இருந்து எனும் சொல்லின் பயன்பாடு

நிதனிபிரபு

Administrator
Staff member
மகுடேசுவரன் அண்ணாவின் முகப்புத்தகப் பதிவிலிருந்து:



அண்மையில் வெளியிடப்பட்ட அரசியல் கட்சியின் அறிக்கை ஒன்றில் ‘கட்சியில் இருந்தும்... கூட்டணியில் இருந்தும் விலகிக்கொள்கிறோம்’ என்று இருந்தது.

இங்கே ‘இருந்தும்’ என்ற சொல்லின் பயன்பாடு என்ன என்பதை எண்ணிப் பாருங்கள்.

கட்சியில் இருந்தும்
கூட்டணியில் இருந்தும்

’இருந்தும்’ என்ற சொல் முற்சொல்லோடு சேராமல் தனித்துப் பிரிந்து நின்றால் வினைச்சொல்போல் தோற்றம் தரும்.

அது வினைச்சொல்தான். ஆனால், ஒரு வினைச்சொல்லே வேற்றுமை உருபுபோல் செயல்படுவதும் உண்டு. அதற்குச் சொற்றொடரில் வேற்றுமை உருபினைப்போன்ற பொருள்தரும் பயன்பாடு உண்டு.

ஐ, ஆல், கு, இன், அது, கண் போன்றவை வேற்றுமை உருபுகள். நின்று, இருந்து, ஆக, கொண்டு, உடைய போன்றவை வேற்றுமை உருபாகவே பயிலும் சொல்லுருபுகள். (நின்று, இருந்து, ஆக, கொண்டு, உடைய போன்றவை வினைச்சொற்களாகவும் பயிலும் என்பதை அறிவோம்.)

‘வீட்டில் இருந்து வந்தார்’ என்பதற்கும் ‘வீட்டிலிருந்து வந்தார்’ என்பதற்கும் நிறையவே பொருள் வேறுபாடுண்டு.

வீட்டில் இருந்து வந்தார் - என்பது இருத்தல் சார்ந்த வினைப்பொருள் குறிக்கும். (அவர் வீட்டிலேயே தொடர்ந்து இருந்து வருகிறார்.)

வீட்டிலிருந்து வந்தார் - என்பது வீட்டைவிட்டுக் கிளம்பி வந்தார் என்ற நீங்கற்பொருள் குறிக்கும்.

இருந்து என்பதை வினையாக எழுதினால் இருக்கும் பொருள். வேற்றுமை உணர்த்தும் சொல்லுருபாகப் பயன்படுத்தினால் நீங்கி நகரும் பொருள்.

ஒரு வேற்றுமை உருபு (ஐ, ஆல், கு, இன், அது , கண் போன்றவை) பெயர்ச்சொல்லோடு ஒட்டியே இருக்கும்.

கண்ணை நம்பாதே, கண்ணால் பேசு, கண்ணிலிருந்து நீர் வழிந்தது - போன்ற தொடர்களில் ஐ, ஆல், இல் இருந்து போன்ற வேற்றுமை உருபுகளும் சொல்லுருபுகளும் தாம் சேர்ந்து வரும் பெயர்ச்சொல்லோடு நீக்கமற ஒட்டியிருப்பதைப் பாருங்கள்.

அவ்வாறே இருந்து என்ற சொல்லுருபு வேற்றுமைப் பொருளில் வரும்பொழுது முதற்சொல்லோடு சேர்த்தே எழுதவேண்டும். அப்போதுதான் வேற்றுமை உருபின் பொருளைத் தெளிவாக வழங்கும்.

இருந்து என்பதைப் பிரித்து எழுதினால் வினைச்சொல்லாகப் பயில்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்த இடமுண்டு.

’கட்சியிலிருந்தும் கூட்டணியிலிருந்தும்’ என்பதுதான் நீங்கற்பொருள் குறிக்க வந்த ‘இருந்து’ ஆகும். ஒரு வேற்றுமைச் சொல்லுருபின் வேலை அத்தகைய வேற்றுமைக்குரிய பொருளை உணர்த்துவதுதான்.

அதனால் ‘கட்சியிலிருந்தும்... கூட்டணியிலிருந்தும்...’ என்று எழுதப்படுவதுதான் சிறப்பு. அறிக்கையிலிருந்து அத்தொடரை எடுத்தாண்ட தமிழ்மேல் அக்கறைகொண்ட ஊடகங்களும் நமக்கெதற்கு வம்பு என்று அப்படியே பிரித்து வெளியிட்டன. அவ்வாறு அடியொற்றி வெளியிடும் பொருட்டுப் பிழையொற்றி வெளியிடவேண்டியதில்லை. உரியவாறு சேர்த்தே வெளியிட்டிருக்கலாம்.

மொழிப்பயன்பாட்டில் சிறுபிழைகள் நேரும்தான். யாவரும் சேர்ந்து முயன்றால் திருத்தமும் செம்மையும் நிலைக்கும். :)
 
Top Bottom