You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இம்மாத எழுத்தாளர்... உங்கள் அபிமான எழுத்தாளர் தமிழ் நிவேதா - இதழ் 1

ரோசி கஜன்

Administrator
Staff member
‘இம்மாத எழுத்தாளர்’ பகுதிக்காக சில கேள்விகளோடு அணுகிய போது சந்தோசமாகப் பதில் தந்தார், தமிழ் நிவேதா.

முதன் முதலில் ‘அந்த அரபிக்கடலோரம்’ என்ற கதையில் எனக்கு இவரின் எழுத்து அறிமுகமானது. அதன் பின்னர், ஆவலோடு தேடி, அதுவரை வந்திருந்த அனைத்துக் கதைகளையும் வாசித்த பின்னரே என் மனம் அடங்கியது.

அது மட்டுமா? ‘அடுத்த புத்தகம் எப்போது வருமாம்?’ என்று, நான் காத்திருந்து வாசிக்கும் எழுத்துகளில் ஒன்று இவருடையது.

பயணங்கள்...அதுவும் நமக்குப் பிடித்தவர்களோடு, பிடித்த வகையில்...வேண்டாம் என்பீர்களா என்ன? கணத்துக்குக் கணம் அது தரும் வெவ்வேறு தருணங்களை உணர மறுப்பவர் யார்?

ஒவ்வொரு முறைக்கும் வெவ்வேறு ஊர்கள், வெவ்வேறு மனிதர்கள், அவர்களுள் நிகழும் அழகிய சம்பவங்களில் இதமாய் உருகி, அல்லாத வேளைகளில் முகம் சுளித்து, ஹையையோ! எனப் பதறி, அடடா! இப்படியிருக்கலாமே என பாடம் படித்து, வியந்து, பலவித உணர்வுகளோடு பயணம் முடிவுக்கு வருகையில், ‘ஹையோ! இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நீண்டிருந்தால்...’ என்று தோன்றுமா இல்லையா? அதேபோலத்தான் எனக்கும் இவர் எழுத்துகளை வாசிக்கையில் இருக்கும்.

எங்கள் செந்தூரத்தின் முதல் இதழ் சார்பாக, அவருடன் சில கேள்விகள் மூலம் உரையாடிய அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்வடைகின்றேன். இந்த வாய்ப்பளித்த எழுத்தாளருக்கு நன்றிகளும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு செந்தூரம் சார்பாக வாழ்துகளும்!



தமிழ் நிவேதா...தனக்கென்று தனிப்பாணியில் கதைகளைத் தருபவர் என்று அநேகருக்குத் தெரிந்தாலும், செந்தூரம் வாசகர்களுக்காக உங்களுடைய இளமைக்காலம், வாழ்க்கைச்சூழல், பாடசாலை ,கல்லூரி இவை பற்றி பகிர்ந்து கொள்வீர்களா?
"சேலம் மாவட்டம், மேட்டூர் அணை அருகிலுள்ள கொளத்தூர் என் சொந்த ஊர்.அப்பா ஊர் நகரசபை தலைவர். திராவிட கழகத்தில் ஈடுபாடு கொண்டவர். சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவர். அறிஞர் அண்ணா, பெரியாரில் தொடங்கி கலைஞர் எம்.ஐி.ஆர் வரை எங்கள் வீட்டிற்கு வராத பிரபலங்கள் அபூர்வம். உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களாலும் கொள்கையாலும் திராவிட கழகங்கள் வளர்ந்த போது, அதைக் கேட்டு வளர்ந்தது எங்கள் தலைமுறை.

என் அம்மா தீவிர புத்தக பிரியை. நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சேகரித்து வைத்திருந்தார். நான் வீட்டில் ஒரே பெண். நெருக்கமான நண்பர்கள் என்று யாரும் இல்லாத சூழ்நிலையில் என் தனிமைக்கு தீனி போட்டது என் அம்மாவின் நூலகம்தான்.

உள்ளூர் அரசு பள்ளியில் உயர்நிலை கல்வி. மேட்டூர் கிறிஸ்துவ பள்ளியில் மேல்நிலை கல்வி.ஈரோடு கல்லூரியில் வணிகவியல் பட்டம். சென்னையில் வீட்டுநிர்வாகம் பற்றிய படிப்பு. சுமாரான மாணவி. வரலாறு மட்டுமே விருப்பப் பாடம்.

1991 இறுதியில் திருமணம். கணவர் திரு.ராஜமாணிக்கம். ஆங்கில பேராசிரியர். ஆங்கில இலக்கணம் குறித்தும் ஆளுமை திறன் குறித்தும் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சமீபத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் ஆப் இந்தியா இவரது பணியை கவுரவப்படுத்தியது.
ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள். பெண் நிவேதா ராஜமாணிக்கம். பொறியியல் முடித்து விட்டு புனே வில் வேலை. மலையேற்ற வீராங்கனை. மஹாராஷ்டிர அரசு நடத்திய மலையேற்ற பயிற்சிகளில் தேர்ச்சி பெற்று அரசால் அங்கீகரிக்கப் பட்டவர். எவரஸ்ட் சிகரத்தில் ஏறியது இவரது சமீபத்திய சாதனை. மகன் ப்ரானேஷ் ராஜமாணிக்கம். பெங்களூரு சட்டக் கல்லூரி மாணவர். பேட்மிட்டன் ப்ளேயர்.அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் உடையவர்.”




எழுத்துலகில் உங்கள் அறிமுகம் பற்றி சொல்லலாமே...

. "என் தாய்மாமா சேலம் மார்டன் தியேட்டர்ஸ் சில் சினிமா வசனகர்த்தாவாக இருந்தவர்.
பாரதிதாசன் அவர்களின் நெருங்கிய நண்பர். பெரியாரிஸ்ட். அவரின் அனுபவங்கள் எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தினஎன்றாலும் பல சமயங்களில் ஆர்வத்தை விட சூழல்தான் மனிதனை வெளிக் கொண்டு வருகிறது."




இதுவரை வெளியாகிய தங்கள் படைப்புகள் மற்றும் அவற்றின் பின்னணிகள்?

"பள்ளி நாட்களில் பாக்கியாவில் முதல் சிறு கதை வெளி வந்தது. பின் தொடர்ந்து பாக்கியாவில் சிறுகதைகள் எழுதினேன். கல்லூரியில் படிக்கையில் ஈரோட்டை சேர்ந்த விப்ஜியார் என்ற நண்பர்கள் குழு தங்கள் சம்பளப் பணத்தை செலவழித்து ஒரு கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார்கள். அதில் எழுதினேன். பெரிய அளவில் நடத்த அவர்களால் முடியவில்லை என்ற போதும் தரமான எழுத்துக்களையும் இலக்கியங்களையும் வாசிக்க கற்று கொண்டது அங்கேதான்.
பின் விகடனில் கவிதைகள், சிறு கதைகள்,கண்மனி,பெண்மனி ,குமுதம் என்று எழுதிய பிறகு ஒரு மாத பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர் பணி. பத்திரிக்கை தொழிலின் சிரமங்களை உணர்ந்தது அங்கேதான். பிறகு பத்திரிக்கையா, எழுத்தா என்ற சூழ்நிலை வந்த போது பேனாவைப் பற்றிக் கொண்டேன்.”




அனேக எழுத்தாளர்கள் தம் கதைகளில் தம்மையே ஒரு பாத்திரமாக்கிக் கொள்வார்கள். அப்படியான நிகழ்வுகள் தங்கள் கதைகளில் இடம் பெற்றதுண்டா?
"என் சாயல் இடம் பெற்றதுண்டு."



உங்கள் ஒவ்வொரு கதைகளும் வெவ்வேறு களங்களில் எழுதப்பட்டிருக்கும் . வாசிப்போரை அலுங்காமல் நலுங்காமல் கதைக்களத்தில் இழுத்துவிட்டுவிடும் ஒரு வித மாயையை உங்கள் எழுத்தில் உணர்ந்திருக்கிறேன், அவ்வளவு நுணுக்கமாக கதைக்களம் சித்தரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக உப்புக்காற்று நாவலில் சரக்குக் கப்பல் பயணம் பற்றிச் சொல்லலாம். கதை முடிகையில் கப்பலில் பயணம் செய்து வந்த உணர்வு வாசகருள் நிச்சயம் அழுத்தமாகவே இருக்கும். .
அந்தவகையில் என்னுள் எழுந்த கேள்வி இது...உங்கள் அனுபவங்களை கதைகளில் வெளிப்படுத்துவீர்களா?


"நிறைய பயணங்களும், சந்திப்புகளும் அனுபவித்து எழுத தூண்டுகின்றன. அதே சமயம் பிறரின் அனுபவங்களும் ,செய்திகளும் கூட எழுத்துக்களாகியிருக்கின்றன.”



கதை ஒன்றை எழுதுகையில் இன்னென்ன விபரங்கள் கட்டாயமாக இருக்கவேண்டும் என்று முதலிலேயே தீர்மானம் செய்து கொள்வீர்களா?
"எதைப் பற்றி சொல்ல வேண்டும் என்பதை மட்டும் முடிவு செய்து கொள்வேன். எழுத ஆரம்பிக்கையில் நான் உருவாக்கிய பாத்திரங்கள் முடிக்கையில் தன்னிச்சையாக செயல் படத் தொடங்கியிருப்பார்கள்.”



ஒரு வாசகியாக உங்கள் கதைகளில் சமூகப்பொறுப்பு உள்ளதை உணர்ந்திருக்கிறேன். என்றாலும் இந்தக் கேள்விக்கு உங்களிடமிருந்து பதில் பெற ஆவலாக உள்ளது.உங்கள் கதையை வாசிக்கும் வாசகர்கள் அதிலிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களா?
"நிச்சயம். அதற்காக நிறைய மெனக் கெடுகிறேன். நேரத்தையும், நியாயமான சில பலன்களையும் கூட விடுத்து சொல்லும் செய்திகள் நூறில் பத்து பேரையாவது யோசிக்க வைத்தால் நான் வெற்றி பெற்றவளாவேன்."



பலரின் மனத்தைக் கொள்ளை கொண்ட எழுத்துக்குச் சொந்தக்காரியான உங்கள் மனதை ஈர்த்த எழுத்து, எழுத்தாளர் பற்றி?
"இதற்கு ஒரு வார்தையில் சொல்வது கடினம். பெரிய பட்டியலே இருக்கிறது. வாஸந்தியின் பெண்ணியம், சுஜாதாவின் அறிவியல், எண்டமூரியின் கதைகளம், பாலகுமாரனின் பளீர் வார்த்தைகள், கி.ரா..வின் மண்வாசனை, வைரமுத்துவின் அழகான கவிநடை ...சொல்லிக் கொண்டே போகலாம்.

என்னுடைய பாணி என்று சொல்ல வேண்டுமானால் சாண்டில்யனின் பாணி. ஆழ்ந்து படிப்பவர்களுக்கு புரியும். இல்லை எனில் பிறகு சொல்வேன்.”



தினம் தினம் புதிது புதிதாக எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருகிறார்கள் . அனுபவம் வாய்ந்த ஒரு எழுத்தாளர் என்ற வகையில் அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
"முன்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார்கள். இப்போது நிறைய போ் எழுதுகிறார்கள் என்பது பாராட்டுக்குரிய விசயம். முன்பு ஒரு நாவலில் ஒரு பக்கத்தை கொடுத்தால் போதும் எழுதியவர் யார் என்று வாசகனால் எளிதாக சொல்லிவிட முடியும். இப்போது எழுத்தாளரின் பெயரை எடுத்து விட்டுப் பார்த்தால் எல்லா கதையும் ஒரே மாதிரி இருப்பது வருத்தமாக இருக்கிறது.

தேடி படியுங்கள். புதிதாக சிந்தியுங்கள். உங்களது களம் யதார்தமானதாக இருக்கட்டும். பிரத்யேக பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கென தனி இடத்தை பிடிக்க முடியும்."
 
Top Bottom