You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர் கே எஸ் ஆனந்தன் - இதழ் 12

ரோசி கஜன்

Administrator
Staff member


புனைவுக் கதைகள் , நாடகங்கள் , ஆய்வுக்கட்டுரைகள் , இலக்கிய விமர்சனங்கள் ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்க ஜனரஞ்சக எழுத்தாளர்!

கார்த்திகேசு சச்சிதானந்தம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், கே. எஸ். ஆனந்தன் எனும் புனை பெயரில் ஈழத்து இலக்கியத் துறையில் நுழைந்தார்.

ஆரம்பத்தில் இவரது எழுத்தாக்கங்களைப் பிரசுரம் செய்யப் பத்திரிகைகள் பின்னின்ற போதும், பிறகு பிறகு இவரது நாவல்களைத் தேடிப்பிரசுரிக்கும் அளவுக்கு முன்வந்திருந்தன என்பதே, இவரது எழுத்துக்கு வாசகர்கள் மத்தியிலான வரவேற்புக்குச் சான்றென்று கூறலாம்.

கோண்டாவில் வடமேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட கே. எஸ். ஆனந்தன் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியை வாழ்விடமாகக் கொண்டுள்ளார். இவரின் பத்து நாவல்கள் இதுவரை நூலுருப் பெற்றுள்ளன. இதில் ”தீக்குள் விரலை வைத்தால்” என்னும் வீரகேசரிப் பிரசுரமாக வெளி வந்த நாவல் இவரின் எழுத்தாற்றலை ஈழவாசகர்களிடையே நிலைநிறுத்தியது எனலாம். இந்நாவல் ஈழத்தில் இரு பதிப்புகளாக வெளியிடும் அளவுக்குப் பிரபல்யம் பெற்றதாகும். எழுபதுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இக்கதையை வாசித்துப் பார்த்தால் நிச்சயம் வியப்பேற்படும். கடந்த முப்பது நாப்பதாண்டுகளாக வெளிவந்த நாவல்களில் சிறந்த குடும்ப நாவல் என்று சுட்டப்படும் நாவல்களுக்கு நிகராக வெகு சுவராஸ்யமாகக் கதை நகர்த்தியிருப்பார் கதாசிரியர் .

இவரை இத்துறையில் ஊக்குவித்த அமரர் கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்) அவர்கள், இவர் பற்றிக் குறிப்பிடுகையில், "பரந்துபட்ட வாசகர் பரப்பைக் கொண்ட எழுத்தாளர்” எனக் கூறியுள்ளார். மேலும், இவரை இத்துறையில் எஸ். டி. சிவநாயகம், புலவர் பார்வதிநாதசிவம் ஆகியோர் ஊக்குவித்துள்ளனர்.

கே. எஸ். ஆனந்தன் அவர்களின் சிறுவர் இலக்கியத்திற்காக, 'யாழ் இலக்கிய வட்டம்' இவரைக் கௌரவித்துள்ளது. நாடகத்திற்காக, 'அகில இலங்கை சைவப் புலவர் சங்கம்' இவருக்குத் தங்கப் பதக்கம் பரிசளித்தது.

இருபத்திநான்கு நாவல்களை எழுதியுள்ள இவர், ஒன்பது நாடகங்களையும் மேடையேற்றியுள்ளார் .

தமிழக முன்னனிப் பத்திரிகைகளான கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், குமுதம் முதலாக, ஈழத்துச் சஞ்சிகைகள் பத்திரிகைகளிலும் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.

ஆரம்பக் கல்வியை இணுவில் சைவ மகாஜனா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியிலும், கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றுச் சித்தியடைந்த இவர், பட்டப்படிப்பை வெளிவாரியாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்றார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட இவர், சமூகப் பரப்பில் வாழுகின்ற மக்களின் உணர்வுகளைத் தன் ஒவ்வொரு நாவலிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

நாம் இரசித்த எழுத்தை, எங்கள் இதழ் மூலம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் செந்தூரம் மிக்க மகிழ்வடைகின்றது.


1579528818728.png
 
Top Bottom