்தீர்கள்?” என்று அவன் கேட்டபொழுது வலியால் துடித்துப் போனார் விசுவநாதன்.

‘இதுக்குக் கூட எங்களுக்கு உரிமை இல்லையா?” என்று அம்மா தழுதழுத்த குரலில் வினவியபொழுது மகன் சொன்னான், “என்னுடைய வாழ்க்கை...நான் தானே முடிவு செய்யணும்.”

விக்கித்துப் போன அந்த அம்மா துக்கம் தாங்காமல் வாய் மூடி மௌனியானாள்.

எப்படிச் சொல்லிவிட்டான்! ஈட்டியால் இதயத்தில் குத்தியது போல! அவனை எப்படியெல்லாம் வளர்த்தார்கள்! கல்லூரியில் படிக்க வைக்க அவர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. எல்லா வகைக் கடன்களையும் வாங்கினார் விசுவநாதன்.

மனைவிக்கு அவள் வீட்டில் போட்ட பத்துப் பவுன் நகை, ஐந்து சென்ட் காலி மனை எல்லாமே மகனின் படிப்புச் செலவுக்காக விற்கப்பட்டன.

விசுவநாதனின் சம்பளத்தில் ஒரு பகுதியும் அதற்கே செலவழிக்கப்பட்டது. இந்தத் தியாகங்களை எல்லாம் அவன் கிஞ்சித்தும் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை.

அடுத்ததாக அவன் சொன்ன விசயம் அவர்களுக்கு இன்னமும் அதிர்ச்சியாக இருந்தது. அவன் வெகு சாதாரணமாக,”என்கூட வேலை செய்யும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்று ஏதோ வானொலியில் செய்தி வாசிப்பது போல அறிவித்தான்.

விசுவனாதனுக்குக் கட்டுக்கடங்காத கோபம். “மரகதத்தை கல்யாணம் கட்டிப்பேன்னு அத்தையும் மாமாவும் நெனச்சிட்டு இருக்காங்க. நாங்களும் கூட சம்மதம் தெரிவிச்சு இருக்கோம். நீ சொல்றது உனக்கே நல்லா இருக்கா சொல்லு?”என்று கத்தினார்.

“அப்பா, நானும் மல்லிகாவை கல்யாணம் பண்ணிக்கிறதா வாக்குக் கொடுத்திட்டேன். அதிலிருந்து மாற மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தான் மகன்.

கொஞ்ச நாள் ஒரே போராட்டமாக இருந்தது. இறுதியில் வெற்றி அடைந்தது மகன் தான். தவமிருந்து பெற்றவர்கள் விட்டுக் கொடுத்தார்கள்.

பாவம் விசுவநாதன்! தங்கையிடமும் மாப்பிள்ளையிடமும் தன் கையாலாகாத்தனத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டார். அவர்களும் நிலைமையைப் புரிந்துகொண்டு சமாதானமானார்கள். மரகதம், மாமா அத்தை படும் பாட்டைப் பார்த்து,” நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாதீங்க. நான் மேல படிக்கப் போறேன்.”என்று கூறினாள். அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள் மீனாட்சி. ஓரிரு மாதங்களில் சம்பத், மல்லிகா திருமணம் தடபுடலாக நடந்தேறியது.

இரண்டு மாதங்கள் கழிந்தன. சம்பத்துக்கு கனடாவில் வேலை கிடைக்க, மல்லிகாவையும் அழைத்துக் கொண்டு அவன் கிளம்பிப் போய் விட்டான்.

இவ்வளவு தான் வாழ்க்கை என்று விசுவநாதனும் அவன் மனைவியும் மனதைத் தேற்றிக் கொண்டார்கள். ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு தடவை மகன் மட்டும் வந்து பெற்றவர்களைப் பார்த்துவிட்டுப் போனான்.

மருமகள் தொலைபேசியில் கூடப் பேசுவதில்லை. இடையில் ஒரு நாள் மல்லிகாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தான் சம்பத்.

விசுவநாதனும் மீனாட்சியும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். பேத்தியைச் சென்று பார்க்க அவர்களுக்கு கொள்ளை ஆசை தான். ஆனாலும் மகனிடமிருந்து சாதகமான பதில் ஏதும் வரவில்லை.

பேத்திக்கு இப்பொழுது நான்கு வயது. சம்பந்திகள் இது வரை இரண்டு தடவை போய்ப் பார்த்து விட்டு வந்து விட்டனர்.

மகன் பாவம் என்ன செய்வான். மோகினிப் பிசாசு அவனை ஆட்டி வைக்கிறது என்று தங்களைச் சமாதானப் படுத்திக் கொண்டனர் விசுவநாதன் தம்பதிகள். ஏதோ வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. கணவனுக்கு வரும் ஓய்வூதியத்தில் சிக்கனமாக செலவு செய்து நாட்களை நகர்த்தி வந்தார் மீனாட்சி.

மேற்கண்ட எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் என்னிடம் சொல்லி கவலைப்பட்டான் விசுவநாதன். ஆனால், ஒரு நாள் கூட கடன் கேட்டு என்னை அணுகியதில்லை. சுயமரியாதை உள்ளவன்.

நாளைக்குக் கண்டிப்பாக விசுவனாதனைச் சந்தித்து தரகர் சொன்னதை அவனிடம் சொல்ல வேண்டும்.

தரகர் சொன்ன யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நிலத்தை விற்று பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து மாதாமாதம் வட்டியைப் பெற்று இன்னும் கொஞ்சம் தாராளமாக செலவு செய்யலாமல்லவா?

மகனோ பணம் ஏதும் அனுப்புவதாகத் தெரியவில்லை. ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி அதற்குள்ளேயே செலவு செய்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று விதியா என்ன?

விசுவநாதனுடன் இதைப் பற்றித் தீவிரமாக விவாதிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

அடுத்த நாள் காலையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் விசுவநாதனும் மீனாட்சியும் ஆட்டோவில் வந்து இறங்கினர். நானும் என் மனைவியும் மிகவும் மகிழ்ச்சியோடு வீட்டிற்குள் அழைத்துச் சென்றோம்.

“ எங்கியோ கிளம்பியிட்டு இருந்த போல. நாங்க வந்து கெடுத்திட்டமோ?” என வினவினான் நண்பன்.

“ உங்க வூட்டுக்குத் தாண்டா புறப்பட்டேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல நீயே வந்துட்டே ” என்றேன் மகிழ்ச்சியோடு.

இதற்கிடையில் என் துணைவி சிற்றுண்டியை மேசையில் வைத்துவிட்டு, “சரி, சரி முதலில் சாப்பிடுங்கள். பிறகு பேசலாம்” என்று கூறிவிட்டு மீனாட்சியோடு சமையலறைக்குள் சென்று விட்டாள்.

சாப்பிட்டு முடித்த நண்பன், “என்ன விஷயம்?” என்றான் ஆவலோடு.

“வேறொண்ணுமில்ல...தரகர் கந்தசாமி வந்திருந்தார். உங்கிட்ட ஒண்ணு கேக்கச் சொன்னாரு....”என்று நிறுத்தினேன் நான்.

“ மேற்கொண்டு சொல்லுடா” என்றான் விசுவநாதன். தரகர் சொன்ன எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் விலாவாரியாக விவரித்தேன்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட விசுவநாதன், “சாரிடா. அந்த நிலத்தை விற்பதற்கில்லை.” என்றான் ரத்தினச் சுருக்கமாக.

“மடையா,நான் சொல்றதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளு. இந்த மாதிரி நல்ல விலை படியும்பொழுது விக்கிறது தான் விவேகம். ஒரு ராத்திரியிலே கோடீஸ்வரன் ஆயிடலாம். அந்த நெலத்தை வச்சுட்டு என்ன பண்ணப் போற? சீக்கிரம் வித்துட்டு பணத்தை டெபாசிட் பண்ணி மாதாமாதம் வட்டியை வாங்கி கொஞ்சம் தாராளமாக செலவு செஞ்சிட்டு சந்தோசமா இருங்க” என்று சற்று கோபமாகவே பேசினேன்.

“பேசி முடிச்சிட்டியா? நீ என்ன சொன்னாலும் நான் அதை விக்க மாட்டேன். அது எங்க பூர்வீக சொத்துடா. எம் மகனுக்காக வச்சிட்டிருக்கிறேன்.’ என்று ஆணித்தரமாகக் கூறினான் விசுவநாதன்.

இதற்குள் என் மனைவியும் மீனாட்சியும் முன்னறைக்கு வந்து எங்கள் பேச்சைக் கவனித்தார்கள். விசுவநாதனின் கடைசி வார்த்தைகளைக் கேட்டதும் எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

“இன்னுமா உனக்குப் புத்தி வரல? கல்யாணம் தான் நீ சொன்னபடி செய்யலே...பரவாயில்ல உட்ரலாம்...அயல் நாட்டிலே கை நிறையச் சம்பாதிக்கிறானே...இதுவரைக்கும் ஒரு பைசா உனக்கு அனுப்பிச்சு இருப்பானா? ஒரு தடவ உங்களை அங்க வரச் சொல்லிக் கூப்பிட்டானா?” எனக் கத்தினேன்.

மீனாட்சியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது. விசுவநாதனின் முகத்தைக் காணச் சகிக்கவில்லை. அதிகமாகப் பேசி விட்டோமோ என்று மனதில் ஒரு குற்ற உணர்வு தலை தூக்கியது.

கரகரத்த குரலில் விசுவநாதன் பேச ஆரம்பித்தான்.

“ நீ என்னை எப்படி வேணுண்ணாலும் திட்டிக்கோ. உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஏண்ணா நீ என் உயிர் நண்பன். ஆனா, எங்களாலே எங்க மகனை மறக்க முடியலியே. இன்னிக்கி என்னமோ ஏதோ மயக்கத்திலே எங்களை விட்டு வெலகிப் போயிட்டான். ஆனா அவன் பெறந்தது, தவழ்ந்தது, தட்டுத் தடுமாறி நடந்தது, ஓடி வெளையாடுனது, சோறூட்டுனது, கைப்பிடித்துப் பள்ளிக்கு கூட்டியிட்டுப் போனது, கல்லூரியில படிக்கும்பொழுது கூட அம்மா மடியில தல வச்சிப் படுத்துட்டு ஊர் ஞாயம் பேசுனது, தோள் மீது கை போட்டபடி நானும் அவனும் நடந்து போனது, ஒன்றாக ஒக்காந்து சாப்பிட்டது, இப்படி இன்னும் நூறு நூறு விசயங்களை மறக்க முடியலையே! எங்க ஊட்ல எல்லா இடங்களிலும் அவன் நடக்கற மாதிரி, பேசற மாதிரி, எங்களோட சாப்பிடற மாதிரி, “அம்மா கொஞ்சம் தண்ணி கொண்டு வா”ண்ணு கூப்படற மாதிரி, “அப்பா இருபது ரூபா எனக்கு வேணும்” எனக் கேக்கற மாதிரி மனசுல அடிக்கடி தோண்றதைத் தடுக்க முடியலையே!”

அவனுடைய குரல் வெளிப்படுத்திய துக்கத்தால் தாக்குண்டு மீனாட்சி அழ, என் மனைவி அழ, என் கண்களிலும் நீர் துளிர்த்தது.

விசுவநாதனை அணைத்துக்கொண்டு “விசுவா, மனம் கலங்காதே. நல்லா யோசிச்சுப் பாரு. இன்னும் மகன் திரும்பி இந்தியா வருவாண்ணு நம்பறயா? எனக்கு நம்பிக்கை இல்ல. அதனால தான் நெலத்தை வித்து பணத்தை வங்கியில போட்டுடுன்னு சொல்றன்” என்று ஆறுதல் கூறினேன்.

“ என்னை மன்னிச்சுருடா. இந்த விசயத்துல நீ சொல்றதை என்னால கேக்க முடியலே” என என் கைகளைப் பிடித்துக் கொண்டு கூறிய விசுவநாதன் சில வினாடிகள் அப்படியே அமைதியானான்.

பிறகு சொன்னான், “ என் மகன் திரும்பி வருவானா, வரமாட்டானா என்பது இப்பத் தெரியாது. ஆனா ஒரு நாளைக்கி ஏதோ காரணத்துக்காக இங்கு வர நேரிடலாம். அப்படி வரும்பொழுது சொந்த ஊர்ல வீடு கட்டவோ அல்லது ஆஃபீஸ் கட்டவோ அவனுக்குண்ணு கொஞ்சம் எடம் இருக்கணும். அவன் அனாதையா நிக்கக் கூடாது. அதனால நான் கண்டிப்பா அந்த எடத்தை விக்க மாட்டேன்.” விசுவநாதனின் குரலில் இருந்த உறுதியைக் கண்டு வியந்து போனேன்.

அந்த விசயத்தை அத்தோடு விட்டு விட்டேன். இந்த மாதிரி தந்தையர்கள் நிறையப் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களை மாற்ற முயல்வதற்கு பதிலாக கல்லிலிருந்து நார் உரிக்கலாம்!
 
Top Bottom