You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இம்மாத எழுத்தாளர்- திருமதி கோகிலா மகேந்திரன்-இதழ் 10

ரோசி கஜன்

Administrator
Staff member
1558511939674.pngயாழ்ப்பாணம் தெல்லிப்பழை விழிசிட்டிக் கிராமத்தில் பிறந்து, பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் இடைநிலைக்கல்வியையும் கற்ற இவர், விஞ்ஞான ஆசிரியையாக, அதிபர், பிரதிப்பணிப்பாளர் எனவும் கடமையாற்றியுள்ளார்.

கல்வித்துறைக்குச் சமாந்தரமாக உளவியல் பற்றியும், உளவளத்துணை பற்றியும், உளச்சிகிச்சை பற்றியும் கற்று, உளவளத்துணையாளராகவும் பணிசெய்தவர், பாடசாலை நாட்களிலேயே சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் மிக்கவராக இருந்து, பணிக்காலத்தில் எழுத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதோடு, நாடகத் துறையையும் முறையாகக் கற்று நாடக ஆசிரியர் தரப் பரீட்சையிலும் சித்தி பெற்றிருக்கிறார்.

ஈழத்து எழுத்தாளர்களுள் தனித்துவமானவராக, சமூக சிந்தனையாளராக, கலைத் திறானாய்வாளராக, நாடகக் கலைஞராக, உளவள ஆலோசகராக என, பன்முகத் தன்மைகளைக் கொண்டவராக அடையாளப்படுத்தப்படும் இவர், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனங்கள், நாடகங்கள், அறிவியல் புனைவு எனப் பல பிரிவுகளிலும் நூல்களை எழுதியுள்ளார்.

இவரது கதைகளின் சிறப்பம்சம் எனப்பார்த்தால் பாத்திரங்களின் எண்ணங்களையும் செயற்பாடுகளையும் உளவியல் நோக்கில் பார்த்தலையும் ஆராய்வதையும் குறிப்பிடலாம்.

இவரது, “அன்பிற்கு முன்னால்’ என்ற சிறுகதை முதன் முதலில் 1972 இல் “குயில்’ சஞ்சிகையில் வெளியாகியிருந்தது. இந்த வகையில் இவர் எழுதிய 76 சிறுகதைகளில் தெரிவு செய்யப்பட்ட கதைகள் ஆறு சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவற்றுள் ‘பிரசவங்கள்’, ‘வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்’ ஆகியவை தேசிய சாகித்ய விருது பெற்றவை. ‘வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்’ எனும் நூல் வடகிழக்கு மாகாண இலக்கிய விருதினையும் வென்றிருந்தது.

1558511975579.png 1558511988516.png

ஈழநாடு பத்திரிகையிலும் சுடர் சஞ்சிகையிலுமாக குறுநாவல்கள், நாவல்களை எழுதியிருப்பினும், “துயிலும் ஒருநாள் கலையும்’, 'தூவானம் கவனம்’ என்பனவே நூலுருப் பெற்றுள்ளன.

1558512000685.png 1558512017934.png

‘கேள்விகளின் முழக்கம்’ எனும் நாடகம், வட இலங்கைச் சங்கீத சபையின் ‘நாடக கலாவித்தகர்’ என்ற பட்டத்தினை இவருக்கு ஈட்டிக்கொடுத்தது. இது தவிர, மேலும் 23 நாடகங்களை இவர் எழுதி இயக்கியுள்ளார்.

இவரது ஆக்கங்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்,கொடுமைகளை எதிர்க்கும் வகையிலும், வேலையிடம், வீடு என்பவற்றில் பெண்ணின் சமவுரிமையை வலியுறுத்துவதும் வகையிலும் அமைந்திருக்கும்.

பெரும்பாலான எழுத்துருவாக்கங்கள் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தாலும், ‘தூவானம் கவனம்’ எனும் நாவலில் உலக மக்களுக்குப் பொதுவான தற்கால மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எடுத்து எழுதியுள்ளார்.

மேலும் இவர் படைப்புகளில் விண்ணியல், உயிரியல், சூழல் மாசடைதல், மருத்துவம் போன்ற பல துறைகள் சார்ந்த விஞ்ஞான உண்மைகளும் அடங்கி அறிவுக்கு விருந்து படைப்பதையும் அவதானிக்கலாம்.

அண்மையில் IBC தொலைக்காட்சியில் ‘சிறந்த ஆளுமை’க்கான விருத்தினைப் பெற்ற எமதன்புக்குரிய எழுத்தாளர் அவர்கள், இன்னும் பல்லாண்டுகள் நல் ஆரோக்கியத்தோடிருந்து தான் முன்னெடுக்கும் எழுத்துப்பணியாகவிருக்கட்டும் எம் மக்களுக்குத் தேவையான சேவைகளாகவிருக்கட்டும் அனைத்திலும் வெற்றிக்கனியைச் சுவைத்திடவேண்டும் என்று செந்தூரத்தின் சார்பாக வாழ்த்துகின்றோம்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom