You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உனக்கொன்று சொல்ல வேண்டும்! - நிதனிபிரபு

நிதனிபிரபு

Administrator
Staff member
உனக்கொன்று சொல்ல வேண்டும்!!



உன்னை முன்பின் நான் பார்த்ததில்லை. செவி வழியும் கேள்விப் பட்டதில்லை. ஐரோப்பா கண்டத்தில் நீ. ஆசியா கண்டத்தில் நான். பார் நம் எண்ணங்களை போலவே எத்தனை தூரமிருந்திருக்கிறது நமக்குள் என்று! என் பதினெட்டாவது பருவத்தில், நான் படித்த கதைகளின் நாயகர்களின் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் நான். உயரமாய் அழுத்தமாய் ஒருவன் வருவான். என் மனதை சொல்லாமல் கொள்ளாமல் கொள்ளை கொள்வான். உயிராய் அவனை நானும் நேசிப்பேன். போராடி கைபிடிப்போம். பின்னே சொந்தங்கள் சேரும்.. இப்படித்தான் என் கனவுகள் இருந்தது. கேட்கவே மோசமாக இருக்கிறதா? என்ன செய்ய? அன்று என் அறிவும் புத்தியும் அவ்வளவுதானே! அதற்காக இன்றும் என்னை அப்படி நினைப்பாயாக இருந்தால் நீதான் மிகப்பெரிய ஏமாளி!


அந்த நாட்களில்தான், ஒரு புகைப்படத்தின் வாயிலாக என் முன்னே வந்து நின்றாய் நீ. எனக்கு பிடிக்கவே இல்லை உன்னை. இவன் பெண் கேட்டு வீட்டுக்கு வந்தால் விரட்டி அடிப்பேன் என்று அம்மாவிடமே சீறிவிட்டு உன்னை தூக்கி எறிந்துவிட்டு போய்விட்டேன். அவ்வளவு கோபம் உன்மேல். பின்னே, படித்து எஞ்சினியரிங் முடித்து என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நானே ஒரு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்கிற என் கனவை குலைக்கவென்றே வந்த மகா பாதகனாகத்தான் நீ தெரிந்தாய்.


அதன் பிறகு வந்த நாட்களெல்லாம் நரகமாக போயிற்று! அதுநாள் வரை என்னை கடிந்தொரு வார்த்தை பேசியிராத அப்பாவைக்கூட கடிந்து பேச வைத்தவன் நீ. தினமும் ஏதாவது ஒன்றுக்காய் அம்மாவிடம் அடி வாங்கினாலும் இரவில் அவரின் அணைப்பில்லாமல் நான் உறங்கியதே இல்லை. அப்படியான அம்மாவை முகம் திருப்ப வைத்தவன் நீ. உன் மீதான வெறுப்பின் அளவும் ஆவேசமும் மிக வேகமாக பெருகிக்கொண்டிருந்தது எனக்குள். சத்தியமாக சொல்கிறேன், அன்றைய நாட்களில் என் முன்னால் நீ வந்திருப்பாயாக இருந்தால் நீயே என்னை வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு உன்னை கொணர்ந்திருப்பேன். அப்படி நீ வராமல் இருந்ததற்காய் இன்று உனக்கு நன்றி சொல்லச் சொல்கிறது என் இதயம். ஆனால், சொல்லமாட்டேன்! அதென்ன உனக்கு நான் நன்றி சொல்வது?


பிடிக்காமலேயே சம்மதித்தேன். வேறு வழிகள் இல்லை. மரணத்தை தேடுமளவுக்கு நான் கோழையும் அல்ல! என்னதான் கோபக்காரியாக இருந்தாலும், பெற்றவர்களை மீறும் அளவுக்கு தைரியசாலியும் அல்ல! சம்மதித்துவிட்டு எத்தனையோ நாட்கள் உன்னை திட்டித் தீர்த்திருக்கிறேன். நீ நாசமாக போகவேண்டும் என்று சபித்திருக்கிறேன். நாட்கள் பறந்தது. நீ என்னோடு பேசிவிட போராட, நானோ உன்னோடு கதைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தேன். ஒருநாள் எதிர்பாராமல் உன் குரல் என் செவிகளை மோதியது. அன்றே உன்னிடம் நான் விழுந்துவிட்டேன் என்று நினைக்கிறாயா? கிடையாது!


ஆனால், உன் அடாவடித்தனத்தை உள்ளுக்குள் ரசித்தேன். ஊரையே மிரட்டும் என்னையே மிரட்டி என்னிடமிருந்தே என் டெலிபோன் இலக்கத்தை பெற்றுக்கொண்ட உன் கெட்டித்தனம் பிடித்திருந்தது. அதன் பிறகு ஒரு மூன்று மாதங்கள்.. அந்த மூன்று மாதங்களில் பத்து அல்லது பன்னிரண்டு தடவைகள் நாம் கதைத்திருப்போமா?? அத்தனை தடவைகளும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் வருமா நாம் பேசிக்கொண்ட நேரத்துளிகள்? உன்னை நீ எனக்கு புரிய வைத்துவிடவும், என்னை நீ புரிந்துகொள்ளவும் முயற்சித்த நேரங்கள். அதை செய்துவிடக்கூடாது என்று நான் பிடிவாதமாக இருந்த நேரத்துளிகளும் அவைதான். ஆனாலும், இன்று என் நினைவலைகளில் பசுமையாக நிலைத்துவிட்ட நாட்களவை. அப்போதெல்லாம் என்ன பேசினோம்? எனக்கு தெரியாது. உன்னை பிடித்து கதைத்தேன் என்று சொல்ல முடியாது. ஆனால், இனி நீதான் என் வாழ்க்கை துணை என்று நானே எனக்குள் திணித்துக்கொண்டு கதைத்தேன்.


அதனாலோ என்னவோ அப்போதெல்லாம் உன்னிடம் கதைக்கவும் பகிரவும் என்னிடம் எதுவும் இருக்கவில்லை. ம்.. ஓ.. பிறகு? இல்ல.. இவைதான் பெரும்பாலும் நான் பேசிய வார்த்தைகளாம். இதையும் நீதான்

பின்நாட்களில் சொல்லியிருக்கிறாய், அப்போதெல்லாம் நீ நினைத்துக்கொள்வாயாம் இது ஒரு வாயில்லா பூச்சி, அப்பாவி, பாவம் என்று. இன்றோ, நீ கதைப்பதற்கான சந்தர்ப்பங்களை நான் உனக்கு வழங்குவதே இல்லை, ஏமாந்துபோனேனே என்று நீ சொல்வதை கேட்கையில் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். இதோ.. இப்போதுகூட என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இனி ஒன்றும் செய்ய முடியாது, இது நீயாக ஒற்றைக்காலில் நின்று தேடிக்கொண்ட வாழ்க்கை. இந்த ஜென்மம் மட்டுமல்ல அடுத்து வரும் அத்தனை ஜென்மங்களிலும் உனக்கு நான்தான்! நான் மட்டும் தான்! நான் இறந்தால் கூட இன்னொரு துணையை நீ தேடக்கூடாது. ஆவியாக வந்து உன்னை கொன்றுவிடுவேன். புரிந்ததா?


இரண்டாவது தடவையாக நீ என்னோடு பேசியபோது சொன்னாய், “என்று என்னோடு முதன் முதலாக நீ கதைத்தாயோ அன்றிலிருந்து நீ என்னவள். உன் செலவுகள் அத்தனைக்கும் பொறுப்பானவன் நான்” என்று. திருமணமாகி பிள்ளை பெற்ற பிறகும் மாமனார் வீட்டிலிருந்து சீர் எதிர்பார்க்கும் காலத்தில்.. வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு மவுசு அதிகமான நேரத்தில் நீ அப்படி சொன்னதும், சொன்னதோடல்லாமல் செயலில் காட்டியதும்.. அன்றுதான் என் மனதில் முதன் முதலாக உன்னைப்பற்றி நல்லதாக ஒரு வித்து விழுந்தது.


என் அக்கா வீட்டுச் சுவரில் பல போட்டோக்களில் ஒரு போட்டோவாக நின்ற என்னில் நீ விழுந்தாயாம். நீதான் சொன்னாய். இன்றுவரை அந்த போட்டோவை நானும் உற்று உற்று பாக்கிறேன், அப்படி இப்படி என்று திருப்பியும் பார்க்கிறேன். நீ விழும் அளவில் அதில் ஏதாவது தெரிகிறதா என்று. ம்க்கும்! ஒரு கண்றாவியும் தெரியவில்லை. மிக கோமாளியாக மட்டுமே தெரிகிறேன். உண்மையை சொல்லப்போனால் அந்த போட்டோவை யார் எப்போது எடுத்தார்கள் என்றுகூட இன்றுவரை எனக்கு தெரியாது. தெரிந்திருக்க, முகம் கழுவி தலை வாரி கொஞ்சம் மேக்கப் போட்டு நானும் அழகிதான் என்று போஸ் கொடுத்திருப்பேன்.


அந்த போட்டோவில் எனக்கே நான் லூசாகத்தான் தெரிகிறேன். பிறகெப்படி உனக்கு மட்டும் அழகியாக தெரிந்தேன்? ஹாஹா.. காதலுக்கு கண்ணில்லையாம். பார்த்தாயா உன் வாழ்விலும் விதி விளையாடிவிட்டது.


தமிழ்நாட்டின் மீனம்பாக்கம் விமானநிலையம். நாம் இருவரும் முதன் முதலில் சந்தித்துக்கொண்டது அங்கேதான் இல்லையா.. அதனால் நம் காதலின் நினைவுச் சின்னம் என்று அதை சொல்வோமா? ஊரே கைகொட்டிச் சிரிக்கும்! சிரித்தால் சிரிக்கட்டும்! ஊருக்கு வேற வேலை ஏது? ஆனால்.. அதுவரை நாம் காதலித்தோமா என்ன? என்னளவில் இல்லை! ஒருநாள் காலையில் வந்திறங்கிய நீ சிரிப்பை உனக்குள் மென்றபடி என்னை பார்த்தது.. இன்றும் என்னால் மறக்கமுடியாது. அந்த நொடியிலிருந்து உன்னை எனக்கும் கொஞ்சம் கூடவே பிடிக்கத் தொடங்கியது. நீயும் கொஞ்சமே கொஞ்சம் நான் படிக்கும் கதைகளின் நாயகன் போலிருந்தாய். அல்லது உன்னை எனக்குப் பிடிக்கத் தொடங்கிவிட்டதால் அப்படி தெரிந்தாயோ என்னவோ.. அப்படித்தான் நினைக்கிறேன். மற்றும்படி நீ ஒன்றும் பெரிய அழகனில்லை.


அடுத்தநாளே நம் திருமணம். முதல் நாள் காலையில் முதன் முதலாக பார்த்து அடுத்தநாள் காலையில் திருமணம் செய்தவர்கள் நாமாக மட்டும்தான் இருப்போம்.


மின்னலாக மறைந்துபோன மூன்று வாரங்கள்.. தொலைபேசி வழியாக நான் அறிந்துகொண்ட நீயும் நிஜ நீயும் வேறு வேறல்ல என்று நானும், தொலைபேசி வழி நீ அறிந்துகொண்ட எனக்கும் நிஜ எனக்கும் ஆறு அல்ல ஆறாயிரம் வித்தியாசங்கள் என்று நீயும் அறிந்துகொண்ட நாட்கள் அவை.


திரும்பவும் அதே மீனம்பாக்கம் விமானநிலையம். எனக்கும் உனக்குமான முதல் பிரிவை உண்டாக்கிய மிக பொல்லாத இடம்! அன்று.. ஏன் அழுகிறேன் என்று தெரியாமலே நான் வடித்த கண்ணீர்.. எனக்கே தெரியாமல் எனக்குள் நீ மிக ஆழமாக புகுந்துவிட்டாய் என்பதை எனக்குணர்த்திய கண்ணீர்!


மறுபடியும் தொலைபேசி வாழ்க்கை.. நீ ஐரோப்பா கண்டத்திலும் நான் ஆசியா கண்டத்திலும். கட்டிய மனைவியிடம் ஒருமாதம் கழித்து தொலைபேசியில் என்னை பிடித்திருக்கிறதா என்று கேட்ட வீரன் நீ. நேரில் கேட்டு நான் இல்லை என்று சொல்லிவிட்டால் நான் என்ன செய்வது என்று நீ கேட்டதுகூட எனக்கு மிக பிடித்திருந்தது. அந்த பயம் இருக்கட்டும்!


அன்று விமான நிலையத்தில் வைத்து நான் வடித்த கண்ணீர் உனக்கு உணர்த்தவில்லையா உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று. நிச்சயம் உணர்த்தியிருக்கும். நீயா உணராமல் இருப்பாய்? என்னைப்பற்றி எனக்கு தெரியாதவற்றைக் கூட அறிந்து வைத்திருக்கிறவன் நீ! ஆனாலும் என் வாயால் கேட்டுவிடும் ஆசை!


என் வாயால் கேட்டுவிட வேண்டும் என்கிற உன் வீம்பு, நான் அதை சொல்லிவிட கூடாது என்கிற என் வீம்பை நன்றாகவே வளர்த்துவிட்டது. இன்றுவரை நீயும் கேட்கிறாய் நானும் சொல்லாமல் மறுக்கிறேன். அது கூட எனக்கு மிக பிடித்துத்தான் இருக்கிறது.


இதோ.. கண்மூடி திறக்கமுதல் எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டது. இன்றுவரை நான் நானாக இருக்கிறேன். என்னை நீ நானாகவே இருக்க விட்டிருக்கிறாய். உனக்கு தெரியவில்லை. அது உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு என்று. ஆனால், என்ன செய்வது? உன் தலைவிதி அப்படியாகிவிட்டதே!


கருத்தொருமித்த காதல் வாழ்க்கை சத்தியமாக எனக்கு வேண்டாம்! அது சுத்த போர்! சண்டையும் சமாதானமும்தான் இல்லறத்தின் அழகியலே! இப்படியே நாம் எப்போதும்போல சண்டை பிடிக்க வேண்டும். பிடிவாதமும் பிழையும் என் பக்கமே இருக்கவேண்டும். உன் பக்கம் இருக்கும் நிலையை நீ என்றுமே வரவிட்டதில்லை. அது தெரியும் எனக்கு. ஆனாலும், நீதான் என்னை சமாதானமும் செய்ய வேண்டும். இந்த வாழ்க்கைதான் எனக்கு பிடித்திருக்கிறது. சாகும்வரை!


சாகும் அந்த நிமிடத்தில் கூட உன் நெற்றியில் சின்னதாய் ஒரு முத்தம் பதித்து உன்மடி நான் சாயவேண்டும். அப்போதும் என்னை பிடித்திருக்கிறதா என்று நீ கேட்கவேண்டும். காதோரங்களை நனைக்கும் என் கண்ணீர் துளிகள் தான் அப்போதும் என் பிடிப்பை உனக்கு சொல்லும்!


ஆனாலும், ஒவ்வொரு கணமும் சொல்கிறது என் இதயம், உன்னை எனக்கு மிக மிக பிடிக்குமென்று!!
 
Last edited:

Jasha

New member
கருத்தொருமித்த காதல் வாழ்க்கை சத்தியமாக எனக்கு வேண்டாம்! அது சுத்த போர்! சண்டையும் சமாதானமும்தான் இல்லறத்தின் அழகியலே!
அருமை....
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Wow enna writing...
அழகிய கடிதம் அதிசய காதல்....
சூப்பர்...
கருத்தொருமித்த காதல் வாழ்க்கை சத்தியமாக எனக்கு வேண்டாம்! அது சுத்த போர்! சண்டையும் சமாதானமும்தான் இல்லறத்தின் அழகியலே!
அருமை....
ஹாஹா.. மிக்க நன்றி ஜஷா!! எப்பவோ சும்மா எழுதியது.
 

Sowdharani

Well-known member
நிதா அக்கா...... அருமையோ அருமை.......... நிச்சயித்த திருமணங்களில் கூட இப்படி ஒரு அழகான நினைவுகள்
......

// ஒரு வாயில்லா பூச்சி, அப்பாவி, பாவம் என்று. இன்றோ, நீ கதைப்பதற்கான சந்தர்ப்பங்களை நான் உனக்கு வழங்குவதே இல்லை, ஏமாந்துபோனேனே என்று நீ சொல்வதை கேட்கையில் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். //

எல்லாரும் சொல்லுற வாசகம் ஆனா ரசிக்கிற வாசகம்
 

நிதனிபிரபு

Administrator
Staff member
நிதா அக்கா...... அருமையோ அருமை.......... நிச்சயித்த திருமணங்களில் கூட இப்படி ஒரு அழகான நினைவுகள்
......

// ஒரு வாயில்லா பூச்சி, அப்பாவி, பாவம் என்று. இன்றோ, நீ கதைப்பதற்கான சந்தர்ப்பங்களை நான் உனக்கு வழங்குவதே இல்லை, ஏமாந்துபோனேனே என்று நீ சொல்வதை கேட்கையில் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். //

எல்லாரும் சொல்லுற வாசகம் ஆனா ரசிக்கிற வாசகம்

ஹாஹா... நிச்சயமாக.. நிச்சயிக்கும் திருமணங்கள் வேறு விதமான அழகுதான். அங்கும் ஓர் காதலிருக்கும்.. குழப்பங்களும் இருக்கும். நன்றி நன்றி.
 
Top Bottom