You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இரண்டு மெய்யெழுத்துகள் சேர்ந்து வருமா ?

நிதனிபிரபு

Administrator
Staff member
இரண்டு மெய்யெழுத்துகள் சேர்ந்து வருமா ?
OO
தமிழில் புள்ளியுடைய இரண்டு மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருமா ? வரும் என்றால் எங்கே வரும் ?

இந்த ஐயத்திற்குப் பலரிடையே தெளிவான அறிதல் இல்லை. தற்போது பரவலாகப் பரவி வரும் பிழைகளில் இரட்டை மெய்யெழுத்துகளைத் தயங்காமல் இடுவதும் ஒன்று.

’கற்ப்பதற்கு’ என்று எழுதுகிறார்கள். ‘அதற்க்காக’ என்று எழுதுகிறார்கள். ‘முயற்ச்சி’ என்றுகூட எழுதுகிறார்கள். இவை முற்றிலும் பிழையானவை.

ஒரு வல்லின மெய்யெழுத்தினை அடுத்து இன்னொரு தனி மெய்யெழுத்து வரவே வராது. கற்பதற்கு, அதற்காக, முயற்சி என்று எழுதுவதுதான் சரி.

தற்காலக் கதாசிரியர்கள் சிலர் சொல்ப்படி, அல்ப்பம், கல்க்கண்டு என்றுகூட எழுதுகிறார்கள். அவர்கள் எழுதுவதும் பிழையே.

அப்படியானால் தமிழில் இரண்டு மெய்யெழுத்துகள் ஒன்றாக வருவதில்லையா ? இரண்டு மெய்யெழுத்துகளைச் சேர்ந்தாற்போல் பார்த்த நினைவிருக்கிறதே.

உண்மைதான். தமிழில் இரண்டு மெய்யெழுத்துகள் சேர்ந்து வருவதும் உண்டு.

ஆனால், அவை மூன்றே மூன்று மெய் எழுத்துகளை அடுத்துத்தான் வரும். வல்லின மெய்யை அடுத்து வரவே வராது.

அம்மூன்று எழுத்துகள் எவை ? ய், ர், ழ் ஆகியவையே அம்மூன்று மெய்கள்.

அம்மூன்று இடையின மெய்களை அடுத்து மட்டுமே இன்னொரு ஒற்றெழுத்து புள்ளியோடு வரலாகும்.

திருக்குறளிருந்தே எடுத்துக்காட்டினைக் காண்போம்.

அடக்கம் அமரருள் உய்க்கும் – ய்க் என இரண்டு மெய்கள்
செல்வத்தைத் தேய்க்கும் படை
அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து
(தேய்ந்து, ஓய்ந்து, ஆராய்ந்து, ஆராய்ச்சி என வருதல் காண்க.)

தாள் சேர்ந்தார்க்கல்லால் – ர்ந் என இரண்டு மெய்கள்
சேர்ந்தார்க்கு – ர்க் என இரண்டு மெய்கள்
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு
(உயர்ச்சி, தளர்ச்சி, அவர்க்கு, பயிர்ப்பு, உயர்த்தினர் என வருதல் காண்க.)

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி – ழ்ச் இரண்டு மெய்கள்
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு – ழ்ந் என இரண்டு மெய்கள்
(மகிழ்ச்சி, நிகழ்ச்சி, சூழ்ச்சி என வருதல் காண்க.)

ஆகவே, ய் ர் ழ் ஆகிய மெய்களை அடுத்துத்தான் இன்னொரு தனி மெய்யெழுத்து தோன்றுமேயன்றி வேறெங்கும் தோன்றாது.

- கவிஞர் மகுடேசுவரன்
 
Top Bottom